எனது ஜூனியர் விகடன் கட்டுரை : மைக்கேல் ஜாக்சன்

ஜாக்ஸன் மரணம் : புயல் கிளப்பும் சகோதரி

0

ML

கோடானு கோடி இசை ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பாப் இசை உலக மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மரணம் இப்போது பரபரப்பான இன்னொரு திசையில் சீறிப்பாய ஆரம்பித்திருக்கிறது. அதற்கான திரியை கொஞ்சம் தீவிரமாகவே கொளுத்திப் போட்டிருக்கிறார் மைக்கேலின் சகோதரி லா டோயா.

மைக்கேல் படு பயங்கரமாகத் திட்டமிடப்பட்டு, கொல்லப்பட்டார். அதுவும் ஒருவரல்ல, பலர் ஒன்று கூடி சதி செய்து என் தம்பியைப் படு கொலை செய்திருக்கின்றனர் என்பதே அவர் கூறியிருக்கும் அந்தக் குற்றச்சாட்டு. மைக்கேல் ஜாக்சனின் முதல் போஸ்ட்மார்ட்டம் முடிந்த கையோடு இரண்டாவதாக குடும்பத்தினர் சார்பாக “ஸ்பெஷலாக” இன்னொரு போஸ்ட்மார்ட்டமும் செய்யப்பட்டது.

முதல் போஸ்ட்மார்ட்டத்தின் முடிவு இன்னும் வெளிவராத நிலையில் இரண்டாவது போஸ்ட்மார்ட்டத்தின் முடிவுகளைக் கையில் வைத்துக் கொண்டு உலகையே உலுக்கி எடுக்கும் பரபரப்புத் தகவல்களை விவரிக்கிறால் லா டோயா.

மைக்கேல் ஒரு “டாலர் கறக்கும் மாடு” என்பதைப் புரிந்து கொண்டவர்கள் பணத்துக்காக அவனைக் கொலை செய்து விட்டனர். அவருடன் கூட இருந்தவர்கள் யாருமே அவருடைய உண்மையான நலனில் அக்கறை கொண்டவர்கள் கிடையாது. அவனுடைய ஒரு பில்லியன் டாலர் சொத்தில் மட்டுமே அவர்களுடைய கண் இருந்திருக்கிறது. பணத்துக்காக அவனிடம் அட்டையைப் போல ஒட்டிக் கொண்டு கடைசியில் அவனுடைய உயிரையே உறிஞ்சி விட்டார்கள் என கண்ணீர் சிந்தச் சிந்த பயங்கரத் தகவல்களைப் பட்டியலிடுகிறார் அவர்.

சதிகாரர்களின் முதல் திட்டம் மைக்கேலைத் தனிமைப்படுத்துவது தான். அதற்காக அவனை எந்த அளவுக்கு குடும்பத்தினரின் காற்று படாதபடி ஒளிக்க முடியுமே அந்த அளவுக்கு ஒளித்து விட்டார்கள். குடும்பத்தினரின் போன் கால்கள் எதுவுமே மைக்கேலிடன் சென்று சேராது, மைக்கேலைப் பார்க்க வேண்டுமென சென்றாலும் ஏதேனும் சாக்குப் போக்குகளே பதிலாகக் கிடைத்தன. அப்போதே மைக்கேலுக்கு ஏதோ நடக்கப் போகிறது என யூகித்தேன். வீட்டில் கூட சொன்னேன் என விசும்புகிறார் அவர்.

போலீஸ் விசாரணை தீவிரமாக நடப்பதால், இப்போதைக்கு போஸ்ட்மார்ட்டம் விவரங்களை நாங்கள் வெளியிடப் போவதில்லை. அதற்காக எதிரிகள் தப்பி விட்டதாய் நினைக்க வேண்டாம். என்னிடமிருக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போட்டில் இருப்பவை உங்களை தூங்க விடாது துரத்தும் உண்மைகள். காவல் துறையினரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வரட்டும். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த பின்னர் உண்மைகள் வெளியிடப்படும் என மிரட்டுகிறார் அவர்.

மைக்கேல் ஜாக்சனின் கழுத்தில் புதிய ஊசித் தழும்புகள் நான்கு இருந்தன. ஏன் அவை அங்கே வந்தன ? புதிதாய் கழுத்தில் நான்கு ஊசிகள் போடப்படவேண்டிய காரணம் என்ன ? அதற்கும் மரணத்துக்குமான தொடர்பு என்ன ? என லா டோயா அடுக்கடுக்காய் எழுப்பும் வினாக்களைப் பார்த்தால் விஷயம் படு சீரியஸாகிக் கொண்டிருப்பது தெளிவாகவே புரிகிறது.

