தொங்கலில் தெங்குமரஹாடா

 

சத்தியமங்கலம் என்றாலே வீரப்பன் நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அதைத் தாண்டிய சுவாரஸ்யங்கள் கோடிக்கணக்கில் அதைச் சுற்றிய மலைப்பகுதிகளில் கொட்டிக் கிடக்கின்றன என்பதை நேரில் கண்டால் தான் புரியும்

சரி, போய் தான் பார்ப்போமே என்று நண்பர்களாகக் கிளம்பினோம். பவானிசாகர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு மணி நேரக் காட்டுப் பயண தூரத்தில் இருந்த “தெங்குமரஹாடா” எனும் இடம் தான் எங்கள் இலக்கு.

கற்காலம் தொட்டே பார்த்துப் பழகிய அதே அரசுப் பேருந்து ! தினமும் மாலை 6 மணிக்கு காட்டுக்குள் பயணிக்கும். அப்புறம் காலை ஆறு மணிக்கு காட்டிலிருந்து நாட்டுக்கு திரும்ப வரும்.  அந்த ஊர் மக்களுக்கு அரசு செய்த அதிக பட்ச போக்குவரத்து வசதி அது தான்.  

காட்டுக்குள் பேருந்து போகும் போதே சுவாரஸ்யமும் வியப்பும் சாரைப் பாம்பாய்ச் சுற்றிக் கொள்கிறது. காட்டுப் பாதை எங்கே இருக்கிறது என்பது பழகிய டிரைவருக்கே அடிக்கடி குழப்பமாகிப் போய்விடுகிறது. சாலையின் இருபக்கமும் மான்கள் கூட்டம் கூட்டமாய் ஓடித் திரிகின்றன.

“அங்கே பாருங்க சாமி…” என்று கோயம்புத்தூர் பாஷையில் ஒரு தலைப்பாக்கட்டு கை காட்டிய இடத்தில் ஆஜானுபாகுவாய் ஒரு யானை.

“முந்தா நேத்து என்னை விரட்டிப் போட்டுதுங்க.. நான் இல்லீங்களா.. கைல இருந்த பையை அது தலையில போட்டுப் போட்டு வந்துட்டேனுங்க” என அவர் ஏதோ ஓணானை விரட்டியது போல சொல்ல நமக்குள் லேசாக உதறல்.

“அப்டீங்களாக்கும்..” என கோயமுத்தூர் பாஷையில் திருப்பிக் கேட்க அது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது பார்வையிலேயே தெரிந்தது. யானையை விரட்டியவருக்கு இந்தப் பூனையை விரட்ட எவ்ளோ நேரமாகும் எனும் புது டென்ஷன் உள்ளுக்குள் உருவாக அவஸ்தையாய் ஒரு சிரி சிரித்து வைத்தேன்.

யானை, காட்டு மாடுகள், மான்கள், முயல்கள், பறவைகள், மயில்கள் என எல்லாம் சர்வ சாதாரணமாக ரோட்டைக் கடந்தும், பக்கத்தில் நடந்தும் போய்க்கொண்டிருந்தன. வேடிக்கை பார்த்துக் கொண்டே போய் ஒரு வழியாக கடைசி பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தோம்.

அதற்குள் கும்மிருட்டு வந்து எங்களைப் போர்த்தியது. உஷாராக டார்ச் லைட் நாலு கையிலேயே வைத்திருந்தோம். ஊர் எந்தப் பக்கம் என்றே தெரியவில்லை. “வாங்க இப்படித்தானுங்க போணும்” என்று டிரைவர் காட்டிய திசையில் ஆறு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

நமது குழப்பத்தை வாசித்தவர் சொன்னார், “பரிசல் வருமுங்க”.

அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். பரிசல் வந்தது. கும்மிருட்டில், நிலாவின் எதிரொளி நதியில் அசைய, இரைச்சலே இல்லாத ஒரு அசையும் பரிசலில், ரம்மியமாய்ப்  பயணிப்பது அற்புதமான அனுபவம். ஏதோ ஒரு சொர்ணமுத்துவையும் வைரமுத்துவாக உருமாற்றும் எல்லா சாத்தியங்களும் அந்த சூழலுக்கு உண்டு.

ஆற்றின் மறு கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து ஊரை சென்றடைந்தோம். ஊர் ரொம்ப சின்ன ஊர். அன்று இரவு அங்கே ஒரு வீட்டில் தங்கினோம். விடிவதற்கு இன்னும் நேரம் நிறைய இருந்தபோதே விழித்துக் கொண்டோம்.

