பைபிள் மாந்தர்கள் 30 (தினத்தந்தி) : யோனத்தான்.

ஸ்ரயேலரின் முதல் அரசன் சவுல். அவருடைய மூத்த மகன் தான் யோனத்தான். சவுல் அரசராகி வெற்றிகரமாக தனது முதல் ஆண்டை முடித்திருந்தார். இப்போது அவர்களுடைய தொடர் பகைவரான பெலிஸ்தியர்கள் போருக்கு வந்தார்கள். அந்தப் போரில் முக்கியமான பங்கு வகித்தவர் யோனத்தான்.

தன்னுடன் ஆயிரம் வீரர்களை சேர்த்துக் கொண்டு சென்ற யோனத்தான் கெபா எனும் இடத்தில் காவலில் இருந்த பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தினார். இஸ்ரயேல் மக்களிடையே யோனத்தானின் புகழ் பரவியது. யோனத்தான் ஒரு வீரனாக கொண்டாடப்பட்டார்.

காலங்கள் கடந்தன. சவுல் கடவுளை விட்டு விலகி நடக்கத் துவங்கினார். தாவீது எனும் வீரன் சவுலின் அரசவையில் அங்கம் வகித்தார். அவர் யாழ் மீட்டுவதிலும் வல்லவர். யோனத்தான் தாவீதை தனது உயிர் நண்பனாக்கிக் கொண்டான். தான் அணிந்திருந்த மேலங்கி, வாள், வில், கச்சை, எல்லாவற்றையும் தாவீதுக்குக் கொடுத்து தனது நட்பின் ஆழத்தைப் பிரகடனப் படுத்தினார். தாவீது, சவுலின் அரசவையில் படைத் தலைவனாகி வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார்.

தாவீது மாபெரும் வெற்றியாளனாய் மக்கள் மத்தியில் பிரபலமானார். மக்கள் “சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார், தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்” என பாராட்டிப் பாடினார்கள். அதைக் கேட்டது முதல் சவுல் தாவீதின் மீது விரோதம் வளர்க்கத் துவங்கினார். சவுல் மன அழுத்தத்தில் இருக்கும் போதெல்லாம் தாவீது தனது யாழை மீட்டி சவுலை அமைதிப்படுத்துவது வழக்கம். சவுல் இரண்டு முறை தாவீது யாழ் வாசித்துக் கொண்டிருக்கையில் ஈட்டியால் எறிந்து அவரைக் கொல்ல முயன்றார். தாவீது தப்பினார்.

தனது மகளை தாவீதுக்கு மணம் முடித்து கொடுத்து பெலிஸ்தியர்களின் எதிராய் தாவீதை உருவாக்க சவுல் நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. பெலிஸ்தியருக்கு எதிராய் தாவீதுக்கே வெற்றி. சவுலின் கோபம் இன்னும் இன்னும் அதிகரித்தது. தாவீதைக் கொல்ல வேண்டும் என எல்லாரிடமும் சொன்னார். அது தாவீதின் உயிர்நண்பனும் சவுலின் மகனுமாகிய யோனத்தானின் காதுகளிலும் விழுந்தது.

அவர் சவுலிடம் வந்து தாவீதுக்காய் பரிந்து பேசினார். தாவீதைக் கொல்ல வேண்டாம். அவர் என்றுமே உங்களுக்குத் தீமை செய்ய நினைத்ததில்லை. உங்களுக்கு மாபெரும் வெற்றிகளைத் தான் தேடித் தந்திருக்கிறார். தாவீதைக் கொன்று குற்றமற்ற இரத்தத்துக்கு எதிராகப் பாவம் செய்ய வேண்டாம் என்றான். சரி, “தாவீதைக் கொல்லமாட்டேன்”  என்றார் சவுல்.

ஆனால் தாவீது மீண்டும் மீண்டும் வெற்றிகளும் செல்வாக்கும் பெறவே, சவுல் மீண்டும் தாவீதைக் கொல்ல முயன்றார். “நான் என்ன பாவம் செய்தேன். எதுக்கு உன் அப்பா என்னைக் கொல்லத் தேடுகிறார். “தாவீது யோனத்தானிடம் புலம்பினார். அதற்கு யோனத்தான், “கவலைப்படாதே. என் அப்பா என்னிடம் கேக்காமல் எதுவும் செய்ய மாட்டார். உனக்கு எதுவும் ஆகாது” என்றார்.  யோனத்தானுக்கும், தாவீதுக்கும் இருந்த நட்பின் ஆழம் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

ஆனால் தாவீதின் மீது சவுல் மிகுந்த கோபமாய் இருந்ததை அடுத்தடுத்த நாட்களில் அவர் அறிந்து கொண்டார். எனவே தாவீதை அவர் தப்புவித்து அனுப்பினார். பிரியும் வேளையில் இருவரும் கட்டிப் பிடித்து அழுதனர். அந்த அளவுக்கு அவர்களிடையே நட்பு மிகவும் ஆழமாக இருந்தது.

பின்னர் தாவீதைக் கொல்ல சவுல் தேடுகையில் தாவீது மறைந்து வாழ்ந்தார். அப்போதும் யோனத்தான் சென்று அவரைச் சந்தித்து, “ஆண்டவர் உன்னோடு இருப்பார். நீ வெல்வாய். இஸ்ரயேலின் அரசனாவாய். நான் உனக்கு அடுத்த இடத்தில் இருப்பேன்” என்றெல்லாம் வாழ்த்தினார்.

ஆனால் அந்த ஆனந்தம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. எதிரிகளான பெலிஸ்தியரின் கைகளில் சிக்கி சவுலும், அவர் மகன் யோனத்தானும் கொல்லப்பட்டனர். செய்தியைக் கேட்ட தாவீது தமது உடைகளைக் கிழித்துக் கொண்டு அழுது புலம்பினார். அவர்களுக்காக துயரம் மிகுந்த இரங்கற்பா பாடி உண்ணா நோன்பு இருந்தார்.

“சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உள்ளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது அளித்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலை மிஞ்சியது அன்றோ” என கதறினார்.

ஆழமான நட்புக்கு அழகான உதாரணம் யோனத்தான் – தாவீது நட்பு. தாவீது தனது இருக்கைக்கு ஆபத்தாய் வந்து விடுவானோ என பயப்பட வேண்டிய யோனத்தான் தாவீதை அளவு கடந்து நேசிக்கிறார். தனது பட்டத்து உரிமையையே தாவீதுக்குக் கொடுப்பதன் முன்னறிவிப்பாய் அரச உடைகளை அவருக்கு அணிவிக்கிறார். தன் தந்தைக்கு எதிராய்ச் செயல்பட்டும் கூட நண்பனைக் காக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போதும் கடவுளை முன்னிறுத்தியே வாழ்கிறார்.

நட்பின் இத்தகைய நல்ல செயல்களை யோனத்தானின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்.

கண்ணோடு காண்பதெல்லாம்…

 

Google Glass

 

சண்டை போடுபவர்கள் போடலாம், அடிக்க வருபவர்கள் அடிக்கலாம், நான் கூகிள் கிளாஸை, கூகுள் கண்ணாடி என்றே அழைக்கப் போகிறேன். கடந்த சில் ஆண்டுகளாகவே தொழில் நுட்பத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய கூகுள் கண்ணாடி சமீபத்தில் ஒரு நாள் முதல்வன் போல ஒரு நாள் மட்டும் விற்பனைக்கு வந்தது.

