பைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து

90 யூதாசு இஸ்காரியோத்து

Image result for Judas iscariot

இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் யூதாசு. யூதேயாவிலுள்ள காரியோத்து என்னுமிடத்தவன்.  இயேசுவை பகைவர்களிடம் காட்டிக் கொடுத்தவன். இயேசுவின் சீடர்கள் பன்னிருவரில் யூதாஸ் மட்டுமே யூதேயாவைச் சேர்ந்தவர் மற்றவர்கள் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்.

இயேசுவைக் கொல்ல வேண்டுமென மதவாதிகளும், அரசியல் தலைவர்களும் முடிவு செய்து விட்டார்கள். முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று, இதுவரை வல்லுநர்கள் போதித்து வந்த சிந்தனைகளுக்கு எதிராக இயேசு போதித்தார். அன்பை மட்டுமே முன்னிறுத்தினார். இதனால், எளிய மக்கள் எல்லோரும் இயேசுவின் பின்னால் அணிதிரண்டனர்.

இரண்டாவது காரணம் பணம். சட்டத்தின் பெயரைச் சொல்லி ஏழைகளை வஞ்சித்து பணம் பறிப்பவர்களை இயேசு கடுமையாய் எதிர்த்தார். ஆல‌ய‌த்தில் வியாபார‌ம் கூடாதென்றார்.

இயேசுவின் எளிமையும், ஆளுமையும் ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ளை ச‌ஞ்ச‌ல‌ப்ப‌டுத்தின‌. அவ‌ரை இர‌வில் கைது செய்து விடியும் முன் த‌ண்ட‌னை வாங்கித் த‌ர‌வேண்டும் என‌ முடிவு செய்த‌ன‌ர். “தன்னைக் கடவுளாக்கிக் கொண்டான்” என்று கைதுக்கான காரணம் தயாரித்தார்கள். இர‌வில் இயேசுவைக் காட்டிக் கொடுக்க‌ ஒரு ந‌ப‌ர் தேவைப்ப‌ட்டார். அவ‌ர் தான் யூதாசு இஸ்காரியோத்து.

யூதாஸ் அடிப்ப‌டையில் ஒரு போராளி. யூத‌ர்க‌ள் ரோம‌ர்க‌ளின் ஆட்சியின் கீழ் இருப்பதை அவன் விரும்பவில்லை. இயேசுவை யூதர்களின் அரசராக்க விரும்பினான். இயேசுவோ, “என‌து அர‌சு இவ்வுல‌கைச் சார்ந்த‌த‌ல்ல‌” என‌ தெளிவாய்ச் சொன்னார்.

அந்த‌ இர‌வு. இயேசு செபித்துக் கொண்டிருக்கிறார். யூதாசு வ‌ந்தான். பகைவர்களை வழிநடத்தி வந்தான். பின்னால் ப‌கைவ‌ர்க‌ள் ஈட்டியோடும், வாளோடும் வ‌ந்தார்க‌ள். இயேசுவை நெருங்கிய‌ யூதாசு,

‘ர‌பி வாழ்க‌’ என்று சொல்லி இயேசுவை முத்த‌மிட்டான். இயேசு அதிகபட்ச அன்புடன் அவ‌னிட‌ம், “தோழா எத‌ற்காக‌ வ‌ந்தாய்” என்றார். இயேசு தோழா என்று த‌னிப்ப‌ட்ட‌ முறையில் அழைத்த‌ ஒரே சீட‌ர் யூதாசு தான் !

இயேசு கைது செய்ய‌ப்ப‌ட்டு, கொலை செய்ய‌ப்ப‌ட்டார்.

யூதாசு இப்ப‌டியெல்லாம் ந‌ட‌க்கும் என‌ எதிர்பார்த்திருக்க‌வில்லை. ரோம‌ ஆட்சியின் கீழ் இருக்கும் யூதேயாவில் ம‌ர‌ண‌த‌ண்ட‌னை அளிக்கும் உரிமை இல்லை. இயேசுவின் ம‌ர‌ண‌ த‌ண்ட‌னைக்காய் ரோம அரசையே துணைக்கு அழைப்பார்கள் என‌ யூதாஸ் நினைக்க‌வில்லை.

இயேசுவை இத‌ற்கு முன்பும் சில‌ முறை பிடிக்க‌வும், க‌ல்லால் எறிந்து கொல்ல‌வும் எதிரிகள் முய‌ன்ற‌ போது அவ‌ர் த‌ப்பிச் சென்றிருக்கிறார். அதே போல இப்போதும் தப்புவார் என நினைத்தான்.

ஆனால் இந்த‌ முறை இயேசு த‌ப்ப‌வில்லை. ம‌னுக்குல‌த்தின் பாவ‌ங்க‌ளுக்காய் தன்னை பலியாக்கும் நேர‌ம் வ‌ந்த‌து. என‌வே அமைதியாய் த‌ன்னை அவ‌ர் அர்ப்ப‌ணித்தார்.

யூதாசு இந்தத் திருப்ப‌த்தை எதிர்பார்க்க‌வில்லை. குருக்க‌ளிட‌ம் ஓடிப் போய் தான் வாங்கிய‌ முப்ப‌து வெள்ளிக்காசை திரும்பக் கொடுத்து இயேசுவை மீட்க‌ முய‌ல்கிறான். ந‌ட‌க்க‌வில்லை. குற்ற‌ உண‌ர்வு குத்தியது. ம‌ன்னிப்பு வேண்டி இயேசுவிட‌ம் ஓடாம‌ல் த‌ற்கொலை செய்து அழிந்து போனான்.

யூதாசின் வாழ்க்கை ந‌ம‌க்கு பத்து விஷ‌ய‌ங்க‌ளைப் போதிக்கிற‌து.

  1. இயேசுவின் போத‌னைக‌ளைக் கேட்பதோ, அற்புதங்களைப் பார்ப்பதோ ஒரு ம‌னித‌னை ந‌ல்ல‌வ‌னாய் மாற்றாது. இயேசுவோடு யூதாஸ் தொட‌ர்ந்து ந‌ட‌ந்தான், ஆனாலும் பாவியானான்.
  2. ப‌ண‌ ஆசை ஒருவ‌னை அழிவுக்கு இட்டுச் செல்லும். யூதாஸ் முப்ப‌து வெள்ளிக்காசுக்கு ஆசைப்ப‌ட்டான். அழியாத‌ விண்ண‌க‌ வாழ்வை இழ‌ந்தான்.
  3. இயேசுவால் அழைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எல்லோரும் மீட்ப‌டைவ‌தில்லை. இயேசு யூதாசை அழைத்தார். யூதாசோ வாய்ப்பை இழந்தான்.
  4. ப‌ணிசெய்ப‌வ‌ர்க‌ளின் கூட்ட‌த்தில் இருப்ப‌தால் மீட்பு வராது. சீட‌ர்க‌ளின் ப‌ணியிலும், இயேசுவின் ப‌ணியிலும் கூட‌வே ந‌ட‌ந்தான் யூதாஸ். என்ன பயன் ?
  5. வ‌ர‌ங்க‌ள் ஒருவ‌னை மீட்ப‌டைய‌ வைக்காது. திருமுழுக்கு அளிக்க‌, பேயோட்ட‌, நோய்க‌ளை குண‌மாக்க‌ என அனைத்து அதிகார‌ங்களையும் யூதாசுக்கும் கொடுத்தார் இயேசு. ஆனால், யூதாசோ வ‌ழிவில‌கினான்.
  6. கிறிஸ்த‌வ‌ப் ப‌த‌விக‌ள் மீட்பைத் த‌ராது. சீட‌ர்க‌ளிலேயே நிர்வாக‌த் திற‌மையுடைய‌ யூதாஸ் பொருளாள‌ராய் இருந்தார். அது அவரைக் காப்பாற்றவில்லை.
  7. இதயத்தால் நெருங்காவிடில் பயனில்லை. இயேசுவுக்கு நெருக்க‌மாய் இருந்தாலும், இத‌ய‌த்தால் தொலைவில் இருந்தான் யூதாசு. இயேசுவோடு ப‌ந்திய‌ம‌ர்ந்தான், ஒரே பாத்திர‌த்தில் கை போட்டுச் சாப்பிட்டான். ஆனாலும் செடியில் கிளையாய் இணையவில்லை.
  8. எச்ச‌ரிக்கைகளை உதாசீன‌ப்ப‌டுத்தினால் மீட்பு வ‌ராது. “உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்” என்றும் “அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு” என்றும் இயேசு எச்சரித்திருந்தார். யூதாசு செவிசாய்க்கவில்லை.
  9. திருமுழுக்கு ஒருவ‌னை மீட்காது. திருமுழுக்கு யோவானிட‌ம் த‌ன்னை இணைத்துக் கொண்ட‌வ‌ர் தான் யூதாசு. அது அவ‌னைக் காக்க‌வில்லை.
  10. ம‌க்க‌ளிடையே ந‌ன்ம‌திப்பு பெற்றிருப்ப‌து உத‌வாது. யூதாஸ் சீட‌ர்க‌ளிடையே ந‌ல்ல‌ ம‌திப்பு பெற்றிருந்தான். சீடர்கள் யாரும் அவ‌னை ச‌ந்தேக‌ப்படாத அளவுக்கு அவர்களிடம் நற்சான்றிதழ் பெற்றிருந்தான். விண்ண‌க‌ வாழ்வை இழ‌ந்தான்.

இந்த‌ ப‌த்து சிந்த‌னைக‌ளையும் ம‌ன‌தில் கொள்வோம், தூய‌ வாழ்க்கை வாழ‌ முடிவெடுப்போம்.

பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா

89 தோமா

Image result for Thomas the apostle

இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவர் தான் தோமா.

இயேசுவின் ந‌ண்ப‌ர் லாச‌ர் ம‌ர‌ண‌ம‌டைந்து விட்டார். இயேசுவும் சீடர்களும் வேறோரு இடத்தில் இருந்தார்கள். அங்கிருந்து பெத்தானியாவுக்குச் செல்ல‌ வேண்டும். பெத்தானியா யூதேயாவில் இருந்த‌து. அங்கே இரண்டு முறை இயேசுவைக் க‌ல்லால் எறிந்து கொல்ல‌ முய‌ன்றார்க‌ள். எனவே சீடர்கள் அங்கே செல்ல‌ அஞ்சினார்கள்.

தோமா மட்டும் அஞ்சவில்லை.” நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என இயேசுவோடு பெத்தானியா செல்ல ஆயத்தமானார். இதனால் இயேசு லாசரை உயிர்ப்பித்த மாபெரும் நிகழ்வை சீடர்கள் நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றார்கள்.