மைக்கேலின் மருத்துவர் கான்ராட் முர்ரேயை நோக்கி தனது சந்தேக விரலை கொஞ்சம் அழுத்தமாகவே நீட்டுகிறார் லா டோயா. துவக்கத்தில் மழுப்பல் பதில்கள், அப்புறம் தலைமறைவு என எனது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தவர்களில் முக்கியமானவர் இந்த டாக்டர். பாவம் எனது தம்பி, மாதம் ஒரு இலட்சம் பவுண்ட்களை இவருக்கு சம்பளமாய் வாரி இறைத்தும் இவரால் மைக்கேலைக் காப்பாற்ற முடியவில்லை.

காப்பாற்றுவது இருக்கட்டும். கூட்டுச் சதிக்கு உடந்தையாகாமல் இருந்திருக்கலாமே! கடைசியில் எனது தம்பி மரணமடைந்தது கூட நீங்கள் நினைப்பது போல அவனது படுக்கையறையில் அல்ல, இந்த டாக்டரின் அறையில் தான். அந்த நாளில், டாக்டரின் அறையில் நடந்த மர்மம் என்ன என்பதை அவர் விளக்கியேயாக வேண்டும் என படபடக்கும் அவரது குரலில் கோபம் மிகவும் கூர்மையாகக் கொப்பளிக்கிறது.

யாரை நம்பவேண்டும், யாரை நம்பக் கூடாது என்பதே புரியாமல் குழப்பமாகவே அமைந்து விட்டது மைக்கேல் ஜாக்சனின் கடைசி கட்ட வாழ்க்கை. கூட இருந்தவர்களை மலை போல நம்பினார். அவர்களோ கிடைக்கும் ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் அவரைச் சுரண்டினார்கள். கடைசி காலத்தில் மைக்கேல் வாடகைக்கு இருந்த பிவர்லி ஹில்ஸ் மேன்ஷனின் சாதாரன வாடகை 15000 பவுண்ட்கள்.. மைக்கேலிடம் கறக்கப்பட்டதோ மாதம் 60,000 பவுண்ட்கள் !

1984ல் நடந்த அசத்தலான மேடை நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராதவிதமாக முதுகில் காயம் பட்டதில் ஆரம்பித்தது மைக்கேலின் மயக்க வாழ்க்கை. அது கொஞ்சம் கொஞ்சமாய் தீவிரமடைந்து ஒரு கட்டத்தில் வாழ்க்கையே மயக்க மருந்துகளின் மேல் என்றாகிப் போனது தான் துயரம்.

சேனாக்ஸ், பிரோபோஃபோல், நார்கோடிக் டிலாடிட், ஃபெண்டானில், விக்கோர்டின், வாலியம், ஆம்பியன், டெமிரோல், இவையெல்லாம் ஏதோ மெடிக்கல் ஸ்டோர் ஷெல்ப் களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மருந்துகளின் பெயர்களல்ல. மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்த போது உடலில் இருந்த மருந்துகளின் பட்டியல் தான் இது. இன்னும் சொல்ல வேண்டுமெனில் மைக்கேல் சாகும் போது ஒரு நடமாடும் மெடிக்கஸ் ஸ்டோர் போல இருந்திருக்கிறார் என்பது தான் உண்மை.

அமெரிக்காவின் மூலை முடுக்குகளிலெல்லாம் பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்த மருந்துகளால் நிரம்பி வழிந்தன மைக்கேல் ஜாக்சனின் அறைகள். பெரும்பாலானவை ஆப்பரேஷன் தியேட்டர்களில் நோயாளிகளை மயக்கமடையச் செய்ய பயன்படுத்தப்படுபவை ! சில போதைப் பொருளுக்கு மாற்றாய் பயன்படுத்தக் கூடியவை.

லண்டனில் மைக்கேல் ஜாக்சன் நடத்த இருந்த இசை நிகழ்ச்சி இந்த ஆண்டின் மாபெரும் நிகழ்ச்சியாய் இருந்திருக்க வேண்டியது. ஆனால் அவரது இறுதிச் சடங்கே வரலாற்றின் மாபெரும் நிகழ்ச்சியாகிப் போய்விட்டது தான் சோகம். மொத்தம் ஐம்பது நடன நிகழ்ச்சிகளை நடத்த இருந்தார் மைக்கேல்.

உண்மையில் மைக்கேல் நடத்த விரும்பியது வெறும் பத்து நிகழ்ச்சிகளைத் தான். இந்த பணம் கறக்க நினைக்கும் கும்பலினால் தான் இந்த 10 என்பது கூடிக் கூடி ஐம்பதாகிப் போய்விட்டது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையிலிருக்கும் பலவீனமான ஒரு மனிதனிடமிருந்து கொஞ்சம் கூட மனித நேயமில்லாமல் நடந்து கொள்ள இந்த கும்பலினால் எப்படித் தான் முடிந்ததோ என விசும்புகிறார் லா டோயா.

