பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்

  1. பரிசேயர்

Image result for pharisees

இயேசுவின் காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு குழு இருந்தது, அது பரிசேயர் குழு. கலிலேயாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தாங்கள் மிகச்சிறந்த ஆன்மீகவாதிகள் என தங்களை நினைத்துக் கொண்டார்கள். ஆனால் மத அடையாளங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். சட்டங்களின் அடிப்படையில் தவறாமல் நடந்து வந்தவர்கள்.

சட்டமா ? மனிதநேயமா எனும் கேள்வி எழும்போதெல்லாம் சட்டமே முக்கியம் என சட்டத்தின் பக்கம் சாய்பவர்கள். மறைநூலை அலசி ஆராய்ந்து அதிலுள்ள உண்மைகளை அறிந்து வைத்திருப்பவர்கள். தங்கள் செயல்கள் எதுவும் நியமங்களை மீறிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருப்பார்கள்.

கடவுளின் வார்த்தையை நம்புபவர்கள். அதே நேரத்தில் பாரம்பரியமாய் செய்து வரும் செயல்களை விட்டு விட மறுப்பவர்கள். சமூக, அரசியல் குழுக்களில் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு. தங்களுடைய சட்ட அறிவினாலும், மறைநூல் அறிவினாலும் மற்றவர்களை அடக்கி ஆள்பவர்கள்.

சமூக அந்தஸ்தைப் பொறுத்தவரை இவர்கள் நடுத்தர வர்க்கத்தினரே. ஆனாலும் மறை நூல் அறிவின் காரணமாக செபக்கூடங்களிலெல்லாம் சிறப்பிடம் பெற்றனர். பொதுமக்களுக்கு இவர்கள் மேல் அச்சம் கலந்த மரியாதை இருந்தது.

ஆன்மா அழியாது என்றும், இறப்பு முடிவல்ல, உயிர்ப்பு உண்டு என்பதையெல்லாம் இவர்கள் நம்பினார்கள். அதே போல கடவுள் வல்லமையுடையவர், அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர் என்றும் நம்பினார்கள். அதே நேரத்தில் மனித முடிவுகளும் முக்கியமானவை எனும் சிந்தனை அவர்களிடம் இருந்தது.

சதுசேயர்கள் எனும் இன்னொரு குழுவினர் அப்போது இருந்தனர். அவர்களோடு எப்போதுமே இவர்கள் முரண்பட்டே இருந்தனர்.

பரிசேயர்களில் பல வகையினர் உண்டு. ஒருவகையினர் காணிக்கைகள் இடும்போது எல்லோரும் பார்க்கும் படியாக மட்டுமே காணிக்கையிடுவார்கள். தர்மம் போடும்போது பக்கத்தில் போகிறவர்களை அழைத்து நிற்கவைத்து தர்மம் செய்யும் பரிசேயர்கள் இருந்தனர். பாவம் செய்துவிடக் கூடாது எனும் எச்சரிக்கையுடன் கண்களை மூடியும், தரையைப் பார்த்தும் நடந்து சென்ற பரிசேயர்களும் இருந்தார்கள்.

சமய நூல்களுக்கு விளக்கம் கொடுக்கும் இவர்கள் இயேசுவோடு எப்போதும் முரண்பட்டார்கள். காரணம், இவர்கள் சட்டங்களை நேசித்தார்கள், இயேசுவோ மனிதர்களை நேசித்தார்.

பேய்பிடித்திருந்த ஒருவனுடைய பேயை இயேசு ஓட்டியபோது, “இவன் பேய்களின் தலைவனான பெயல்சபூலைக் கொண்டு தான் பேயோட்டுகிறான்” என்றனர்.

இயேசு அவர்களிடம், “சாத்தான் சாத்தானுக்கு எதிராக எழுவானா ? வீடோ நாடோ தனக்கு எதிராக தானே எழுமா ?” என்று எதிர் கேள்வி கேட்டார்.

இன்னொரு முறை, “உங்க சீடர்கள் சாப்பிடும் முன் கை கழுவுவதில்லை. இது மரபு மீறுதல்” என்று குற்றம் சாட்டினார்கள். இயேசுவோ அவர்களிடம், “வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது. வாயினின்று வெளிவரும் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று பழிப்புரை போன்ற தீய எண்ணங்களே மனிதனை தீட்டுப்படுத்தும்” என்றார்.

இன்னொரு முறை அவர்கள் இயேசுவிடம் வந்து, “ஒருவர் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா ?” என்று கேட்டனர். ஏனெனில் விலக்குச் சீட்டு கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என மோசே சொல்லியிருந்தார். இயேசு அவர்களிடம்,

“ஆதியில் கடவுள் ஆணையும் பெண்ணையும் படைத்த போது அவர்கள் இணைந்து வாழவேண்டும் என்றே ஆசைப்பட்டார். உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே மண விலக்கை அனுமதித்தார். தவறான நடத்தை தவிர எதற்காகவும் மனைவியை விலக்கி விடக் கூடாது. அப்படிச் செய்பவர் விபச்சாரப் பாவம் செய்கிறார்” என்றார்.

இப்படி இயேசுவை நோக்கி பரிசேயர்கள் நீட்டிய நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு இயேசு மிகவும் தீர்க்கமான பதிலை கொடுத்து வந்தார்.

வெளிவேடமான வாழ்க்கையை இயேசு பரிசேயத்தனம் என்று பெயரிட்டு அழைத்தார். இதயத்தில் தூய்மையையே அவர் விரும்பினார்.

பரிசேயத்தனத்தின் அடையாளங்களில் சில இவை.

  1. வெளிப்படையான நேர்மையான செயல்களில் மட்டுமே கவனம் இருக்கும்.
  2. தாங்கள் செய்கின்ற மத செயல்களான நோன்பு, காணிக்கை போன்றவற்றைப் பெருமையாக பேசித்திரிவர்.
  3. பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை இவர்கள் மனதில் உண்டு.
  4. பிறரைப் பற்றி தாழ்வாகவே எப்போதும் நினைப்பார்கள்.
  5. தங்களது குடும்பக் கடமைகளை உதறிவிட்டு மத செயல்களையும், சட்டங்களையும் தூக்கிப் பிடிப்பார்கள்.
  6. தாங்கள் போதிக்கும் நல்ல விஷயங்களை தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த மாட்டார்கள்.
  7. பிறரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே முக்கியமானதாய் தெரியும். புகழ், பெருமை, கௌரவம் எல்லாம் கிடைக்க வேண்டும் என விரும்புவார்கள்.
  8. ஏழைகளை வஞ்சிப்பதற்குத் தயங்க மாட்டார்கள்.
  9. பண ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.
  10. உண்மையான இறைவாக்கினர்களையும், இறை மனிதர்களையும் வெறுப்பார்கள்.

இத்தகைய சிந்தனைகள் நம்மிடம் இருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பார்ப்போம். அத்தகைய சிந்தனைகளை நம் மனதை விட்டு அகற்றுவோம்.

பரிசேயத்தனம் அல்ல, பரிசுத்தமே நமக்குத் தேவை.

One comment on “பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்

  1. Dear Admin,
    Greetings!
    We recently have enhanced our website, “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website to reach wider Tamil audiance…

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல,
    நம் குரல்
    Note: To add “Nam Kural – External Vote Button” to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    Like

Leave a comment