மன்னிப்பு மகத்துவமானது.

இருட்டு இருட்டைத் துரத்த முடியாது ! வெளிச்சமே இருட்டை விரட்ட முடியும். அதே போல வெறுப்பு வெறுப்பை விரட்ட முடியாது, அன்பினால் மட்டுமே அது முடியும் –

மார்டின் லூதர் கிங். ஜூனியர்.

மன்னிப்பு எனும் ஒற்றை வாக்கியத்துக்கு இருக்கும் வலிமை அலாதியானது. தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலும் மனிதனாகப் பிறந்த அனைவரும் அள்ளி அணைக்க வேண்டிய குணாதிசயம் மன்னிப்பு. இந்த மன்னிப்பு எனும் விஷயம் மட்டும் இருந்து விட்டால் உலகில் நிலவும் பிரச்சினைகளில் பெரும்பாலானவை அனலில் இட்ட பஞ்சைப் போல சட்டெனக் காணாமல் போய்விடும் என்பது சர்வ நிச்சயம் ! எனவே எனக்கு தமிழ்லயே புடிக்காத வார்த்தை “மன்னிப்பு” என்று இனிமேல் யாரும் சொல்லாதீர்கள். அது மனுக்குலத்தின் அடித்தளத்தில் விஷம் ஊற்றும் போதனை.

மன்னிப்பு என்பது என்ன ? ஒருவருக்கு எதிராக இன்னொருவர் செய்யும் தவறை அந்த நபர் மன்னித்து அந்த நபரை முழுமையாய் ஏற்றுக் கொள்வது ! இது இரண்டு நபர்களுக்கு இடையேயும் இருக்கலாம், அல்லது தனக்குத் தானே கூட இருக்கலாம். அதாவது தன்னைத் தானே மன்னிப்பது ! தான் ஏதோ தப்பு செய்துவிட்டோம் எனும் தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருந்தால் நமக்கு நாமே ஒரு மன்னிப்பை வழங்குவது சுய மன்னிப்பு எனலாம்.

மன்னிப்பு என்பது மனதில் இருக்கும் சுமைகளை இறக்கும் முயற்சி. ஒருவகையில் மன்னிக்கும் போது நாம் அடுத்த நபருக்கு மட்டுமல்லாமல் நமக்கு நாமே நல்ல விஷயத்தைச் செய்கிறோம் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். அதாவது ஒரு நபரை மன்னிக்கும் போது அவரைப் பற்றிய எரிச்சல், கோபம், பழிவாங்கும் எண்ணம் போன்றவையெல்லாம் சட்டென மறந்து விடுகின்றன. அதுவரை ஒரு பாறையைப் போல் இருந்த நமது மனசு சட்டென ஒரு இறகைப் போல மாறி பறக்கத் துவங்கிவிடுகிறது.

ஆனால் மன்னிப்பு என்பது மனதின் ஆழத்திலிருந்து எழவேண்டும். வெறுமனே வார்த்தைகளில் மன்னித்து விட்டேன் என்று சொல்லி விட்டு, வெறுப்பை மனதில் சுமப்பது நம்மை நாமே ஏமாற்றுவதற்குச் சமம். “உன்னை மன்னிச்சுட்டேன். இனிமே என் மூஞ்சியிலயே முழிக்காதே” என்று ஒருவர் சொல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அது உண்மையில் மன்னிப்பு அல்ல. ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக அந்தச் சிக்கலில் இருந்து விலகியிருக்கும் மனநிலை.