மைக்கேலின் தினசரி அப்பாயிண்ட்மெண்ட் ஷெட்யூல் லா டோயாவை இன்னும் அதிகமாய் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கொஞ்சமும் ஓய்வு இல்லாமல் மைக்கேலை முழுக்க முழுக்க அலைக்கழித்திருக்கிறார்கள். அப்படி சோர்வடைய வைத்து மயக்க மருந்து கொடுத்து கடைசியில் அவரை தீர்த்துக் கட்டி விட்டார்கள். அவர்களுக்கு மைக்கேல் இருப்பதை விட இறந்தால் தான் அதிக லாபம்.

லா டோயா வின் அடுத்த சந்தேகம் திடீர் விருந்தாளி நானி கிரேஸ் மீது. நானி கிரேஸ் மைக்கேலின் காதலி என்பது பத்திரிகைகள் ஊதித் தள்ளும் பலூண். உண்மையில் மைக்கேலுக்கு கிரேஸைப் பிடிக்கவே பிடிக்காது. ஒரு வருடத்துக்கு முன்பே அவளுடன் பேசுவதையே நிறுத்தி விட்டான். மைக்கேலின் மரணத்தில் சட்டென மீண்டும் முளைத்த கிரேஸ், ஏதோ தானும் மைக்கேல் குடும்பத்தின் முக்கியமான உறுப்பினர் போல நடந்து கொள்வது சந்தேகத்தையே கிளறுகிறது என்கிறார் அவர்.

மைக்கேல் சாகப் போகிறார் என்பது யாருக்குத் தெரிந்ததோ இல்லையே கூட இருந்தவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. மைக்கேல் எப்போதும் ஒரு மில்லியன் டாலர்கள் பணத்தை வீட்டில் வைத்திருப்பது வழக்கம். ஆனால் மைக்கேல் மரணமடைந்தபின் அந்த வீட்டில் பணம் ஏதும் இருக்கவில்லை ! அது மட்டுமல்ல, பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள நகைகள் வீட்டில் இருந்தன. அவையெல்லாம் ஏதோ மாஜிக் நிகழ்ச்சி போல மாயமாய் மறைந்து விட்டன. கூட இருந்தவர்களின் நம்பிக்கைத் துரோகத்தை விளக்க இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும் ? எனும் லா டோயாவின் கேள்வியில் எக்கச் சக்க நியாயம் இருக்கிறது.

என் தம்பி மைக்கேல் பாவம். கள்ளம் கபடமில்லாதவன். குழந்தைகளிடம் அளவு கடந்த பாசம் வைத்திருப்பவன். அவனைக் கொன்றவர்களை நான் சும்மா விட மாட்டேன். உண்மையின் ஆணி வேரை உருவிப் பார்க்காமல் ஓயமாட்டேன் என சூளுரைக்கிறார் லா டோயா.

இவர் இப்படி பரபரப்புத் தகவல்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கையில், “மைக்கேல் கொல்லப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் எங்களுக்கும் உண்டு” எனக் கூறி எரியும் பரபரப்பில் எண்ணை வார்த்திருக்கிறார் ஏஞ்சல்ஸ் நகர காவல் ஆணையர் வில்லியம் பிராட்டன்.

இதற்கிடையில் மைக்கேலின் மூன்று குழந்தைகளான பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட் ஐப் பராமரிப்பது யார் எனும் சர்ச்சையும் மேலோங்கியிருக்கிறது. தனது தாயான காத்தரினிடம் குழந்தைகள் வளர வேண்டும் என்பதே மைக்கேலின் உயில் சொல்லும் சேதி. அதை எதிர்த்து குழந்தைகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கோட்டுக்குப் போகப் போவதாகச் சொல்லியிருந்தார் மைக்கேலின் முதல் மனைவி டெபி ரோ. கடைசி கட்டத்தில் இரு பெண்மணிகளுக்குமிடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது.

குழந்தைகளை மைக்கேலின் தாய் வளர்த்தட்டும். நான் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறேன் என போட்டியிலிருந்து “பெட்டி”யுடன் விலகியிருக்கிறார் டெபி ரோ.

மைக்கேலின் தந்தை ஜோ-வின் காற்று படாமல் குழந்தைகளைத் தனியே வளர்க்க வேண்டும் எனும் டெபியின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

எது எப்படியோ, சிலிர்ப்புகளின் நாயகனாகவும், சர்ச்சைகளின் உருவமாகவும் விளங்கிய மைக்கேல் மரணத்தின் மூலம் மர்மங்களின் நாயகனாகவும் உருவெடுத்திருக்கிறார் என்பது மட்டு மறுக்க முடியாத உண்மை. அவருடைய மரணம் தரும் மர்மங்கள் இனியும் தொடரும் என்றே தோன்றுகிறது !

