ரஷ்யாவைக் கழற்றி விடும் இந்தியா ! அமெரிக்க தந்திரமா ?

russian-army

அணுசக்தியில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் சில மாதங்களுக்கு முன் நமது பிரதமரால் துவங்கி வைக்கப்பட்டது. நானும் வந்து விட்டேன் என அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுடன் தன்னையும் இணைத்துக் கொண்டது இந்தியா. வருடக் கணக்கில் கூட தண்ணீருக்கு அடியிலே பதுங்கிக் கிடக்கும் சக்தி கொண்டது இந்த நீர்மூழ்கிக் கப்பல். தரை, வான், கடல் என மூன்று இடங்களிலும் இனிமேல் இந்தியா படு ஸ்ட்ராங். இந்த நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க உதவிய ரஷ்யாவுக்கு இந்தியா பாராட்டு மழையைப் பொழியவும் தவறவில்லை.

உண்மையைச் சொல்லப் போனால் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இப்போது பழைய பந்தமெல்லாம் இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக ராணுவ சமாச்சாரங்களைப் பொறுத்தவரை ரஷ்யா தான் இந்தியாவுக்கு எல்லாமே. ஆனால் இப்போதோ நிலமை தலை கீழ். இனிமேல் இந்தியா ஆயுதங்களை வாங்கப் போவது ரஷ்யாவிடமிருந்தல்ல. அமெரிக்காவிடமிருந்து ! இதற்கான ஒப்பந்தத்தை போடுவதே ஹிலாரி கிளிண்டனின் கடந்த மாத இந்திய வரவின் நோக்கம்.

இந்தியா – அமெரிக்கா இடையே கையெழுத்தாகியிருக்கும் இந்த ஒப்பந்தம் சுமார் 30 பில்லியன் டாலர்களுக்கானது. லாக்கீட் மார்ட்டின், போயிங் எனும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் தான் இனிமேல் இந்தியாவுக்கான ஆயுதங்களைத் தயாரிக்கப் போகின்றன. ரஷ்யாவிடமிருந்து டாங்கிகளையும், பழைய ஒப்பந்த பாக்கிகளையும் மட்டுமே இந்தியா இனிமேல் பெறும். டாங்கிகள் விஷயத்தில் கூட இனிமேல் ரஷ்யா இந்தியாவின் ஏக போக சப்ளையராக இருக்கப் போவதில்லை.

இந்திய மீடியாக்கள் அடக்கி வாசித்த இந்த விஷயத்தை விலாவரியாக அலசுகின்றன ரஷ்ய நாளிதழ்கள். இந்தியாவின் இந்த முடிவு இந்தியாவை விட ரஷ்யாவுக்குத் தான் மாபெரும் இழப்பு. ரஷ்யாவின் இரண்டாவது பெரிய ராணுவ கஸ்டமராய் இருந்த இந்தியா போய்விட்டது. ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியில் பல்லுடைந்து கிடக்கும் ரஷ்யாவுக்கு இது மற்றுமொரு பலத்த அடி. என்றெல்லாம் ரஷ்ய தலைப்புச் செய்திகள் பதட்டப்படுகின்றன.

இந்தியாவின் முடிவில் தவறில்லை. பிரச்சினைக்குக் காரணம் ரஷ்யா தான். ரஷ்யா தரும் தரமற்ற ஆயுதங்களை வாங்க வேண்டுமென இந்தியாவிற்குத் தலையெழுத்தா என்ன ? சொல்லும் எதையும் சொன்ன நேரத்தில் ரஷ்யா கொடுப்பதில்லை. விமானம் தாங்கியான ‘அட்மிரல் கார்ஷ்கோவ்’ ஐ நவீனப்படுத்துங்கள் என இந்தியா சலிக்கும் வரை கேட்ட பின்பே சரி செய்தார்கள். தருகிறோம் என்று சொன்ன போர்க்கப்பல்களையோ, நீர்மூழ்கிக் கப்பல்களையோ சொன்ன நேரத்தில் தருவதில்லை. பின் எப்படி இந்திய ஒப்பந்தம் தொடரும் ?. இப்படியெல்லாம் ரஷ்யாவைப் பற்றி குற்றம் சாட்டுவது இந்தியா அல்ல. ரஷ்யாவின் ராணுவ அனலிஸ்ட்களே தான்.

ரஷ்யா இந்தியாவுக்குக் கடைசியாக அனுப்பிய ராக்கெட்களில் 50 சதவீதம் ராக்கெட்கள் பழுதானவை. இந்தியாவின் கோபம் நியாயமானதே. ரஷ்யாவிடம் இப்போது நவீனமும் இல்லை, திறமையான ஆட்களும் இல்லை. இதே நிலமை நீடித்தால் இந்தியாவைப் போல எல்லா கஸ்டமர்களையும் இழக்க வேண்டியது தான். உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்ப ரஷ்யா ஏதேனும் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என கடுமையாக விமர்சித்திருக்கிறது ரஷ்யாவின் பிரவ்டா நாளிதழ்.