இரவு கொஞ்சம் கொஞ்சமாய் விலக விலக, கண்ணுக்குள் விரிந்த அந்த குறிஞ்சியும், முல்லையும் கலந்த இலக்கிய நிலம் வியப்புக் குறிகளை விழிகளுக்குள் எழுதியது. அது ஒரு சின்ன மலைக்கிராமம். அருகில் இருந்த பொட்டிக் கடையில் மலைக்குளிரை மறக்கடிக்கும் ஒரு டீ குடித்து விட்டு நடந்தோம்.

ஊர் முழுக்க பூக்களின் ராஜ்ஜியம். எங்கும் செவ்வந்திப் பூ. தோட்டம் தோட்டமாக, ஏக்கர் கணக்கில் பூக்கள் பூத்துக் குலுங்கின. ஷங்கருக்கு ஒரு பாடல்காட்சி எடுக்கத் தேவையான அத்தனை இலட்சணங்களோடும் இருந்தது அந்த பூக்களின்.

“இவ்ளோ பூக்களையும் எப்படி விப்பீங்க?” பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் கேட்டோம்.

“இந்த பூவெல்லாம் எடைக்கு விப்போமுங்க. கிலோ ஆறுரூபா அம்பது பைசாங்க. இதை எடுத்துட்டு டவுணுக்கு போயிடுவாங்கங்க.. இத அரச்சுப் போட்டு வாசனைத் திரவியம் செய்வாங்கங்க..” என்றார் அவர்.

ஒரு சாகுபடிக்கு மூன்று மாதகாலங்கள். ஒரு ஆளுக்கு ஒரு நாள் கூலி 300 ரூபாய். ஒரு ஏக்கர் பயிரிட, பாதுகாக்க, பறிக்க என 20 பேராவது வேலை செய்யணும். கிலோவுக்கு விலை வெறும் 6.50 தான் ! வருமானம் ரொம்ப ரொம்பக் கம்மி என்பது தான் யதார்த்தம்.

“ஆமாங்க.. ரொம்ப எல்லாம் கெடைக்காதுங்க. வெள்ளாம நல்லா இருந்தா பரவாயில்லீங்க. போச்சுன்னா பொழப்பு போயிடுமுங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அவர்.

பூக்களைத் தவிர அங்கே விளையும் இரண்டு முக்கியமான விஷயங்கள் மஞ்சள் மற்றும் மிளகாய். இரண்டும் நல்ல விளைச்சல் இருந்தால் நல்ல லாபமான தொழில். ஆளாளுக்கு கொஞ்சம் கொஞ்சம் மஞ்சள், மிளகாய் எல்லாம் வாங்கினோம். புதுசாய்க் கிடைப்பதில் எப்போதுமே ஒரு சுகம் உண்டு இல்லையா ?

அப்படியே நடந்து போனபோது ஆறு பாயும் ஓசை கேட்டது. மலையருகே ஆற்றின் கன்னித்தன்மை கெடாத புனித ஓட்டத்தில் குளிப்பது ஒரு சுகம் இல்லையா ? கிடைத்த இடங்களிலெல்லாம், தாவி, குதித்து ஒரு இடத்தில் குளிக்க இறங்கினோம். அப்படியே சொக்கிப் போகும் சுகம்.

அந்த ஆற்றுக்கு மாயாறு என்றொரு பெயர் உண்டு. எப்போது காட்டு வெள்ளம் ஓடிவரும் என்பதைக் கணிக்க முடியாது. திடீரென பத்தடி உயரத்துக்கு அது பாய்ந்து வந்து அப்படியே அள்ளிக் கொண்டு போய்விடும்.ஆற்றின் கரைகளில் சந்தன மரங்களும் எங்களைப் பார்த்துக் கையசைத்தன.

நேரம் போவதே அறியாமல் இரண்டு மணி நேரமாய் குளித்துக் கொண்டிருந்தோம். ஒருவர் ஓடி வந்தார். அவர் பெயர் ரமேஷ்.

“ஏனுங்க… கரையேறிப்புடுங்க… சீக்கிரமுங்க…”

“ஏங்க ? காட்டாறு வருதா ? “ பரபரப்பாய் நாங்கள் கரையேறினோம்.

“இல்லீங்க.. இந்த பக்கம் குளிக்கறது டேஞ்சருங்க. முதலை இருக்குல்லா” என்றார் அவர்.