0

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்

மைக்கேல் ஜாக்சன் மரணம்

m5

தனது சிலிர்ப்பூட்டும் இசையால் கோடிக்கணக்கான இதயங்களைக் கட்டி இழுத்த இசை வேந்தன் மைக்கேல் ஜாக்சன் தனது ஐம்பதாவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

அவர் மரணமடைந்த ரொனால்ட் ரீகன் மெடிக்கல் செண்டரின் தலையை பல நியூஸ் ஹெலிகாப்டர்கள் சுற்றி வருகின்றன, மருத்துவமனை வீதி ரசிகர்களின் விழும்பல்களால் நிரம்பி வழிகிறது.

வெற்றிகள், சர்ச்சைகள், மகிழ்ச்சி, சோகம், இயலாமை, நிராகரிப்பு என எல்லாவிதமான உணர்வுகளின் பாதைகளுக்குள்ளும் நடைபயின்று வந்தது தான் மைக்கேல் ஜாக்சனின் பயணம்.

ஐந்தாவது வயதில் வறுமையின் கருப்புப் பிடியில் தனது நான்கு சகோதரர்களுடன் இணைந்து பாடல்கள் பாட ஆரம்பித்த மைக்கேல் பின்னாளில் உலகையே தனது மந்திர அசைவுகளாலும், இசையினாலும் ஆட்டிப் படைப்பார் என அவரே நினைத்துப் பார்த்திருக்க சாத்தியமில்லை.

m4சகோதரர்களுடன் இணைந்து ஆரம்ப காலங்களில் நடத்திய ஜான்சன் 5 – இசைப்பயணத்திலேயே முத்திரை பதித்த ஜாக்சன், 1972ம் ஆண்டு தனியே ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். 1982ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் வெளியிட்ட திரில்லர் ஆல்பம் தான் அவரை புகழின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தியது. இது அவர் தனியே வெளியிட்ட ஆறாவது ஆல்பம்.

750 மில்லியன் இசை ஆல்பங்களை விற்றுத் தீர்த்த சாதனை படைத்தவை தான் இவரது இசை.

இசையில் எவ்வளவு புகழோ, அந்த அளவு சர்ச்சைகளிலும் புகழ்பெற்றவராகவே இருந்தார் மைக்கேல் ஜாக்சன். சிறுவர்களுடன் தகாத உறவு வைத்திருந்தார் என அவர் மீது பல குற்றச் சாட்டுகள். இரண்டு முறை பிரச்சினை பூதாகரமாகி நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கினார்.

எனினும், கலைஞர்களுக்கே உரித்தான இளகிய மனசு மைக்கேல் ஜாக்சனுக்குள்ளும் இருந்தது. தனது வாழ்நாளில் சுமார் 1 பில்லியன் டாலர்கள் மனிதநேயப் பணிகளுக்காகச் செலவிட்டு, உலகிலேயே அதிக பணம் செலவிட்ட பாப் பாடகர் எனும் கின்னஸ் பதிவையும் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

புகழின் வெளிச்சம் செல்லுமிடமெல்லாம் படர்ந்தாலும் தனது குழந்தைகளை வெளிச்சத்தில் விழாமலேயே வளர்த்த சாதுர்யமும் மைக்கேல் ஜாக்சனுக்கு இருந்தது.

புனைக்கதைகளுக்கே உரிய சுவாரஸ்யத் தகவல்களால் நிரம்பி வழிந்தது தான் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை.

ஒரு ஆக்சிஜன் சேம்பருக்குள் படுத்து புத்துணர்வு பெற்றுக் கொள்வார் என பரபரப்புச் செய்தி ஒரு காலகட்டத்தில் வேகமாய் பரவியது, யானை மனிதனுடைய எலும்புகளை வாங்கினான் என இன்னொரு முறை கதைகள் பரவியது. எவை உண்மையோ பொய்யோ மைக்கேல் ஜான்சனும் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொண்டதில்லை “ முழு உடலையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இந்த நிறம் வந்ததா ? “ எனும் கேள்விக்கு “தோல் வியாதி” என சீரியசாய் சொன்னர் ஒருமுறை.

மைக்கேல் ஜாக்சனின் இசை இழைகளை ஏகத்துக்கும் காப்பியடித்திருக்கிறார்கள் நமது இசையமைப்பாளர்கள். கூடவே அவரது நடன அசைவுகளும் பலருக்கு இன்ஸ்பரேஷனாய் இருந்திருக்கிறது.

m2

இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கலைஞனுடைய நின்று போன இதயத்தின் மௌனமும் ஒரு சோக இசையாகவே வழிகிறது மனசின் மையத்தில்.

தமிழிஷில் வாக்களிக்க…