தோமாவுக்கு சந்தேகத் தோமா என்றொரு பெயர் உண்டு. அத‌ற்கான‌ கார‌ண‌ம் சுவார‌ஸ்ய‌மான‌து.

இயேசு இறந்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த பிறகு சீடர்களுக்குக் காட்சியளித்தார். அப்போது தோமா அங்கே இல்லை. சீடர்கள் பரவசமாய் அந்த நிகழ்ச்சியை தோமாவிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை. “நான் நம்ப மாட்டேன். அவரோட கையில ஆணி அடித்த துளை இருந்துதா ? அதுல நான் விரலை போட்டுப் பாக்கணும். அவரை ஈட்டியால குத்தின விலாவில என் கையைப் போட்டுப் பாக்கணும். அப்போ தான் நம்புவேன்” என்றார்

இயேசு லாசரை எழுப்பினார். இப்போது இயேசுவே இறந்திருக்கிறார். யார் அவரை எழுப்பமுடியும் என்பதே அவருடைய சந்தேகம்.

இயேசு மீண்டும் ஒருமுறை சீடர்களுக்குத் தோன்றினார். அப்போது தோமாவும் உடனிருந்தார். இயேசு தோமாவிடம் கைகளை நீட்டினார்,

“இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து ந‌ம்பிக்கைகொள்” என்றார்.

உடனே தோமா “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று த‌ன‌து ந‌ம்பிக்கையை வெளிப்ப‌டுத்தினார்.

இயேசு அவ‌ரிட‌ம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். ந‌ம்பிக்கை இழ‌ப்போருக்கு மிக‌வும் ஊக்க‌மூட்ட‌க்கூடிய‌ ஒரு இறைவார்த்தை இது. இந்த‌ நிக‌ழ்வு தான் அவ‌ருக்கு “ச‌ந்தேக‌ தோமா” எனும் பெய‌ரைத் த‌ந்த‌து.

அவநம்பிக்கைக் காரரான‌ தோமா, நம்பிக்கையில் நிறைவானவராக அந்தக் கணம் முதல் மாறினார். அந்த‌ நிக‌ழ்வு தான் அவ‌ரைப் ப‌ணிவாழ்வில் தீவிர‌மாய் ஈடுப‌ட‌ உந்துத‌ல் அளித்த‌து. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டார் என்பது வரலாறாகப் பதிவு செய்யப்படலாம். ஆனால் ‘எனக்காக’ அவர் உயிர்விட்டார் என நம்புவதே ஒரு மனிதனை மீட்புக்குள் வழிநடத்தும். அந்த அனுபவத்தைத் தான் தோமா அந்த நிகழ்வில் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவுக்கு வ‌ந்து இறைப‌ணியாற்றிய‌வ‌ர் எனும் பெருமை தோமாவுக்கு உண்டு. இந்தியாவின் கேரளக் கடற்கரைப் பகுதியான கெரங்கனூர் எனும் இடத்தில் கிபி 52ல் வ‌ந்தார். அங்கு வாழும் ம‌க்க‌ளுக்கு இயேசு கிறிஸ்துவின் ந‌ற்செய்தியை அறிவிப்ப‌தே அவ‌ருடைய‌ நோக்க‌மாக‌ இருந்த‌து.

தென் கேர‌ளாவின் மேற்குக் க‌ரையோர‌ம் ஏழு திருச்ச‌பைக‌ளை தோமா நிறுவி வ‌ழி ந‌ட‌த்தி வ‌ந்தார். மார்த்தோமா எனும் பெய‌ர் இன்றும் கேர‌ளாவில் மிக‌ப் பிர‌சித்த‌ம். மலியங்கர, பாலயூர், பாரூர், கோகமங்ஙலம், நிராணம், சாயல், கொல்லம் ஆகியவையே அந்த ஏழு திருச்சபை நிறுவப்பட்ட இடங்கள். அந்த ஏழு திருச்சபைகளில் நான்கு திருச்சபைகள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் நிலைபெற்றிருக்கின்றன.

மார்கோ போலோ, நிக்கோலோ டி கான்டி உட்பட பல்வேறு பயணிகளின் குறிப்புகளில் தோமாவின் கிறிஸ்தவப் பணி குறிப்பிடப்பட்டுள்ளது. பிர‌ஞ்ச் நாட்டின் கிரிகோரி கி.பி 590ல் இந்தியாவில் தோமாவின் உட‌ல் புதைக்க‌ப்ப‌ட்ட‌ ஆல‌ய‌ம் ப‌ற்றி எழுதியிருக்கிறார்.

இவை த‌விர‌ வ‌ர‌லாற்று அறிஞ‌ர்க‌ள் அம்புரோஸ், ந‌ச‌னிய‌ன்சுஸ் கிரிகோரி, சிரியாவின் இப்ரிம், ஜெரோம் உட்பட‌ ப‌ல‌ர் தோமாவின் இந்திய‌ ந‌ற்செய்தி அறிவித்த‌லைப் ப‌ற்றி எழுதியிருக்கின்ற‌ன‌ர்.

பின்னர்.தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள‌ சின்ன‌ம‌லை எனும் ம‌லையில் குகை ஒன்றில் தங்கி ந‌ற்செய்திப் ப‌ணியாற்றி வ‌ந்தார் தோமா. கி,பி 72ம் ஆண்டு அவ‌ர் அங்கே ஈட்டியால் குத்த‌ப்ப‌ட்டு இர‌த்த‌சாட்சியாய் ம‌ர‌ண‌ம‌டைந்தார். அவ‌ருடைய‌ உட‌லின் மீது க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ஆல‌ய‌ம் தான் சென்னை சாந்தோமில் கம்பீரமாக‌ இருக்கிற‌து.

வாடிக‌ன் ந‌க‌ரில் பேதுருவின் க‌ல்ல‌றை மீது க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ஆல‌ய‌த்தில் போப் ப‌ணியாற்றுகிறார். அதற்கு இணையான முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌தே சாந்தோம் தேவால‌ய‌ம். கார‌ண‌ம் இர‌ண்டுமே இயேசுவோடு ப‌ய‌ணித்த‌ இர‌ண்டு சீட‌ர்க‌ளின் க‌ல்ல‌றைக‌ளின் மேல் க‌ட்டியெழுப்ப‌ப்ப‌ட்டுள்ள‌து.

தோமாவின் வாழ்க்கை ந‌ம‌க்கு ப‌ல‌ ப‌டிப்பினைக‌ளைக் க‌ற்றுத் த‌ருகிற‌து. ச‌ந்தேக‌ம் கொள்வ‌து த‌வ‌ற‌ல்ல‌, ஆனால் அந்த‌ ச‌ந்தேக‌த்தை இயேசுவின் வார்த்தைக‌ளால் தெளிவு பெற்று தொட‌ர்ந்து ந‌ட‌க்க‌ வேண்டும். பின்வாங்காமல் இயேசுவைப் பின்செல்லும் பற்றுறுதி கொள்ள வேண்டும்.

இன்றைக்கு இயேசுவின் வார்த்தைக‌ளாக‌ ந‌ம்மிட‌ம் பைபிள் இருக்கிற‌து. பைபிளில் இயேசு சொல்லும் வார்த்தைக‌ளில் ந‌ம்பிக்கை கொண்டு வாழ்க்கையைத் தூய்மையாக்க‌ தோமாவின் வாழ்க்கை அழைப்பு விடுக்கிற‌து.

 

பைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு

88 சீமோன் பேதுரு

Image result for Simon peter apostle

இயேசுவின் சீடர்களில் மிக முக்கியமானரான பேதுரு பெத்சாயிதா நகர யூதர். இவர் திருமணம் செய்திருந்தார் என்றும், மனைவியின் பெயர் கன்கார்டியா என்றும் மரபுவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மீன்பிடி தொழிலைச் செய்து வந்த இவர், அழைக்கப்பட்டதும், வீட்டையும் தொழிலையும் விட்டு விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்.

பேதுரு உண‌ர்ச்சிக‌ளால் ஆள‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர். கார‌ண‌ காரிய‌ங்க‌ளை ஆராய்ந்து பார்ப்ப‌தை விட‌ உண‌ர்ச்சிக‌ளின் வேக‌த்தில் செய‌ல்ப‌ட‌க் கூடிய‌வ‌ராக‌வும், ஒரு குழ‌ந்தையைப் போன்ற‌ ம‌ன‌நிலை உடைய‌வ‌ராக‌வும் இவ‌ர் சித்த‌ரிக்க‌ப்ப‌டுகிறார்.

ஒரு முறை இயேசுவின் சீட‌ர்க‌ள் ப‌ட‌கில் வெகுதூர‌ம் சென்று விட்ட‌ன‌ர். ந‌ள்ளிர‌வு. இயேசு க‌ட‌ல் மீது ந‌ட‌ந்து ப‌ட‌கை நோக்கிச் சென்றார். அப்போது அதைக் க‌ண்ட‌ பேதுரு உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்ட‌வ‌ராக‌ தானும் க‌ட‌லில் குதித்து இயேசுவை நோக்கி ந‌ட‌ந்தார்.

இயேசு தான் சிலுவையில் அறைய‌ப்ப‌ட‌ப் போகும் நிக‌ழ்ச்சியை சீட‌ர்க‌ளுக்கு முன்ன‌மே அறிவித்தார். அப்போது உண‌ர்ச்சிவ‌ச‌ப் ப‌ட்ட‌ பேதுரு “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என‌ ப‌ட‌ப‌ட‌த்தார்.

ஒரு முறை இயேசு சீடர்களிடம், “நான் யார் என நினைக்கிறீர்கள் ?” என்று கேட்டார்.  சீமோன் பேதுரு சட்டென, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று பதில் சொன்னார்.

இயேசு அவரிடம், “எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்” என்று சொல்லி சீமோன் எனும் அவரது பெயரை பேதுரு என்று மாற்றினார்.

இயேசு த‌ன‌து க‌டைசி இர‌வு உண‌வின் போது சீட‌ர்க‌ளின் பாத‌ங்க‌ளைக் க‌ழுவினார். பேதுருவின் பாத‌ங்க‌ளைக் க‌ழுவ‌ வ‌ந்த‌ போது, ‘நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்’ என்று த‌டுத்தார். இயேசுவோ,” பின்ன‌ர் ‘அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்’. என்றார்.

கெத்ச‌மெனே தோட்ட‌த்தில் இயேசு கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ போது த‌ன்னுடைய‌ வாளை உருவி சேவ‌க‌ன் ஒருவ‌னுடைய‌ காதை வெட்டித் துண்டாக்கினார். இயேசு அதை மீண்டும் ஒட்ட‌ வைத்து பேதுருவிட‌ம், “வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?” என்றார்.

