பைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்

கானானியனாகிய சீமோன்

Image result for canaanite simon apostle

 இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர் கானானிய‌னாகிய‌ சீமோன். இவ‌ரை தீவிர‌வாதியாகிய‌ சீமோன் என்றும், செலோத்தே என‌ப்ப‌டும் சீமோன் என்றும் பைபிள் குறிப்பிடுகிற‌து. இவ‌ருடைய‌ சொந்த‌ ஊர் கானாவூர். எனவே தான் கானானியனாகிய சீமோன் என அழைக்கப்பட்டார். கானாவூரில் தான் இயேசு த‌ன‌து முத‌லாவ‌து அற்புத‌த்தைச் செய்தார்.

ஒரு திரும‌ண‌ வீட்டில் திராட்சை இர‌ச‌ம் தீர்ந்து விட்ட‌து. இயேசு ஆறு க‌ற்சாடிக‌ளில் நிர‌ப்ப‌ப்ப‌ட்ட‌ த‌ண்ணீரை திராட்சை ர‌ச‌மாய் மாற்றி அற்புதம் செய்திருந்தார்.

இயேசுவின் சீடர்களில் இரண்டு பேருக்கு சீமோன் எனும் பெயர் உண்டு. ஒருவர் சீமோன் பேதுரு. இயேசுவின் நெருங்கிய சீடர்களில் ஒருவர். அவரைப்பற்றி நிறைய செய்திகள் விவிலியத்தில் உண்டு. கானானியனாகிய சீமோனின் பெயரோ விவிலியத்தில் அதிகம் இல்லை. ஆனாலும் பணிவாழ்வைப் பொறுத்தவரை இவர் பிரமிக்க வைத்தார்.

இயேசு இறத்து, உயிர்த்து தூய ஆவியை சீடர்களுக்கு அனுப்பியபின் அவர்கள் துணிச்சலின் சிகரம் தொட்டார்கள். இயேசுவைப் ப‌ற்றி அறிவிக்க சீமோன் வ‌ட‌ ஆப்பிரிக்கப் பகுதிகளுக்குச் சென்றார். எகிப்து, சைரீன், மாரிடானியா, லிபியா போன்ற இடங்களில் அவர் தன்னுடைய நற்செய்தி அறிவித்தலை நடத்தினார்.

செலோத்துகள் என்னும் தீவிரவாதிகளின் குழுவில் இவர் இருந்ததாக மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. மிகுந்த நெஞ்சுரமும், துடிப்பும் மிக்கவர்கள் இந்த செலோத்துகள். அந்த தீவிரம் அவருடைய நற்செய்தி அறிவித்தலிலும் வெளிப்பட்டது.

கார்த்தேஜ் என்னும் நகரம் வட ஆப்பிரிக்காவில் இருந்தது. அங்கே தன்னுடைய பணியை தீவிரப்படுத்தினார் சீமோன். நகரில் கிறிஸ்தவ மதம் காட்டுத் தீ போல பரவியது. சீமோன் மகிழ்ந்தார்.

எதிர்ப்பட்ட இடர்களையெல்லாம் செபத்தினாலும், இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையினாலும் தகர்த்து தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார் சீமோன். வட ஆப்பிரிக்க நாடுகளில் ஓரளவு கிறிஸ்தவ மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், பலரை போதிக்கும் பணிக்காகவும் தேர்ந்தெடுத்தார். அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சீமோன் ஸ்பெயின் நாட்டுக்குப் பயணமானார்.

கி.பி ஐம்பதில் பிரிட்டனில் கிளாஸ்டன்பரி என்னுமிடத்தில் கிறிஸ்தவத்தைப் போதிக்கத் துவங்கினார் சீமோன். அப்போது அந்த நாடு ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்தது ! எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரோமர்கள் லண்டனியம் என்னும் கோட்டையைக் கட்டி தங்கினார்கள். அந்த லண்டனியம் தான் இன்று லண்டன் என்று அழைக்கப்படுகிறது.

