பைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்

85

திருமுழுக்கு யோவான்

Related image

செக்கரியா எலிசபெத் தம்பதியருக்கு முதிர் வயதில் கடவுளின் அருளால் பிறந்த குழந்தை தான் யோவான். கடவுளின் அற்புதத்தைக் கண்டு வியந்த செக்கரியா

“குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்” என்று வாழ்த்தினார்.

யோவான் இயேசுவை விட ஆறு மாதங்கள் மூத்தவர். இருவரும் சொந்தக்காரர்கள். யோவானின் பிறப்பு இயேசுவின் பிறப்பை முன்னறிவிப்பதற்காக நிகழ்ந்தது.

இவரது வரவை இறைவாக்கினர் எசாயா ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே “குரலொலி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” என்று முன்னறிவித்தார்.

அதன் பின்னர் கி.மு 5ம் நூற்றாண்டில் “இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்” என கடவுள் மலாக்கி இறைவாக்கினர் மூலமாக முன்னறிவித்தார்.

யோவான் வளர்ந்தார். வலிமையடைந்தார். அவர் பாலைவனத்தில் வாழ்ந்து வந்தார். ஒட்டக மயிராடை அணிந்து, இடையில் வார்க்கச்சை கட்டியிருந்தார். காட்டுத்தேனும் வெட்டுக்கிளியுமே அவரது உணவு. திபேரியு சீசரின் ஆட்சி காலத்தின் பதினைந்தாம் ஆண்டில், போந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராய் இருந்தார். பாலைவனத்தில் வாழ்ந்து வந்த யோவானுக்கு இறைவனின் அழைப்பு வந்தது. மக்களின் மனமாற்றத்துக்காகப் போதிக்க ஆரம்பித்தார்.

“பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” . மனம் மாறியவர்களுக்கு அதன் அடையாளமாக ஞானஸ்நானம் அதாவது திருமுழுக்கு கொடுத்தார். அதனால் அவரது பெயர் திருமுழுக்கு யோவான் என்றானது.

அவருடைய வலிமையான போதனையில் தாக்கப்பட்ட பலர் அவரிடம் வந்து மன மாற்றம் அடைந்து திருமுழுக்கு பெற்றனர்.

வந்தவர்கள் , “நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?” என்று கேட்டார்கள்.

“உன்னிடம் இரண்டு அங்கி இருந்தால், ஒன்றை இல்லாதவனுக்குக் கொடு. இருக்கும் உணவையும் பகிர்ந்து உண்” என்றார்.

வரி வசூலிப்பவர்கள் “நாங்கள் என்ன செய்ய வேண்டும்” ? என்று கேட்டார்கள்.

“எவ்வளவு வசூலிக்க வேண்டுமோ அதை மட்டும் வசூலியுங்கள். நேர்மையாய் இருங்கள்” என்றார்.

படைவீரர்கள் அவரிடம், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?” என்றார்கள்.

“யாரையும் அச்சுறுத்தி பணம் பறிக்க வேண்டாம். பொய் குற்றம் சுமத்த வேண்டாம். சம்பளமே போதுமென இருங்கள்” என்றார்.

இவருடைய போதனைகளைக் கேட்ட மக்கள், ஒருவேளை இவர் தான் மீட்பராய் இருப்பாரோ என பேசத் தொடங்கினர். ஆனால் அவர் மீட்பர் அல்ல, அவர் மீட்பர் இயேசுவின் முன்னோடி. எனவே அவர் மக்களைப் பார்த்து,

“நான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுப்பவன். இன்னொருவர் வருவார். அவர் தூய ஆவியாலும் நெருப்பாலும் திருமுழுக்கு கொடுப்பார். அவருடைய செருப்பின் வாரை அவிழ்க்கக் கூட எனக்கு தகுதியில்லை” என தன்னைத் தாழ்த்திக் கொண்டார்.

இயேசுவும் தம் பணி வாழ்வின் தொடக்கமாக யோவானிடம் திருமுழுக்கு பெற்றுக் கொண்டார். அப்போது வானம் திறந்தது, “இவரே என் அன்பார்ந்த மகன்” என விண்ணகத் தந்தையின் குரல் வானிலிருந்து ஒலித்தது. தூய ஆவியானவர் ஒரு புறாவின் வடிவில் இயேசுவிடம் வந்திறங்கினார்.

யோவானைப் பற்றிய பேச்சு ஊரெங்கும் பரவியது. அவர் எந்த இடத்திலும் சமரசம் காட்டாமல் பேசி வந்தார். அங்கே குறுநில மன்னன் ஏரோது ஆட்சி செய்து கொண்டிருந்தான். தனது சகோதரனின் மனைவி ஏரோதியாளை அபகரித்து அவளோடு வாழ்ந்து வந்தான்.

“ஏரோதே.. நீ செய்வது பாவம்! மனம் திரும்பு” யோவானின் குரல் அச்சமில்லாமல் ஏரோதின் முன்னால் ஒலித்தது. ஏரோது கோபமடைந்தான். யோவானைக் கைது செய்து சிறையில் அடைத்தான்.

யோவான் சிறைப்பட்டதும் இயேசு தனது பணி வாழ்வை தீவிரப்படுத்தினார். “பெண்களில் பிறந்தவர்களில் யோவானை விடப் பெரியவன் யாரும் இல்லை” என யோவானைப் பற்றி வெளிப்படையாய் அறிக்கையிட்டார்.

ஏரோது எப்படியாவது யோவானைக் கொல்ல வேண்டும் என நினைத்தான், ஆனால் மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என அமைதி காத்தான். அப்போது ஏரோதின் பிறந்த நாள் வந்தது.

ஏரோதியாளின் மகள் சலோமி ஒரு அற்புதமான நாட்டியத்தை ஏரோதின் முன்னால் நடத்தினார்.

“நீ என்ன வேண்டுமானாலும் கேள், உனக்குத் தருகிறேன்” ஏரோது அறிவித்தான்.

“எனக்கு யோவானின் தலை ஒரு தட்டில் வைத்துத் தரவேண்டும்” என்றாள் சலோமி. அவளுடைய தாயின் அறிவுரை அதுவாக இருந்தது. ஏரோது வருந்தினாலும், வாக்குறுதியை மீற விரும்பவில்லை.

யோவானின் தலை வெட்டப்பட்டது. தட்டில் வைத்து பரிசாக அளிக்கப்பட்டது. அதை அவள் கொண்டு போய் தன் தாயிடம் கொடுத்தார்.

யோவானின் பணி நிறைவுற்றது. இயேசுவைப் பற்றி அறிக்கையிட தயங்காத மனமும், தனியே பணிசெய்யத் தயங்காத திடமும், மனித நேய சிந்தனைகளும், அசைக்க முடியாத விசுவாசமும் திருமுழுக்கு யோவனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களாகும்.

*

 

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s