ஒரு குட்டியூண்டு மூக்குக் கண்ணாடிக்குள் வயர்லெஸ், ஜிபிஎஸ், கேமரா, தொடு திரை இத்யாதி இத்யாதி என கடுகைத் துளைத்து ஆழ்கடல் தொழில் நுட்பம் புகுந்திருக்கிறது. நடந்து கொண்டே இருக்கும் போது ஒரு கட்டிடத்தைப் பார்த்து, “ஹே.. இதென்ன கட்டிடம்” என கேட்டால் கூகுள் கண்டுபிடித்துச் சொல்லும். ஒரு அட்டகாசமான அபூர்வக் காட்சியைப் பார்த்தால் வினாடியில் கிளிக்கிக் கொள்ளலாம். கேமரா எடுத்து, லென்ஸ் மாட்டி, மெமரி கார்ட் தேடி எனும் கஷ்டம் தாமதம் ஏதும் இல்லை ! தெரியாத மொழியை ஒருவர் பேசினால் அதையும் மொழிபெயர்த்துத் தெரிந்து கொள்ளலாம் ! வீட்டை விட்டுக் கிளம்பும் போதே, “பாத்து போப்பா, இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் போன செம டிராபிக்” என அது எச்சரிக்கும் ! என சகட்டு மேனிக்கு “அட” போடவைக்கும் சமாச்சாரங்கள் நிரம்பியிருக்கின்றன.

தொழில் நுட்ப பைத்தியங்கள் என செல்லமாய் அழைக்கப்படுபவர்கள் போட்டி போட்டு வாங்கினார்கள் ! விலை வெறும் $1500 தான். முறைக்காதீங்க ! கண்ணில் கண்ணாடியைப் போல மாட்டிக் கொண்டு காண்பவற்றையெல்லாம் படமெடுத்து, அப்படியே ஃபேஸ்புக், டுவிட்டர் என ஷேர் பண்ணி மக்கள் சிலிர்த்தார்கள். அப்படியே “என் வீட்டுக்கு வழி சொல்லு” என சொன்னவர்களிடம் அது அவர்களை அலேக்காகக் கூட்டிக் கொண்டு போய் வீட்டில் விட்டதாம். கண்ணுக்கு முன்னாடியே படம் பார்த்து தனியே சிரித்தவர்கள் வித்யாசமாகப் பார்க்கப் பட்டார்கள் !

ஆங்காங்கே பலர் தாக்கப்பட்டார்கள். தங்கள் சுதந்திரம் களவாடப்படுவதாக உருவான பயமா ? அல்லது நம்மகிட்டே இல்லையே எனும் எரிச்சலா தெரியவில்லை. கண்ணாடி உடைந்தவர்கள் $1500 போச்சே என அழுது புலம்பியிருப்பார்கள். இது இன்னும் முழுமையடையவில்லை, இன்னும் சோதனைக் கட்டத்தில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.

அடுத்த கட்டமாக மூக்குக்கு மேலே போடும் கண்ணாடியை விட்டு விட்டு, கண்ணுக்குள் பொருத்தும் கான்டாக்ட் லென்ஸ் பக்கம் தனது தொழில் நுட்பத்தை இறக்கி வைத்திருக்கிறது கூகுள். கண்ணுக்குள் இதைப் பொருத்திக் கொண்டால் இமைத்தாலே எதிரே இருப்பதைப் படமெடுக்கலாமாம். “செல்லமே உன்னை என் கண்ணுக்குள்ளே படமெடுத்தேன்” என நிஜமாவே காதலர்கள் கொஞ்சிக் கொள்ளலாம். “கண்ணுக்குள்ளே உன்னை வெச்சேன் கண்ணம்மா” என சோகத்தில் பாடியும் திரியலாம். அது அவரவர் விருப்பம். சுடச்சுட இதற்கான காப்புரிமையை வாங்கி வைத்திருக்கிறது கூகுள் நிறுவனம்.

ஆனால் இந்த கான்டாக்ட் லென்ஸ் பற்றி கூகுள் நிறுவனம் சொல்லும் விஷயங்கள் கூகுள் கண்ணாடியை விட அதிக சிலிர்ப்பூட்டுகின்றன. இதைப் போட்டுக் கொண்டு நடந்தால் காண்பவற்றைப் படமெடுக்கலாம் என்பது அடிப்படை விஷயம். அதை அப்படியே உங்கள் கணினிக்கோ, மொபைலுக்கோ வயர்லெஸ் மூலம் இணைத்து வீடியோவை சேமித்து வைக்கலாம் என்பது இன்னொரு விஷயம். பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாத சூழலில், வழியில் நீங்கள் ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்கிறீர்களெனில் அதை அப்படியே உங்கள் கண் உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்து வைக்குமாம், ஒரு இமைத்தல் போதும்.

பார்வையில்லாதவர்களுக்கு இந்த கான்டாக்ட் ரொம்பவே உதவி செய்யுமாம். அதிலுள்ள சென்சார்கள் பார்வையற்றவர்களுக்கு ஒரு வகையில் செயற்கைக்கண் போல உதவும். எப்போ ரோட்டைக் கடக்கலாம், வழியில பள்ளம் இருக்கா, மேடு இருக்கா, கதவு இருக்கா என எல்லா விஷயங்களையும் இது சொல்லுமாம்.

தெரிந்த நபர்களை பதிவு செய்து வைத்துக் கொண்டு அந்த நபர்கள் அடுத்த முறை பக்கத்தில் வரும்போது, ‘ராமசாமி வரான்’ என உங்கள் காதில் கிசுகிசுக்குமாம். அதனால் யாராச்சும் ராமசாமி மாதிரி குரல் மாற்றிப் பேசி உங்களை ஏமாற்றவும் முடியாது ! ராமசாமி உங்களைக் கண்டும் காணாதது போல் போய்விடவும் முடியாது ! கூடவே மருத்துவ விஷயங்களையும் அதில் புகுத்தி உடம்பிலிருக்கும் குளுகோஸ் அளவு போன்ற விஷயங்களையும் புட்டுப் புட்டு வைக்குமாம். !

விரல் நுனியில் உலகம் எனும் நிலை மாறி, விழி நுனியில் உலகம் எனும் நாள் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது இல்லையா ?!


சேவியர்
நன்றி : வெற்றிமணி, ஜெர்மனி

அசத்தப் போகும், NFC !

பழைய கால “சூப்பர் ஸ்டார்” படங்களில் ஒரு காட்சி வரும். ஹீரோ ஸ்டைலாக கையைத் தூக்கி கதவை நோக்கி நீட்டுவார். கதவு திறந்து கொள்ளும். ஞாபகம் இருக்கிறதா ? கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது ! இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன ! சென்சார்கள் கதவைத் திறந்து விடும் செக்யூரிடி வேலையை செவ்வனே செய்து விடுகின்றன !

அதே போல தான் அமானுஷ்ய படங்களில் சட்டென டிவி ஓடுவதும். டேப் ரிக்கார்டர் பாடுவதும் என வெலவெலக்க வைக்கும் டெக்னிக் அதரப் பழசு. யாரும் தொடாமலேயே டிவி ஓடுமா என திகிலடையும் மனசு இப்போ இல்லை. கையடக்க ஒரு குட்டி ரிமோட் கண்ட்ரோல் எல்லா வேலையையும் செய்கிறது இல்லையா ?