சீமோனின் மறை பரப்பும் பணி ரோமர்களிடமும், லத்தீன் மொழி பேசிய பூர்வீக வாசிகளிடமும் நடந்தது. ரோமர்கள் பலர் சீமோனை எதிர்த்தார்கள். ஆனாலும் அப்போஸ்தலர்களுக்கே உரிய மன திடமும், துணிச்சலும் சீமோனிடமும் இருந்ததால் அவர் கலங்கவில்லை. இயேசுவுக்காக இடர்கள் பட்டால் அது பெரும் பேறு என்று கருதினார்.

கி.பி 59 – கி.பி 62 க்கு இடைப்பட்ட காலத்தில் பிரிட்டனில் வந்திருந்த ரோமர்களுக்கும், போவாதீசியர்களுக்கும் கடும் சண்டை நடந்தது. அதில் ரோமர்கள் விரட்டியடிக்கப் பட்டார்கள். அந்த காலகட்டத்தில் சீமோனும் பிரிட்டனை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்துக்கே திரும்பி வந்தார்.

பாலஸ்தீனத்திலிருந்து மெசபடோமியா பகுதிக்குச் சென்று மறைப்பணி ஆற்றினார் சீமோன். அங்கு சில காலம் பணியாற்றிய சீமோன், இயேசுவின் இன்னொரு அப்போஸ்தலரான ததேயுவைச் சந்தித்தார். ததேயுவும் அந்தப் பகுதியில் பணிசெய்து வந்தார். இறைப்பணிக்காய் அடிப்படை கட்டமைப்பை அங்கே உருவாக்கிவிட்டு இருவரும் பாரசீகம் நோக்கிப் பயணமானார்கள்.

பாசசீகத்தில் சுவானிர் என்னுமிடத்தில் நடந்த சிலை வழிபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் ததேயு. ததேயுவைச் சிறைபிடித்த அதிகாரிகள் அவரைக் கொல்ல முடிவு செய்தார்கள். ததேயு அப்போதும் துணிச்சலுடன் இயேசுவைப் பற்றி போதித்தார். அவர்கள் ததேயுவை ஈட்டியால் குத்திக் கொலை செய்தார்கள்.

ததாயுவுடன் பணி செய்து வந்த சீமோனும் அரசின் பார்வைக்குத் தப்பவில்லை. சீமோன் சிறைபிடிக்கப்பட்டார். ரம்பத்தால் அறுத்துக் கொல்லுங்கள் எனும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

“இயேசுவுக்காய் இறப்பது பெரும்பேறு. நீங்கள் மனம் திரும்புங்கள்” என்று சொல்லிக் கொண்டே ரம்பத்தால் அறுபட்டு இறந்து போனார் சீமோன்.

பைபிளில் அதிகம் பேசப்படாத அப்போஸ்தலர், அமைதியான நபர் சீமோன். ஆனால் தூய ஆவியின் நிரப்புதலுக்குப் பின்பு மரணத்தைக் கூட துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வல்லமை பெற்றார். ஊரையும், நாட்டையும் விட்டு விட்டு கண்காணாத தூரத்துக்குச் சென்று இயேசுவைப் பற்றிப் போதித்தார்.

நாம் இயேசுவின் வழியில் வாழ்வதற்கும், இயேசுவைப் பற்றி அறிவிப்பதற்கும் முதலில் தூய‌ ஆவியினால் நிர‌ப்ப‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம். இயேசுவின் பால் கொள்ளும் உறுதியான‌ விசுவாச‌மே ந‌ம்மை இறை ப‌ணிக‌ளில் உறுதியுட‌ன் ஈடுப‌ட‌ச் செய்யும்.

இந்த‌ அடிப்ப‌டைச் சிந்த‌னைக‌ளை அப்போஸ்த‌ல‌ர் சீமோன் வாழ்விலிருந்து க‌ற்றுக் கொள்வோம்.

 

Leave a comment