“என்னது மு…மு…முதலையா ?” என நாங்கள் நடுங்கத் துவங்கியபோது அவரே சொன்னார். அந்த இடத்திலிருந்து கொஞ்சம் மேலே முதலைகள் உண்டு. அவை எப்போது எங்கே வரும் என்று சொல்ல முடியாது !

ஆளை விட்டது ஆண்டவன் கருணை என்று நாங்கள் நடையைக் கட்டினோம். “நல்ல மீன் குழம்பு வைத்துத் தாருங்கள்.” எனும் எங்கள் விண்ணப்பத்துக்கு ஏகமாய் தயங்கினார் அவர்.

“இங்க மீன் பிடிக்க தடை பண்ணியிருக்காங்க. மீனு புடிச்சா முதலைக்கு சாப்பாடு கம்மியாயிடுமுங்க. அப்புறம் அதுக ஊருக்குள்ள வர ஆரம்பிச்சுடுமுங்க. அதனால இங்க மீன் பிடிக்க முடியாதுங்க. ஆனா இன்னொரு இடமிருக்குங்க. அங்க போய் மீனு வாங்கிட்டு வரேனுங்க” என எங்கள் காதிலும், நாவிலும் இன்பத் தேன் பாய்ச்சியவர் விடைபெற்றார்.

நாங்கள் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தோம். சென்னையின் புழுதிக் காற்றுக்கும், மலைக்கிராமத்தின் புழுதியற்ற காட்டுக்கும் இடையேயான வாழ்க்கை வேறுபாடுகள் மனதை பிசைந்தன. ‘இழந்து கொண்டிருக்கும் விஷயங்கள் குறித்த பிரக்ஞையற்று கணினிக்கு முன்னால் கட்டுண்டு கிடக்கும்’ எங்கள் நிலையை நொந்து கொண்டே நடந்தோம்.

திடீரென யானையின் பிளிறல் !

திகிலுடன் விரைவாய் ஓடி மீண்டும் ஊரை அடைந்தபோது எதிர்பட்டவர் சொன்னார்.

“இந்த பக்கமா போகப்படாதுங்க. யானை பாத்துச்சுன்னா கொன்னு போட்டுடுங்க. ஏன்னா அது ரொம்ப சமதளமுங்க. நாம தப்பவே முடியாதுங்க”

ரெண்டாவது முறையாக உயிர் தப்பிய உணர்வு எங்களுக்கு ! திகில் நிமிடங்களோடு அன்றைய பொழுது கடக்க, இரவு வந்தது !

மணக்க மணக்க மீன்குழம்பு பரிமாறிக் கொண்டே பேச ஆரம்பித்தார் ரமேஷ், கூடவே சண்முகம்.

“1995ல ஊருக்குள்ள புலி வந்து வரிசையா 14 பேரை கொன்னு போட்டுச்சுங்க. நம்ம சனங்களுக்கு பயமெல்லாம் காட்டு மிருகங்க தாங்க. ஆனாலும் பழகிப் போச்சு. அடிக்கடி யானை விரட்டும். அப்பப்போ மாடு விரட்டும். ஊரு மனுஷங்க ரொம்ப நல்லவங்க. ஒரே குடும்பமா இருக்கமுங்க”

அவர் பேசப் பேச, கிராமத்தின் இயல்புகளும் அவர்களுடைய மகிழ்வும், சோகமும், ஏக்கமும் பேச்சில் மிதந்தது.

960 ரேஷன் கார்ட்கள். 2600 ஓட்டுகள். 3400 மக்கள் என்பது தான் அவர் சொன்ன கிராமத்துப் புள்ளி விவரக் கணக்கு. கிராமத்திலேயே ஒரு சின்ன பள்ளிக்கூடம், அரசு அலுவலகம், தபால் நிலையம், பொட்டிக் கடை என எல்லாம் இருக்கிறது.

“ஒரு காலத்தில் இந்த ஏரியா காட்டில ஓரிரு புலிகளே உலவிக் கொண்டிருந்தன. இப்போதைய கணக்குப் படி 8 புலிகள் இருக்கின்றன” என்றார் அங்கே தங்கியிருக்கும் வனத்துறை அதிகாரி ஒருவர்..

“இந்த மலைப்பகுதியை அப்படியே புலிகள் சரணாலயமாய் மாற்றும் திட்டம் அரசுக்கு இருக்கிறது. 14 கிராமங்களைக் காலி செய்ய வேண்டும் என்பது திட்டம். ஆனால் தெங்குமரஹாடா மக்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இந்த மலையை விட்டுச் செல்ல மனம் இல்லை” மேலும் சொன்னார் வனத்துறை அதிகாரி. 