“இப்படி தொடாமலேயே இயங்கும்” தொழில் நுட்பம் ஒரு இனிய ஆச்சரியம். தொழில் நுட்ப வளர்ச்சியின் ஒரு முக்கியமான மைல் கல் என்று இதைச் சொல்லலாம். அது தான் “அட” என வியக்க வைக்கும் பல விஷயங்களைச் சாத்தியமாக்கித் தந்திருக்கிறது. செல்போன் முதல் வை-ஃபை(WiFi) எனப்படும் வயர்லெஸ் இணையம் வரை தொடாமல் தொடும் விஷயங்களே அக்கிரமித்திருக்கின்றன.

அதிலும் “வயர்லெஸ் இணையம்” சாத்தியமானதால் இன்றைக்கு தொழில் நுட்பம் சட்டென பல படிகள் பாய்ந்து முன்னேறிவிட்டது என்று கூட சொல்லலாம். மொபைல்கள், டேப்லெட்கள், ரீடர்கள் என எல்லா கருவிகளிலும் இப்போது வை ராஜா வை என “வை ஃபை” ஆட்சி தானே !

எப்போதும் அடுத்த கட்டத்தை நோக்கி புலிப் பாய்ச்சலாய் ஓடும் தொழில் நுட்பம் இணையம் வந்தபின் ராக்கெட் பாய்ச்சலாய் மாறியிருக்கிறது. அதன் தற்போதைய வசீகரிக்கும் அம்சம் தான் “நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன்” (Near Field Communication – NFC ). அழகிய தமிழில் இதை அருகாமைத் தகவல் தொடர்பு என்று சொல்லலாம். பெயரைப் பார்த்தாலே புரிந்திருக்கும் இதன் பயன் என்ன என்பது !

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு ஸ்மார்ட்போன்களை செல்லமாய் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்வதன் மூலம் தகவலைப் பரிமாறுவது தான் இந்த நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷனின் அடிப்படை. சுருக்கமாக என்.எஃப்.சி. தொட்டும் தொடாமலும் உங்க பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் பர்ஸை அபேஸ் செய்வார்கள் இல்லையா ? அதே போல தான் இங்கும் தகவல் பரிமாற்றம் இருக்கும் ! இரண்டு கருவிகள் ஒன்றோடொன்று தொடவேண்டும், அல்லது ரொம்ப ரொம்ப அருகில் உரசுவது போல வரவேண்டும். அப்போது தான் இங்கே தகவல் தொடர்பு சாத்தியம் !

மிக எளிமையான வழி. வயர்லெஸ், புளூடூத் போல இரண்டு கருவிகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவது, அது இது என எக்ஸ்ட்ரா டென்ஷன் ஏதும் இல்லை. ஜஸ்ட் லைக் தேட் தொட்டால் தகவல் பரவும் !

ரேடியோ அலைவரிசைத் தகவல் பரிமாற்றம் தான் இதன் உள்ளே ஒளிந்திருக்கின்ற தொழில் நுட்ப சீக்ரெட் ! ரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio Frequency Identification ) ஸ்டான்டர்ட் இந்த தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை. ISO/IEC 14443 , FeliCa போன்றவையெல்லாம் இந்த ஸ்டான்டர்களில் சில.

என்.எஃப்.சி  தொழில் நுட்பம் சாதாரணமான கிரடிட் கார்ட், எலக்ட்ரானிக் காசோலை, மொபைல் பண பரிவர்த்தனை போன்ற அனைத்து விஷயங்களையும் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும். கூகிள் வேலட் (google wallet ) கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அது இந்த நுட்பத்தின் படி தான் இயங்குகிறது.

உதாரணமாக, கடையில் பொருள் வாங்கிவிட்டு என்ன செய்வீர்கள் ? கிரெடிட் கார்டைக் கொடுப்பீர்கள் ! அவர்கள் அந்தக் கார்டை மெஷினில் தேய்த்து, உங்கள் கையெழுத்து உட்பட இன்ன பிற சங்கதிகளை வாங்கி விட்டு அனுப்புவார்கள். யாராச்சும் உங்களுடைய கார்டை லவட்டிக் கொண்டு போய் பொருள் வாங்கினாலும், சந்தோசமாக வழியனுப்பி வைப்பார்கள்.

என்.எஃப்.சி  அதை பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றுகிறது. உங்களுடைய கார்ட் தகவல்கள் எல்லாமே உங்கள் மொபைலில் பாதுகாப்பாக இருக்கும். பொருள் வாங்கிவிட்டு போனை அந்தக் கருவியில் உரசினால் போதும். எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமோ செலுத்தலாம். ஒரு “பாஸ்வேர்ட்” வைத்துக் கொள்ளலாம். அவ்ளோ தான் ! இது ஒரு சின்ன உதாரணம்

என்.எஃப்.சி  பயன்பாடு எதிர்காலத்தில் மிரட்டக் கூடிய அளவில் இருக்கும் என்பது சர்வ நிச்சயம். உங்கள் வீட்டுக் கதவைத் திறக்க வேண்டுமானால் மொபைலினால் தொட்டால் போதும். சாவி இல்லாமலேயே பூட்டு திறந்து கொள்ளும். போனும் போனும் உரசிக் கொண்டால் அப்படியே விசிடிங் கார்டைப் பரிமாறிக் கொள்ளலாம். அப்படியே போட்டோக்களை பரிமாறிக் கொள்ளலாம். விமான டிக்கெட் போனில் இருந்தால் போதும் என இதன் பயன்கள் எக்கச் சக்கம்.

இதன் பயன்பாடு நவீன சமூக வலைத்தளங்கள் மற்றும் விளையாட்டு மென்பொருட்களில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

எதிர்காலத்தில் வர்த்தகத்தில் என்.எஃப்.சி கொடி நாட்டும் என வர்த்தக ஜாம்பவான்கள் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறார்கள். அதற்கு உதவுபவை இரண்டு விஷயங்கள். ஒன்று ஸ்மார்ட் போன், இன்னொன்று என்.எஃப்.சி டேக் (NFC Tag). என்.எஃப்.சி டேக் என்பதை பொருட்களில் இருக்கின்ற “பார் கோட்” போல நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.  பல்பொருள் அங்காடிகளில் பொருள் வாங்கும் போது ஸ்கேன் செய்து பில் போட்டுத் தருவார்கள் இல்லையா ? அதோடு நீங்கள் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

உதாரணமாக, காலையில் வீட்டுப் பேப்பரில் ஒரு ஸ்பெஷல் விளம்பரம் இந்த என்.எப்.சி டேக் சகிதம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் போனை அதன் மேல் தொட்டால் உங்களுக்கு அது இன்னும் பல விஷயங்களை போனில் தரும். “சிங்கப்பூர் செல்ல இன்றைக்கு ஸ்பெஷல் ஆஃபர். உடனே டிக்கெட்டை வாங்குங்கள்” என ஒரு விளம்பரம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள். அந்த எண்ணுக்கு போன் பண்ணி விஷயத்தைக் கேட்பீர்கள். பிறகு அந்த அலுவலகத்துக்கோ, அல்லது ஆன்லைனிலோ உங்களுடைய டிக்கெட்களை புக் செய்வீர்கள். இது தானே வழக்கம்?

என்.எப்.சி டேக் விளம்பரமெனில் இதில் எதுவும் தேவையில்லை. உங்கள் போன் அந்த இணைப்பை வாசிக்கும். அப்படியே விவரங்கள் போனில் வரும். அங்கிருந்து உடனடியாக பணம் செலுத்தி டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். ஒரு காபி குடிக்கும் நேரத்தில் எல்லாம் சுபம் ! அடுத்த லண்டன் ஒலிம்பிக் டிக்கெட்களை என்.எஃப்.சி  நுட்பத்தில் எளிதில் பெற்றுக் கொள்ளும் வசதியை இப்போதே சேம்சங் போன்ற செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டு உருவாக்கி வருகின்றன.

