புகைத்தலை விடுதல் நல்லது, ஆனால்…

 smoke1நீண்டகாலமாக புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு அந்த பழக்கத்தை மாற்றுவது என்பது மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தப் பழக்கத்தை விட்டு வெளியே வர விரும்புபவர்களை திசைதிருப்பி வேறு பழக்கத்துக்குள் அமிழ்த்த வியாபார உலகம் கண்விழித்துக் காத்துக் கிடக்கிறது.

அந்த மாற்று வழிகளில் சில எலக்ட்ரானிக் சிகரெட், நிக்கோட்டின் சூயிங்கம் போன்றவை. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கலந்த இந்த பொருட்கள் புகைத்தலின் இன்பத்தைத் தரும். ஆனால் சிகரெட்டில் உள்ள பல நூற்றுக் கணக்கான தார் போன்ற விஷத்தன்மையுடைய பொருட்கள் இவற்றில் இருப்பதில்லை.

எனவே இத்தகைய பொருட்கள் சற்றும் ஆபத்தற்றவை என பொதுப்படையாய் விளம்பரம் செய்யப்படுகின்றன. அதிலும் கணினி நிறுவனங்களின் வாசல்களில் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கான விளம்பரங்கள் அதிக அளவில் செய்யப்படுகின்றன.

ஆனால் இத்தகைய விளம்பரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்புவதுடன், இத்தகைய புகைக்கான மாற்றுப் பொருட்களின் சிக்கலையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது தற்போதைய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

புகைக்குப் பதிலாக நிக்கோட்டின் சூயிங்கம் பயன்படுத்தினால் அவர்களுக்கு வாய்ப்  புற்று நோய் வரும் வாய்ப்பு வெகுவாக அதிகரிக்கிறது என எச்சரிக்கை செய்கிறது இந்த ஆராய்ச்சி.

நிக்கோட்டின் புற்றுநோயை வருவிக்கலாம் என ஏற்கனவே ஒரு ஆராய்ச்சி வெளியாகியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

புகை பிடிப்பதிலிருந்து விடுபட விரும்புபவர்கள் அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப நிக்கோட்டின் சார்ந்த பிற பொருட்களை நாடாமல் இருப்பதே ஆரோக்கியமானது!

இந்த நக்கல் தானே வேணாங்கிறது !

imag0067

 

இது அரசியல் காலம்.

இனிமேல் புகைப்பது, சினிமா காரர்களைப் பகைப்பது போன்ற சமாச்சாரங்களெல்லாம் சில நாட்களுக்கு நடக்காது என்பதைத் தெரிந்து தானோ என்னவோ இவ்வளவு ஹாயாக, போர்ட் மேலேயே கையைப் போட்டு புகைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர்.

“என்னங்க… நோ பார்க்கிங்னா, அங்கே வண்டியை நிப்பாட்டுவீங்க ! நோ ஸ்மோக்கிங்னா அங்கே புகை பிடிப்பீங்களா என சிரித்துக் கொண்டே கேட்டேன்” (கொஞ்சம் பயந்து கொண்டு கூட )

அவர் நக்கல் பேர்வழி போல,

“தமிழ் நாடு கெட்டுப் போச்சுங்க. வண்டியை நிப்பாட்டற இடமா பாத்து நோ பார்க்கிங் போர்ட் மாட்டுவாய்ங்க. அதே போல நான் தம் அடிக்கிற இடமா பாத்து இந்த போர்டையும் மாட்டியிருக்காய்ங்க” என்றார் கூலாக !

“யாராச்சும் போன் பண்ணி கம்ப்ளயிண்ட் பண்ணினா என்ன பண்ணுவீங்க ?” என்றேன்

“தம்மு அதுக்குள்ள முடிஞ்சுடும். நான் கிளம்பிடுவேன். நீ இப்போ கிளம்பு காத்துவரட்டும்” என்றார், முறைத்துக் கொண்டே.

திருடனாய் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

புகைத்தல் என்பது வலிப்பை அழைத்தல்

 புகைத்தலின் தீமை பற்றி இனிமேல் சொல்லித் தான் தெரியவேண்டுமென்பதில்லை. ஆனாலும் இந்த புதிய ஆராய்ச்சி முடிவு புகைத்தல் சார்ந்த ஒரு புதிய கோணத்தைக் காட்டுகிறது.

வாழ்நாளில் புகையே பிடிக்காத ஒரு நபர் புகைப் பழக்கமுடைய ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புகை பிடிக்காத ஒரு நபர் புகை பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்வதை விட 42 விழுக்காடு இந்த  வாய்ப்பு அதிகரிக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

புகை பிடிக்காதவர்களும் காற்றில் பரவும் நிகோட்டினால் பாதிக்கப்படுவதை பல ஆராய்ச்சிகள் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளன. இப்போது தான் முதன் முறையாக புகைப் பழக்கமுடைய வாழ்க்கைத் துணையினால் வலிப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது எனும் புதிய ஆராய்ச்சி முடிவு கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சியில் 16225 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மரியா கிளைமோர், புகையினால் புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனேகம் அவற்றில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டார்.

