மல்லுக்கட்டும் பதின் வயது !

 “என் பொண்ணு முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தா. சொன்ன பேச்சைக் கேப்பா, ஒழுங்கா படிப்பா… யார் கண்ணு பட்டுச்சுன்னே தெரியல. இப்பல்லாம் யார் பேச்சையும்  கேட்கறதே இல்லை. எதுக்கெடுத்தாலும் எதுத்துப் பேசறா. அப்பா, அம்மாங்கற மரியாதையே சுத்தமா இல்லாம போச்சு ! என்ன பண்றதுன்னே தெரியலை” இப்படி யாராச்சும் பேசினா, உங்க பொண்ணுக்கு பதின் வயதான்னு கேளுங்க. பெரும்பாலும் “ஆமாம்” என்பது தான் பதிலா இருக்கும். அப்படியானால், இது ஒரு வீட்டுப் பிரச்சினையில்லை. இந்தியாவில் சுமார் 25 கோடி பதின் வயதுப் பெண்கள் இருக்கிறார்கள். அத்தனை வீடுகளிலும் இப்படி ஏதோ ஒரு டீன் ஏஜ் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதுல பதட்டப்பட ஒண்ணுமே இல்லை. கொஞ்சம் நாசூக்காக நடந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு களத்துல இறங்கினா உறவுகள் காயப்படும் அபாயம் உண்டு. இந்தப் பதின் வயதுப் பிரச்சினையைக் கையாளணும்ன்னா முதல்ல பெற்றோர் கொஞ்சம் பதின் வயதுப் பிராயத்துக்கு இறங்கி வரணும். அதாவது, உங்க மகளோட செயல்களைப் பார்த்து டென்ஷன் ஆகாம, அந்த செயல்களுக்கான காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். அந்தக் காரணம் புரிந்து விட்டால் நீங்கள் உங்கள் மகளுடைய செயல்பாடுகளைப் புரிந்து கொள்வீர்கள். அவளுக்குத் தேவையான அரவணைப்பையும், சுதந்திரத்தையும் கொடுப்பீர்கள் என்பது தான் உண்மை !

பட்டாம்பூச்சி பார்த்திருப்பீங்க. அது கூட்டுப் புழுவா இருந்து வெளிவரக் கூடிய நிகழ்ச்சியைப் பாருங்கள். ரொம்பவே கஷ்டப்பட்டு, கூட்டை உடைத்து வெளியே வரும். அப்படி வெளியே வந்தபிறகு தான் அது முழுமையான பட்டுப் பூச்சியாய் பரிமளிக்கும். அந்தச் செயல்பாடு கூட்டுப் புழுவிலிருந்து பட்டாம்பூச்சியாய் மாற ரொம்பவே அவசியம். நீங்க ஹெல்ப் பண்றேன்னு சொல்லி அந்தக் கூட்டை கொஞ்சம் கிழிச்சு விட்டீங்கன்னா, அந்தப் பட்டுப்பூச்சி காலம் முழுதும் ஊனமாவே இருக்கும் என்பது தான் கசப்பான உண்மை.

பதின் வயதுப் பிராயமும் குழந்தைப் பருவத்தின் கூட்டை உடைத்து பெரிய மனுஷத் தோரணைக்குள் நுழைகின்ற தருணம். பெற்றோர் என்ன செய்தாலும் அது தப்பாவே தோன்றுகிற பருவம். அதற்குக் காரணம் அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை அல்லது வாழ்க்கையின் சில பகுதிகளை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ள முயல்வது தான் ! இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டியது ரொம்ப அவசியம்.

மூத்த பிள்ளைகளை விட இளைய பிள்ளைகள் பதின் வயதைத் தொடும்போது எதிர்ப்பு உணர்வை அதிகமாகக் கொண்டிருப்பார்கள் என்கிறார் எழுத்தாளர் பிராங்க் சுல்லோவி. தன்னுடைய “பார்ன் டு ரிபெல்” எனும் நூலில் அவர் இதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார். “மூத்தவர்களுடைய குளோனிங் வடிவமல்ல நான்” என்பதை பெற்றோருக்கு உரத்துச் சொல்வதும் அதில் ஒரு காரணமாம். !