கடை வீதிக்குப் போகிறீர்கள். போகும் வழியில் தெருக்களிலோ, கடை வாசலிலோ ஒட்டப்பட்டிருக்கும் என்.எப்.சி டேக் பக்கத்தில் உங்கள் போனைக் கொண்டு போய் “ஒரு கிலோ கத்தரிக்காய், நாலு கிலோ வெங்காயம்” என ஆர்டர் செய்து விட்டு வீட்டுக்கு அனுப்பச் சொல்லலாம். நீங்கள் வீடு வந்து சேரும் போது பொருட்களும் வந்து சேரும்.

ஜப்பான் போன்ற நாடுகளில் சில கடைகள் இதற்காகவே இருக்கின்றன. கடைகளில் பொருட்களே இருக்காது. போனால் படங்களும், அதன் விலையும், என்.எஃப்.சி விளம்பரமும் மட்டுமே இருக்கும். உங்களுக்கு எதெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் தொட்டுக் கொள்ளுங்கள், பணத்தை போனிலேயே செலுத்துங்கள், வீட்டு அட்ரசைக் கொடுங்கள் வீட்டுக்கு பொருள் வந்து சேரும். வெண்டக்காயை ஒடிச்சுப் பாத்து தான் வாங்குவேன் என அடம்பிடிக்காதவர்களுக்கு இது ஒரு அற்புதமான ஷாப்பிங் ஐடியா !

பிரான்ஸிலுள்ள டோலோஸ் விமான நிலையத்தில் என்.எஃப்.சி மூலம் செக்-இன் செய்யலாம் எனும் வசதியை உருவாக்கியிருக்கிறார்கள். உங்களுடைய போர்டிங் பாஸ் எல்லாம் போனில் இருக்கும். கையை ஆட்டிக் கொண்டே விமானத்தில் ஏறுவது போல, போனை ஆட்டிக் கொண்டே உள்நுழைய அனுமதி பெறலாம் ! உலகிலேயே இந்த வசதி இந்த விமான நிலையத்தில் தான் முதன் முதலாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது ஸ்பெஷல் நியூஸ் !

2004ம் ஆண்டு மூன்று வர்த்தக ஜாம்பவான்கள் சோனி, நோக்கியா மற்றும் பிலிப்ஸ் இணைந்து இதற்கான வரைமுறையையும் விதிகளையும் நிர்ணயித்தார்கள். இன்று வரை அவையே என்.எஃப்.சியின் அடிப்படை விதிகளாக இருக்கின்றன ! இதெல்லாம் பழைய கால வரைமுறை. இதெல்லாம் மாற்றியாகவேண்டும் என்பதையும் நான் சொல்லியாக வேண்டும் !

அறிவியல் படித்திருக்கிறீர்களா ? “இன்டக்டிவ் கப்ளிங்” (Inductive coupling) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? எலக்ட்ரான்கள் ஒரு ஊடகம் வழியாகப் பாயும் போது ஒரு மின் காந்த தளத்தை உருவாக்கும். மின்காந்த தளம் மாறும் போது எலக்ட்ரான்கள் அதன் வழியாகப் பயணிக்கும். இந்த இரட்டை இயக்கம் தான் இன்டக்டிவ் கப்ளிங் எனப்படுகிறது. என்.எஃப்.சி தொழில்நுட்பத்தின் அடிப்படையும் இது தான். அதனால் தான் இந்த தொழில் நுட்பம் வேலை செய்ய வேண்டுமானால் கருவிகள் தொட்டுக்கொள்ளவேண்டும், அல்லது 4 சென்டீமீட்டர்களுக்குள் வரவேண்டும் எனும் விதி இருக்கிறது ! பத்து இருபது சென்டீமீட்டர்  வரை செயல்படும் என சிலர் வாதிடுவதுண்டு. எனினும் 4 சென்டீமீட்டர் என்பதே உத்தரவாத எல்லை !

ரேடியோ பிரீக்வென்சி ஐடென்டிபிகேஷன் (Radio frequency identification (RFID) ) பற்றிச் சொன்னேன் இல்லையா ? அதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பேசிவ் ஆர்.எஃப்.ஐ.டி, இன்னொன்று ஆக்டிவ் ஆர்.எஃப்.ஐ.டி. இரண்டாவது வகை பேட்டரியால்  சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் என்பதே அதி முக்கியமான வித்தியாசம். இதனால் இந்த தொடுபிணைப்பு தூரம் கொஞ்சம் அதிகரிக்கப்படும் என்பது ஒரு ஸ்பெஷல் பயன். போகும் வழியில் பஸ்ஸில் இருந்தபடியே போஸ்டரில் இருக்கும் “இணைப்பை வாசித்து” பொருளை வாங்கும் நிலை ஒருவேளை வரலாம் !

தொழில் நுட்ப அடிப்படையில் இது 13.56 மெகா ஹெட்ஸ் அலைவரிசையில் இயங்கும். வினாடிக்கு 106 முதல் 424 கிலோபைட் அளவிலான தகவல்களை பரிமாற்றும். இது என்.எஃப்.சி சார்ந்த வர்த்தகத்துக்கு போதுமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இதை பயன்பாட்டு அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். ஒன்று ரீட் அன்ட் ரைட் ( read and write ) விளம்பரங்களில் உள்ள இணைப்பை வாசிக்க இது பெருமளவில் பயன்படும். இரண்டாவது பியர் – டு – பியர் (peer to peer). இரண்டு செல்போன்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடத்தும் விஷயம் இது. போட்டோக்கள், பாடல்கள், விசிடிங்கார்ட் போன்றவற்றை பரிமாறிக் கொள்வது போல!. மூன்றாவது கார்ட் எமுலேஷன் மோட் ( card emulation mode ) இது கிரெடிட் கார்ட் பயன்பாடு, டிக்கெட் வாங்குவது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுவது !

எதிர்காலத்தில் என்.எஃப்.சி நிச்சயம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனும் நம்பிக்கை உங்களுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன் ! இப்போதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரங்கள் இந்தியாவிலும் உடனுக்குடன் இறக்குமதியாகின்றன. யார் கண்டது ? நாளை டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்க நம்முடைய போன் பயன்படலாம் !

நன்றி : தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம், (மவுஸ் பையன்)

 

தொழில் நுட்பத் திகில் !!

தொழில் நுட்பம் வளர வளர மக்களுடைய தனிமையும், நிம்மதியும் பறிபோய்விடும் என்பது உண்மையாகத் தான் இருக்கிறது. குறிப்பாக இன்டர்நெட் வந்தபிறகு “உளவு” வேலைகள் சகஜமாகிவிட்டன. கூகிள் மேப் போன்ற மென்பொருட்கள் வீதி, வீடு, மொட்டை மாடி, என எல்லா இடங்களிலும் ரகசியக் கண் வைத்து கவனிக்கின்றன. யார் எங்கே போகிறார் என்றெல்லாம் கூட அது கண்டுபிடித்து விடுகிறது ! 

அதே போல தான் செல்போன். கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும். ஒரு நபர் எங்கே இருக்கிறார். எப்போது அந்த இடத்துக்கு வந்தார். எங்கேயெல்லாம் போனார் என சர்வ சங்கதிகளையும் கண்டு பிடித்து விடலாம். காவல் துறையினருக்கு துப்புத் துலக்குவதில் இப்போதெல்லாம் அதிகம் பயன்படுவது செல் போன் தான் ! குற்றவாளிகளை வலை வைத்துப் பிடிக்க அது ரொம்ப வசதியாய் இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டியும் நாம் கவனிக்கப் படுவோம் ! தொழில் நுட்பம் நமது வீட்டின் அறைகளுக்குள் நுழைந்து நம்மைக் கண்காணிக்கும் என்கிறார் அமெரிக்காவிலுள்ள சி.ஐ.ஏ ( சென்ட்ரல் இன்டலிஜன்ட் ஏஜன்ஸி) இயக்குனர் டேவிட் பீட்ரஸ். குறிப்பாக தொலைக்காட்சி போன்றவையெல்லாம் இன்றைக்கு இணையத் தொடர்போடு தான் வருகின்றன.

இணையப் பக்கங்களில் நுழையலாம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற திரைப்பட பக்கங்களில் போய் படம் பார்க்கலாம் என்றெல்லாம் ஏகப்பட்ட வசதிகள். இதனால் எப்போதும் உலகோடு நமது வீடு இணைக்கப் பட்டு விடுகிறது.

இப்படி இணையத்தில் உலவும் போது நமது செயல்பாடுகளையெல்லாம் ரகசியமாய்க் கவனிக்க முடியும் என கூறி அவர் திடுக்கிட வைக்கிறார். நாம் எங்கே இருக்கிறோம். நமது விருப்பம் என்ன ? நமது செயல்பாடுகள் என்ன போன்ற அனைத்து விஷயங்களும் ரகசியமாய் உறிஞ்சப்படலாம் என்கிறார் அவர். இணையத்தின் மூலமாக மட்டுமல்லாமல், ரேடியோ ஒலி அலைகள் மூலமாகக் கூட நபர்களைக் கண்காணிக்க முடியுமாம். 

ஒரு வகையில் நமக்குத் தெரியாமலேயே நமது விருப்பங்கள், செயல்பாடுகள் என ஏகப்பட்ட விஷயங்களை நாம் யாரோ ஒருவருக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த சிந்தனையே ஒரு வகை அசௌகரியத்தைத் தருகிறது இல்லையா ? இப்போது எல்லா மொபைல்களும் வேறு இணையத்தோடே இணைந்திருப்பதால் இந்த “உளவு” பல மடங்கு உயரும் என்பது அவருடைய கருத்து !

தொலைக்காட்சி மட்டுமல்லாமல் ஃபிரிட்ஜ் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் வீட்டுப் பொருட்களில் கூட “கம்ப்யூட்டர் சிப்” இணைத்து கவனிக்கலாம் என்று அவர் தெரிவிக்கும் கருத்து இன்னும் அதிர வைக்கிறது !

தொழில் நுட்ப வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலை இது !

*

நன்றி : தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம், (மவுஸ் பையன்)

வின்டோஸ் 8, ஒரு பார்வை !

 கணினியுலக ஜாம்பவான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்களுடைய மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று வின்டோஸ் செயலி. அதன் ஒவ்வொரு வடிவம் வரும்போதும் பரபரப்பு பற்றிக் கொள்ளும். வின்டோஸ் 7 எனும் செயலி தான் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்ததாக வரப்போகும் செயலி வின்டோஸ் 8 ! இதுவரையிலான செயலிகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பதால் அதற்கான வரவேற்பு கணிசமாக எகிறியுள்ளது !

இதன் பீட்டா வெர்ஷனை ( சோதனை வடிவம்) பிப்ரவரி 29ம் தியதி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் களமிறக்கியது. இதை யார்வேண்டுமானாலும் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்பாட்டாளர்களின் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் பரிசீலித்து தேவையான மாற்றங்களைச் செய்து மெருகேற்றலாம் என்பது மைக்ரோசாஃப்டின் திட்டம். அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதை டவுன்லோட் செய்து ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டார்கள் !

வின்டோஸ் 8 ஐப் பொறுத்தவரை இது எல்லாவிதமான கம்ப்யூட்டர்களிலும் பொருந்தும் என்பது புதுமையான விஷயம். தொழில் நுட்ப அடிப்படையில் பேசும்போது வின்டோஸ் செயலிகள் எல்லாமே எக்ஸ்.86 எனும் பிராசசர்களுக்காகவே உருவாகும். அதனால் பிற இடங்களில் இதை நிறுவ முடியாத சூழல் இருந்தது. இந்த செயலி முதன் முறையாக அந்தக் கட்டுப்பாட்டை உடைத்து ஏ.ஆர்.எம் கட்டமைப்புக்கும் பொருத்தமானதாய் உருவாகியிருக்கிறது.

வின்டோஸ் செயலிகளில் இருக்கும் பலவீனங்களில் ஒன்று அதன் “ரீஸ்டார்ட்” நேரம். சில வேளைகளில் கணினியை இயக்கிவிட்டு ஒரு காபி குடித்து விட்டு வந்தால் தான் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகி இருக்கும். இது ஒரு பரவலான குறையாகவே இருந்து வருகிறது. வின்டோஸ் 8 அந்த சிக்கலையும் புதுமையான முறையில் சரி செய்யும் என்கிறார்கள். ரிஃப்ரஷ், ரீசெட் எனும் இரண்டு புது கான்சப்ட் மூலமாக இந்த சிக்கலைச் சரிசெய்திருக்கிறோம் என்கின்றனர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தினர்.

இன்றைய நவீன உலகில் எல்லாமே தொடு திரை தானே. குறிப்பாக மொபைல் புரட்சி வந்தபின் மக்களெல்லாம் போனில் தொட்டுத் தொட்டு விஷயங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். கணினியைப் பொறுத்தவரை இன்னும் கீ-போர்ட் முக்கியமான அம்சமாகவே இருக்கிறது. திரையில் தொட்டால் செயல்படுவது போல செயலிகள் இல்லை. அந்தக் குறையை வின்டோஸ் 8 போக்கும் ! இது தொடு திரை வசதியுடைய டேப்லெட்களுக்கும் பொருத்தமானதாய் உருவாகியிருக்கிறது.

இன்றைய ஹாட் டெக்னாலஜிகளில் ஒன்று கிளவுட் சிஸ்டம். இப்போதே எல்லா நிறுவனங்களும் கிளவுடை நோக்கி தங்கள் திட்டங்களை வரையறுத்து விட்டன.  எதிர்காலத்தில் முழுமையாய் இது தான் கணினித் துறையை ஆக்கிரமிக்கும் என நம்பப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐடியூன் வசதியையும் கிளவுட் மயமாக்கியிருக்கிறது.

ஆப்பிளின் ஐடியூன் பயனராக உங்கள் கணினியில் இருந்து மட்டுமே இயங்க முடியும் எனும் குறை இருந்தது. கிளவுட் முறை எந்தக் கணினியில், அல்லது மொபைலில் இருந்தும் உங்கள் பயனர் கணக்கை இயக்கும் வசதியைத் தந்திருக்கிறது. வின்டோஸ் 8 செயலி முதன் முறையாக அத்தகைய ஒரு வசதியை அறிமுகம் செய்கிறது ! இதுவரை எந்த கணினிச் செயலிகளிலும் இல்லாத வசதி இது !

