ஒளியின் விடிவு, இருளின் முடிவு : Christmas Special

ஒளி தோன்றுக (ஆதி 1 :3 ) என்பது தான் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளின் முதல் பேச்சு. ஆழத்தின் மீது பரவியிருந்த இருளை கடவுள் ஒளியின் துணையினால் விரட்டுகிறார். வெறுமையாய் கிடத்த பூமி இப்போது வெளிச்சத்தின் விழுதுகளைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடுகிறது.

வரலாற்றில் இருள் என்பது தோல்வியின் அடையாளம். “வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்” என்றால், அந்த காலகட்டம் தோல்வியின் காலம் என்று பொருள். அந்தக் காலத்தில் வாழ்க்கை இனிமையாக இல்லை என்று பொருள். அந்தக் காலகட்டத்தில் பஞ்சமோ, பட்டினியோ தலைவிரித்து ஆடியிருக்கலாம் என்று பொருள்.

உலகத்தின் துவக்கம் முதல் இன்று வரை இருளுக்கும், வெளிச்சத்துக்கும் தொடர் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.  சதுரங்க விளையாட்டின் இரு காய்கள் போல அவை எதிரும் புதிருமாய் மாறி மாறி வெட்டிக்கொண்டிருக்கின்றன.

நோய்களின் காலத்தை இருளின் காலம் என்கிறோம். வலிகளின் காலத்தை இருட்டின் காலம் என்கிறோம். சோதனைகளின் காலத்தை இருளின் காலம் என்கிறோம். சிலருடைய வாழ்க்கை முழுவதுமே இத்தகைய இருள் சூழ்ந்து நிற்பதாகச் சொல்வார்கள்.

தொட்டதெல்லாம் தோல்வி, எங்கும் வெற்றியில்லை. பட்ட காலிலே படும் என்பது போல, இருளைத் தாண்டினால் காரிருள் எனும் நிலமை பலருடைய வாழ்க்கையை ஆட்டிப் படைக்கிறது. அவர்கள் இருளோடு போராடிக்கொண்டே இருக்கிறார். இருளை விரட்ட பல்வேறு வழிகளை நாடுகிறார்கள்.

இருளை விலக்க ஒரே ஒரு வழி தான் உண்டு. ஒரு வெளிச்சத்தை ஏற்றுதல் ! ஒரு வெளிச்சப்புள்ளி இருளை விலக்கி வைக்கும் வலிமை கொண்டது. இருளை இறுக்கி அடைத்திருக்கும் ஒரு அறையில் ஒரு மின்விளக்கு எரியும் போது அந்த இருளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போய்விடுகிறது.

“காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது (எசாயா 9 : 2 )” எனும் இறைவாக்கு ஒளியின் நாயகனாம் இறைமகன் இயேசுவின் வெளிச்ச வரவை வார்த்தைகளால் குறிப்பிடுகிறது.

இயேசு எனும் ஒளி இருளை விலக்குவதற்காக வந்த ஒளி. பாவம் எனும் இருளையும், அதன் ஆட்சியையும் இயேசுவின் வருகை வெளிச்சம்போட்டுக் காட்டியது. அந்த இருளை சிலுவையில் வெற்றி கொண்டது இயேசு எனும் ஒளி.

இயேசுவின் வருகை இரண்டு நோக்கங்கள் கொண்டது. அந்த இரண்டையும் சரியாகப் புரிவதில் தான் கிறிஸ்மஸ் அர்த்தப்படும்.

ஒன்று, இயேசு ஒளியாக வந்து நமது பாவங்களுக்காக மரித்தார். அதன் மூலம் இருளில் இருக்கும் நமக்கு மீட்பின் ஒளியைக் காட்டினார்.

இரண்டாவது, இருளின் பாதையில் நடக்கும் நமக்காக பூமியில் வந்து முன்னுதாரணம் ஆனார். ஒளியின் வாழ்க்கையை எப்படி ஒரு மனிதன் வாழமுடியும் என்பதை தனது வாழ்க்கையினால் வாழ்ந்து காட்டினார். இந்த இரண்டும் ஒன்றாய் பின்னிப் பிணைகையில் கிறிஸ்துவின் வரவின் முழுமை நமக்குப் புரிகிறது.

ஒன்றை விட்டு விட்டு இன்னொன்றை மட்டும் பற்றிக் கொள்ளும் போது , ஒருபக்கம் மட்டும் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டைப் போல முழுமையடையாமல், முழு மதிப்பைப் பெற்றுக் கொள்ளாமல் போய்விடுகிறோம்.

ஒளிக்கு ஒரு வலிமை உண்டு. அது எத்தனை மென்மையாய் இருந்தாலும், கும்மிருட்டையும் விரட்டி விடும். இருளுக்கு ஒரு பலவீனம் உண்டு அது எவ்வளவு தான் அடத்தியாய் இருந்தாலும் ஒரு ஒளியை அணைத்து விடும் வலிமை இருளுக்கு எக்காலத்திலும் இருப்பதே இல்லை. இருள், தோல்வியின் அடையாளம். ஒளி, தோல்வியை மேற்கொள்வதன் அடையாளம்.

“அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது;

இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” (யோவான் 1 :5 ) எனும் வார்த்தைகள் நமக்கு தெம்பூட்டுகின்றன. இருளை விலக்கத் தேவை நமக்கு ஒரு ஒளி மட்டுமே எனும் உண்மையே நமக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தரவல்லது.

மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகிறோம். துணிகர பாவங்களைச் செய்கிறோம். கோபத்தை , இச்சைகளை , எரிச்சலை , பொறமையை விட்டு  வெளியே வர முடியவில்லை. நோய், வறுமை எனும் உலகக் கவலைகளும் வாட்டுகின்றன. இருளிலேயே இருக்கிறோம்? என்ன வழி ? ஒவ்வொரு இருளுக்கும் ஒவ்வொரு ஒளியா ?

கோபத்துக்கு யோகா, இச்சைகளுக்கு மன கட்டுப்பாடு, எரிச்சல் பொறாமைக்கு பாசிடிவ் திங்கிங், பேய்களுக்கு பள்ளிவாசல் என வெளிச்சம் பல இடங்களில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் ஏராளம் உண்டு.

“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவான் 8 :12 ) என்கிறார் இயேசு. ஒளி என்பது ஒன்றே ஒன்று தான். அது இறைமகன் இயேசு என்பதை இயேசு தனது வாயால் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறார்.

“என்னோட கஷ்டம் என்னன்னு எனக்கு தான் தெரியும்” என நாம் சொல்வதுண்டு. அதற்குப் பதிலளிக்கும் வகையில் தான் இயேசுவின் வருகை இருந்தது. “அந்த கஷ்டமான வாழ்க்கையை நானும் வாழ்கிறேன். ஆயினும் பாவத்தை மேற்கொள்ளும் வாழ்க்கையை வாழ்கிறேன்” என்று வாழ்ந்து காட்டினார்.

“சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார்” ( எபிரேயர் 2 ; 14 ). இயேசுவின் வருகை மரணத்துக்கான முயற்சி மட்டுமல்ல, வாழ்வுக்கான பயிற்சியும் கூட. அவருடைய வாழ்க்கை நமக்கு அகராதியாய் மாறிவிட்டது. கடவுள் மனிதர் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டவே அவர் மனித உரு எடுத்தார் எனலாம்.

அலகையை அதாவது சாத்தானை இயேசு சிலுவையில் அழித்துவிட்டது தான், இயேசு எனும் ஒளியோடு இருக்கும் போது நம்மை விட்டு சாத்தான் விலகி ஓடக் காரணம்.

“கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்” (யாக்கோபு 14 :7 ) எனும் இறைவார்த்தை அதையே வெளிப்படுத்துகிறது.

கிறிஸ்மஸ் விழா ஒளியின் விழா. கிறிஸ்மஸ் விழாவை அதன் அர்த்தத்தோடு கொண்டாடுவோம்.

நமது வாழ்க்கையில் என்னென்ன இருள் இருக்கிறது என்பதை கண்டுகொள்வோம். அந்த இருளின் அறைகளில் ஒளியேற்ற இறைமகன் இயேசுவை இதயத்திற்குள் அழைப்போம். “கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்” (ஆதி 1 : 4 ) காரணம் இருளும் ஒளியும் ஒரே இடத்தில் வசிக்க முடியாது. பாவமும் பரிசுத்தமும் ஒரே இதயத்தில் வசிக்க முடியாது. இருள் நம் வாழ்வில் இருக்கிறது என்பதை அறிவதும், அந்த இருளை அகற்ற விரும்புவதும் முதல் தேவை.

ஒளியான வாழ்க்கை என்பது, “இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வதாகும்”. ” நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது” எனும் (2 கொரி 6 :14 ) வசனம் ஒளியான வாழ்க்கை என்பது நீதியான வாழ்க்கை என விளக்குகிறது. வாழ்க்கையில் நீதியை செயல்படுத்த முடிவெடுப்பது இரண்டாவது தேவை.

“ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது ( எபே 5 : 8,9 )” எனும் வசனத்தின்படி வாழ்வது மூன்றாவது தேவை.

இந்த கிறிஸ்மஸ் காலம் நமது வாழ்க்கையிலிருக்கும் இருளை அகற்றும் காலமாய் மாறட்டும். அப்போது தான் நமது ஒளி மனிதர் மேல் ஒளிரும். இறைவனை இதயத்தில் ஏற்றி, செயல்களை செப்பனிடுவோம். கரப்பான்பூச்சியானது லைட்டைப் போட்டதும் ஓடி ஒளிகிறது. வெளிச்சம் அதற்கு எரிச்சல். அப்படியே தீயவர்களும் இருக்கிறார்கள். விட்டில் பூச்சியானது வெளிச்சத்தைக் கண்டதும் எங்கிருந்தோ ஓடி வந்து அதனோடு உறவாடுகிறது. வெளிச்சம் அதன் பிரியம்.

” ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். (யோவான் 3 : 19 ). நமது வாழ்க்கை, வெளிச்சத்தைத் தேடும் விட்டில் பூச்சிகளின் வாழ்க்கையாய் இருக்கட்டும். இருட்டுக்குள் பதுங்கும் கரப்பான் பூச்சிகளாய் இருக்கவேண்டாம்.

ஒளி மீட்பின் அடையாளம்.

ஒளி தீர்ப்பின் அடையாளம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்.

*

Leave a comment