இனிமேல் பெற்றோரின் உதவி இல்லாமலேயே என்னால் தனியாக இயங்க முடியும் என பெரும்பாலான டீன் ஏஜ் பருவத்தினர் முடிவு கட்டி விடுகிறார்கள். அதற்கு வலுசேர்க்கும் விதமாக அவர்களுக்கு ஏகப்பட்ட எனர்ஜி கதைகள் நண்பர்களிடமிருந்து கிடைத்து விடுகிறது. பெற்றோரைக் கிண்டலடிப்பது, அவர்களை ஒன்றும் தெரியாதவர்களாய்ச் சித்தரிப்பதெல்லாம் இந்த காலகட்டத்தில் வெகு சகஜம். அதை ரொம்ப சீரியஸாய் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய ஒரே விஷயம்.

சுவிட்ச் போட்டால் லைட் எரிவது பொன்ற திடீர் மாற்றமல்ல இது. கொஞ்சம் கொஞ்சமாய் செயல்பாடுகளில் தெரியும் மாற்றம். இதை கொஞ்சம் அறிவியல் ரீதியாக அணுகினால், “பதின் வயதில் ஏற்படும் உடல் மாற்றம் மற்றும் ஹார்மோன் மாற்றம்” எனும் கட்டத்துக்குள் அடக்கி விடலாம். குறிப்பாக ஹார்மோன் மாற்றங்கள் அவர்களுடைய மனநிலையில் திடீர் திடீர் மாற்றங்களைக் கொண்டு வரும். உடல் வளர்ச்சி மாற்றங்கள், அச்சத்தையோ, தயக்கத்தையோ அல்லது அதற்கு நேர் எதிரான தைரியம் மற்றும் தன்னம்பிக்கையையோ கொண்டு வரும் என்கிறது உளவியல்.

பதின் வயது மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கும் என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள் ? அது தப்பு. அப்போது தான் பிறரைச் சார்ந்து இருக்கும் மனநிலையே அவர்களுக்குள் வலுப்படுகிறது. பிறர் என்ன நினைக்கிறார்கள், பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள், தன்னைப் பற்றிய பிறருடைய கணிப்பு என்ன போன்றவையெல்லாம் அப்போது அவர்களுக்கு ரொம்ப முக்கியமாய்த் தோன்றுகிறது. இதனால் தான் மற்ற டீன் ஏஜ் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு தங்கள் செயல்பாடுகளை அளவிடுகின்றனர்.

குறிப்பாக பன்னிரண்டு வயதைத் தாண்டும் பருவம் தான் பெண்களுக்கு தங்களைக் குறித்த கவலைகளும், விழிப்பும் ஒருசேர எழும் காலம். அதுவரை அம்மா சொல்லும் ஆடையுடன் பள்ளிக்குப் போவாள். அதன்பின் நண்பர்கள் சொல்லும் பேஷன் டிரஸ் தேவைப்படும். பன்னிரண்டு வயது வரை பவுடர் கூட தேவைப்படாத பெண்ணுக்கு அதன் பிறகு புருவத்துக்கு ஒன்று, கன்னத்துக்கு ஒன்று, உதட்டுக்கு ஒன்று என ஏகப்பட்ட மேக்கப் பொருட்கள் தேவைப்படும் !

அதற்குக் காரணம், அடுத்தவர்களின் விமர்சனங்கள் குறித்தான எதிர்பார்ப்பும், கவலையும் தான். தப்பித் தவறி கூட அவளுடைய அழகு குறித்தோ, உடல் எடை குறித்தோ, அறிவு குறித்தோ எதையேனும் தரக் குறைவாய் பேசவே பேசாதீர்கள்.  இன்னும் குறிப்பாக பிறர் முன்னிலையில் அதைப் பற்றி சிந்திக்கவே செய்யாதீர்கள் என்கின்றனர் உளவியலார்கள்.

எதிர்பாலினரோடான ஈர்ப்பும், எதையேனும் புதிதாய்ச் செய்து பார்க்கும் ஆர்வமும் அவர்களிடம் மேலோங்கியிருக்கும். உடல் தரும் வளர்ச்சியும், அது தரும்  கிளர்ச்சியும் அவர்களுக்கு பாலியல் பாதையில் புது அனுபவங்களாய் விரிகின்றன. அதற்கான சுதந்திரங்கள் வீடுகளிலிருந்து மறுக்கப்படும் போது எதிர்ப்பு காட்டுகிறார்கள். 

