உடலை நேசிப்போம்

நமது உடல் ஆன்மாவை விட ஆழமான ரகசியங்களை உள்ளடக்கியது ! அதை முழுமையாய் புரிந்து கொள்வது இயலாத காரியம் –

இ.எம்.ஃபாஸ்டர்.

உடல் ஒரு அதிசயங்களின் சுரங்கம். அறிவு தேடும் வேட்டையில் பெரும்பாலும் நாம் கவனிக்க மறந்து போகும் விஷயமும் நமது உடல் தான். உடலுக்கும் மனசுக்கும் நேரடித் தொடர்பு உண்டு !

“ஐயோ நான் ரொம்ப கறுப்பா இருக்கேன்” என நினைத்து கவலைப்பட்டுக் கவலைப்பட்டு மன அழுத்தத்தில் மாண்டு போனவர்களும் உண்டு. தனது உடலைப் பற்றி அவமானப்பட்டுப் பட்டு ஒதுங்கியே இருந்து உருப்படாமல் போனவர்களும் உண்டு. என் கண்ணு சரியில்லை, மூக்கு சரியில்லை, நாடி சரியில்லை என அறுவை சிகிச்சை செய்து ஆபத்தை விலைகொடுத்து வாங்குபவர்களும் உண்டு.

ஆனால், வெற்றியாளர்கள் தங்கள் உடலை நேசிப்பவர்கள். தங்கள் உடல் எப்படியிருந்தாலும் தரப்பட்ட உடலை நேசிப்பவர்களே வெற்றியின் கனியையும், மகிழ்ச்சியின் இனிமையையும் ரசிக்க முடியும். உடலுக்கும் மனதுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தங்களுடைய உடலை நேசிப்பவர்களே தன்னம்பிக்கையாய் நடை போட முடியும்.

நீங்கள் கண்ணாடியில் உங்களையே பார்க்கும் போது என்ன தெரிகிறது ? இறைவன் கொடுத்த அழகான உடல். கைகள், முகம், தலை, புன்னகை இவை தெரிகிறதா ? இல்லை கன்னத்தில் இருக்கும் ஒரு பரு, வரிசை பிசகியிருக்கும் ஒரு பல், உதிர்ந்து போயிருக்கும் கொஞ்சம் தலைமுடி இப்படி இருக்கும் சின்னச் சின்ன குறைகள் கண்ணுக்குத் தெரிகிறதா ? இந்தக் கேள்விக்கான விடையில் இருக்கிறது நீங்கள் உங்களை நேசிக்கிறீர்களா ? இல்லையா என்பதன் பதில் !

ஒரு பெண் இருந்தார். அவருக்கு நடிகை ஆக வேண்டும் எனும் அதீத ஆர்வம். அதற்குரிய தகுதியும், அழகும் தன்னிடம் இருப்பதாக நம்பினாள். ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் போய் நடிக்க  வாய்ப்புக் கேட்டார். அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்த தயாரிப்பாளர் சிரித்தார். “என்னம்மா.. உன்னை பாத்தா ரொம்ப சாதாரண பொண்ணா இருக்கே ? நடிகைக்குரிய எந்த ஒரு இலட்சணமும் உன்கிட்டே இல்லையே ? நீ ஸ்டாராக முடியாது. வேற ஏதாச்சும் வேலை பாரும்மா” என்று கூறி திருப்பி அனுப்பினார்.

அந்தப் பெண் கவலைப்படவில்லை. தன் மீதான நம்பிக்கை அவளுக்கு அதிகமாகவே இருந்தது. விக்கிரமாதித்ய வேதாளமாய் மீண்டும் மீண்டும் முயன்றார். ஒரு காலகட்டத்தில் வாய்ப்புக் கதவு திறந்தது. பின் உலகமே வியக்கும் நடிகையாகவும். சர்வதேச மாடலாகவும். அற்புதமான பாடகியாகவும் அந்தப் பெண் கொடி கட்டிப் பறந்தார். அந்தப் பெண் தான் மர்லின் மன்றோ.

உங்களைக் குறித்தும், உங்களுடைய உடல் அமைப்பைக் குறித்தும் முழுமையான ஏற்றுக் கொள்தல் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் உடலை நீங்களே நிராகரித்தால் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிறருடைய விமர்சனங்களை வைத்து உங்களை நீங்களே எடைபோட்டீர்கள் எனில் வாழ்வில் வெற்றி பெறவே முடியாது !

தன் மீதும், தன் உடல் மீதும் மரியாதை வைப்பவர்கள் தான் கெட்ட பழக்கங்களான மது , மாது, புகை, போதை எனும் தீய பழக்கங்களை விட்டு தள்ளியிருப்பார்கள். அவர்கள் ஆன்மீகவாதிகளாய் இருந்தால், “இறைவன் வாழும் கோயில் எனது உடல்” என அதற்கு அதிக பட்ச மரியாதையையும் தருவார்கள்.