இயேசு த‌ன‌து ம‌ர‌ண‌த்தைப் ப‌ற்றி முன்ன‌றிவித்த‌போது, “ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்” என‌ வீர‌வ‌ச‌ன‌ம் பேசினார். இயேசுவோ, “பேதுருவே, இன்றிரவு, ‘என்னைத் தெரியாது’ என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது” என்றார்.

இயேசு கைது செய்ய‌ப்ப‌ட்டார். விசார‌ணை ந‌ட‌க்கிற‌து. கூட‌த்தின் வெளியே பேதுருவை காவ‌லாளியும், ப‌ணிப்பெண்ணும் பார்க்கிறார்க‌ள். நீ இயேசுவின் சீட‌ர் தானே எனும் கேள்விக்கு, “அவரை என‌க்குத் தெரிய‌வே தெரியாது” என்று மூன்று முறை ம‌றுத‌லித்தார். அப்போது கோழி கூவிய‌து. த‌ன‌து த‌வ‌றை ச‌ட்டென‌ உண‌ர்ந்த‌ பேதுரு ம‌ன‌ம் க‌ச‌ந்து க‌ண்ணீர் விட்டு அழுதார்.

இந்த‌ நிக‌ழ்ச்சி பேதுருவை வெகுவாக‌ப் பாதித்த‌து. அத‌ன் பின் ஒவ்வொரு நாள் சேவ‌ல் கூவும் போதும் அவ‌ர் ம‌ன‌முடைந்து அழுதார் என்கிறார் அவ‌ரோடு ப‌ணிபுரிந்த‌ ரோமாபுரி கிள‌ம‌ன்ட்ஸ். பேதுரு த‌ன் மீதான‌ ந‌ம்பிக்கையை முழுவ‌துமாய் உடைத்து விட்டு இறைவ‌னில் ச‌ர‌ண‌டைந்த‌து அப்போது தான். என‌வே தான் அவ‌ரால் மிக‌ப்பெரிய ப‌ணி ஆற்ற‌ முடிந்த‌து.

தூய‌ ஆவியினால் நிர‌ப்ப‌ப்ப‌ட்டு அவ‌ர் எருச‌லேமின் வீதிக‌ளில் த‌ன‌து ஆர‌ம்ப‌ ந‌ற்செய்தி அறிவித்த‌லை நிக‌ழ்த்திய‌போது திருமுழுக்கு பெற்று அவ‌ரோடு இணைந்த‌வ‌ர்க‌ள் மூவாயிர‌த்துக்கும் மேல். அத்த‌னை ஆற்ற‌லுள்ள‌வ‌ராக‌ அவ‌ர் மாறினார். பிற‌வி முட‌வ‌னை ந‌ட‌க்க‌ச் செய்து இயேசுவுக்குப் பின் முத‌ல் புதுமையை ஆர‌ம்பித்து வைத்த‌வ‌ரும் பேதுருவே.

ஒரு வேலைக்கார‌ப் பெண்ணிட‌ம் ‘இயேசுவைத் தெரியாது’ என்று ஒரு காலத்தில் மறுதலித்தவர். பின்ன‌ர் த‌லைமைக்குருக்க‌ள், மூப்ப‌ர்க‌ள், அர‌சு அதிகாரிக‌ள் இவ‌ர்க‌ள் முன்னிலையிலெல்லாம் இயேசுவைப் ப‌ற்றி தைரிய‌மாய்ப் பேசுப‌வ‌ராக‌ மாறினார்

சிரியாவிலுள்ள‌ அந்தியோக்கியா, பின்ன‌ர் ரோமில் பேராய‌ராக‌ ப‌ணியாற்றிய‌தாக‌வும், அவ‌ர‌து ம‌னைவி ந‌ற்செய்தி அறிவித்த‌லில் அவ‌ரோடு இருந்த‌தாக‌வும் ம‌ர‌புச் செய்திக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.

நீரோ ம‌ன்ன‌னின் ஆட்சிக் கால‌த்தில் அவ‌ர் சிலுவையில் அறைய‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌ட்டார். சிலுவையில் அடிக்க‌ப்ப‌டும் போது, “க‌டைசியாக‌ என‌க்கு ஒரே ஒரு விண்ண‌ப்ப‌ம். இயேசுவைப் போல‌ ம‌ரிக்க‌ என‌க்கு அருக‌தையில்லை. என‌வே சிலுவையில் என்னைத் த‌லைகீழாய் அடித்துத் தொங்க‌விட்டுக் கொல்லுங்க‌ள்” என‌ விண்ண‌ப்ப‌ம் வைத்து,அப்ப‌டியே இற‌ந்தார் என்கிற‌து வ‌ர‌லாறு.

வாடிக‌ன் ந‌க‌ரில் இருக்கும் ஆல‌ய‌ம் இவ‌ர‌து க‌ல்ல‌றையின் மேல் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌தே.

த‌வ‌றுக‌ளுக்காக‌ ம‌ன‌ம் வ‌ருந்தி ம‌ன்னிப்புக் கேட்டு, தூய ஆவியால் நிரப்பப்பட்டு, இறை விசுவாச‌த்தில் நிலைத்திருந்து, இயேசுவுக்காக‌வே வாழும் ம‌ன‌நிலையைக் கொள்ள‌ வேண்டும். என்ப‌தே பேதுருவின் வாழ்க்கை சொல்லும் செய்தியாகும்.

 

பைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்

87

யோவான்

Image result for John apostle

இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் மிகவும் முக்கியமானவர் யோவான். இயேசுவின் சீடர்களில் இளையவர் இவர் தான்.

க‌லிலேயா நாட்டிலுள்ள‌ பெத்சாய்தாவில் செப‌தேயு, ச‌லேமி ஆகியோரின் ம‌க‌னாக‌ப் பிற‌ந்தார் யோவான். ச‌லோமி, இயேசுவின் அன்னை ம‌ரியாவின் ச‌கோத‌ரி என்கிற‌து மர‌பு வ‌ர‌லாறு. செபதேயுவும், யோவானும் மீன்பிடி தொழிலைச் செய்து வந்தனர்.

திருமுழுக்கு யோவான் ம‌ன‌ம் திரும்புங்க‌ள் என‌ அறைகூவ‌ல் விடுத்த‌ போது யோவான் அவ‌ர் போத‌னைக‌ளால் க‌வ‌ர‌ப்ப‌ட்டார். பின்ன‌ர் திருமுழுக்கு யோவான் இயேசுவை மீட்ப‌ராக‌ அடையாள‌ம் காட்டிய‌ போது இவ‌ரும் இயேசுவின் பால் மிகுந்த‌ ஈடுபாடு கொண்டார்.

இயேசு அழைத்த‌ போது த‌ன‌து மீன் பிடித் தொழிலை அப்ப‌டியே விட்டு விட்டு இயேசுவைப் பின் தொட‌ர்ந்தார். அத‌ன் பின் இயேசுவின் அன்புக்குரிய‌ சீட‌ர் எனும் பெய‌ரைப் பெற்றார். சீமோன் பேதுரு, யாக்கோபு ம‌ற்றும் யோவான், மூன்று பேரும் தான் இயேசுவின் மிக‌ நெருக்க‌மான‌ சீட‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். யோவானும், யாக்கோபுவும் ச‌கோத‌ர‌ர்க‌ள்.

ஒரு முறை தொழுகைக் கூட‌த் த‌லைவ‌ர் யாயிரின் ம‌க‌ள் இற‌ந்து விட்டாள். அப்போது இயேசு,  பேதுரு, யாக்கோபு ம‌ற்றும் யோவான் மூவ‌ரை ம‌ட்டும் த‌ன்னோடு அழைத்துக் கொண்டு சென்று இற‌ந்த‌ சிறுமியை உயிரோடு எழுப்பினார்.

இன்னொரு முறை இவ‌ர்க‌ள் மூவ‌ருட‌னும் ஒரு உய‌ர்ந்த‌ ம‌லைக்குச் சென்று இயேசு உருமாறினார். அவ‌ர‌து முக‌ம் க‌திர‌வ‌னின் முக‌ம் போல‌ ஆன‌து. மோசேயும், எலியாவும் அங்கே தோன்றி அவ‌ரோடு பேசிக்கொண்டிருந்தார்க‌ள்.

இயேசுவின் ம‌ர‌ண‌த்துக்கு முந்தைய‌ நாள் இர‌வில் அவ‌ர் த‌ன‌து விண்ண‌க‌த் த‌ந்தையிட‌ம் பிரார்த்த‌னையில் ஈடுப‌ட்ட‌போதும் இதே மூவ‌ர் கூட்ட‌ணியைத் தான் அவ‌ர் கூட‌ வைத்திருந்தார். இப்ப‌டி இயேசுவின் ப‌ய‌ண‌த்தின் முக்கிய‌மான‌ இட‌ங்க‌ளிலெல்லாம் கூட‌வே இருந்த‌வ‌ர் எனும் பெயர் யோவானுக்கு உண்டு.

யோவானும், யாக்கோபும்  “நீர் அரியணையில் இருக்கும் போது எங்களை உமது இரு பக்கமும் அமர வையுங்கள்” என்று கேட்டார்க‌ள். இயேசுவோ அது த‌ன‌து த‌ந்தையின் விருப்ப‌ப் ப‌டி ந‌ட‌க்கும் என்றார்.

இயேசுவின் பணிவாழ்வில் கூடவே நடந்த யோவான், இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கையிலும் அருகே நின்றிருந்தார்.  இயேசுவின் சீட‌ர் என‌ அடையாள‌ப்ப‌டுத்திக் கொண்டால் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட‌வும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் யோவான் ப‌ய‌ப்ப‌டாம‌ல் சிலுவை அருகே நின்றார். இயேசுவின் மீது த‌ன‌க்கு இருந்த‌ அன்பை வெளிப்ப‌டுத்தினார்.

என‌வே தான் பின்ன‌ர் “அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும்” என த‌ன‌து நூலில் எழுதினார். இயேசு தனது அன்னையை இவருடைய பொறுப்பில் தான் விட்டுச் சென்றார்

இயேசு இற‌ந்த‌பின் யோவானும், பேதுருவும் மீண்டும் மீன்பிடிக்கும் தொழிலுக்குத் திரும்பின‌ர். ஒரு நாள் இர‌வு முழுவ‌தும் வ‌லை வீசியும் எந்த மீனும் கிடைக்க‌வில்லை. காலையில் இயேசு க‌ரையில் தோன்றி நின்று, “வ‌ல‌ப்புற‌மாய் வ‌லையை வீசுங்க‌ள்” என்றார். மீன்கள் ஏராள‌மாய்ச் சிக்கின‌. இயேசுவை அடையாள‌ம் க‌ண்டு கொண்ட‌ யோவான், ப‌ர‌வ‌ச‌த்துட‌ன் ப‌ட‌கிலிருந்து குதித்து ஓடி வ‌ந்தார்.

