தனது சிலிர்ப்பூட்டும் இசையால் கோடிக்கணக்கான இதயங்களைக் கட்டி இழுத்த இசை வேந்தன் மைக்கேல் ஜாக்சன் தனது ஐம்பதாவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
அவர் மரணமடைந்த ரொனால்ட் ரீகன் மெடிக்கல் செண்டரின் தலையை பல நியூஸ் ஹெலிகாப்டர்கள் சுற்றி வருகின்றன, மருத்துவமனை வீதி ரசிகர்களின் விழும்பல்களால் நிரம்பி வழிகிறது.
வெற்றிகள், சர்ச்சைகள், மகிழ்ச்சி, சோகம், இயலாமை, நிராகரிப்பு என எல்லாவிதமான உணர்வுகளின் பாதைகளுக்குள்ளும் நடைபயின்று வந்தது தான் மைக்கேல் ஜாக்சனின் பயணம்.
ஐந்தாவது வயதில் வறுமையின் கருப்புப் பிடியில் தனது நான்கு சகோதரர்களுடன் இணைந்து பாடல்கள் பாட ஆரம்பித்த மைக்கேல் பின்னாளில் உலகையே தனது மந்திர அசைவுகளாலும், இசையினாலும் ஆட்டிப் படைப்பார் என அவரே நினைத்துப் பார்த்திருக்க சாத்தியமில்லை.
சகோதரர்களுடன் இணைந்து ஆரம்ப காலங்களில் நடத்திய ஜான்சன் 5 – இசைப்பயணத்திலேயே முத்திரை பதித்த ஜாக்சன், 1972ம் ஆண்டு தனியே ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். 1982ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் வெளியிட்ட திரில்லர் ஆல்பம் தான் அவரை புகழின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தியது. இது அவர் தனியே வெளியிட்ட ஆறாவது ஆல்பம்.
750 மில்லியன் இசை ஆல்பங்களை விற்றுத் தீர்த்த சாதனை படைத்தவை தான் இவரது இசை.
இசையில் எவ்வளவு புகழோ, அந்த அளவு சர்ச்சைகளிலும் புகழ்பெற்றவராகவே இருந்தார் மைக்கேல் ஜாக்சன். சிறுவர்களுடன் தகாத உறவு வைத்திருந்தார் என அவர் மீது பல குற்றச் சாட்டுகள். இரண்டு முறை பிரச்சினை பூதாகரமாகி நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கினார்.
எனினும், கலைஞர்களுக்கே உரித்தான இளகிய மனசு மைக்கேல் ஜாக்சனுக்குள்ளும் இருந்தது. தனது வாழ்நாளில் சுமார் 1 பில்லியன் டாலர்கள் மனிதநேயப் பணிகளுக்காகச் செலவிட்டு, உலகிலேயே அதிக பணம் செலவிட்ட பாப் பாடகர் எனும் கின்னஸ் பதிவையும் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
புகழின் வெளிச்சம் செல்லுமிடமெல்லாம் படர்ந்தாலும் தனது குழந்தைகளை வெளிச்சத்தில் விழாமலேயே வளர்த்த சாதுர்யமும் மைக்கேல் ஜாக்சனுக்கு இருந்தது.
புனைக்கதைகளுக்கே உரிய சுவாரஸ்யத் தகவல்களால் நிரம்பி வழிந்தது தான் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை.
ஒரு ஆக்சிஜன் சேம்பருக்குள் படுத்து புத்துணர்வு பெற்றுக் கொள்வார் என பரபரப்புச் செய்தி ஒரு காலகட்டத்தில் வேகமாய் பரவியது, யானை மனிதனுடைய எலும்புகளை வாங்கினான் என இன்னொரு முறை கதைகள் பரவியது. எவை உண்மையோ பொய்யோ மைக்கேல் ஜான்சனும் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொண்டதில்லை “ முழு உடலையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இந்த நிறம் வந்ததா ? “ எனும் கேள்விக்கு “தோல் வியாதி” என சீரியசாய் சொன்னர் ஒருமுறை.
மைக்கேல் ஜாக்சனின் இசை இழைகளை ஏகத்துக்கும் காப்பியடித்திருக்கிறார்கள் நமது இசையமைப்பாளர்கள். கூடவே அவரது நடன அசைவுகளும் பலருக்கு இன்ஸ்பரேஷனாய் இருந்திருக்கிறது.
இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கலைஞனுடைய நின்று போன இதயத்தின் மௌனமும் ஒரு சோக இசையாகவே வழிகிறது மனசின் மையத்தில்.
You must be logged in to post a comment.