உடல் ஒரு அதிசயம். நமது உடலிலுள்ள இரத்தக் குழாய்களை அப்படியே நீட்டினால் எவ்வளவு தூரம் வரும் தெரியுமா ? 75,000 மைல்கள். சென்னையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் வரை செல்லும் தூரம் எவ்வளவு தெரியுமா ? 8500 மைல்கள் தான். இரண்டு இடங்களுக்கும் இடையே ஒன்பது தடவை பயணம் செய்யுமளவுக்கு தூரம் நமது இரத்தக் குழாய்களின் நீளம் என்பது வியப்பாய் இல்லையா !

இதயத்தோட எடை சுமார் 300 கிராம் தான். அது தினமும் பம்ப் பண்ணும் இரத்தத்தைக் கொண்டு பல டேங்க்கர் லாரிகளை நிரப்பலாம் !

நமது உடலிலுள்ள எலும்புகள் வியப்பின் குறியீடு. எலும்பு அதன் தன்மையின் அடிப்படையிலும் எடையின் அடிப்படையிலும் பார்த்தால், காங்கிரீட்டை விட, இரும்பை விட வலிமையானது. விஞ்ஞானிகள் எவ்வளவு முயன்றும் நமது கட்டை விரலைப் போல ஒரு ரோபோ விரலை உருவாக்க முடியவில்லை. அவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா ? “கட்டை விரலுக்கும் மூளைக்கும் இடையே நடக்கும் ஆயிரக்கணக்கான தகவல் பரிமாற்றம் தான் அதன் மிக நளினமான, இலகுவான அசைவுக்கு வழிசெய்கிறது. அதை அறிவியல் இன்னும் அறிந்து கொள்ளவில்லை ! “ வியப்பாக இருக்கிறது இல்லையா ?

இப்போது டச் ஸ்கிரீன் பற்றியும், டேல்லெட் பற்றியும் பேசுகிறோம். நமது தோலுக்கு அடியில் இருக்கும் ஒரு சின்னப் புள்ளியில் நூற்றுக் கணக்கான நரம்புகளின் முனைகள் தொடுதலை உணரவும், அந்தத் தகவலை மூளைக்கு அனுப்பவும் செய்கின்றன.

நமது உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் நமது மொத்த உடலுக்குமான ஜெனடிக் தகவல்கள் உண்டு. இதன் ஒவ்வொரு புள்ளியிலும் கோடான கோடித் தகவல்கள் உண்டு. அதை விரித்துப் படித்தால் ஒரு போர்வை போல நீளும். ஆனால் அந்த தகவல்கள் எல்லாம் ஒரு புள்ளிக்குள் சைலன்டாக ஒளிந்திருக்கின்றன.

வெறும் மூன்று பவுண்ட் எடையுள்ள மூளை நூறு பில்லியன் நரம்பு செல்களைக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து உடலை கவனித்துக் கொண்டே இருக்கிறது. உடம்பின் ஒவ்வோர் செயலையும், கட்டளையையும் அது வகைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. உடலின் தன்மைக்குத் தக்கவாறும், சுற்றியிருக்கும் குளிர், சூடு போன்ற கால்லநிலைக்குத் தக்கதாகவும் அது உடலின் வெப்பத்தையும், உறுப்புகளின் செயலையும் மாற்றியமைக்கிறது. கடந்த பல வருடங்களாக உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் அது பதிவு செய்து கொண்டே இருக்கிறது !

உடலின் இருக்கும் இத்தனை அற்புதமான விஷயங்களைத் தாண்டி இனிமேல் உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பரு உங்களைக் கவலைக்குள்ளாக்கும் எனில் நீங்கள் உங்களை நேசிக்கவில்லை என்பது தான் பொருள்.

நாம் ஒரு வானுயர்ந்த மலையையோ, ஒரு அழகிய கட்டிடத்தையோ, ஆடையையோ, ஒரு படைப்பையோ ரசிக்கவோ பாராட்டவோ தயங்குவதில்லை. ஆனால் நமது உடலை நேசிக்கவும் பாராட்டவும் மட்டும் தயங்குவது ஏன் ? என கேள்வி விடுக்கிறார் டாக்டர் கிளென் ஷிரால்டி.

ஒருவகையில் நமது மீடியாக்கள் உருவாக்கும் பிம்பத்தையே நமது மனம் உண்மையென்று நம்பிக்கொண்டிருக்கிறது. கருப்பு நிறம் மோசம், முகப்பரு மோசம், முடி உதிர்ந்தால் மோசம், கை கால்கள் வழவழவென இல்லாதிருந்தால் மோசம், என நம்மை தேவையற்ற மன அழுத்தத்துக்குள் தள்ளி விடுவதில் முக்கியப் பங்கு ஆற்றுபவை நமது மீடியாக்களே ! அந்த வலைகளை நிராகரியுங்கள். நீங்கள் எப்படித் தோற்றமளிக்க வேண்டுமென்று எப்படி அவர்கள் நிர்ணயம் செய்ய முடியும் என கேள்வி எழுப்புங்கள். !

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் அடுத்தவர்கள் நிர்ணயம் செய்ய வேண்டிய விஷயங்களல்ல !

உங்களை நீங்கள் நேசியுங்கள். உடல் எப்படி இருந்தாலும், உங்கள் மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் அது நிச்சயம் போதுமானது !

Leave a comment