நான் பார்த்ததிலே : The Spiderwick Chronicles

தமிழ்ப் படங்களைப் பார்க்கும் பொறுமை என்னிடமிருந்து தனியே கழன்று ஓடிவிட்டது போலிருக்கிறது. ஒரு காலத்தில் எந்தப் படமானாலும் எந்த ஓட்டை தியேட்டரானாலும் ஓடிப் போய் உட்கார்ந்து படத்தின் கடைசி டைட்டில் முடிந்தபிறகு கூட திரையையே உற்றுப் பார்க்கும் சினிமா மோகம் இருந்தது.

ரிலீஸ் நாளன்று முதல் காட்சி பார்த்தால் தான் ஏதோ ஜென்ம சாபல்யம் பெற்று விட்டது போல மனம் திருப்திப்படும். அதிலும் குறிப்பாக எங்கள் ஊரில் ஒட்டப்பட்டிருக்கும் பச்சை கலர் சின்ன போஸ்டரின் கீழே “பாட்டு பைட்டு சூப்பர்” என எழுதியிருப்பார்கள். சிரஞ்சீவி படம் என்றால் கண்டிப்பாக அந்த வாசகம் இருந்தே தீரவேண்டும் என்பது எழுதாத விதி.

பாட்டு பைட்டு சூப்பர் – ன்னு போட்டிருக்கு கண்டிப்பா இந்தப் படம் பாக்கணும் என மனதுக்குள் நினைத்துக் கொள்வேன். அதெல்லாம் சுவாரஸ்யமான அந்தக் காலம். இப்போது பெரும்பாலான படங்களை டிவியில் கூட பார்க்கும் பொறுமை இருப்பதில்லை.

தமிழ்ப் படங்கள் என்றில்லை, மலையாளப் படங்களும் அவ்வாறே. மலையாளத் திரையுலகம் தரமான படங்கள், பாலியல் படங்கள், நகைச்சுவைப் படங்கள், அரைமணி நேரம் தொடர்ச்சியாக டயலாக் பேசும் படங்கள் என சீசனுக்குத் தக்கபடி மாறிக்கொண்டே இருக்கிறது. அதிலும் இந்த சுரேஷ் கோபி படமென்றால் மியூட் செய்துவிட்டு தான் பார்க்க முடியும். எப்போதேனும் ஆங்காங்கே ஒரு நல்ல மலையாள படம் பார்க்க முடிகிறது.

டிவியில் வேறு எந்த உருப்படியான பொழுது போக்கு நிகழ்ச்சியும் இல்லை இல்லை இல்லவே இல்லை. எங்கும் ஏதாவது இரண்டு பேர் கட்டிப் பிடித்து ஆட்டம் போடுகிறாகள், மூன்று பேர் ஜட்ஜ் எனும் பெயரில் உட்கார்ந்து “வாவ் அமேஸிங்” என்கிறார்கள். உடனே ஆடியவர்கள் முழங்கால் வரை தலையைக் குனிந்து “யோகா” பயில்கிறார்கள்.

அடக்கடவுளே,  என்ன செய்வது !!! என தெரியாமல், விழித்துக் கொண்டிருந்த கடந்த வார இறுதியில் பார்க்க நேர்ந்தது The Spiderwick Chronicles எனும் ஆங்கிலப் படம். குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்களைப் பொறுத்தவரை நாம் இன்னும் படமெடுக்கத் துவங்கவே இல்லை போலிருக்கிறது என மீண்டும் ஒரு முறை நினைக்க வைத்த படம்.

சாதாரணமான ஃபாண்டஸி கதை. வழக்கமான தனிமையான, ஆண்கள் இல்லாத வீடு, மர்மங்கள் அந்த வீட்டைச் சுற்றிக் கிடக்கின்றன. அந்த வீட்டிலிருக்கும் ஒரு ரகசிய நூலை திறக்கும் போது மர்மங்களும் திகில் களும் துவங்குகின்றன என வழக்கமான கதை. அதை படமாக்கியிருக்கும் விதத்திலும், கிராபிக்ஸ் கலக்கியிருக்கும் விதத்திலும் அசத்திக் காட்டியிருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஃபெயரிகள் வருவது, காப்ளின்ஸ் எனும் சிறு சிறு உருவங்களின் அட்டகாசம், அற்புதமான கற்பனை உலகம் என கண்களைக் கட்டிப் போடும் சங்கதிகள் படத்தில் நிறையவே.

குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி படம் பார்க்கும் அனுபவத்தைத் தந்ததாலேயே இந்தப் படம் ரொம்ப பிடித்துப் போய்விட்டது.

இந்தப் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்குத் தோன்றியது இது தான். நமது புராணங்களில் எத்தனையோ அதி அற்புதமான கற்பனைகள் உண்டு. அவற்றை இதே போல பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தினால் அதற்கான உலகச் சந்தை நிச்சயம் மிக அதிகமாகவே இருக்கும்.

தேவையில்லாமல் நூறு கோடி கொடுத்து குப்பைகளை எடுத்துக் கொட்டுவதை விட ஏதாவது பெரிய ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து நமது கதைகளை உலகப் படமாக்கினால் உலகமே நமது இலக்கியங்களையும், புராணங்களையும் ரசிக்கும் சூழல் உருவாகுமே.

இப்படி யோசித்து பெருமூச்சு விட்டபோது மனைவி விண்ணப்பித்தார், இந்த வாரம் குங்பூ பாண்டா பாக்கலாமா ?  மனைவி சொல்லுக்கு மறுப்பேது. அடுத்த வாரம் சொல்றேன் குங்பூ பாண்டா எப்படி இருக்குன்னு 🙂