ரஷ்யாவிற்கு மாற்றாக ஒரு ராணுவ பார்ட்னரை இந்தியா தேட ஆரம்பித்து நீண்ட நாட்களாகிறது. இஸ்ரேல், பிரான்ஸ் என தேடுதல் வேட்டை நடத்திய இந்தியா கடைசியில் வந்து சேர்ந்திருப்பது அமெரிக்காவிடம். இந்தியாவுடனான பிஸினஸ் நழுவிப் போன கவலை ஒருபுறம். தனது பரம எதிரியான அமெரிக்காவுடன் இந்தியா கை கோர்ந்திருக்கிறதே எனும் பதட்டம் ஒருபுறம் என்பதே ரஷ்யாவின் இன்றைய நிலை.

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவதில் அமெரிக்கா கில்லாடி. ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தவே இப்படிப்பட்ட பல முயற்சிகளை எடுக்கிறது. ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கி அதன் மூலம் ரஷ்யாவைப் பணிய வைக்கலாம் என்பதே அமெரிக்காவின் எண்ணம் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவுடனான உறவின் விரிசலைச் சரிசெய்ய ரஷ்யா சீனாவை இறுகப் பிடித்திருக்கிறது. இரண்டு நாடுகளுமாக பல்வேறு பேச்சுவார்த்தைகளையும், உடன்பாடுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஜூலை கடைசியில் “அமைதிப் பணி 2009” எனும் ராணுவ அணி வகுப்பு ஒன்றை இரண்டு நாடுகளும் கூட்டாக நடத்தியிருக்கின்றன. இதற்கான கலந்துரையாடல், ஒப்பந்தம் எல்லாம் நடந்தது ரஷ்யாவின் கபார்ஸ்க் நகரில். அணிவகுப்பு நடந்ததோ சீனாவில் டயோனன் நகரில் !

“அமெரிக்காவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க ரஷ்யாவுக்குத் தெரியும். ரஷ்யா இப்போது சீனாவுடன் நெருக்கமாக செயலாற்றுகிறது. இந்த இரண்டு நாடுகளுக்கிடையேயான நட்புறவு மிகவும் பலமானது. ரஷ்யா அமெரிக்காவைக் கண்டு ஒருபோதும் பயப்படப் போவதில்லை” என அதிரடியாகப் பேசுகிறார் அலெக்சாண்டர் கிராமாச்சின். இவர் ரஷ்யாவின் சர்வதேச தொடர்பாளராகவும், “,பொலிடிகல் மற்றும் மிலிடரி அனாலிசில்” நிறுவனத்தின் இயக்குனராகவும் இருப்பவர்.

ரஷ்யா ஒரு மாபெரும் சக்தி என்பதில் அமெரிக்காவுக்கு மாற்றுக் கருத்தில்லை. எங்களது பல கொள்கைகளை ரஷ்யா வெறுக்கிறது. அதே போல ரஷ்யாவின் பல கொள்கைகளை நாங்கள் வெறுக்கிறோம். நாடுகளிடையே கொள்கைகளில் வேற்றுமை வருவது சகஜம். ஆனாலும் இரண்டு நாடுகளும் நட்புறவுடன் செயல்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்கிறார் ஹிலாரி கிளிண்டன்.

ரஷ்யாவும் சீனாவும் ‘பெஸ்ட் பிரண்ட்ஸ்’ நாடகம் நடத்துகிறது. உண்மையில் ரஷ்யாவும் சீனாவும் ஒருபோதும் உண்மையான நட்புறவுடன் இருக்க முடியாது. ஒருவர் எல்லைக்குள் இன்னொருவர் புகுந்து பலம், பலவீனங்களைப் படிப்பதிலேயே குறியாய் இருப்பார்கள் எனும் கருத்தும் எழாமலில்லை.

எப்படியோ, ஒருபுறம் இந்தியா ரஷ்யாவுடனான அரை நூற்றாண்டு கால இறுக்கமான பிடியைத் தளர்த்தியிருக்கிறது. இன்னொரு புறம் ரஷ்யா, சீனாவுடனான உறவை வலுப்படுத்தியிருக்கிறது. இடையில் அமெரிக்கா இந்தியாவை இறுகப் பிடித்திருக்கிறது. இப்படி சர்வதேச அரங்கில் நிகழும் அரசியல் நாடகங்கள் திகில் கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் நிஜம்.