பைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு

யாக்கோபு

Image result for Jacob the apostle

இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு சீட‌ர்க‌ளில் ஒருவ‌ர் யாக்கோபு. இவ‌ர் இயேசுவின் ச‌கோத‌ர‌ர்க‌ளில் ஒருவ‌ர் என‌ அறிய‌ப்ப‌டுகிறார்.

இயேசுவுக்கு யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்று நான்கு சகோதரர்கள் இருந்தார்கள். கூடவே சகோதரிகளும் இருந்தார்கள். இவர்கள் இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் என்று ஒருசாராரும், உடன்பிறந்தவர்கள் அல்ல உறவினர்கள் தான் என்று இன்னொரு சாராரும் நம்புகிறார்கள். அக்கால வழக்கப்படி பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளும் கூட சகோதரன் என்றே அழைக்கப்படுவதுண்டு

இயேசுவின் தாய் மரியாள் தூய ஆவியினால் கருத்தரித்து இயேசுவைப் பெற்றெடுத்தார். அதன்பின் அவருக்கும் யோசேப்புக்கும் வேறு குழந்தைகள் இருப்பது மரியாவின் தூய்மை நிலையைப் பாதிக்கும் என்பது ஒரு சாராருடைய சிந்தனை. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானும் மரியம்(மரியாள்) கன்னியாகவே வாழ்ந்தார் என்கிற‌து.

இயேசுவின் அன்னையை வணக்கத்துக்குரியவராகவும், இயேசுவிடம் பரிந்து பேசுபவராகவும் பார்க்கும் பிரிவினர், மரியாள் கன்னியாகவே வாழ்ந்து, இறந்து விண்ணகம் சென்றார் என நம்புகின்றனர். மற்ற பிரிவினர், இயேசுவுக்கு சகோதரர்கள் இருந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

முதலில் இயேசுவின் பணிகளிலும் அவருடைய போதனைகளிலும் அதிகமாக ஆர்வம் காட்டாத யாக்கோபு, இயேசுவின் மரணம் உயிர்ப்புக்குப் பின் இயேசுவின் தீவிர சீடராகிறார். இயேசுவின் அப்போஸ்தலர்கள் எல்லோருமே இயேசுவின் மரணத்தின் போது பயந்து நடுங்குகின்றனர். தங்கள் உயிருக்கு ஆபத்து என அறைகளில் ஒளிந்து கொள்கின்றனர். இயேசு விண்ணகம் சென்று தூய ஆவியை அனுப்பியபின் அவர்கள் துணிச்சலடைகின்றனர்.

யாக்கோபுவும் தூய ஆவியின் நிரப்புதலுக்குப் பின்பு துணிச்சலடைகிறார். அவருடைய பணி சிங்கத்தின் குகையிலேயே நடந்தது. அதாவது இயேசுவைக் கொலை செய்த‌ எருசலேமில் !

எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைவராக இவர் பொறுப்பேற்று மக்களைத் துணிவுடன் நடத்தினார். இவருடைய கண் முன்னே பல சீடர்களை யூதத் தலைவர்கள் கொலை செய்து கொண்டே இருந்தனர். ஆனாலும், கடைசி வரை துணிச்சலோடு நற்செய்தி அறிவித்தார் யாக்கோபு. இவர் எருசலேமில் துணிச்சலுடன் பணியாற்றியதால், மற்ற அப்போஸ்தலர்கள் நம்பிக்கையுடன் வேறு வேறு இடங்களுக்குச் சென்று பணியாற்றத் துவங்கினார்கள்.

யாக்கோபின் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. யூதத் தலைவர்களுக்கும் தலைமைச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும் இது பெருத்த அவமானமாக இருந்தது. தங்களால் இயேசு கொல்லப்பட்ட பின் சபை இப்படி விஸ்வரூப வளர்ச்சி அடையும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. இயேசுவைக் கொன்றவுடன் எல்லாம் முடிந்து விடும் என்றே அவர்கள் நம்பினார்கள். ஆனால் கண்ணிவெடியில் கால்வைத்த மனநிலையில் இப்போது இருந்தார்கள்.

எத்தனையோ இறைவாக்கினர்களைக் காலம் காலமாய்க் கொன்று குவித்த பரம்பரை, இப்போது இயேசுவைக் கொன்றதால் சிக்கலில் சிக்கி விட்டது.

யாக்கோபுவை எப்படியாவது கொல்லவேண்டும் என்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் உறுதியான முடிவை எடுத்துவிட்டார்கள். ஆனால் எப்படிக் கொல்வது ? எப்போது கொல்வது ? சரியான சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தார்கள் மதகுருக்கள்.

வாய்ப்பு அப்போதைய ஆளுநர் பெஸ்டஸ்ன் மரணத்தின் மூலமாக வந்தது. ரோம ஆளுநனாக இருந்த பெஸ்டஸ் மரணமடைந்தான். அடுத்த ஆளுநர் பதவியேற்கவிருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆளுநராக யாரும் இல்லாத சூழல். இந்த சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டனர் எருசலேம் தேவாலய தலைமைச் சங்கத்தினர்.

அவர்கள் யாக்கோபுவைக் கைது செய்தார்கள்.

யாக்கோபு போலித் தீர்க்கத் தரிசனம் சொல்கிறார். மதத்தை இழிவுபடுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்கள். இயேசுவுக்கு தீர்ப்பளித்ததைப் போன்ற ஒரு காட்சி அங்கே அரங்கேறியது. ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பொய் சாட்சிகள் கூலிக்குக் கூவினார்கள்.

யாக்கோபுக்கு மரண தண்டனை தீர்ப்பிடப்பட்டது !

எருசலேம் தேவாலயத்தின் உப்பரிகைக்கு இழுத்துச் செல்லப்பட்டார் யாக்கோபு.

கீழே ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். யாக்கோபின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்து நின்று கண்ணீர் விட்டார்கள்.

‘இயேசுவை நீயும் மறுதலித்து, இதோ கூடியிருக்கும் மக்களையும் மறுதலிக்கச் சொல். அப்போது நான் உன்னை விடுவிப்பேன்’ தலைமை குரு நிபந்தனை விதித்தான். யாக்கோபு பார்த்தார். கீழே ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும், யூதர்களும். அவர் அந்த இடத்தையும் தன்னுடைய போதனைக்காகப் பயன்படுத்தினார். கூடியிருந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றி அறிவிக்கலானார்.

கோபம் கொண்ட தலைமைச் சங்க உறுப்பினர்கள். அவரை உப்பரிகையிலிருந்து கீழே தள்ளினார்கள்.

கீழே விழுந்த யாக்கோபு மீது யூதர்கள் கற்களை எறிந்தார்கள். ‘தந்தையே இவர்களை மன்னியும்’ என்று கூறி இயேசு கற்றுக் கொடுத்த மன்னிப்பை வாழ்க்கையின் வலிமிகுந்த தருணத்திலும் வழங்கினார் யாக்கோபு.

அதைக் கண்ட யூதன் ஒருவன் வெறி கொண்டு துணி துவைக்கப் பயன்படுத்தும் ஒரு பெரிய உருளைக் கட்டையால் யாக்கோபின் உச்சியில் அடித்தான். யாக்கோபு மண்டை உடைய, உயிரை விட்டார்.

இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியாக‌வும், தூய ஆவியான‌வ‌ரின் நிர‌ப்புத‌லுக்குச் சாட்சியாக‌வும் யாக்கோபு வாழ்ந்து ம‌றைந்தார்.

 

Leave a comment