வெளியூர் போனா வீடு பத்திரமா இருக்குமா ?

 

“ஹாய் மாலதி எப்படி இருக்கே ?”

“நல்லா இருக்கேன் ரம்யா…நீ எப்படி இருக்கே ? என்ன ஒரு சர்ப்ரைஸ் கால்…”

“என்னத்த சொல்றது. ஒரே ஊர்ல இருக்கோம் ஆனாலும் பாத்து பல மாசங்களாச்சு. அப்பப்போ போன்ல நாலுவார்த்தை பேசறதோட சரி”

“என்ன பண்ண சொல்றே ? நான் பிரீயா இருக்கும்போ உனக்கு வேலை வந்துடுது. உனக்கு நேரம் இருக்கும்போ எனக்கு ஏதாச்சும் ஒரு வேலை வந்துடுது” ரம்யாவின் குரலில் நட்பின் சிரிப்பு வழிந்தது.

“சரி… எனி திங் இண்டரஸ்டிங் ?”

“ஆமா.. நான் இரண்டு வாரம் லீவ்ல குடும்பத்தோட ஊர் சுத்த போறேன்” ரம்யாவின் குரலில் உற்சாகம் சிறகு விரித்தது.

“வாவ்… ரெண்டு வாரமா ? எப்படி லீவ் கிடைச்சுது ? உன் மேனேஜர் தான் லீவே தராத கஞ்சப் பயலாச்சே…. “

“அதையேன்டி கேக்கறே… ஆறு மாசத்துக்கு முன்னாடியே அவர் கிட்டே கெஞ்சி கூத்தாடி ரெண்டு வாரம் லீவ் வாங்கியிருக்கேன். பாவம் குழந்தைங்க, வீட்லயே அடஞ்சு கிடந்து ரொம்பவே சோர்ந்து போயிட்டாங்க”

“ஆமாமா….  குழந்தைங்க கூட நேரம் செலவிடவே முடியறதில்லை. அப்பப்போ வெளியேவாவது கூட்டிட்டு போறது ரொம்ப நல்லது !” சொன்ன மாலதி தொடர்ந்தாள், “சரி எங்கே போறீங்க ?”

“தாய்லாந்து ! “

“வாவ்… கடல் கடந்த பயணமா ? சூப்பர்….”

“ஆனா மனசுக்குள்ள ஒரு சின்ன பயம் இருந்துட்டே இருக்குடி…” ரம்யா சொன்னாள்.

“என்னடி பயம் ? பறக்கறதுக்கு பயமா ?”

“சே…சே… அதெல்லாம் ஒண்ணுமில்லை. தினமும் நியூஸ் பேப்பரைப் படிக்கிறேன். பூட்டிய வீட்டில் கொள்ளை, பட்டப் பகலில் கொள்ளைன்னு ஒரே டென்ஷன். நான் வேற இரண்டு வாரத்துக்கு வீட்டை அம்போன்னு விட்டுட்டு போயிடப் போறேன். எவனாவது வந்து சுத்தமா தொடச்சிட்டு போயிடுவானோன்னு நினைச்சா பக்குன்னு இருக்கு” ரம்யாவின் குரலில் கவலை அடர்த்தியாய் இருந்தது.

“ஒரு ரெண்டு வாரத்துக்கு உன் வீட்ல யாரையாவது தங்க வைக்கலாமே ? சொந்தக்காரங்க, பிரண்ட்ஸ் இப்படி யாராச்சும்  ?”

“பாத்தேன். அப்படி யாரும் கிடைக்கல.”

“அப்போ உன்னோட பயம் நியாயமானது தான்.  ஆனா, கொஞ்சம் உஷாரா இருந்தா இந்த சிக்கலையெல்லாம் சமாளிக்கவும் வழி இருக்கு….” மாலதி சொன்னாள்.

“சரி… என்னென்ன பண்ணனும்ன்னு கொஞ்சம் ