பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா

89 தோமா

Image result for Thomas the apostle

இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவர் தான் தோமா.

இயேசுவின் ந‌ண்ப‌ர் லாச‌ர் ம‌ர‌ண‌ம‌டைந்து விட்டார். இயேசுவும் சீடர்களும் வேறோரு இடத்தில் இருந்தார்கள். அங்கிருந்து பெத்தானியாவுக்குச் செல்ல‌ வேண்டும். பெத்தானியா யூதேயாவில் இருந்த‌து. அங்கே இரண்டு முறை இயேசுவைக் க‌ல்லால் எறிந்து கொல்ல‌ முய‌ன்றார்க‌ள். எனவே சீடர்கள் அங்கே செல்ல‌ அஞ்சினார்கள்.

தோமா மட்டும் அஞ்சவில்லை.” நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என இயேசுவோடு பெத்தானியா செல்ல ஆயத்தமானார். இதனால் இயேசு லாசரை உயிர்ப்பித்த மாபெரும் நிகழ்வை சீடர்கள் நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றார்கள்.

தோமாவுக்கு சந்தேகத் தோமா என்றொரு பெயர் உண்டு. அத‌ற்கான‌ கார‌ண‌ம் சுவார‌ஸ்ய‌மான‌து.

இயேசு இறந்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த பிறகு சீடர்களுக்குக் காட்சியளித்தார். அப்போது தோமா அங்கே இல்லை. சீடர்கள் பரவசமாய் அந்த நிகழ்ச்சியை தோமாவிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை. “நான் நம்ப மாட்டேன். அவரோட கையில ஆணி அடித்த துளை இருந்துதா ? அதுல நான் விரலை போட்டுப் பாக்கணும். அவரை ஈட்டியால குத்தின விலாவில என் கையைப் போட்டுப் பாக்கணும். அப்போ தான் நம்புவேன்” என்றார்

இயேசு லாசரை எழுப்பினார். இப்போது இயேசுவே இறந்திருக்கிறார். யார் அவரை எழுப்பமுடியும் என்பதே அவருடைய சந்தேகம்.

இயேசு மீண்டும் ஒருமுறை சீடர்களுக்குத் தோன்றினார். அப்போது தோமாவும் உடனிருந்தார். இயேசு தோமாவிடம் கைகளை நீட்டினார்,

“இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து ந‌ம்பிக்கைகொள்” என்றார்.

உடனே தோமா “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று த‌ன‌து ந‌ம்பிக்கையை வெளிப்ப‌டுத்தினார்.

இயேசு அவ‌ரிட‌ம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். ந‌ம்பிக்கை இழ‌ப்போருக்கு மிக‌வும் ஊக்க‌மூட்ட‌க்கூடிய‌ ஒரு இறைவார்த்தை இது. இந்த‌ நிக‌ழ்வு தான் அவ‌ருக்கு “ச‌ந்தேக‌ தோமா” எனும் பெய‌ரைத் த‌ந்த‌து.

அவநம்பிக்கைக் காரரான‌ தோமா, நம்பிக்கையில் நிறைவானவராக அந்தக் கணம் முதல் மாறினார். அந்த‌ நிக‌ழ்வு தான் அவ‌ரைப் ப‌ணிவாழ்வில் தீவிர‌மாய் ஈடுப‌ட‌ உந்துத‌ல் அளித்த‌து. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டார் என்பது வரலாறாகப் பதிவு செய்யப்படலாம். ஆனால் ‘எனக்காக’ அவர் உயிர்விட்டார் என நம்புவதே ஒரு மனிதனை மீட்புக்குள் வழிநடத்தும். அந்த அனுபவத்தைத் தான் தோமா அந்த நிகழ்வில் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவுக்கு வ‌ந்து இறைப‌ணியாற்றிய‌வ‌ர் எனும் பெருமை தோமாவுக்கு உண்டு. இந்தியாவின் கேரளக் கடற்கரைப் பகுதியான கெரங்கனூர் எனும் இடத்தில் கிபி 52ல் வ‌ந்தார். அங்கு வாழும் ம‌க்க‌ளுக்கு இயேசு கிறிஸ்துவின் ந‌ற்செய்தியை அறிவிப்ப‌தே அவ‌ருடைய‌ நோக்க‌மாக‌ இருந்த‌து.

தென் கேர‌ளாவின் மேற்குக் க‌ரையோர‌ம் ஏழு திருச்ச‌பைக‌ளை தோமா நிறுவி வ‌ழி ந‌ட‌த்தி வ‌ந்தார். மார்த்தோமா எனும் பெய‌ர் இன்றும் கேர‌ளாவில் மிக‌ப் பிர‌சித்த‌ம். மலியங்கர, பாலயூர், பாரூர், கோகமங்ஙலம், நிராணம், சாயல், கொல்லம் ஆகியவையே அந்த ஏழு திருச்சபை நிறுவப்பட்ட இடங்கள். அந்த ஏழு திருச்சபைகளில் நான்கு திருச்சபைகள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் நிலைபெற்றிருக்கின்றன.

மார்கோ போலோ, நிக்கோலோ டி கான்டி உட்பட பல்வேறு பயணிகளின் குறிப்புகளில் தோமாவின் கிறிஸ்தவப் பணி குறிப்பிடப்பட்டுள்ளது. பிர‌ஞ்ச் நாட்டின் கிரிகோரி கி.பி 590ல் இந்தியாவில் தோமாவின் உட‌ல் புதைக்க‌ப்ப‌ட்ட‌ ஆல‌ய‌ம் ப‌ற்றி எழுதியிருக்கிறார்.

இவை த‌விர‌ வ‌ர‌லாற்று அறிஞ‌ர்க‌ள் அம்புரோஸ், ந‌ச‌னிய‌ன்சுஸ் கிரிகோரி, சிரியாவின் இப்ரிம், ஜெரோம் உட்பட‌ ப‌ல‌ர் தோமாவின் இந்திய‌ ந‌ற்செய்தி அறிவித்த‌லைப் ப‌ற்றி எழுதியிருக்கின்ற‌ன‌ர்.

பின்னர்.தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள‌ சின்ன‌ம‌லை எனும் ம‌லையில் குகை ஒன்றில் தங்கி ந‌ற்செய்திப் ப‌ணியாற்றி வ‌ந்தார் தோமா. கி,பி 72ம் ஆண்டு அவ‌ர் அங்கே ஈட்டியால் குத்த‌ப்ப‌ட்டு இர‌த்த‌சாட்சியாய் ம‌ர‌ண‌ம‌டைந்தார். அவ‌ருடைய‌ உட‌லின் மீது க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ஆல‌ய‌ம் தான் சென்னை சாந்தோமில் கம்பீரமாக‌ இருக்கிற‌து.

வாடிக‌ன் ந‌க‌ரில் பேதுருவின் க‌ல்ல‌றை மீது க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ஆல‌ய‌த்தில் போப் ப‌ணியாற்றுகிறார். அதற்கு இணையான முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌தே சாந்தோம் தேவால‌ய‌ம். கார‌ண‌ம் இர‌ண்டுமே இயேசுவோடு ப‌ய‌ணித்த‌ இர‌ண்டு சீட‌ர்க‌ளின் க‌ல்ல‌றைக‌ளின் மேல் க‌ட்டியெழுப்ப‌ப்ப‌ட்டுள்ள‌து.

தோமாவின் வாழ்க்கை ந‌ம‌க்கு ப‌ல‌ ப‌டிப்பினைக‌ளைக் க‌ற்றுத் த‌ருகிற‌து. ச‌ந்தேக‌ம் கொள்வ‌து த‌வ‌ற‌ல்ல‌, ஆனால் அந்த‌ ச‌ந்தேக‌த்தை இயேசுவின் வார்த்தைக‌ளால் தெளிவு பெற்று தொட‌ர்ந்து ந‌ட‌க்க‌ வேண்டும். பின்வாங்காமல் இயேசுவைப் பின்செல்லும் பற்றுறுதி கொள்ள வேண்டும்.

இன்றைக்கு இயேசுவின் வார்த்தைக‌ளாக‌ ந‌ம்மிட‌ம் பைபிள் இருக்கிற‌து. பைபிளில் இயேசு சொல்லும் வார்த்தைக‌ளில் ந‌ம்பிக்கை கொண்டு வாழ்க்கையைத் தூய்மையாக்க‌ தோமாவின் வாழ்க்கை அழைப்பு விடுக்கிற‌து.

 

One comment on “பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா

  1. தோமாவின் கல்லறை மேல் கட்டப்பட்ட முதல் ஆலயம் கபாலீசுவரர் கோயில் என்பதை தாங்கள் அறிவீரா நண்பரே?

    Like

Leave a comment