“கவர்மென்ட் ஒரு ரேசன் கார்டுக்கு அஞ்சு லெட்சம் தரலாம்ன்னு சொல்லுதுங்க. நாங்க அதை வெச்சு என்ன பண்ண முடியுமுங்க ? இதே மாதிரி ஒரு கிராமம் உருவாக்கி தரட்டுமுங்க. இல்லேன்னா கார்டுக்கு பத்து இலட்சமும், ரெண்டு ஏக்கர் நிலமும் தரட்டுமுங்க. நாங்க பொளச்சுக்குறோமுங்க” என்றார் நம்முடன் மீன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சண்முகம் .

அங்கிருந்து கோயமுத்தூருக்கு கல்லூரிப் படிப்புக்காகச் சென்று கொண்டிருந்த லாவண்யா எனும் இளம் பெண்ணிடம் பேசினோம். ஊரின் மீதும், ஊர் மக்கள் மீதும் அலாதியான பிரியம் வைத்திருந்தவர் சொன்னார்,

“ஊருக்கு வந்துட்டு போறது தான் பிரச்சினையே. ஊர் பக்கம் வந்தாலே மனசு ரொம்பவே சந்தோசமாயிடுது. இந்த காட்டுக்குள்ள இருந்து கூட எங்க மக்கள் கல்லூரிக்குப் போறாங்கங்கறதே ஒரு சாதனை தானே ? இல்லையா ?” என்ற அவருடைய வெகுளித்தனமான கேள்விக்கு, “நிச்சயமா ! “ என்பது மட்டுமே நாங்கள் சொன்ன பதில் !

வனமா ? மக்களின் மனமா ? எனும் இரண்டு கேள்விகளுக்கு இடையே அரசின் முடிவு இன்னும் முற்றுப் புள்ளி வைக்க முடியாமல் இருக்கிறது. நூறு ஆண்டுகளாக மலையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு அங்கிருந்து விரட்டப்படுவது உயிரை உலுக்கும் நிகழ்ச்சி. அரசுக்கோ அது வனத்துக்குச் செய்யும் மரியாதை !

வனங்கள் அழிக்கப்பட்டால் காட்டு விலங்குகள் மக்களைத் தாக்கும் எனும் வாதம் அரசிடம் இருக்கிறது. மக்களை விரட்டிவிட்டு விலங்குகளை வாழவைக்கப் போகிறீர்களா எனும் வாதம் மக்களிடம் இருக்கிறது. கள்ளம் கபடமில்லாத இந்த மக்களின் மனம் காயமடையக் கூடாதே எனும் பதட்டம் நம்மிடமும் !

 

சேவியர்

நன்றி : தேவதை

 

7 comments on “தொங்கலில் தெங்குமரஹாடா

  1. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    Like

  2. அருமை யான கட்டுரை!!!!!!
    விலங்குகளுக்குக் கொடுக்கும் மதிப்பை
    மக்களுக்கு ஏன் கொடுப்பதில்லை என்பது என் கேள்வியும் கூட!
    உங்கள் கட்டுரையை
    தத்ருபமான பதிவாக்கி,
    படம் பார்ப்பதைப் போன்ற பிரமையை உண்டுபண்ணி
    எங்களையும் அங்கே அழைத்துச் சென்றமைக்காக நன்றி!

    Like

  3. வனத்திலிருந்து மக்களை வெளியேற்றுவது வனத்தை காக்கவா , அல்லது இன்னொரு மரக்கடத்தல் நாடகத்தை உருவாக்குவதட்கா …… எவ்வளவோ இயற்கை அழிந்தும்கூட பணமுதலைகளுக்கு இயற்கையை காப்பாற்றும் எண்ணமில்லை ……

    Like

  4. Romba nall eruku unga thogupu, athuvum intha eru nigazlvugala real ah feel pana mudiyuthu :-).

    1. “என்னது மு…மு…முதலையா ?” என நாங்கள் நடுங்கத் துவங்கியபோது

    2. ரெண்டாவது முறையாக உயிர் தப்பிய உணர்வு எங்களுக்கு !

    Pls post travel info, so that we can also enjoy the same

    Like

  5. நன்றி ஷாமா… அது ஒரு அருமையான பயணம் 🙂 காட்டுக்குள் இருக்கு உண்மையான உலகம் !

    Like

Leave a comment