இதன் மூலம், உங்களுடைய கணினி ஐடியை வைத்து எந்தக் கம்ப்யூட்டரில் இருந்து வேண்டுமானாலும் உள் நுழையலாம். உங்களுடைய “செட்டிங்” அப்படியே இருக்கும். உங்களுடைய டெஸ்க்டாப்பில் எதையேனும் சேமித்து வைத்திருந்தால் அதை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இது இன்னொரு வசீகரிக்கும் அம்சம் !

பாதுகாப்பு விஷயங்களைப் பலப்படுத்தவும், எளிமையாக கணினியில் உள் நுழையவும் படம் சார்ந்த பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது வின்டோஸ் 9. இதில் பயனர் நீளமான ஒரு கடவுச் சொல்லை நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை. அடிக்கடி அதை மாற்றி, என்னத்த மாற்றினோம் எனவும் குழம்பவும் தேவையில்லை. படத்தைக் காட்டி உள் நுழையலாம் ! இரண்டாம் கட்ட பாதுகாப்பாக வார்த்தைகளைக் கொண்டும் பாஸ்வேர்ட் அமைக்கலாம்.

இன்னொரு அட்டகாசமான விஷயம், “வின்டோஸ் டு கோ” என்பது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு “டாஸ்” செயலி இருந்த காலத்தில் ஃப்ளாப்பி டிஸ்க்கில் தான் அந்த செயலிக்கான கோப்புகள் இருக்கும். அதைப் போட்டுதான் கணினியை இயக்க முடியும்.

அதன் பின் பிளாப்பிகளெல்லாம் அருங்காட்சியகத்துக்குச் சென்று விட்டன. இந்த வின்டோஸ் டு கோ ஒரு புதுமையான மறுபிறவி எனலாம். அதாவது, வின்டோஸ் 8 செயலி முழுவதும் ஒரு 32 ஜிபி அளவுள்ள பென்டிரைவில் இருக்கும். அதை கணினியில் சொருகிவிட்டால் போதும். அங்கிருந்தே செயலி செயல்படத் துவங்கும். உங்கள் கம்ப்யூட்டலில் “இன்ஸ்டால்” செய்யத் தேவையில்லை ! புதுமையாய் இருக்கிறது இல்லையா ?

வின்டோஸ் செயலி பொதுவாகவே வின்டோஸ் எக்ஸ்ப்ளோரர் எனும் பிரவுசரைத் தான் முன்மொழியும். காரணம், அதுவும் மைக்ரோசாஃப் தயாரிப்பு என்பது தான். ஆனால் பயனர்களுடைய விருப்பம் மாறுபடும். சிலர் மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசரை விரும்புவார்கள். வேறு சிலருக்கு கூளிள் குரோம் வசதியாக இருக்கும். அதைக் கருத்தில் கொண்டு வேறு பிரவுசர்களை எந்த சிக்கலுமில்லாமல் நிறுவிக் கொள்ளவும் வின்டோஸ் 8  அனுமதிக்கிறது !

ஆனாலும் வின்டோஸ் 8க்காகவே மைக்ரோசாஃப்ட் களமிறக்கும் பிரவுசர் வின்டோஸ் எக்ஸ்ப்ளோரர் “மெட்ரோ” 10 ! தொடு திரை வசதியுடன் கூடிய முதல் பிரவுசர் இது தான். இது வின்டோஸ் 8ல் மிகவும் அற்புதமாகச் செயல்படுவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வின்டோஸ் செயலி என்றதும் “ஸ்டார்ட் பட்டன்” உங்களுக்கு மனதில் நிழலாடும் ! ஸ்டார்ட் பட்டன் இல்லாவிட்டால் கொஞ்சம் தடுமாறிப் போவோம் இல்லையா ? இந்த வின்டோஸ் 8ல் ஸ்டார்ட் பட்டனே கிடையாது. இது திரையில் ஆப்ளிகேஷன்களை வரிசைப்படுத்தி வைக்கும். அங்கிருந்து தேவையானவற்றை இயக்கவோ, முடிக்கவோ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். புதுமையான மாற்றம் என்பதால் காலம் காலமாக ஸ்டார்ட் பட்டன் கிளிக்கிப் பழகிய கைகளுக்கு கொஞ்சம் தடுமாற்றம் நேரிடலாம்.!

தொடுதிரை வசதி மெட்ரோ யூஐ வசதியின் மூலம் சாத்தியமாகி இருப்பதால், மவுஸ் பயன்பாடும் கீ போர்ட் பயன்பாடும் வெகுவாகக் குறையும். ஆனாலும் அது முழுமையாக நீக்கபடவில்லை. மவுஸ் தான் வேண்டும் என முரண்டு பிடிக்கும் கைகளுக்கு மவுஸ் பயன்படுத்திக் கொள்ளலாம் !

இப்போது பயன்பாட்டில் உள்ள யூ.எஸ்.பி 2 வின் அட்வான்ஸ் வெர்ஷனும் வருகிறது என்பது புதுமை. இந்த செயலியுடன் யூ.எஸ்.பி 3 வருகிறது. இதன் செயல்பாட்டுத் திறன் அதிகமாக இருக்கும்.

கொஞ்ச நாள் தொடர்ந்து வின்டோஸ் செயலியைப் பயன்படுத்தினால் அது ரொம்பவே ஸ்லோ ஆகி இம்சைப்படுத்தும் என்பது சர்வதேசக் குற்றச்சாட்டு. அதற்குக் காரணம் தேவையில்லாமல் சேரும் தற்காலிகக் கோப்புகள், நினைவிடக் கோளாறுகள் போன்றவை தான். அதை நிவர்த்தி செய்ய “புஷ் பட்டன் ரீசெட் ஆப்ஷன்” இருக்கிறது.

ஒரு பட்டனை அமுக்கினால் உங்கள் கணினியிலுள்ள வேண்டாத விஷயங்களையெல்லாம் அது அழித்து உங்கள் கணினியை சுறுசுறுப்பாக்கிவிடும். கணினியையே புத்தம் புதிது போல ஆக்க வேண்டுமெனில் அதற்கும் ஒரு தனி ஆப்ஷன் இருக்கிறது. அதை அமுக்கினால், கணினியின் அனைத்து கோப்புகளும் அழிந்து, புதிதாக வின்டோஸ் செயலில் நிறுவப்பட்டு விடும் !

இப்படி பல்வேறு விதங்களில் வசீகரிக்கும் வின்டோஸ் 8ன் முழுமையான வடிவம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரக் கூடும் என்கின்றனர். எனினும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர் இன்னும் எந்த தேதியையும் குறிப்பிடவில்லை !

வரட்டும் ! காத்திருப்போம் !

Please Click, if you Like….

நன்றி : தினத்தந்தி (மவுஸ் பையன்)

டெக்னாலஜிக் கூட்டில் டீன் ஏஜ் கிளிகள்

இது டெக்னாலஜி யுகம். இளசுகளின் கலர்புல் காலம். அவர்களுடைய மூச்சிலும், பேச்சிலும் ஹைடெக் வாசனை. எங்க காலத்துல இதெல்லாம் இல்லையே என பல பெருசுகள் பெருமூச்சு விடுகின்றன. வேறு சிலருக்கு டெக்னாலஜி என்றால் பெரும் அலர்ஜி. காரணம் அவர்களுக்கு அதைக் கையாளத் தெரியாது. இருபுறமும் கூர்மையான வாள் போன்றது டெக்னாலஜி. அதை லாவகமாகச் சுழற்றத் தெரிந்தால் உலகமே விரல் நுனியில் தான் ! 