பெந்தேகோஸ்தே நாளில் தூய‌ ஆவியான‌வ‌ரின் நிர‌ப்புத‌லுக்குப் பின் ‘இடி முழக்க‌மாய்’ இருந்த‌ யோவான், மென்மையாக‌வும், தெளிவாக‌வும் ப‌ணியாற்றும் திருத் தூத‌ராக‌ உருமாறினார். கிறிஸ்த‌வ‌ம் வ‌ள‌ர‌ முக்கிய‌ப் ப‌ங்காற்றினார்.

எபேசு ந‌க‌ரில் பணியாற்றினார். சின்ன ஆசியாவில் இருந்த ஏழு திருச்சபைகளும் இவரது கண்காணிப்பின் கீழ் இருந்தது. இவ‌ர் “திருச்ச‌பையின் தூண்க‌ளில் ஒருவ‌ர்” என‌ இவ‌ரைப் ப‌ற்றி ப‌வுல் குறிப்பிடுகிறார். பைபிளில் உள்ள யோவான் நற்செய்தி, யோவான் 1, 2, 3 நூல்கள் மற்றும் திருவெளிப்பாடு போன்றவை இவர் எழுதிய நூல்கள்.

பைபிளில் இட‌ம்பெறாத‌ பார‌ம்ப‌ரிய‌த் த‌க‌வ‌ல்க‌ளின் அடிப்ப‌டையில் இவ‌ர் ரோம‌ பேர‌ர‌ச‌ர் தொமித்திய‌ன் கால‌த்தில் பெரும் துன்புறுத்த‌லுக்கு ஆளானார். ஒரு முறை கொதிக்கும் எண்ணைத் தொட்டியில் வீச‌ப்ப‌ட்டார். ஆனாலும் இறைவ‌ன் அவ‌ரைக் காப்பாற்றினார்.

ப‌த்மூ தீவில் சிறைவாச‌ம் பெற்றார். அங்கிருக்கும் போது தான் பைபிளின் மிக முக்கியமான நூல்களின் ஒன்றான‌‌ ‘திருவெளிப்பாடு’ நூலை எழுதினார். பின்பு பேர‌ர‌சர் நெர்வா கால‌த்தில் விடுத‌லையானார். தொட‌ர்ந்து இறைப‌ணி செய்தார்.

வ‌ய‌து மூத்த‌வ‌ராக எழுந்து நடக்க வலுவில்லாமல் இருந்த போதும் தன்னைச் சந்திக்கும் அனைவரிடமும், “குழந்தைகளே ஒருவரில் ஒருவர் அன்பாய் இருங்கள்” என்பார். கடைசியில் பேர‌ர‌ச‌ர் டிரோஜ‌ன் கால‌த்தில் இய‌ற்கை ம‌ர‌ண‌ம் எய்தினார். இயேசுவின் சீட‌ர்க‌ளில் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌டாம‌ல் நீண்ட‌ நாட்க‌ள் வாழ்ந்த‌ ஒரே சீட‌ர் இவ‌ர் தான்.

அன்பாக‌வே வாழ்ந்த‌ இயேசுவின் சீட‌ரான‌ யோவான், தாழ்மையுடன் அன்பைப் போதித்தார். அந்த தாழ்மையையும், அன்பையும் வாழ்க்கையில் கொண்டிருக்க‌ வேண்டும் என்ப‌தே நாம் அவ‌ரிட‌மிருந்து க‌ற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய‌மான பாட‌ங்க‌ளாகும்

பைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது

86

ஏரோது மன்னன்

Image result for King Herod

இயேசு பிறந்த காலத்தில் யூதேயாவை ஆண்டு வந்தவர் ஏரோது மன்னன். தந்திரமும், சூழ்ச்சியும், கல் மனசும் கொண்டவன் என ஏரோதைச் சொல்லலாம்.முதலில் கலிலியா வின் கவர்னராக இருந்தார். ரோமர்களின் உதவியுடன் ஆட்சிக்கு வந்தார். அதற்காக பல படுகொலைகள் செய்தார்.

ஆட்சிக்கு வந்த பின்பும் தனது மனைவி மரியம், மாமியார், மச்சான், இரண்டு மகன்கள் உட்பட குடும்ப உறுப்பினர்களையே கொன்று குவித்தவன். மனைவி தனது கிரீடத்தைப் பறித்து விடுவாரோ எனும் பயத்தில் தான் அவளைக் கொன்றான். முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோஸபஸ் எனும் வரலாற்று அறிஞர் ஏரோது மன்னனின் வாழ்க்கையை விரிவாக எழுதியிருக்கிறார். “ஏரோதின் வாளாய் இருப்ப‌து அவ‌னுடைய‌ ம‌க‌னாய் இருப்ப‌தை விட‌ப் பாதுகாப்பான‌து” என்று அக‌ஸ்ட‌ஸ் சீச‌ர் சொன்ன‌து இத‌னால் தான்.

இயேசு யூதேயாவிலுள்ள‌ பெத்லேகேமில் பிற‌ந்தார். அப்போது வான‌த்தில் ஒரு ஸ்பெஷ‌ல் ந‌ட்ச‌த்திர‌ம் தோன்றிய‌து. வானிய‌ல் அறிஞ‌ர்க‌ள் அந்த‌ விண்மீனைக் க‌ண்ட‌தும் விய‌ந்தார்க‌ள். இந்த‌ விண்மீன் ஒரு மாபெரும் த‌லைவ‌ர் தோன்றிய‌த‌ன் அடையாள‌ம் என்ப‌தை அவ‌ர்க‌ள் அறிந்தார்க‌ள்.

விண்மீன் இருக்கும் திசை நோக்கி ந‌ட‌ந்தார்க‌ள். விண்மீன் அவ‌ர்க‌ளுக்கு முன்னால் சென்ற‌து. அது எருச‌லேம் நோக்கி ந‌க‌ர்ந்த‌து. ஞானிக‌ள் ஏரோது ம‌ன்ன‌னின் அர‌ண்ம‌னையில் நுழைந்தார்க‌ள்.

“ம‌ன்ன‌ரே வ‌ண‌க்க‌ம்”

“வாருங்க‌ள் அறிஞ‌ர்க‌ளே. உங்க‌ள் வ‌ர‌வு ந‌ல்வ‌ர‌வாகுக‌. என்ன‌ செய்தி ?” ஏரோது ம‌ன்ன‌ன் கேட்டான்.

“உங்க‌ளுக்குத் தெரியாத‌தா ? புதிய‌ ம‌ன்னனை, புதிய மெசியாவைக் காண‌ வ‌ந்திருக்கிறோம்”

“புதிய‌ ம‌ன்ன‌னா ? என‌க்கு ஏதும் குழ‌ந்தைக‌ள் பிற‌க்க‌வில்லையே “

“ம‌ன்ன‌ரே.. விண்மீன் வான‌த்தில் தோன்றிய‌து. உம‌து நாட்டுக்கு எங்க‌ளைக் கொண்டு வ‌ந்த‌து. அர‌ச‌ன் பிற‌ந்திருப்ப‌து உண்மை. அர‌ண்ம‌னையில் இல்லையேல் எங்கே பிற‌ந்திருப்பார் ?” ஞானிக‌ள் கேட்க‌ ஏரோது க‌ல‌ங்கினான். அவ‌னுக்குள்ளிருந்த‌ குரூர‌ ம‌ன‌ம் எட்டிப் பார்த்த‌து.

வ‌ஞ்ச‌க‌மாய் தான் ஆட்சியைக் கைப்ப‌ற்றிய‌து போல‌, த‌ன‌து ஆட்சியையும் யாரேனும் கைப்ப‌ற்றி விடுவார்க‌ளோ என‌ குழ‌ம்பினான். உட‌னே நாட்டிலுள்ள‌ ம‌றைநூல் அறிஞ‌ர்க‌ள், குருக்க‌ள் எல்லோரையும் கூட்டினான்.

“மெசியா பிற‌ந்தால், எங்கே பிற‌ப்பார் என்று தெரியுமா ?”

ந‌ம‌து அர‌ண்ம‌னையில் பிற‌க்காவிட்டால் பெத்லேகேமில் பிற‌க்க‌ வாய்ப்பு உண்டு. கார‌ணம்,  “யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்” என‌ முன்னமே மீகா இறைவாக்கின‌ர் சொல்லியிருக்கிறார் என்ற‌ன‌ர்.

ஏரோதின் ம‌ன‌தில் ச‌துர‌ங்க‌ம் ந‌க‌ர்ந்த‌து. அவன் ஞானிக‌ளை த‌னியே அழைத்து விஷய‌மெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

” நீங்க‌ள் போய் அவ‌ரை வ‌ண‌ங்குங்க‌ள். பின்பு வ‌ந்து என‌க்குச் சொல்லுங்க‌ள். நானும் வணங்குவேன்” என்றான்.

ஞானிக‌ள் கிளம்பினர். அவ‌ர்க‌ளுக்கு முன்னால் ந‌டந்து வந்த விண்மீன் ஒரு தொழுவ‌த்தின் மேல் வ‌ந்து நின்ற‌து. உள்ளே ம‌ரியா குழ‌ந்தை இயேசுவைக் கைக‌ளில் ஏந்திய‌ப‌டி இருந்தார். அவ‌ர்க‌ள் அவரை வ‌ண‌ங்கி ப‌ரிசுக‌ளை அளித்த‌ன‌ர்.

ப‌ய‌ண‌க் க‌ளைப்பும், ஆன‌ந்த‌க் க‌ளிப்புமாக‌ இர‌வில் தூங்கிய‌ ஞானிக‌ளுக்குக் க‌ன‌வில் தோன்றினார் தேவ‌தூத‌ன்.

“ஏரோதிட‌ம் போய் குழ‌ந்தையைக் குறித்துப் பேசாதீர்க‌ள். வேறு வ‌ழியாக‌ நாடு திரும்புங்க‌ள்” என்றார் தூத‌ன்.

அவ‌ர்க‌ள் அப்ப‌டியே செய்தார்க‌ள். தூத‌ன் இயேசுவின் த‌ந்தை யோசேப்பின் க‌ன‌விலும் தோன்றினார்.

