பைபிள் மாந்தர்கள் 83 (தினத்தந்தி) யோசேப்பு

83 யோசேப்பு

Image result for Joseph father of jesus painting

இயேசுவின் வளர்ப்புத் தந்தை. உலகில் எத்தனையோ மக்கள் இருந்த போதும் இயேசுவை வளர்க்கும் பாக்கியம் யோசேப்புக்குக் கிடைத்தது.

மரியாவுடன் மண ஒப்பந்தமாகியிருந்தார் யோசேப்பு. ஆனாள் மரியா தூய ஆவியினால் கருத்தாங்குகிறார். குழம்பிய யோசேப்பிடம் தேவதூதன் உண்மையைச் சொல்ல யோசேப்பு தெளிவடைகிறார், இறை சித்தத்துக்கு உடன்படுகிறார்.

மரியா தாய்மை நிலையில் இருக்கும் போது பெத்லேகேம் செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. யோசேப்பு உடனிருந்தார். பெத்லேகேமில் இயேசு பிறந்த போது கூட இருந்து கவனித்துக் கொண்டார். இயேசுவை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டிய காலம் வந்தபோது யோசேப்பு அதை நிறைவேற்றினார். ஏரோது மன்னன் இயேசுவைக் கொல்ல கட்டளையிட்டபோது சிரமங்களைத் தாங்கி நாடுகடந்து ஓடி நாயகனைக் காப்பாற்றினார்.

இயேசு பன்னிரண்டு வயதாக இருந்தபோது ஒரு முறை எருசலேம் ஆலயத்தில் தங்கி விட்டார். பிள்ளையைக் காணோமே எனும் பரிதவிப்புடன் ஓடி அலைந்து ஆலயத்தில் அவரைக் கண்டு பிடித்தார் யோசேப்பு.

அதன் பிறகு யோசேப்புவைப் பற்றிய குறிப்புகள் பைபிளில் இல்லை. அவர் இயேசுவின் பணி வாழ்வுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்பதே பொதுவான நம்பிக்கை.

யோசேப்பு தாவீதின் வழிமரபில் வந்தவர். அவருடைய தந்தை ஏலி என்கிற யாக்கோபு. யோசேப்பு தச்சுத் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்த  எளிமையான மனிதர்.

அவர் நேர்மையாளராகவும், நீதிமானாகவும் இருந்தார். அந்த குணாதிசயம் தான் அவருக்கு இயேசுவை வளர்க்கும் பாக்கியத்தைத் தந்தது. திருமணத்துக்கு முன்பே தனது மனைவி மரியா கர்ப்பமாய் இருந்த செய்தி யோசேப்புக்குத் தெரிந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு பெண் கர்ப்பமாய் இருக்கிறாள் என்பது எவ்வளவு பெரிய மன உளைச்சல். நேரடியாகப் போய் சண்டையிடவோ, பெயரைக் களங்கப்படுத்தவோ தான் சாதாரண மக்கள் முயல்வார்கள்.

ஆனால் யோசேப்பு அப்படிச் செய்யவில்லை. “மறைவாக” மரியாவை விலக்கி விட நினைத்தார். அதாவது காதும் காதும் வைத்தது போல பிரச்சினையை முடிக்க நினைத்தார். ஒருவேளை அப்படி அவர் செய்யாமல் ஊருக்குள் மரியாவின் பெயரை அவமானப் படுத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும் ? தூதன் வந்து உண்மையைச் சொன்ன‌ போது பதறிப் போயிருப்பார். அதற்குள் அவர் விதைத்த அவமானக் கதை ஊருக்குள் நிரம்பியிருக்கும்.

யோசேப்பு மிகவும் கனிவான மனம் உடையவராய் இருந்தார். மரியா மனம் வருந்தக் கூடாது என்று நினைத்தார். அடுத்தவர்கள் தப்பு செய்திருந்தால் கூட அந்தத் தவறைச் சுட்டிக் காட்டி வேதனைப் படுத்தாத மனம் கடவுளுக்குப் பிரியமான மனம். அது யோசேப்புக்கு இருந்தது.

அன்றைய வழக்கப்படி மரியாவைக் கல்லால் எறிந்து கொல்லவும் யோசேப்புக்கு சட்டம் இடமளித்தது. யோசேப்பு கல்லெறியும் கல்நெஞ்சக்காரர் அல்ல. ஒரு சொல்லால் கூட மரியாவைக் காயப்படுத்த விரும்பவில்லை.

கடவுள் அதனால் தான் யோசேப்பை மரியாவின் மண்ணகத் தந்தையாய் மாற்றினார். ஒரு நீதிமானாய் இருந்த யோசேப்பு, ஒரு மண்ணகத் தந்தைக்குரிய அனைத்து குணாதிசங்களோடும் இருந்தார்.

  1. யோசேப்பு நல்ல உழைப்பாளியாக இருந்தார். தச்சுத் தொழிலை நேர்மையாகச் செய்து வந்தார். அதிக லாபம் சம்பாதிக்க விரும்பாதவராக இருந்ததால் அவர் எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆலயத்தில் ஏழைகள் பலியிடும் புறாக்களை பலியிடவே அவரால் முடிந்தது,
  2. இயேசு யோசேப்பின் சொந்த ரத்தமல்ல. ஆனாலும் அந்த சிந்தனையை அவர் மனதில் கொள்ளாமல், தனது சொந்த மகனைப் போல வளர்த்தார். ஏரோது மன்னனிடமிருந்து குழந்தைக்கு ஆபத்து வந்த போது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எகிப்துக்கு ஓடினார்.
  3. ஒரு குழந்தையின் குணாதிசயங்களைக் கட்டமைப்பதில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. நீதிமானான யோசேப்பு அந்தக் குணாதிசயங்களைக் கொண்டிருந்தார். தூய்மையான வாழ்க்கை, எளிமையான வாழ்க்கை, நேர்மையான வாழ்க்கை இவற்றையெல்லாம் யோசேப்பின் வாழ்க்கை இயேசுவுக்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம். அன்பு, மன்னிப்பு, நேசம், மறை அறிவு போன்ற பலவற்றைக் கற்கவும் இயேசுவுக்கு யோசேப்பின் வழிகாட்டுதல் இருந்திருக்க வேண்டும்.
  4. யோசேப்பு பாவமில்லாதவர் அல்ல. ஆனால் கடவுளின் நேர்மையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்தார். அதனால் தான் மரியா கர்ப்பமாய் இருக்கும் செய்தி கேட்டும் கூட பொறுமையும், இரக்கமும், கண்ணியமும் கொண்டிருந்தார். “பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்” என்று இயேசு பின்னாளில் போதித்தார்.
  5. கீழ்ப்படிதலின் உதாரணமாய் யோசேப்பு இருந்தார். “மேரியை ஏற்றுக் கொள்”, “இயேசு என பெயரிடு”, “எகிப்துக்குப் போ”,”திரும்பி இஸ்ரேலுக்கு வா” என வந்த கடவுளின் கட்டளைகள் அனைத்தையும் அப்படியே, அப்போதே செயல்படுத்தினார்.

ஒரு நீதிமானாக, பணிவானவராக, அன்பும் இரக்கமும் கொண்டவராக, உழைப்பாளியாக, கடவுள் பக்தி உள்ளவராக வாழ்ந்த யோசேப்பின் வாழ்க்கை நமக்கு ஊக்கமளிக்கட்டும். எனினும், இறைவனே என்றும் நாம் வழிபடும் தந்தையாகட்டும்.

*

Leave a comment