உண்மையான மன்னிப்பெனில் எப்படி இருக்க வேண்டும் ? “உன்னை மன்னிச்சுட்டேன். இனிமே அந்த விஷயத்தையே மறந்துட்டேன். நாம எப்பவும் போல நட்பா இருப்போம்” என ஓருவர் சொல்கிறார் எனில் அது ஆத்மார்த்தமான நட்பாய் இருக்கும். ஆனால் பலரும் அதற்கு முன்வருவதில்லை. காரணம், மன்னிப்பு என்பது கோழைகளின் வழக்கம் என நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் மன்னிப்பு என்பதைக் கோழைகளால் தரமுடியாது. அதற்கு மிக மிக வலுவான மனம் இருக்க வேண்டும் ! யாரேனும் மன்னிப்பை தயக்கமில்லாமல் வழங்கிறார்களெனில் அவர்கள் தைரியசாலிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மன்னிப்பு வழங்குவது அன்பின் வெளிப்பாடாய் இருக்க வேண்டுமே தவிர, போனாப் போகுது என்றோ, நான் பெரியவன் தியாக மனப்பான்மை உடையவன் போன்ற கர்வ சிந்தனைகளிலோ வரக் கூடாது., அப்படி வரும் மன்னிப்பு உண்மையான மன்னிப்பு அல்ல. உண்மையான மன்னிப்பின் இலக்கணம் அடுத்த நபர் கேட்பதற்கு முன்பாகவே அந்த நபரை உள்ளத்தில் உண்மையாகவே மன்னித்து விடுவது தான்.

மன்னிக்க மறுக்காதது போலவே மன்னிப்புக் கேட்கவும் தயங்காத உறுதியான மனம் இருத்தல் அவசியம். மன்னிப்புக் கேட்பதைப் போல கடினமான விஷயம் இல்லை. காரணம் உங்களுடைய பலவீனத்தையோ, உங்களுடைய குறையையோ , உங்களுடைய தவறையோ நீங்கள் அந்த இடத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறீர்கள். உங்களுடைய பிம்பம் உடைந்து விடும் வாய்ப்பு அதில் உண்டு. ஆனால் எதைக் குறித்தும் கவலையில்லாமல் நீங்கள் தைரியமாக மன்னிப்புக் கேட்கிறீர்களெனில், நீங்கள் எல்லாவற்றையும் விட அதிகமாய் அன்பைப் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே பொருள் !
மன்னிக்கத் தயங்காத மனிதர்கள் தான் ஆனந்தமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. காரணம் அது மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்கிறது, தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்க்கிறது, உறவுகளைக் கட்டி எழுப்புகிறது.

அமெரிக்காவின் ஆர்கென்ஸாஸ் எனுமிடத்தில் சூ நார்டென் எனும் பெண்மணி வசித்து வந்தார். ஒரு நாள் அவளுக்கு ஒரு போன்கால். உயிரை உலுக்கும் போன்கால். “அப்பாவையும், அம்மாவையும் ஒருவன் சுட்டுக் கொன்றுவிட்டான்”. அவள் அதிர்ந்து போனாள். வீட்டுக்கு ஓடினாள். கதறினாள். நாட்கள் கடந்தன. கொலைகாரன் பிடிபட்டான். கொலைகாரன் மீது சூவுக்கு கடுமையான கோபம். மனதை ஒருமுகப்படுத்தி செபத்தில் நிலைத்திருந்தாள்.

ஒரு நாள் சிறையில் சென்று கொலைகாரனைப் பார்க்க வேண்டும் எனும் விருப்பத்தைச் சொன்னாள். அனுமதி கிடைத்தது. கொலைகாரன் இருக்கும் சிறைக்குச் சென்றாள். கொலைகாரன் கம்பிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். ஆஜானுபாகுவான கரடு முரடு உருவம். சூ அவனை நோக்கினாள். சில வினாடிகள் மௌனமாய் இருந்தாள். பிறகு சொன்னாள்.

“நான் உன்னை மன்னித்துவிட்டேன். என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் மன்னிப்பையே எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். என்னால் உன்னை வெறுக்க முடியாது” என்று சொல்லி முடிக்கையில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.

கொலைகாரன் திடுக்கிட்டான். நம்ப முடியாமல் பார்த்தான். அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவேளை மனநிலை இவளுக்குச் சரியில்லையோ என சந்தேகித்தார்கள். சூ அமைதியாய் அந்த இடம் விட்டு நகர்ந்தாள். அவளுடைய மனதில் சொல்ல முடியாத நிம்மதி நிரம்பி வழிந்தது.

மன்னிப்பு வாழ்க்கையை உருவாக்குகிறது ! மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது. வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம்.

Leave a comment