“நீர் குழ‌ந்தையை எடுத்துக் கொண்டு எகிப்துக்குச் செல்லும். ஏரோது குழ‌ந்தையைக் கொல்ல‌த் தேடுவான்” என்றார். யோசேப்பு இர‌வோடு இர‌வாக‌ இட‌த்தைக் காலி செய்து விட்டு எகிப்துக்குப் போனார்.

அர‌ண்ம‌னையில் ஏரோது ஞானிக‌ளின் வ‌ருகைக்காய்க் காத்திருந்தான். நாட்க‌ள் ந‌க‌ர்ந்த‌ன‌. ஞானிக‌ள் வ‌ர‌வேயில்லை. அவ‌ர்க‌ள் த‌ன்னை ஏமாற்றிவிட்ட‌தை ஏரோது புரிந்து கொண்டான். த‌ன‌து அர‌ச‌ ப‌த‌வி போய்விடும் எனும் க‌வ‌லை இப்போது அவ‌னுக்கு வ‌லுப்ப‌ட்ட‌து.

“யார‌ங்கே.. வீர‌ர்க‌ளைத் திர‌ட்டுங்க‌ள். பெத்லேகேம் ம‌ற்றும் அத‌ன் சுற்றுப் புற‌மெங்கும் உள்ள‌ குழ‌ந்தைக‌ளில் இர‌ண்டு வ‌ய‌துக்கு உட்ப‌ட்ட‌ அனைத்து ஆண் குழ‌ந்தைக‌ளையும் கொல்லுங்க‌ள்” என்று ஆணையிட்டான்.

இயேசு விண்ண‌க‌ அர‌ச‌ர் என்ப‌தை ஏரோது உண‌ர‌வில்லை. வயதான ஏரோது இன்னும் அரியணையை இறுகப் பிடித்திருந்தான். ம‌ன‌தைக் க‌ல்லாக்கிக் கொண்டு ப‌ச்சிள‌ம் பால‌க‌ர்க‌ளைக் கொன்று குவித்தான் ஏரோது.

நாட்க‌ள் சென்ற‌ன‌. ஏரோது ம‌ன்ன‌னுக்கு நோய் வ‌ந்த‌து. ப‌ச்சிள‌ம் குழ‌ந்தைக‌ளைக் கொன்ற‌ பாவ‌மும், அத‌னால் எழுந்த‌ சாபமுமா தெரியாது, நோயின் வ‌லியினால் துடித்தான். க‌டைசியில் த‌ற்கொலை செய்து கொண்டான் என்கிற‌து ப‌ன்னிர‌ண்டாம் நூற்றாண்டில் எழுத‌ப்ப‌ட்ட‌ எட்வைன் குறிப்புக‌ள்.

இறைவ‌னின் திட்ட‌த்தை ம‌னித‌ர்க‌ளால் த‌டுக்க‌ முடியாது எனும் உண்மையும், வார்த்தையாகிய‌ விண்மீனைத் தொட‌ர்ந்து ந‌ட‌ந்தால் இயேசுவை அடைய‌லாம் எனும் உண்மையும் ஏரோதின் வாழ்க்கை ந‌ம‌க்குச் சொல்லும் பாட‌ங்களாகும்.

பைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்

85

திருமுழுக்கு யோவான்

Related image

செக்கரியா எலிசபெத் தம்பதியருக்கு முதிர் வயதில் கடவுளின் அருளால் பிறந்த குழந்தை தான் யோவான். கடவுளின் அற்புதத்தைக் கண்டு வியந்த செக்கரியா

“குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்” என்று வாழ்த்தினார்.

யோவான் இயேசுவை விட ஆறு மாதங்கள் மூத்தவர். இருவரும் சொந்தக்காரர்கள். யோவானின் பிறப்பு இயேசுவின் பிறப்பை முன்னறிவிப்பதற்காக நிகழ்ந்தது.

இவரது வரவை இறைவாக்கினர் எசாயா ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே “குரலொலி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” என்று முன்னறிவித்தார்.

அதன் பின்னர் கி.மு 5ம் நூற்றாண்டில் “இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்” என கடவுள் மலாக்கி இறைவாக்கினர் மூலமாக முன்னறிவித்தார்.

யோவான் வளர்ந்தார். வலிமையடைந்தார். அவர் பாலைவனத்தில் வாழ்ந்து வந்தார். ஒட்டக மயிராடை அணிந்து, இடையில் வார்க்கச்சை கட்டியிருந்தார். காட்டுத்தேனும் வெட்டுக்கிளியுமே அவரது உணவு. திபேரியு சீசரின் ஆட்சி காலத்தின் பதினைந்தாம் ஆண்டில், போந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராய் இருந்தார். பாலைவனத்தில் வாழ்ந்து வந்த யோவானுக்கு இறைவனின் அழைப்பு வந்தது. மக்களின் மனமாற்றத்துக்காகப் போதிக்க ஆரம்பித்தார்.

“பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” . மனம் மாறியவர்களுக்கு அதன் அடையாளமாக ஞானஸ்நானம் அதாவது திருமுழுக்கு கொடுத்தார். அதனால் அவரது பெயர் திருமுழுக்கு யோவான் என்றானது.

அவருடைய வலிமையான போதனையில் தாக்கப்பட்ட பலர் அவரிடம் வந்து மன மாற்றம் அடைந்து திருமுழுக்கு பெற்றனர்.

வந்தவர்கள் , “நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?” என்று கேட்டார்கள்.

“உன்னிடம் இரண்டு அங்கி இருந்தால், ஒன்றை இல்லாதவனுக்குக் கொடு. இருக்கும் உணவையும் பகிர்ந்து உண்” என்றார்.

வரி வசூலிப்பவர்கள் “நாங்கள் என்ன செய்ய வேண்டும்” ? என்று கேட்டார்கள்.

“எவ்வளவு வசூலிக்க வேண்டுமோ அதை மட்டும் வசூலியுங்கள். நேர்மையாய் இருங்கள்” என்றார்.

படைவீரர்கள் அவரிடம், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?” என்றார்கள்.

“யாரையும் அச்சுறுத்தி பணம் பறிக்க வேண்டாம். பொய் குற்றம் சுமத்த வேண்டாம். சம்பளமே போதுமென இருங்கள்” என்றார்.

இவருடைய போதனைகளைக் கேட்ட மக்கள், ஒருவேளை இவர் தான் மீட்பராய் இருப்பாரோ என பேசத் தொடங்கினர். ஆனால் அவர் மீட்பர் அல்ல, அவர் மீட்பர் இயேசுவின் முன்னோடி. எனவே அவர் மக்களைப் பார்த்து,

“நான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுப்பவன். இன்னொருவர் வருவார். அவர் தூய ஆவியாலும் நெருப்பாலும் திருமுழுக்கு கொடுப்பார். அவருடைய செருப்பின் வாரை அவிழ்க்கக் கூட எனக்கு தகுதியில்லை” என தன்னைத் தாழ்த்திக் கொண்டார்.

இயேசுவும் தம் பணி வாழ்வின் தொடக்கமாக யோவானிடம் திருமுழுக்கு பெற்றுக் கொண்டார். அப்போது வானம் திறந்தது, “இவரே என் அன்பார்ந்த மகன்” என விண்ணகத் தந்தையின் குரல் வானிலிருந்து ஒலித்தது. தூய ஆவியானவர் ஒரு புறாவின் வடிவில் இயேசுவிடம் வந்திறங்கினார்.

யோவானைப் பற்றிய பேச்சு ஊரெங்கும் பரவியது. அவர் எந்த இடத்திலும் சமரசம் காட்டாமல் பேசி வந்தார். அங்கே குறுநில மன்னன் ஏரோது ஆட்சி செய்து கொண்டிருந்தான். தனது சகோதரனின் மனைவி ஏரோதியாளை அபகரித்து அவளோடு வாழ்ந்து வந்தான்.

“ஏரோதே.. நீ செய்வது பாவம்! மனம் திரும்பு” யோவானின் குரல் அச்சமில்லாமல் ஏரோதின் முன்னால் ஒலித்தது. ஏரோது கோபமடைந்தான். யோவானைக் கைது செய்து சிறையில் அடைத்தான்.

யோவான் சிறைப்பட்டதும் இயேசு தனது பணி வாழ்வை தீவிரப்படுத்தினார். “பெண்களில் பிறந்தவர்களில் யோவானை விடப் பெரியவன் யாரும் இல்லை” என யோவானைப் பற்றி வெளிப்படையாய் அறிக்கையிட்டார்.

ஏரோது எப்படியாவது யோவானைக் கொல்ல வேண்டும் என நினைத்தான், ஆனால் மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என அமைதி காத்தான். அப்போது ஏரோதின் பிறந்த நாள் வந்தது.

ஏரோதியாளின் மகள் சலோமி ஒரு அற்புதமான நாட்டியத்தை ஏரோதின் முன்னால் நடத்தினார்.

“நீ என்ன வேண்டுமானாலும் கேள், உனக்குத் தருகிறேன்” ஏரோது அறிவித்தான்.

“எனக்கு யோவானின் தலை ஒரு தட்டில் வைத்துத் தரவேண்டும்” என்றாள் சலோமி. அவளுடைய தாயின் அறிவுரை அதுவாக இருந்தது. ஏரோது வருந்தினாலும், வாக்குறுதியை மீற விரும்பவில்லை.

யோவானின் தலை வெட்டப்பட்டது. தட்டில் வைத்து பரிசாக அளிக்கப்பட்டது. அதை அவள் கொண்டு போய் தன் தாயிடம் கொடுத்தார்.

யோவானின் பணி நிறைவுற்றது. இயேசுவைப் பற்றி அறிக்கையிட தயங்காத மனமும், தனியே பணிசெய்யத் தயங்காத திடமும், மனித நேய சிந்தனைகளும், அசைக்க முடியாத விசுவாசமும் திருமுழுக்கு யோவனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களாகும்.

*

 

பைபிள் மாந்தர்கள் 84 (தினத்தந்தி) செக்கரியா

84

செக்கரியா

Image result for Zacaria Bible

இயேசு பிறப்பதற்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது. ஆலயத்தில் தூபம் காட்டும் பணி செய்து கொண்டிருந்தார் ஒருவர். அவர் பெயர் செக்கரியா. அவருடைய மனைவி எலிசபெத்து. எலிசபெத்தும், இயேசுவின் தாய் மரியாவும் உறவினர்கள்.

செக்கரியாவும், எலிசபெத்தும் மிகவும் நேர்மையாளர்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய குறை இருந்தது. குழந்தையின்மை. கடவுளிடம் தொடர்ந்து மன்றாடி வந்தார்கள். காலம் சென்று கொண்டே இருந்தது. எலிசபெத் தாய்மை நிலையை அடையவே இல்லை. இப்போது இருவருமே முதிர் வயதை அடைந்து விட்டிருந்தனர். எனவே அவர்களுடைய நம்பிக்கை ஏறக்குறைய வற்றிப் போய்விட்டது.

