பெட்ரோல் தட்டுப்பாடு + அரசின் நிலைப்பாடு = மக்கள் படும்பாடு

 

அரைமணி அல்லது முக்கால் மணி நேரத்தில் வந்துவிடக் கூடிய தூரம் தான் வேளச்சேரியிலிருந்து தாம்பரம். நேற்று காலை இரண்டரை மணிநேரமாகி விட்டது. ஏதோ அன்னதான மேடைக்கு சரியான நேரத்தில் வந்தது போல எல்லோரும் மதிய உணவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது தான் அலுவலகத்தில் நுழையவே முடிந்தது.

என் சென்னை வாழ்க்கையில் சந்தித்திராத பெட்ரோல் தட்டுப்பாடு. ஒவ்வோர் பெட்ரோல் பங்க் வாசலிலும் உள்ள வாகனங்கள் அனுமர் வால் போல நீண்டு கொண்டே இருக்க சாலைகள் முழுவதும் டிராபிக் ஜாம். அவசர கதியில் இருந்த எத்தனைபேருக்கு அவஸ்தைகள் நேர்ந்ததோ தெரியாது.

சில நாட்களுக்கு முன்பே எல்லா பெட்ரோல் பங்க் களிலும் சாதாரண பெட்ரோல் இல்லை உயர்தர பெட்ரோல் மட்டுமே இருக்கிறது என்று சொல்லி சாதாரண பெட்ரோலை உயர் தரப் பெட்ரோல் என்று சொல்லி அதிக விற்றுக் கொண்டிருப்பதாக சென்னை முழுவதும் முணுமுணுப்பு நிலவியது.

பெட்ரோல் என்ன தோசை மாதிரியா இருக்கிறது சாதாவா, ஸ்பெஷலா என பார்த்தா கண்டு பிடிக்க முடியும் ? அல்லது காபி டீ மாதிரி குடித்தா பார்க்க முடியும்.

“பசி வந்தால் பத்தும் பறந்து போயிடும்” ங்கற மாதிரி, ஏதோ ஒரு பெட்ரோல் ஏதோ ஒரு விலைக்குக் குடு என்பது போலத் தான் இருந்தது காத்திருந்த அப்பாவி ஜனங்களின் வேதனை. அதை பயன்படுத்திக் கொண்டு பெட்ரோலையே ரஜினி பட டிக்கெட் மாதிரி விற்ற நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

எண்ணை நிறுவனங்களின் நஷ்டத்தில் ஓடுவதால் சப்ளையை மட்டுப்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர் முழுவதும் ஸ்தம்பித்திருக்கக் கூடிய நிலைக்கு காரணமான பெட்ரோல் நிறுவனங்கள் மீது அரசின் சட்டம் நீண்டால் மட்டுமே அரசுக்கு முதுகெலும்பு இருக்கிறது என்பதற்கான உத்தரவாதம் கிடைக்கும்.

நேற்று நள்ளிரவு தாண்டியும், இன்று அதிகாலை 6 மணிக்கும் பங்க்களில் பெரிய வரிசையைப் பார்க்க நேரிட்டது. நீண்ட வரிசையில் காத்திருப்பதன் அவஸ்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே இந்த தட்டுப்பாட்டின் வீரியம் உறைக்கும்.

பாதி பங்க் களை மூடியும், மீதி பங்க் களை போலீசாரின் கண்காணிப்போடும் நிறுவனங்கள் இயக்கிக் கொண்டிருக்கின்றன. பெட்ரோல் வாங்க வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஏதோ தியேட்டரில் டிக்கெட் வாங்க வருபவர்கள் போல அடி, ஏச்சு, முறைத்தலுக்கு ஆளாகியிருப்பது இன்னும் பரிதாபம்.

காஞ்சிபுரத்தில் இன்னும் ஒரு படி மேலே போய், காஞ்சிபுரம் ரெஜிஸ்ட்ரேஷன் வண்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் போட்டார்களாம்.

சில இடங்களில் அம்மன் கோயில் கூழ் போல, 150 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோலாம்.

“கப்பல் வருது” என்று புலி வருது கணக்காக படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.

அடிக்கிற இடத்தில அடிச்சா வலிக்கிற மாதிரி வலிக்கும் என்பதையே இந்த சுயநலம் பிடித்த எண்ணை நிறுவனங்கள் கையாள்கின்றன. எண்ணை விலையை இன்னும் ஒரு இருபது ரூபாய் ஏற்றினால் அவர்களுடைய வருவாயில் பல ஆயிரம் கோடிகள் அதிகமாகும். அப்போது இந்த அவஸ்தைகள் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படும்.

அரசு ஒன்றும் தெரியாத பாப்பா போல பெருவிரலை வாயில் வைத்து கடித்துக் கொண்டிருக்கிறது. தனியார் மயம், தனியார் மயம் என்றால் என்ன என்பதை கடை கோடி மனிதனுக்கு இதைவிட தெளிவாகப் புரிய வைக்க முடியாது.

இன்னும் இந்த தட்டுப்பாடு சில நாட்கள் நீடிக்கும் என்கிறார்கள். அலுவலகங்கள் இனிமேல் ஆளுக்கொரு பெட்ரோல் பங்க் அலுவலக வளாகத்திலேயே வைத்து ஊழியர்களுக்கு பெட்ரோல் வழங்கினால் தான் அலுவலகம் இயங்கும் போல.