குறிப்பாக பழைய ஆராய்ச்சிகள் கூட இருப்பவர்களின் புகைப்பழக்கம் புகைக்காதவர்களுக்கும் ஆஸ்த்மா, கான்சர், இதய நோய் உட்பட பல நோய்களைத் தரும் வாய்ப்பு உண்டு என நிரூபித்திருந்தன. காற்றில் பரவும் விஷத்தன்மையே இதன் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும்.

இந்த புதிய ஆராய்ச்சியின் பயனாக ஆரோக்கியமான உடலுக்கு புகைப் பழக்கத்தை அறவே ஒழிக்கவேண்டும் என்பதுடன், குடும்பத்திலுள்ளவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும் புகையை ஒழிப்பது இன்றியமையாயது எனும் கருத்தும் வலுப்பெற்றிருக்கிறது.

வாழ்க்கையை விடப் பெரியதா வெண்புகை – அதை
விட்டொழித்தால் தவழுமே புன்னகை

“புகை” ப்படங்கள் : இதைப் பார்த்த பின்புமா….

புகை பிடிப்பவர்களை அதிர வைக்க வெளியாகி இருக்கின்றன சில புகை எதிர்ப்புப் புகைப்படங்கள். அடுத்த முறை விரல்களிடையே புகை முளைக்கும் போது இந்தப் படங்களும் உங்கள் கண்களுக்கு முன் விரிவதாக…

அடடா !!! அழகான முகம் புகையினால்
இப்படி ஆயிடுமா ??

எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன் !

ஐயோ !!!
சந்ததிக்கே சமாதியா !


 
இன்னும் பல புகைப்படங்கள் அன்பு மணியே அருவருக்கும் வகையில் இருந்ததால் அதை இங்கே பதிவு செய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன் மஹா ஜனங்களே !

 

புகைப்பதை நிறுத்தினால்….


“அப்பா, புகைப்பதை விட்டு விடுங்களேன்…”

ஐந்து வயது மகள் தந்தையைப் பார்த்துச் சொன்னாள்.

“ஏன் நான் விட்டு விட வேண்டும் ?” தந்தை கேட்டார்.

“நான் வளர்ந்த பின்னும் நீங்கள் என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” மகள் சொன்னாள்.

அந்த வினாடியில் புகைப்பதை நிறுத்தினார் ரிச்சர்ட் டிக்கி டீன் எனும் அந்த அமெரிக்கத் தந்தை.

புகைத்தல், அதன் தீமைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வந்து கொண்டே இருந்தாலும் அதை விடாமல் தொடரும் மக்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

புகை பிடிக்கும் நண்பர்களில் ஒருவர் நிறுத்தினால் மற்றவரும் நிறுத்தும் வாய்ப்பு 36 விழுக்காடு அதிகரிக்கும் எனும் உற்சாகமான புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் இப்போது வெளியிட்டுள்ளனர்.

புகைக்கும் தம்பதியர்களில் ஒருவர் புகைப்பதை நிறுத்தினால் அடுத்தவரும் நிறுத்தும் வாய்ப்பு 67 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.

குடும்பத்திலுள்ளவர்கள் புகைத்தலை நிறுத்தும் போது, மற்ற குடும்ப உறுப்பினர்கள் புகைத்தலை நிறுத்தும் வாய்ப்பு 25 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.

சில சமூக அமைப்புகளில் ஒருவர் புகைப்பதை நிறுத்தினாலே, ஒட்டுமொத்த அமைப்பு உறுப்பினர்களுமே அந்த பழக்கத்தை விட்டு விடும் வாய்ப்பும் இருக்கிறதாம்.

இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு சுமார் முப்பது ஆண்டுகளாக 12,000 நபர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆய்வு புகைக்கும் பழக்கத்தை மக்களிடமிருந்து விலக்க ஒரு புதிய கோணத்தைக் கண்டறிந்திருக்கிறது எனலாம்.

புகைத்தல் எனும் பழக்கம் கூட இருக்கும் சகவயது நண்பர்களின் வசீகர விளம்பரத்தாலும், கண்டிப்பினாலும், நட்பென போதிக்கப்படும் உரிமை வற்புறுத்தல்களாலுமே ஆரம்பமாகின்றன. பின்னர் அவை கிளை விட்டு வேர்விட்டு விலக்க முடியா முள் மரமாக உள்ளத்தில் ஊன்றிப் படற்கிறது.

அந்த பழக்கத்தை விட்டு ஒருவர் விலகுவது ஒரு சமூக நன்மையைத் தருகிறது என்பது இதில் கவனிக்கத் தக்க அம்சமாகும்.
 புகை பிடிப்பதை நான் நிறுத்தினால் என்ன ?  நிறுத்தாவிட்டால் என்ன ? – என்று இனிமேல் யாரும் கேட்க முடியாது. ஏனெனில் , நீங்கள் நிறுத்தினால் உங்களால் இன்னொருவர் அதை விட்டு விடும் வாய்ப்பு இருக்கிறது. அவரால் இன்னொரு நபர் விடுதலை அடைய வாய்ப்பு இருக்கிறது.. இப்படியே இந்த சங்கிலித் தொடர் நீண்டு, ஒருவர் இந்த பழக்கத்தை நிறுத்துவது ஒரு பெரிய மாற்றத்துக்கான விதையாகவே விழுகிறது.

ஒரு சமூக மாற்றத்துக்கான விதையைப் போட புகைப்போர் முன்வருவார்களாக !