அந்தக் காலத்தில் ஆண்டவரின் திருமுன் சென்று தூபம் காட்டுவது மிகப்பெரிய பணி. யார் தூபம் காட்டலாம் என குருக்கள் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அப்படிச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது செக்கரியாவின் பெயர் வந்தது. அவர் மிகவும் மகிழ்ந்தார்.

பீடத்தின் அருகே சென்று தீபம் காட்டினார். மக்கள் எல்லோரும் வெளியே நின்று வேண்டுதல் செய்து கொண்டிருந்தார்கள். செக்கரியா தூபம் காட்டிக் கொண்டிருந்தபோது ஒரு வானதூதர் பீடத்தின் வலது புறமாகத் தோன்றினார்.

திடீரென தனக்கு முன்னால் வானதூதர் தோன்றியதைக் கண்ட செக்கரியா வெலவெலத்துப் போனார்.

“பயப்படாதீர்கள் செக்கரியா. நல்ல செய்தியைத் தான் சொல்லப் போகிறேன். உமது மனைவி எலிசபெத் ஒரு மகனைப் பெறுவாள். அவருக்கு யோவான் என்று பெயரிடுங்கள்”

வானதூதரின் வார்த்தைகளை குழம்பிய மனதோடு கேட்டுக் கொண்டிருந்தார் செக்கரியா. தூதர் தொடர்ந்தார்.

“யோவான் கடவுள் பார்வையில் மிகவும் பெரியவராக இருப்பார். அவர் திராட்சை ரசம், மது போன்றவற்றையெல்லாம் தொடவே மாட்டார். தாயின் வயிற்றில் இருக்கும் போதே தூய ஆவி அவரை நிறைக்கும்”

செக்கரியா மனதுக்குள் குழப்பம் தொடர்ந்தது. வானதூதரோ நிறுத்தவில்லை.

“எலியாவைப் போல அவர் இருப்பார். வழி விலகிப் போகும் இஸ்ரயேல் மக்களை திரும்ப கடவுளிடம் கொண்டு வரும் பணியை அவர் செய்வார். ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை உருவாக்குவார்”

செக்கரியா வானதூதரின் பேச்சை நிறுத்தினார்.

“சொல்றதெல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா இதெல்லாம் நடக்கிற காரியமா ? எனக்கும் வயசாச்சு, எலிசபெத்தும் கிழவியாயிட்டா” என்றார்.

வானதூதர் அவரிடம்

“நான் கடவுளுக்கு முன்னால் நிற்கும் கபிரியேல் தூதன். கடவுளுடைய வார்த்தையை உமக்குச் சொல்ல வந்தேன். நீரோ அதை நம்பவில்லை. எனவே இந்த நற்செய்தி நிறைவேறும் மட்டும் நீர் ஊமையாய் இருப்பீர்” என்றார்.

செக்கரியா வானதூதரிடம் பதில் பேச வாயெடுத்தார். சத்தம் வரவில்லை. சட்டென வானதூதரும் மறைந்தார். செக்கரியா மிரண்டு போய் நின்றார். .

“தூபம் காட்ட உள்ளே போனவருக்கு என்னாச்சு?” என வெளியே காத்திருந்த‌ மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நீண்ட நேரத்துக்குப் பின் வெளியே வந்தார் செக்கரியா. அவருடைய முகம் மாறியிருந்தது. மக்கள் அவரிடம் நடந்தது என்ன என்று கேட்டார்கள். அவரால் எதுவுமே பேச முடியவில்லை. சைகையினால் பதில் சொன்னார்.

மக்கள் வியந்தனர். கடவுளின் வார்த்தை நிறைவேறியது. எலிசபெத் தாய்மை நிலையை அடைந்தார். இருவரும் பரவசமடைந்தார்கள்.

ஆறு மாதங்களுக்குப் பின் மரியாவிடம் தூதர் சென்று இயேசுவின் பிறப்பைப் பற்றியும், எலிசபெத் தாய்மையாய் இருக்கும் விஷயத்தையும் தெரிவித்தார். மரியா எலிசபெத்தைக் காண ஓடினார்.

எலிசபெத்தைக் கண்டு வாழ்த்தினார் மரியா. அப்போது எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தை ஆனந்தமாய்த் துள்ளியது. எலிசபெத் பரிசுத்த ஆவியினால் நிறைந்தார். எலிசபெத் குரலுயர்த்தி சத்தமாக, “பெண்களுக்குள் நீர் ஆசீர்வதிக்கப் பட்டவர். உம் வாழ்த்தைக் கேட்டதும் வயிற்றிலிருந்த குழந்தையும் துள்ளியது. ஆண்டவரின் தாயார் என்னிடம் வர நான் யார் ?” என்றார்.

எலிசபெத்துக்குப் பேறுகாலம் வந்தது. அவர் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார். சுற்றிலும் உள்ள மக்கள் எல்லாம் இந்த மகிழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். எட்டாம் நாள் குழந்தைக்குப் பெயரிட வேண்டும்.

“அப்பாவோட‌ பெயரான செக்கரியா பெயரையே பையனுக்குப் போடுவோம்” மக்கள் சொன்னார்கள்.

“வேண்டாம் யோவான் என்று பெயரிடுங்கள்” எலிசபெத் சொன்னார்.

“யோவானா ? அப்படி ஒரு பெயர் சொந்தக்காரர்கள் யாருக்கும் இல்லையே. சரி எதற்கும் செக்கரியாவிடம் கேட்போம்” என மக்கள் செக்கரியாவிடம் சென்றார்கள். அவரிடம் சைகையால் என்ன பெயரிடலாம் என கேட்டார்கள்.

செக்கரியா ஒரு பலகையை எடுத்து, “இவன் பெயர் யோவான்” என எழுதினார். மக்கள் பிரமித்துப் போனார்கள்.

உடனே சக்கரியாவின் நாவின் கட்டவிழ பேச்சு வந்தது. உடனே கடவுளைப் புகழ்ந்து பாடினார்.

இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை. குழந்தைகள் இறைவனால் கிடைக்கும் வரம். ‘இனிமேல் முடியாது’ என மனிதர்கள் சுய பலத்தை இழந்து முழுமையாக இறையில் சரணடையும் இடத்தில் இறைவன் செயலாற்றுகிறார்.

 

பைபிள் மாந்தர்கள் 83 (தினத்தந்தி) யோசேப்பு

83 யோசேப்பு

Image result for Joseph father of jesus painting

இயேசுவின் வளர்ப்புத் தந்தை. உலகில் எத்தனையோ மக்கள் இருந்த போதும் இயேசுவை வளர்க்கும் பாக்கியம் யோசேப்புக்குக் கிடைத்தது.

மரியாவுடன் மண ஒப்பந்தமாகியிருந்தார் யோசேப்பு. ஆனாள் மரியா தூய ஆவியினால் கருத்தாங்குகிறார். குழம்பிய யோசேப்பிடம் தேவதூதன் உண்மையைச் சொல்ல யோசேப்பு தெளிவடைகிறார், இறை சித்தத்துக்கு உடன்படுகிறார்.

மரியா தாய்மை நிலையில் இருக்கும் போது பெத்லேகேம் செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. யோசேப்பு உடனிருந்தார். பெத்லேகேமில் இயேசு பிறந்த போது கூட இருந்து கவனித்துக் கொண்டார். இயேசுவை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டிய காலம் வந்தபோது யோசேப்பு அதை நிறைவேற்றினார். ஏரோது மன்னன் இயேசுவைக் கொல்ல கட்டளையிட்டபோது சிரமங்களைத் தாங்கி நாடுகடந்து ஓடி நாயகனைக் காப்பாற்றினார்.

இயேசு பன்னிரண்டு வயதாக இருந்தபோது ஒரு முறை எருசலேம் ஆலயத்தில் தங்கி விட்டார். பிள்ளையைக் காணோமே எனும் பரிதவிப்புடன் ஓடி அலைந்து ஆலயத்தில் அவரைக் கண்டு பிடித்தார் யோசேப்பு.

அதன் பிறகு யோசேப்புவைப் பற்றிய குறிப்புகள் பைபிளில் இல்லை. அவர் இயேசுவின் பணி வாழ்வுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்பதே பொதுவான நம்பிக்கை.

யோசேப்பு தாவீதின் வழிமரபில் வந்தவர். அவருடைய தந்தை ஏலி என்கிற யாக்கோபு. யோசேப்பு தச்சுத் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்த  எளிமையான மனிதர்.

அவர் நேர்மையாளராகவும், நீதிமானாகவும் இருந்தார். அந்த குணாதிசயம் தான் அவருக்கு இயேசுவை வளர்க்கும் பாக்கியத்தைத் தந்தது. திருமணத்துக்கு முன்பே தனது மனைவி மரியா கர்ப்பமாய் இருந்த செய்தி யோசேப்புக்குத் தெரிந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு பெண் கர்ப்பமாய் இருக்கிறாள் என்பது எவ்வளவு பெரிய மன உளைச்சல். நேரடியாகப் போய் சண்டையிடவோ, பெயரைக் களங்கப்படுத்தவோ தான் சாதாரண மக்கள் முயல்வார்கள்.

ஆனால் யோசேப்பு அப்படிச் செய்யவில்லை. “மறைவாக” மரியாவை விலக்கி விட நினைத்தார். அதாவது காதும் காதும் வைத்தது போல பிரச்சினையை முடிக்க நினைத்தார். ஒருவேளை அப்படி அவர் செய்யாமல் ஊருக்குள் மரியாவின் பெயரை அவமானப் படுத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும் ? தூதன் வந்து உண்மையைச் சொன்ன‌ போது பதறிப் போயிருப்பார். அதற்குள் அவர் விதைத்த அவமானக் கதை ஊருக்குள் நிரம்பியிருக்கும்.

யோசேப்பு மிகவும் கனிவான மனம் உடையவராய் இருந்தார். மரியா மனம் வருந்தக் கூடாது என்று நினைத்தார். அடுத்தவர்கள் தப்பு செய்திருந்தால் கூட அந்தத் தவறைச் சுட்டிக் காட்டி வேதனைப் படுத்தாத மனம் கடவுளுக்குப் பிரியமான மனம். அது யோசேப்புக்கு இருந்தது.