எதிர்கட்சிகளுக்கு இது ஒரு அவல் கூடை. ஆளாளுக்கு மெல்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாள் இதே நிலமை நீடிக்கட்டும் கொஞ்சம் அதிகமாய் மெல்லலாம் என்பது அவர்கள் கணிப்பு.

நம்ம சீட் பத்திரமா இருக்கணும், அதுக்கு பங்கம் விளைவிக்காம பங்க் மேட்டரை முடிங்க என்பது ஆளுங்கட்சியினரின் கோட்பாடு.

இடையே நசுங்கி பிழிபடும் நம்மைப்பற்றி…. ??

அடப்போப்பா…. எலக்ஷனுக்கு இன்னும் நாள் இருக்கு

 

பொறுப்பற்ற பெட்ரோல் பங்க்கள்.

 

நேற்று இரவு அலுவலகப் பணியை முடித்துவிட்டு ஒருவழியாக இரவு பத்து மணிக்கு காரில் கிளம்பினேன். கொஞ்ச நேரத்திலேயே காரின் உள்ளே மஞ்சள் விளக்கு பல்லிளித்தது. அடக்கடவுளே பெட்ரோல் தீர்ந்து விட்டது.

பரவாயில்லை. குரோம்பேட்டையிலிருந்து வேளச்சேரி செல்வதற்குள் குறைந்தபட்சம் பத்து பெட்ரோல் பங்க் கள் இருக்கின்றன எங்காவது ஒரு இடத்தில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டே காரை ஓட்டினேன்.

குரோம்பேட்டை பக்கத்திலுள்ள பெட்ரோல் பங்க் வாசலில் ஒரு பெரிய ட்ரம் கயிறுகளுடன் கட்டப்பட்டிருந்தது. “ஸ்டாக் தீந்து போச்சு சார்” பதில் வந்தது.

அடுத்த இடத்தில் விளக்கையும் அணைத்து விட்டிருந்தார்கள்.

இதே நிலை தான் வேளச்சேரி வரை. எல்லா பெட்ரோல் பங்க்களும் இரவு பத்து மணிக்கே மூடப்பட்டு, வழி அடைக்கப்பட்டு இருட்டுக்குள் கிடந்தன.

காரணம் நள்ளிரவுக்கு மேல் விலையை ஐந்து ரூபாய் ஏற்றிக் கொள்ளலாம் எனும் அறிவிப்பு.

நண்பனுக்கு தொலைபேசினேன், மவுண்ட் ரோடு பக்கம் ஏதாவது பெட்ரோல் பங்க் திறந்திருந்ததா என அறிந்து கொள்ள. “எல்லாம் சாயங்காலமே மூட ஆரம்பிச்சுட்டாங்க” என்றான் அவன்.

எரிச்சலும், கோபமும், வழியில் வண்டி நின்று விடக் கூடாதே எனும் பயமுமாக வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

நள்ளிரவு பன்னிரண்டு மணி முதல் – என்று ஏன் பெட்ரோல் விலை உயர்வு வருகிறது என்பது புரியவே இல்லை. அதனால் ஏற்படும் அவஸ்தைகளுக்கு அளவே இல்லை.

மிக அவசரமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வாகனம் நின்றிருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

11.59 வரை ஸ்டாக் இல்லாத பெட்ரோல் பங்க் கள் 12.00 மணிக்கு எப்படி சட்டென திறந்து கொள்கின்றன ? ஸ்டாக் எங்கிருந்து வருகிறது என்பதெல்லாம் பூச்சாண்டிக் கதைகள் என்பதை மழலைகளே விளக்கும்.

விலையை உயர்த்தி சட்டமியற்றும் அரசு, நள்ளிரவு நேரம் வரை கடைகளை மூடக்கூடாது என்று சட்டம் இயற்ற முடியாதா ? அல்லது தேவையில்லாமல் இரண்டு மூன்று மணி நேரம் ஒட்டு மொத்தக் கடைகளையும் அடைத்து சமூகத் தேவையை மதிக்காத இந்த பங்க்களை என்ன செய்வது ?

இந்த சில மணி நேர லாபத்துக்கே இப்படிச் செய்பவர்களை நினைக்கும்போது ஒன்று சட்டென மனதில் தோன்றியது. தனியார் மயம் எத்தனை கொடுமையானது ? வெறும் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் இவர்களிடம் ஒரு உதாரணத்துக்காக போக்குவரத்தை ஒப்படைப்பதாய் வைத்துக் கொண்டால், நெரிசல் நேரங்களில் மட்டுமே பஸ் ஓடும். காலையில், இரவில், மதிய நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்தால் பஸ் ஓடாது இல்லையா ?

செய்தித் தாளில் திருத்தப்பட்ட பெட்ரோல் விலை என்று ஒரு விலை போட்டிருந்தார்கள். காலையில் பெட்ரோல் நிரப்பியபோது வேறோர் விலையில் இருந்தது.

அதிலும் ஸ்பீட், பவர், சக்திமான் என்றெல்லாம் பெயரிட்டழைக்கும் பெட்ரோல் லிட்டர் 60 ரூபாயையும் தாண்டி !!! இதுக்கெல்லாம் என்ன நிர்ணயம் என்பது விளங்கவில்லை. 52 ரூபாய்க்கு விற்ற பவர் பெட்ரோல் 60 ரூபாய் எனில் 8 ரூபாய் விலையேற்றம். அது அனுமதிக்கப்பட்டது தானா ? அதுக்கு 5 ரூபாய் விலையேற்றம் பொருந்தாதா ? என்பதெல்லாம் ஒரு சாமான்யனின் விடை தெரியாத கேள்விகள்.