இண்டர்நெட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். அறிமுகம் ஆனபோது அது ஏதோ மெயில் அனுப்பும் சாதனம் என்று தான் நினைத்தார்கள். ஆனால் அதன் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. சொல்லப் போனால், இன்றைய டீன் ஏஜின் விழா மேடையே அது தானே. அதை வைத்துக் கொண்டு அவர்கள் எதைவேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம். அதுவும் மின்னல் வேகத்தில் ! தேவையற்ற தாமதங்கள், கால விரையம் இதையெல்லாம் ஒட்டு மொத்தமாக கழுவித் துடைத்திருக்கிறது இண்டர்நெட்.

எந்தக் கல்லூரியில் என்ன கோர்ஸ் படிக்கலாம் என்பது முதல், விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அனுப்பி, ரிசல்ட் பார்ப்பது வரை எல்லாமே விரல் நுனியில். நூறு மைல் தூரம் பஸ் ஏறிச் சென்று விண்ணப்பப் படிவம் வாங்கி, எழுதி, கவர் வாங்கி, எச்சில் தொட்டு ஒட்டியதெல்லாம் சுருக்குப் பை காலம். எல்லாமே ஜஸ்ட்  சில நிமிடங்கள் தான். கவர் வழியில மிஸ்ஸாயிடுச்சு, மழையில நனஞ்சுடுச்சு, கிழிஞ்சுடுச்சு என்ற சால்ஜாப்புகளே கிடையாது. அனுப்பினோமா, சென்று சேர்ந்ததா, பரிசீலித்தாயிற்றா என்று சட்டு புட்டுன்னு வேலை முடிந்து விடும். 

சரி காலேஜில் இடம் வாங்கி நுழைந்தாயிற்று. அப்புறமென்ன கலாட்டா மற்றும் கல்வி தானே. இரண்டுமே டெக்னாலஜியில் சாத்தியம். குறிப்பாக இன்றைய இளசுகளின் வேடந்தாங்கலே ஆர்குட், பேஸ் புக், லிங்க்ட் இன் போன்ற நட்புத் தளங்கள் தான். இவற்றில் இருப்பது உலக ஜாம்பவான்கள் முதல், உள்ளூர் தில்லாலங்கடிகள் வரை. விழிப்பாய் இருக்க வேண்டிய விஷயம் இது. ஆனால் சரியாய் பயன்படுத்தினால் ஜாக் பாட் தான்.

உதாரணமாக, உங்களுக்கு கிட்டார் கற்றுக் கொள்ள ஆசை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆர்குட்டில் கிட்டார் ரசிகர்களுக்கென்றே நிறைய குழுக்கள் இருக்கின்றன. அதில் இணைந்து “கேன் யூ ஹெல்ப் மி பிளீஸ்” என ஒரு சின்ன விண்ணப்பம் வைத்தால் போதும். ஆர்வத்துடன் ஓடி வந்து சொல்லித் தர நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் டெக்னிக்களை  வீடியோக்களாகவே தந்து விடுகிறார்கள். எல்லாமே இலவசம். இது ஒரு சாம்பிள் தான். சுருக்கமாய் சொன்னால், ராக்கெட் சயின்ஸ் முதல் ஜாக்கெட் ஸ்டிச்சிங் வரை எல்லாமே இங்கே சாத்தியம்.

ஸ்கூல் நண்பர்கள், ஊர் நண்பர்கள் இவர்களையெல்லாம் தேடித் தேடி கண்டு பிடிப்பதே சுவாரஸ்யம் தான். நட்பைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனா கொஞ்சம் உஷாரா இருங்கள். தளங்களில் போன் நம்பர், வீட்டு அட்ரஸ் இப்படி எதையும் குடுக்க வேண்டாம். அப்படியே ஆர்குட் புது நண்பர்கள் உங்களை எங்காவது வரச் சொன்னால் உள்ளுக்குள் மணி அடிக்கட்டும். வெப் கேம்ல முகத்தைக் காட்டு, ஒரு சில்மிஷ கதை சொல்லு என்றெல்லாம் வம்புக்கு இழுத்தால் எஸ்கேப் ஆகி விடுங்கள். கலாட்டாக்கள் தப்பில்லை, ஆனால் அது ஆரோக்கியமான, ரசிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

ஏகப்பட்ட சிக்கல்கள் வந்ததால் தான் ஆர்குட் போன்ற தளங்கள் பாதுகாப்பு விஷயத்திலும் உஷாராகி விட்டன. உங்களுக்குப் பிடித்தவர்களை மட்டும் நீங்கள் நண்பர்களாக்கலாம். நீங்கள் அனுமதிப்பவர்கள் மட்டும் உங்கள் புகைப்படங்களைப் பார்க்கலாம். உங்கள் நண்பர்கள் மட்டும் உங்களுடன் உரையாடலாம். இப்படி நிறைய வசதிகள் வந்து விட்டன. எனவே நல்ல ஆரோக்கிய வட்டத்தை நீங்களாக உருவாக்கிக் கொள்வதும் சாத்தியமே.

கலாட்டாக்களைத் தாண்டி படிக்க விரும்புபவர்களுக்கு இந்தக் காலம் வசந்த காலம். இணையம் தான் போதி மரம். இங்கே அமர்ந்தால் ஞானம் கிடைக்கும். எந்த உலக இலக்கியமானாலும், அறிவியலானாலும், லேட்டஸ்ட் ஆராய்ச்சிகளானாலும் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

ஆராய்ச்சி மாணவர்களுடைய தலைவலியை இது சகட்டு மேனிக்குக் குறைத்திருக்கிறது. முன்பு போல லைப்ரரியில் போய் தூசு படிந்த புத்தகங்களை தும்மிக் கொண்டே படிக்க வேண்டிய தேவை இல்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே மவுஸைக் கொண்டு நியூஸ் பிடிக்கலாம். உதாரணமாக விக்கிபீடியா போன்ற தளங்களில் உங்களுக்குக் கிடைக்காத விஷயங்களே இல்லை எனலாம்.

டெக்னாலஜி புரட்சி எனும் இமயம் வந்த பின் எல்லாமே “இ” – மயம் தான். இ-புக், இ-பேப்பர், இ-அக்கவுண்ட், இ-பேங்கிங் என எங்கும் “இ” தான். ஒரு சின்ன பென் டிரைவ் போதும் நூற்றுக்கணக்கான இ-புக் களை வைத்திருக்க. ஆடியோ, வீடியோ, எழுத்து, படம் என ஒரு லாரி பிடித்துக் கொண்டு போக வேண்டிய சமாச்சாரங்கள் இப்போ சைலண்டா சட்டைப்பையில் தூங்கும். அறிவு சார்ந்த விஷயங்கள் கிடைப்பதில் தாமதமே இல்லை. வயதும், வாய்ப்பும் இருக்கும் போது கற்றுத் தெளியுங்கள்.

நீங்கள் இந்த வயதில் எந்த அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் வேலை வாய்ப்புகள் பிரகாசிக்கும். கேம்பஸ் இண்டர்வியூவிலேயே செலக்ட் ஆகி பிலிம் காட்டலாம். அப்படி செலக்ட் ஆகாவிட்டாலும் கவலையில்லை இணையம் வரும் துணையாய். நௌக்குரி, மான்ஸ்டர், ஜாப்செர்ச், என வகை வகையாய் தளங்கள் உண்டு. நீங்கள் உங்கள் பயோடேட்டாவை அப்லோட் செய்ய வேண்டும் அவ்வளவு தான். வாய்ப்புகள் பெரும்பாலும் உங்களைத் தேடி வரும். கொஞ்சம் மெனக்கெட்டால் ‘நெட்’ட்டிலேயே தேடுதல் வேட்டையும் நடத்தலாம்.