அன்றைய வழக்கப்படி மரியாவைக் கல்லால் எறிந்து கொல்லவும் யோசேப்புக்கு சட்டம் இடமளித்தது. யோசேப்பு கல்லெறியும் கல்நெஞ்சக்காரர் அல்ல. ஒரு சொல்லால் கூட மரியாவைக் காயப்படுத்த விரும்பவில்லை.

கடவுள் அதனால் தான் யோசேப்பை மரியாவின் மண்ணகத் தந்தையாய் மாற்றினார். ஒரு நீதிமானாய் இருந்த யோசேப்பு, ஒரு மண்ணகத் தந்தைக்குரிய அனைத்து குணாதிசங்களோடும் இருந்தார்.

  1. யோசேப்பு நல்ல உழைப்பாளியாக இருந்தார். தச்சுத் தொழிலை நேர்மையாகச் செய்து வந்தார். அதிக லாபம் சம்பாதிக்க விரும்பாதவராக இருந்ததால் அவர் எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆலயத்தில் ஏழைகள் பலியிடும் புறாக்களை பலியிடவே அவரால் முடிந்தது,
  2. இயேசு யோசேப்பின் சொந்த ரத்தமல்ல. ஆனாலும் அந்த சிந்தனையை அவர் மனதில் கொள்ளாமல், தனது சொந்த மகனைப் போல வளர்த்தார். ஏரோது மன்னனிடமிருந்து குழந்தைக்கு ஆபத்து வந்த போது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எகிப்துக்கு ஓடினார்.
  3. ஒரு குழந்தையின் குணாதிசயங்களைக் கட்டமைப்பதில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. நீதிமானான யோசேப்பு அந்தக் குணாதிசயங்களைக் கொண்டிருந்தார். தூய்மையான வாழ்க்கை, எளிமையான வாழ்க்கை, நேர்மையான வாழ்க்கை இவற்றையெல்லாம் யோசேப்பின் வாழ்க்கை இயேசுவுக்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம். அன்பு, மன்னிப்பு, நேசம், மறை அறிவு போன்ற பலவற்றைக் கற்கவும் இயேசுவுக்கு யோசேப்பின் வழிகாட்டுதல் இருந்திருக்க வேண்டும்.
  4. யோசேப்பு பாவமில்லாதவர் அல்ல. ஆனால் கடவுளின் நேர்மையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்தார். அதனால் தான் மரியா கர்ப்பமாய் இருக்கும் செய்தி கேட்டும் கூட பொறுமையும், இரக்கமும், கண்ணியமும் கொண்டிருந்தார். “பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்” என்று இயேசு பின்னாளில் போதித்தார்.
  5. கீழ்ப்படிதலின் உதாரணமாய் யோசேப்பு இருந்தார். “மேரியை ஏற்றுக் கொள்”, “இயேசு என பெயரிடு”, “எகிப்துக்குப் போ”,”திரும்பி இஸ்ரேலுக்கு வா” என வந்த கடவுளின் கட்டளைகள் அனைத்தையும் அப்படியே, அப்போதே செயல்படுத்தினார்.

ஒரு நீதிமானாக, பணிவானவராக, அன்பும் இரக்கமும் கொண்டவராக, உழைப்பாளியாக, கடவுள் பக்தி உள்ளவராக வாழ்ந்த யோசேப்பின் வாழ்க்கை நமக்கு ஊக்கமளிக்கட்டும். எனினும், இறைவனே என்றும் நாம் வழிபடும் தந்தையாகட்டும்.

*

பைபிள் மாந்தர்கள் 82 (தினத்தந்தி) மரியா

82

மரியா

Image result for mary mother of jesus painting

 

ரோமப் பேரரசுக்கு உட்பட்ட கலிலேயா நகரில் மலைகளின் பின்னால் மறைந்திருந்தது நாசரேத் கிராமம். கி.மு 1009ல் தாவீது மன்னனும், கி.மு 971ல் அவர் மகன் சாலமோன் மன்னனும் அற்புதமாய் ஆட்சி செய்த சுதந்திர தேசம்.

மரியாள் எளிமையான ஒரு யூதப் பெண். தனது பதின் வயதுகளின் ஆரம்ப வருடங்களில் இருந்தாள். அவருக்கு யோசேப்பு என்பவரோடு நிச்சயதார்த்தம் நடந்திருந்தது

ஒரு நாள் மரியாவின் முன்னால் திடீரென தோன்றினார் ஒரு வானதூதர். வானதூதரைக் கண்ட மரியா திடுக்கிட்டார்.  “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ” என்று தூதர் சொல்ல மரியா மேலும் கலங்கினார்.

“பயப்படாதீர்கள், கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர், அவருக்கு இயேசு என்று பெயரிடுங்கள். அவர் பெரியவர். அவரது ஆட்சிக்கு முடிவே இருக்காது” வானதூதர் உற்சாகமாய்ச் சொன்னார். மரியாவோ அச்சத்திலிருந்து விலகவில்லை.

“இது.. இது எப்ப‌டி ந‌ட‌க்கும். நான் க‌ன்னியாயிற்றே” என்றாள்.

“இது க‌ட‌வுளின் அருளால் ந‌ட‌க்கும். தூய‌ ஆவியால் க‌ருத்தாங்குவீர். அந்த‌க் குழ‌ந்தை இறைம‌க‌ன் என‌ப்ப‌டும்” என்றார் தூத‌ர்.

“நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” ம‌ரியா ஒற்றை வ‌ரியில் த‌ன்னை அர்ப்ப‌ணித்தார். அர்ப்ப‌ணித்த‌பின் தூய்மை காத்தார். க‌ட‌வுளின் அருளால் தாய்மை காத்தார்.

திரும‌ண‌த்துக்கு முன்பே க‌ர்ப்ப‌ம். இது க‌ட‌வுளின் அருளால் என்று சொன்னால் யாரும் ந‌ம்ப‌ப் போவ‌தில்லை. க‌ன்னியாக‌வே இருக்கிறேன் என்று சொன்னால் யாரும் சிரிக்காம‌ல் இருக்க‌ப் போவ‌தில்லை. யோசேப்புட‌னான‌ த‌ன‌து திரும‌ண‌ம் நின்று போக‌லாம். அல்ல‌து தான் முறை த‌வ‌றிய‌வ‌ள் என‌ முத்திரை குத்த‌ப்ப‌ட்டு க‌ல்லெறிந்து கொல்ல‌ப்ப‌ட‌லாம். சாத்திய‌ங்க‌ள் ஆயிர‌ம் இருந்தாலும் ம‌ரியாள் க‌வ‌லைப்ப‌ட‌வில்லை. இறை சித்த‌மே த‌ன் ப‌ணி என‌ துணிந்தார்.

ம‌ரியாள் க‌ர்ப்ப‌மான‌ செய்தியைக் கேட்ட‌ யோசேப்பு அதிர்ந்தார். ம‌னைவியை ம‌றைவாய் வில‌க்கி விட‌ தீர்மானித்தார். ஆனால் க‌ட‌வுள் அவ‌ரிட‌மும் ஒரு தூத‌ரை அனுப்பி விஷ‌ய‌த்தை விள‌க்க‌ யோசேப்பு புரிந்து கொண்டார், விய‌ந்து நின்றார்.

ம‌ரியா இயேசுவை க‌ருவில் சும‌ந்து இறையில் நிறைந்தாள். அப்போது அக‌ஸ்து சீச‌ர் ஒரு க‌ட்ட‌ளை பிற‌ப்பித்தார். அத‌ன் ப‌டி மரியாவும் யோசேப்பும் மக்கள் தொகை க‌ண‌க்கெடுப்புக்காய் கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற ஊருக்குச் சென்றார்கள்.

பெத்லேகேமில் மக்கள் நிரம்பி வழிந்தார்கள். மரியாவுக்கு நிறைமாதம். சத்திரங்கள் எல்லாம் நிரம்பி வழிந்தன. எங்கும் இடம் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்கள். மரியாயின் நிலமையைப் பார்த்த ஒருவர் அவர்களுக்கு த‌ங்கிக்கொள்ள‌ ஒரு இட‌ம் கொடுத்தார்.

அது ஒரு தொழுவ‌ம்.

ம‌ரியா ஆடுக‌ளின் இடையே ஆத‌வ‌னைப் பெற்றெடுத்தாள். தொழுவ‌ம் தொழுகை பெற்ற‌ நிக‌ழ்வாக‌ இயேசு பிற‌ந்தார். ம‌ரியா இயேசுவின் வாழ்க்கையைத் துவ‌ங்கி வைத்தாள்.

தூய்மைச் ச‌ட‌ங்கை நிறைவேற்ற‌ வேண்டிய‌ நாளின் போது ம‌ழ‌லை இயேசுவைத் தூக்கிக் கொண்டு எருச‌லேம் தேவால‌ய‌ம் சென்றார் ம‌ரியா. ஆல‌ய‌த்தில் சிமியோன் எனும் இறை மனிதர் இருந்தார். அவ‌ர் ம‌ழ‌லை இயேசுவைக் க‌ண்ட‌தும் அவ‌ர் தான் மீட்ப‌ர் என்ப‌தைக் க‌ண்டு கொண்டார்.

ம‌ரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார். இப்படி இயேசு மீட்ப‌ர் என அடையாள‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌போது ம‌ரியா கூட‌வே இருந்தார்.

ப‌ன்னிர‌ண்டு வ‌ய‌து. எருச‌லேம் தேவால‌ய‌த்துக்கு பெற்றோரோடும் உற‌வின‌ரோடும் சென்ற‌ இயேசு ஆல‌ய‌த்திலேயே த‌ங்கி விட்டார். அது தெரியாத‌ பெற்றோர் வீடு திரும்பின‌ர். மறு நாள் தான் விஷ‌ய‌ம் தெரிந்து. ப‌த‌றிய‌டித்துக் கொண்டு எருச‌லேம் ஓடினார் அன்னை. இயேசு ஆல‌ய‌த்தில் அம‌ர்ந்து பெரிய‌வ‌ர்களுட‌ன் விவாதித்துக் கொண்டிருந்தார்.

“ம‌க‌னே த‌விக்க‌ விட்டு விட்டாயே” என‌ பாச‌த்தோடு கேட்ட‌ தாயிட‌ம், “என் த‌ந்தையின் இல்ல‌த்தில் நான் இருப்பேன் என்ப‌து தெரியாதா ?” என‌க் கேட்டார். இப்படி இயேசு த‌ன‌து ப‌ணிவாழ்வை முன்னுரையாய்ச் சொன்ன‌போதும் அன்னை கூட‌வே இருந்தார்.