பதின் வயது நிறைய சுதந்திரங்களைத் தேடும். தன்னுடைய எல்லைக்குள் பெற்றோர் வரக்கூடாது என விருப்பப்படும். பதின் வயதுப் பிள்ளைகளிடம் கவனமாய் நடந்து கொள்வதற்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார் மார்ஷல் பிரைன் எனும் உளவியலார். அவருடைய பார்வையில் பதின் வயது “மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள்” போன்றவை அலைக்கழிக்கும் காலம் என்கிறார். அவர்களுடைய உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் வேலைகளைக் கொஞ்சம் ஒத்தியே வையுங்கள் என்பது தான் அவர் தரும் அறிவுரை.

பதின் வயதினரைக் கையாளும் எளிய வழி, பதின் வயதினரை பதின் வயதினராய் நடத்துவது தான். அவர்களை சின்னப் பிள்ளைகளாக நினைக்காமல் இருக்க வேண்டும். உதாரணமாக வீட்டில் ஏதேனும் முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தால் அவர்களிடமும் ஒரு வார்த்தை கேளுங்கள் ! தன்னை பெரிய ஆளாய் மதிக்கிறார்கள் என்பதே அவர்களுடைய தன்னம்பிக்கைக்கு தரப்படும் டானிக் தான்.

பதின் வயதினரை அடிக்கடி பாராட்டுங்கள். ஆடை நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். எதையேனும் சாதித்தால் பாராட்டுங்கள். இப்படிப்பட்ட சின்னச் சின்ன விஷயங்கள் பெற்றோருக்கும் மகளுக்கும் இடையேயான இடைவெளியை இறுக்குவதுடன், பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையையும் ஊட்டும்.

நாடின் காஸ்லோ எனும் அமெரிக்க மனநல மருத்துவர் சொல்லும் கருத்து சுவாரஸ்யமானது. “உலகிலுள்ள எல்லா பெற்றோரும் தங்கள் பதின் வயது மகள் தங்களை வெறுப்பதாய் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் பெற்றோரை வெறுப்பதே இல்லை. அவள் ஒரு பதட்டமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறாள். பெற்றோரும் தன்னோடு இணைந்து அந்தக் காலகட்டத்தில் பயணிக்க வேண்டும் என விரும்புகிறாள்” என்கிறார் அவர்.

இந்த வயதில் பெற்றோர் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், நல்ல விஷயங்கள் என்ன என்பதையும் கெட்ட விஷயங்கள் என்ன என்பதையும் அவளுக்குச் சொல்லிவிடுவது மட்டுமே. இந்த புரிதலை குழந்தையாய் இருக்கும்போதே ஊட்டியிருந்தால் ரொம்ப நல்லது. குறிப்பாக புகைத்தல் நல்லதல்ல, மது உடல் நிலையைப் பாதிக்கும் போன்ற விஷயங்கள் அவளுக்குச் சொல்லவேண்டும். தவறான பாலியல் உறவுகள் என்னென்ன சிக்கல்களைக் கொண்டு வரும் போன்ற விஷயங்களையும் அவர்களிடம் சொல்வதே நல்லது.

எந்த நட்பு நல்ல நட்பு என்பதைச் செயல்பாடுகளின் மூலமாகச் சொல்லிக் கொடுங்கள். “கல்யாணி கூட சேராதே’ என்று சொல்வது உங்கள் மகளை வெறுப்பேற்றும். அதை விடுத்து நல்ல தோழி என்பவள் உனக்குப் பிடிக்காத எதையும் செய்யக் கட்டாயப்படுத்த மாட்டாள். தப்பான செயல்களில் ஈடுபடுத்தமாட்டாள் போன்ற செயல்பாட்டு விஷயங்களைச் சொல்லவேண்டும். அதிலிருந்து நல்ல நட்பு எது, தவிர்க்கப்பட வேண்டிய நட்பு எது என்பதை உங்கள் பதின் வயது மகள் புரிந்து கொள்வாள் !