டெக்னாலஜியை விட்டு விட்டு இனிமேல் காலம் தள்ளவே முடியாது. எனவே டெக்னாலஜிகளை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் என்பது நாடு மாதிரி ஆகிவிட்டது. அடுத்த ஸ்டேட்டுக்குப் போகும் சகஜம் அடுத்த நாட்டுக்குப் போவதில் ஆகிவிட்டது. அதற்குரிய வாய்ப்புகளும் அதிகம். தயாரிப்புகளும் எளிது. அமெரிக்கா போகணும்ன்னு வெச்சுக்கோங்க, அமெரிக்கன் உச்சரிப்பு, உரையாடல், கலாச்சாரம், மேப் என சர்வ சங்கதிகளும் உங்களுக்கு ஜஸ்ட் லைக் தேட் கிடைக்கும். முன்பெல்லாம் அப்படியில்லை. ஊர் எப்படி இருக்கும் என்பதே போய்ப் பார்த்தால் தான் தெரியும். இப்போ நிலா எப்படி இருக்கும் என்பதையே கூகிள் மேப் காட்டி விடும்.

நமது பொழுது போக்குகள் கூட இனிமேல் டெக்னாலஜியின் புண்ணியத்தில் தான்.  உதாரணம் சொல்லணும்னா பிளாக் அமைப்பது ஒரு நல்ல ஆரோக்கியமான பொழுது போக்கு. நமது சிந்தனைகளைப் பதிவு செய்யவும், மற்ற வலைப்பூக்களோடு இணைந்து உறவாடவும் இது ரொம்ப உதவும். தேவையற்ற மன அழுத்தங்களை இந்த பொழுது போக்குகள் குறைக்கும். மனம் விட்டு டைரில எழுதறது மாதிரின்னு வெச்சுக்கோங்களேன். லேட்டஸ்ட் பிளாக் ஹாபி முதல், கற்கால ஸ்டாம்ப் கலெக்ஷன் வரை இதில் சாத்தியமே.

ஒரு ஜெஃப்ரி ஆர்ச்சரையோ, ஷிட்னி ஷெல்டனையோ படிக்காமல் தூக்கம் வராத டீன் ஏஜ் பார்ட்டியா நீங்க. உங்களுக்கு எலக்ட்ரானிக் புத்தகங்கள் ஒரு வரம்.  ஒரு ஐபோன் சைஸில், ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறது இது. எந்தெந்த புத்தகங்கள் வேண்டுமோ அதன் எலக்ட்ரானிக் காப்பியை இதில் வைத்துக் கொண்டால் போதும். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இதில் வைத்துக் கொள்ளலாம். இது நீங்கள் எங்கே போனாலும் ஒரு புத்தகக் கடையையே கூட வரும்.

ஆயிரம் தான் இருந்தாலும் பிரிண்டட் புக் படிப்பது போல வராது மாம்ஸ் என்பவர்களுக்காக இதில் அட்வான்ஸ் டெக்னாலஜியும் வந்தாச்சு. புத்தகத்தின் பக்கங்களைத் திருப்புவது போலவே திருப்பலாம். சரக் என்று சத்தம் கூட கேட்கிறது. எல்லாம் ஒரு எபக்ட்க்காகத் தான். புத்தகம் படிக்கும் பழக்கம் உங்கள் அறிவை சைலண்டாக வளர்த்துக் கொண்டிருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

“நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை” என்பது டெக்னாலஜிக்கு கன கட்சிதம். வயரை இழுத்து, கம்ப்யூட்டரில் சொருகி இண்டர்நெட் பார்த்ததே இப்போது கற்காலமாகிவிட்டது. எல்லாம் வயர்லஸ் மகிமை. இன்னும் கொஞ்ச நாளிலேயே அதுவும் போகும். எல்லாம் மொபைலில் வந்துவிடும். இப்போதே மின்னஞ்சல் முதல் வீடியோ கான்பரன்சிங் வரை மொபைலில் வந்து விட்டது. மொபைலில் படித்து, மொபைலில் பரீட்சை எழுதி, அங்கேயே ரிசல்ட் பார்த்து பட்டம் வாங்கும் காலம் இதோ அடுத்த தெருவில் தான்.

மொபைலைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்களில் கவனம் தேவை. ஒன்று மொபைல் கேமரா. விளையாட்டுக்குக் கூட யாரும் உங்களை கவர்ச்சியா போட்டோ எடுக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் உயிர் தோழியே ஆனால் கூட தயங்காமல் ஒரு பெரிய “நோ” சொல்லுங்கள் ! அது போல “செக்ஸ்டிங்” சமாச்சாரத்துக்காக எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ், படம் இதையெல்லாம் அனுப்பாதீங்க. இந்த இரண்டு விஷயத்துலயும் உஷாரா இருந்தா நீங்க நிஜமாவே டீன் ஏஜ் சமத்து ! 

இன்றைய ஐ.டி நிறுவனங்களின் அவசர வேலை என்ன தெரியுமா ? பேங்கிங், இன்சூரன்ஸ் போன்ற அத்தனை சமாச்சாரங்களையும் செல்போனுக்குத் தக்கபடி வடிவமைப்பது. இனிமேல் பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் போது செல்போனிலேயே வங்கியில் பணம் டிரான்ஸ்பர் செய்யலாம், டிரெயின் டிக்கெட் புக் பண்ணலாம் எல்லாம் செய்யலாம். இப்படி எல்லாமே டென்னாலஜியோடு சேர்ந்து ஓடும்போ நாம ஓடலேன்னா எப்படி ? எனவே டெக்னாலஜிகளின் வளர்ச்சியோடு கூடவே ஓடுங்கள்.

இள வயதில் கற்பனை சிறகு கட்டிப் பறக்கும். அதை வேஸ்ட் பண்ணாமல் மல்டி மீடியா, கிராபிக்ஸ் டிசைனிங், லேட்டஸ்ட் அனிமேஷன் டெக்னாலஜி இதெல்லாம் கத்துக்கோங்க. சுவாரஸ்யத்துக்கு சுவாரஸ்யமும் ஆச்சு. வாழ்க்கைக்குப் பயனும் ஆச்சு. குறிப்பா மீடியா பிரியர்களுக்கு இந்த ஏரியா ஸ்ட்ராங்கா இருந்தா ஜொலிக்கலாம். இதையெல்லாம் நான் எங்க போய் தேடுவேன் ? எனக்கு யாரைத் தெரியும் என்று பீல் பண்ணாதீர்கள். இருக்கவே இருக்கார் மிஸ்டர் கூகிள் அண்ணாத்தே. எள்ளுன்னா எண்ணையா நிப்பார். பயன்படுத்திக்கோங்க.

கடைசியா ஒண்ணு. நீங்க டெக்னாலஜியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். டெக்னாலஜி உங்களைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டால் எல்லாம் காலி. இதுவும் ஒரு வகை அடிக்ஷன் ஆக மாறி விடும். நெட் ல நிறைய புதை குழிப் பக்கங்கள் உண்டு. காலை வெச்சா உள்ளே இழுத்து ஆளையே முழுங்கி ஏப்பம் விட்டு விடும். பாலும் தண்ணீரும் கலந்து வைத்த பானம் தான் டெக்னாலஜி. அன்னப் பறவையாய் மாறிவிட்டால் நீங்கள் தான் சமத்து !

நன்றி : அவள் விகடன்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்