- அந்திரேயா
அந்திரேயா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முதலில் இயேசுவோடு இணைந்தவர். முதலில் இவர் திருமுழுக்கு யோவானின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டு அவர் தான் மெசியா என்னும் எண்ணத்தில் அவருடைய சீடரானவர். பின் திருமுழுக்கு யோவானே இயேசுவைச் சுட்டிக் காட்டி ” இயேசுவே உண்மையான கடவுள்” என்று சொன்னதால் இயேசுவோடு இணைந்தவர்.
அந்திரேயா கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தவர். தன் சகோதரரோடு சேர்ந்து மீன்பிடி தொழிலைச் செய்து வந்தவர். அந்திரேயாவின் சகோதரர் தான் இயேசுவின் முக்கியமான சீடரான பேதுரு. பேதுரை இவரே இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்தலை அவர் வீட்டிலிருந்து துவங்கியிருக்கிறார்.
இயேசுவோடு இணைந்து பயணித்தாலும், இவரைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தில் அதிகம் குறிப்பிடப்படவில்லை. உலகத்தின் முடிவு நாளுக்குரிய அடையாளங்களை இயேசு விளக்கிய நான்கு சீடர்களில் இவரும் ஒருவர். இயேசு “ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து அளிப்பதற்குக் காரணமான சிறுவனை அழைத்து வந்தவர்” இவர், என்பன போன்ற சில குறிப்புகளே உள்ளன.
இயேசு இறந்து, உயிர்த்தபின் பரிசுத்த ஆவியை சீடர்களுக்கு வழங்கினார். அதுவரை அச்சத்துடன் இருந்த சீடர்கள், அதன் பின் நற்செய்தி அறிவித்தலைத் துணிச்சலுடன் துவங்கினார்கள். அவர்களில் அந்திரேயாவும் ஒருவர்.
அந்திரேயா பணிசெய்யச் சென்ற இடம் இன்றைய ரஷ்யா !
ஜார்ஜியாவிலுள்ள காக்கசீய மலையடிவாரத்தில் அந்திரேயாவின் பணி ஆரம்பமானது. சில காலம் பணியாற்றியபின் அங்கிருந்து பைசாண்டியம் (இஸ்தான்புல்) சென்றார். அங்கே அவருக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருந்தன. மக்கள் யாரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
‘மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்’ என்று அந்திரேயா முழங்கினார். அரசாங்கம் அவரை சிறையில் அடைத்தது, மிரட்டியது பின்னர் விடுவித்தது.
வெளிவந்த அவர், ‘இயேசு நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர் ‘ என்று முழங்கினார். அவரை மக்கள் கல்லால் எறிந்தார்கள்.
அவர் கிரீஸ் நாட்டிற்குப் பயணம் செய்து பட்ரேஸ் என்னும் நகரை வந்தடைந்தார். பலரைக் குணமாக்கினார். யாரைக் குணமாக்கினாலும், “இயேசு உனக்குச் சுகமளித்தார்” என்று சொன்னார். எனவே இயேசுவின் பெயர் அங்கே பரவத் துவங்கியது.
அங்கிருந்த ரோம ஆளுநர் ஏஜியேட்ஸ்ன் மனைவி மேக்ஸ்மில்லாவை சுகப்படுத்த, அவர் கிறிஸ்துவை நம்பினார். ஏஜியேட்ஸ் கோபமடைந்தார்.
ஆனால் அவருடைய சகோதரர் ஸ்ராட்டோக்லிஸ் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். ஏஜியேட்டஸ் கடும் கோபமடைந்தார். அந்திரேயாவை அழைத்து கடுமையாய் எச்சரித்தான். ஆனால் அந்திரேயா இயேசுவைப் பற்றிய போதனையிலிருந்து பின் வாங்கவில்லை.
இதனால் எதிர்ப்பாளர்கள் அவரை அடித்து, பற்களை உடைத்து, விரல்களை வெட்டி மலைச்சரிவில் எறிந்தார்கள். அங்கே இயேசு அவருக்குத் தரிசனமாகி ஆச்சரியமான சுகம் கொடுத்தார்.
மறுநாள் மக்கள் முன்னிலையில் சாதாரணமாய் வந்து நின்ற அந்திரேயாவைக் கண்டவர்கள் மிரண்டனர். அந்திரேயா அந்த சந்தர்ப்பத்தை இயேசுவைப் போதிக்கக் கிடைத்த வாய்ப்பாக்கிக் கொண்டார். ஒருமுறை இறந்த ஒருவருக்கு உயிர்கொடுக்க அவருடைய பெயர் காட்டுத் தீயாய்ப் பரவியது.
ஏஜியேட்ஸ் அந்திரேயாவுக்கு சிலுவை மரணம் தீர்ப்பளித்தார். எக்ஸ் வடிவ சிலுவையில் தலைகீழாய் அறையப்பட வேண்டும் என்பது தீர்ப்பு. அப்போது தான் அதிக வலி, அதிக நேரம் வலி என்பது அவனுடைய கணக்கு.
அந்திரேயா சிலுவையில் அறையப்பட்டார். சுமார் இருபத்தையாயிரம் மக்கள் சிலுவையைச் சூழ்ந்து கொண்டார்கள். சிலுவையில் இயேசு அந்திரேயாவுக்கு காட்சியளித்தார். சிலுவையில் தொங்கிய அந்திரேயா விடாமல் மக்களுக்குப் போதித்துக் கொண்டே இருந்தார்.
மன்னன் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி விட நினைத்தான். அந்திரேயா ஒத்துக் கொள்ளவில்லை. “இயேசுவைப் பார்த்துவிட்டேன் இனிமேல் புவி வாழ்க்கை தேவையில்லை” என்று பிடிவாதம் பிடித்தார்.
திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி வெள்ளம் பாய்ந்து வந்து அந்திரேயாவை நனைத்தது. அரை மணி நேரம் அந்த ஒளி அந்திரேயா மீது பாய்ந்து கொண்டே இருந்தது. அந்த ஒளி விலகியபோது அந்திரேயா இறந்து போயிருந்தார்.
அந்திரேயா இறந்தபோது காலம் கிபி 69, நவம்பர் முப்பதாம் நாள்.
ஏஜியேட்டசின் மனைவி மேக்ஸ்மில்லாவும், அவரது சகோதரன் ஸ்ராட்டோகிலிஸ் ம் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி அடக்கம் செய்தார்கள்.
மக்களின் மனமாற்றம் மன்னன் ஏஜியேட்டசை வருத்தியது. தவறு செய்துவிட்டோம் என்ற குற்றஉணர்வினால், தற்கொலை செய்து கொண்டான்.
கி.பி 357 ம் ஆண்டு கான்ஸ்டண்டன் மன்னன் அந்திரேயாவில் உடல் எலும்புகளை மட்டும் எடுத்து பைசாண்டியத்திலுள்ள தூய அப்போஸ்தலர் தேவாலயத்தில் வைத்தார். அவருடைய உடல் எலும்புகளின் ஒருபாகம் ஸ்காட்லாந்து தேசத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அவர் ஸ்காட்லாந்து தேசத்தின் புனித தந்தையாகப் போற்றப்படுகிறார். ஸ்காட்லாந்தும், இங்கிலாந்தும் இணைந்தபின், இங்கிலாந்து தேசக் கொடி அவருடைய X வடிவ சிலையை தன்னுடைய தேசியக் கொடியில் பொறித்து பெருமைப்படுத்தியது !