இந்த பதின்வயதிலும் மூன்று வகையான எதிர்ப்பு நிலைகள் உண்டு என்கிறார் டாக்டர் கார்ல் பிக்கார்ட். 9 முதல் 13 வயது வரை, 13 முதல் 15 வயது வரை, 15 முதல் 19 வயது வரை என மூன்று படிகளாக பதின் வயதைப் பிரிக்கிறார் அவர். முதல் நிலையில் “நாங்கள் குழந்தைகள் அல்ல” என்பதை நிறுவுவதும், இரண்டாம் நிலையில் “தங்களை வலிமை வாய்ந்தவர்களாய் காட்டிக் கொள்வதுமே” பிரதானமான செயல்கள். மூன்றாம் நிலை பெரும்பாலும் முதல் இரண்டு நிலைகளிலும் அமைதியாய் இருக்கும் பதின் வயதினரின் எதிர்ப்புக் காலம் என்கிறார் இவர்.

எல்லா எதிர்ப்புகளுமே தங்களுடைய அனுமதிக்கப்பட்ட எல்லையை விரிவுபடுத்திக் கொள்ளும் பதின் வயதினரின் முனைப்பு என்று சொல்வதில் தவறில்லை. அதில் பெற்றோர் பல விஷயங்களை அனுமதிக்கலாம். குறிப்பாக உங்கள் மகள் தலைமுடிக்கு கலர் அடிக்க விரும்புகிறாள் என வைத்துக் கொள்ளுங்கள் அதை அனுமதிப்பதால் அவளுடைய நடத்தை மாறிவிடப் போவதில்லை. ஆனால் அதற்குப் பதிலாக அதை விட முக்கியமான இணையப் பயன்பாட்டை வகைப்படுத்துவது நல்லது !

இணைய வசதி உள்ள பதின் வயதுப் பருவத்தினர் சராசரியாக வாரத்துக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் “விவகார” படங்களைப் பார்க்கிறார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருஷத்துக்கு 87 மணி நேரம். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறது யூகேவிலுள்ள சைபர் செண்டினல் அமைப்பு.

வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள்.  இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது டேட்டிங், தாய்மை, விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.

அதற்காக அறிவுரை மூட்டையை அவிழ்க்காதீர்கள். டீன் ஏஜுக்கு அலர்ஜியான விஷயங்களில் முதலிடம் இந்த அறிவுரை. காரணம் தன்னை விட அறிவாளிகள் இருக்க முடியாது எனும் அவர்களுடைய எண்ணமாய்க் கூட இருக்கலாம். எனவே மகள் சொல்வதை நிறைய கேட்டாலே போதும் அவளை நீங்கள் அவள் போக்கில் சென்று வழிகாட்ட முடியும்.

இந்த காலகட்டத்தில் பெற்றோரின் கடமை இரண்டு தான். ஒன்று, மகளின் உடல், உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வது. இரண்டாவது அவர்களுடைய போக்கிலேயே போய் அவர்களுக்கு ஆதரவு கலந்த வழிகாட்டுதலை வழங்குவது !

சேவியர்.

நன்றி பெண்ணே நீ

பிடித்திருந்தால் வாக்களிக்கவும்

டீன் ஏஜ் பெண்ணின் அப்பாவா நீங்க ?

 வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள் ?  கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். முழிக்காதீங்க…

தந்தையின்  நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத பதின் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் நான் சொல்லவில்லை ! அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் நடத்தப்பட்ட விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.

இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?   

ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரிகையான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது. 

சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டுபுட்டுன்னு வளர்ந்து நிர்ப்பாள். “என் டாடி சூப்பர்” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், “டாடிக்கு ஒரு மண்ணும் தெரியாது” என்று பல்டி அடிப்பாள். மூக்குத்தியை எடுத்து நாக்கில் மாட்டுவாள். டென்ஷன் ஆகாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.

என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.

“டாடி பிளீஸ்… டாடி… வாங்கிக் கொடுங்க டாடி” என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் “டாட்… எனக்கு இது வேணும். முடியுமா முடியாதா “ என பிடிவாதம் பிடிப்பாள். உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள். “நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்” எனும் நிலமை தான் இருக்க வேண்டுமே தவிர “அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது” என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.