முப்ப‌தாவ‌து வ‌ய‌தில் ப‌ணிவாழ்வில் நுழைந்தார் இயேசு. கானாவூர் எனுமிட‌த்தில் ந‌ட‌ந்த‌ க‌ல்யாண‌ வீட்டில் திராட்சை ர‌ச‌ம் தீர்ந்து விட்ட‌து. ம‌ரியா இயேசுவிட‌ம், “ர‌ச‌ம் தீர்ந்து விட்ட‌து” என்றார். பின் வேலைக்கார‌ர்க‌ளிட‌ம், “அவ‌ர் உங்க‌ளுக்குச் சொல்வ‌தெல்லாம் செய்யுங்க‌ள்” என்றார். இயேசு த‌ண்ணீரை திராட்சை ர‌ச‌மாய் மாற்றி முத‌ல் புதுமையைச் செய்தார். இப்ப‌டி இயேசுவின் புதுமை வாழ்வின் முத‌ல் ப‌டியிலும் ம‌ரியா இருந்தார்.

இறுதியில் இயேசு சிலுவையில் அறைய‌ப்ப‌ட்டு உயிர்விடும் க‌டைசிக் க‌ண‌த்திலும் சிலுவை அடியில் ம‌ரியா நின்றார்.

ம‌னுவுருவான‌ வார்த்தையைச் சும‌க்க‌ க‌ட‌வுள் உல‌கெங்கும் பார்த்த‌போது தென்ப‌ட்ட‌ ஒரே பெண் ம‌ரியா. இன்று வார்த்தையான‌ இயேசுவைச் சும‌க்க‌ ந‌ம‌து இத‌ய‌த்தைப் ப‌ரிசுத்த‌ப்ப‌டுத்துவோம்.

பைபிள் மாந்தர்கள் 81 (தினத்தந்தி) இயேசு

81

இயேசு கிறிஸ்து

Related image

ஆதாம் முதல் இயேசுவின் பிறப்பு வரையிலான காலம் கி.மு என அழைக்கப்படுகிறது. ஆதியிலேயே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி எனும் திரித்துவ நிலையில்  இருந்தார். ஆதாமை கடவுள் படைத்தது முதல், இயேசுவின் பிறப்பு வரையிலான நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றிருக்கின்றன.

முதல் மனிதர்கள் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து கடவுளின் வழியை விட்டு விலகினர். இறைவன் மனம் வருந்தினார், தனது மக்களை நல் வழிப்படுத்த இறைவாக்கினர்களை ஏற்படுத்தினார். அவர்கள் கடவுளின் குரலாக இருந்தார்கள். இருந்தாலும் மனுக்குலம் பாவத்தில் ஆழமாய் பயணித்துக் கொண்டே இருந்தது.

கடைசியாகக் கடவுள் தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். அவர் குரலாக மட்டும் இல்லாமல் செயலாகவும் இருந்தார். க‌ட‌வுளுக்கு ஏற்புடைய‌ வாழ்க்கை என்ப‌து எது ? எந்த‌ வாழ்க்கை க‌ட‌வுளுக்குப் பிரிய‌மான‌து என்ப‌தை அவ‌ர் ஒவ்வொரு நாளும் த‌ன‌து செய‌லால் ந‌ட‌த்திக் காட்டினார். இப்படி அவ‌ர் ந‌ம‌க்கு முன் செல்லும் ஒரு முன் மாதிரியானார்.

மோசேயின் வ‌ழியாக‌க் க‌ட‌வுள் கொடுத்த‌ ப‌த்துக் க‌ட்ட‌ளைக‌ள் ப‌ழைய‌ ஏற்பாட்டு ம‌க்க‌ளுக்கு வ‌ழிகாட்டியாக‌ அமைந்த‌ன‌. ப‌ழைய‌ ஏற்பாட்டில் மொத்த‌ம் 613 க‌ட்ட‌ளைக‌ள் உள்ள‌ன‌. கால‌ப்போக்கில் அந்த‌க் க‌ட்ட‌ளைக‌ளில் பெரும்பாலானவை வெறும் ச‌ட‌ங்குக‌ளாக‌வும், ஏழைக‌ளை ஏய்ப்ப‌த‌ற்கு வ‌லிய‌வ‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் ஆயுத‌மாக‌வும் மாறிப் போயின‌.

இயேசுவின் வ‌ருகையானது, ‘தூய்மை என்பது என்ன ?” என்ப‌தை உல‌கிற்குப் ப‌றைசாற்றும் வித‌மாக‌ இருந்த‌து. அதுவ‌ரை இருந்த‌ ச‌ட்ட‌ங்க‌ள் க‌ட்ட‌ளைக‌ள் எல்லாமே செய‌ல்க‌ளின் அடிப்ப‌டையிலேயே இருந்த‌ன‌. த‌வ‌றான‌ செய‌ல்க‌ளைச் செய்ய‌க் கூடாது, தீமை செய்ய‌க் கூடாது, ந‌ன்மை செய்ய‌ வேண்டும் என்ப‌வையே க‌ட்ட‌ளைக‌ளாக‌ இருந்த‌ன‌.

இயேசு போத‌னைக‌ளை உள்நோக்கித் திருப்பினார். “சிந்த‌னைக‌ளைச் சீர்செய்ய‌ வேண்டும். அக‌த்தை அழ‌குப‌டுத்தாம‌ல் வெளியே அழகுப‌டுத்துவ‌தில் எந்த‌ அர்த்த‌மும் இல்லை” என்றார். அக‌த்தூய்மை இல்லாத‌வ‌ர்களை , “வெள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல்ல‌றைக‌ள்” என்ற‌ழைத்தார்.

கொலை செய்வ‌து பாவ‌ம் என்று ச‌ட்ட‌ங்க‌ள் போதித்த‌ கால‌த்தில், கோப‌ம் கொள்வ‌து பாவ‌ம் என்றார். கொலை எனும் செய‌லைத் த‌டுப்ப‌து கிளைக‌ளை வெட்டுவது போல‌, கோப‌த்தை அழிப்ப‌து அத‌ன் வேர்களை அழிப்ப‌து போல‌. அவ‌ர் வேர்க‌ளை விசாரித்தார். விப‌ச்சார‌ம் பாவ‌ம் என்று ச‌ட்ட‌ங்க‌ள் சொன்ன‌ போது, “க‌ண்க‌ளினால் ஒரு பெண்ணை இச்சையுட‌ன் பார்ப்பது பாவம்” என்றார் இயேசு.

ஒட்டு மொத்த‌ ச‌ட்ட‌ங்க‌ளையும் இர‌ண்டு க‌ட்ட‌ளைக‌ளில் அட‌க்கினார்.

‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னார்.

இயேசு த‌ன‌து முத‌ல் முப்ப‌து ஆண்டுக‌ளில் பெற்றோருக்குக் கீழ்ப்ப‌டிந்து ந‌ட‌ப்ப‌வ‌ராக‌ இருந்தார். அத‌ன் பின் மூன்ற‌ரை ஆண்டுக‌ள் அவ‌ருடைய‌ ப‌ணி விண்ணக வாழ்வையும், பாவத்தை விட்டு  மனம் திரும்புவதையும் போதிப்பதாய் இருந்த‌து.

ஏழைக‌ளையும், பாவிக‌ளையும் நேசித்த‌ அவ‌ர், ம‌த‌த்தின் பெய‌ரால் ஏழைக‌ளை ஏய்ப்ப‌வ‌ர்க‌ளை சாடினார். விப‌ச்சார‌த்தில் பிடிப‌ட்ட‌ பெண்ணை ம‌ன்னித்த‌ இயேசு, த‌லைமைக் குருக்க‌ளையோ க‌டிந்து பேசினார். சுருக்க‌மாக‌ச் சொல்ல‌வேண்டுமெனில் ப‌ல‌வீன‌ர்க‌ளின் ப‌க்க‌ம் நின்றார் இயேசு.

இயேசுவின் போத‌னைக‌ள் ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ளுக்கு பெரும் த‌லைவ‌லியாகிப் போன‌து. அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ருமான‌ம் குறைந்த‌து. அவ‌ர்க‌ள் மீது ம‌க்க‌ளுக்கு இருந்த‌ ப‌ய‌ம் வில‌கிய‌து. இயேசுவின் பின்னால் ம‌க்க‌ள் கூட்ட‌ம் பெருக‌ ஆர‌ம்பித்த‌து. அவ‌ருடைய‌ நிழ‌ல் ப‌ட்டாலே நோய்க‌ள் நீங்கின‌. அவ‌ருடைய‌ குர‌ல் கேட்டால் பேய்க‌ள் ப‌த‌றி ஓடின‌. அவ‌ருடைய வார்த்தைக‌ள் எளிமையின் உச்ச‌மாக‌வும், கூர்மையின் உச்ச‌மாக‌வும் இருந்த‌ன‌.

என‌வே ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ள் இயேசுவை அழிக்க முடிவு செய்தனர். அதற்காக பொய் சாட்சிகளை தயாரித்தனர். ந‌ள்ளிர‌வில் கைது செய்து விடியும் முன் அவ‌ரை குற்ற‌வாளியாக்கி, என்ன‌ ந‌ட‌க்கிற‌து என‌ ம‌க்க‌ள் குழ‌ம்பி தீர்வ‌த‌ற்குள் அவ‌ரை சிலுவையில் அறைந்த‌ன‌ர்.

இயேசுவின் வ‌ருகையின் நோக்க‌ம் அது தான். புனித‌மான‌ வாழ்க்கை வாழ்வ‌து எப்ப‌டி என‌ வாழ்ந்து காட்டுவ‌து. பாவ‌மான‌ வாழ்க்கை வாழ்ந்த‌ ம‌க்களுடைய பாவ‌த்தை ஏற்று ம‌ரிப்ப‌து.

 ப‌ழைய‌ ஏற்பாட்டில் ஆடுக‌ளைப் ப‌லி செலுத்தி பாவ‌ங்க‌ளை தீர்ப்பார்க‌ள். ஒட்டு மொத்த‌ ம‌னுக்குல‌ப் பாவ‌த்தைத் தீர்க்க‌ ஒரே வ‌ழி க‌ட‌வுளே அதை ஏற்ப‌து தான். அதைத் தான் இயேசு செய்தார்.

பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவிடம் மன்னிப்பு வேண்டும் போது அவருடைய மீட்பில் எத்தகைய கொடிய பாவியாக இருந்தாலும் இணையலாம்.

நாம் செய்யவேண்டிய இரண்டு காரியங்கள்.

  1. இயேசுவின் வாழ்க்கையை, போதனையை முழுமையாய் அறிவது.
  2. “இந்த சூழலில் இயேசு இப்படித் தான் செய்வாரா ?” என கேள்வி எழுப்பி அதன் படி நமது செயல்களை செய்வது.