இது ஒரு நீச்சல் போல. கரையில் இருந்து கொண்டே நீங்கள் ஆர்டர் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு அட்வைஸ் எனும் வார்த்தையே அலர்ஜி. காரணம் பெரும்பாலும் அவளுடைய விருப்பத்துக்கு நேரானதாகத் தான் இருக்கிறது அப்பாக்களின் அட்வைஸ். அதற்காக நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடாதா என்பதல்ல. அதை செயலில் காட்டவேண்டும். அல்லது நாசூக்காக விளக்க வேண்டும். பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.

“எங்க காலம் தான் பொற்காலம்… இப்போ எல்லாம் டெக்னாலஜி சாத்தான் ஆட்டம் போடுது” என பழமை பேசாதீர்கள். அது உங்கள் டீன் ஏஜ் மகளை உங்களிடமிருந்து ரொம்பவே விலக்கி வைத்து விடும். காலத்துக்கேற்ப மாறிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் மகள் ஏ.ஆர் ரஹ்மான் பிரியை என்றால் ஒரு ஐ-பாட் வாங்கி நிறைய ஏ.ஆர் ரஹ்மான் பாட்டை நிரப்பிக் கொடுங்கள். அவள் ரசிக்கட்டும். அப்போது தான் நீங்களும் உங்களை இளமையாக்கிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், “என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்..” என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும் ! அதை விட்டு விட்டு, “என்ன இவ சாப்பிடும்போ எஸ் எம் எஸ் அடிக்கிறா, பேசிகிட்டே எஸ் எம் எஸ் அடிக்கிறா, ஆர்குட், பேஸ் புக் என்னன்னவோ சொல்றா….” என புலம்பித் தள்ளாதீர்கள்.

இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள். அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள். உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.

அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள். மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது. நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது , அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.

நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள். சரி ! மதிக்கிறீர்கள். சரி ! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா ? இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில். டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது. சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.

டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும். சக தோழிகளின் கிண்டல், காதல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது. அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். “எதுவானாலும் கவலையில்லை … அப்பா இருக்கிறார்” எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை !

மகளிடம் நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவள் உங்களிடம் வெளிப்படையாய் பேசுவாள். உண்மையை உள்ளபடி பேசுவாள். அப்படி மனம் திறந்து பேசும் போது எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் – விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள். நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம். உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.

எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்.  அடிக்கடு உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். “அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது” எனும் நிலமை வந்தால் சிக்கல் தான். அவளுடைய படிப்பு, நட்பு, காதல் எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். “அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை” என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.  குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம். வெளுத்ததெல்லாம் பாலல்ல, பாய்சன் கூட உண்டு என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும், அதான் விஷயம்.

இந்த அப்பா மகள் பந்தத்தில் யாருக்கு அதிக பொறுப்பு என நினைக்கிறீர்கள் ? அப்பாவுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒரு பொறுப்பான அப்பா என்று அர்த்தம். டீன் ஏஜ் மகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுமையாக வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் தொட்டால் வெடிக்கும் பருவம். சின்னச் சின்ன மன வருத்தங்களுக்காக தற்கொலை செய்து கொள்வது கூட இந்த வயதில் சகஜம். அதனால் அவளை உசுப்பேற்றும் எந்த சண்டையையும் நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவளுடைய தோற்றம், அழகு, ஆடைகள் போன்றவற்றைக் கிண்டலடிக்காதீர்கள். மாறாக, பாராட்டுங்கள். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளை வலுவாக்கும்.

சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். பெரும்பாலான இளம் பெண்கள் புகை, போதை என பரிசோதித்துப் பார்ப்பது இந்தப் பதின் வயதில் தான். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.

ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும். பெண்ணின் திருமண வயது வரும்போது “அப்பா தான் உலகம்” எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும், பொறுமையான அணுகு முறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.

சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். “ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்” எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். “என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்”  எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.

இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.

கடைசியாக ஒன்று. “ என் அப்பாவைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்”  என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.  அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக ஜெயித்து விட்டீர்கள் என்று பொருள் ! ஜெயிக்க வாழ்த்துக்கள் !

பிடிச்சிருக்குன்னா ஓட்டு போடுங்க…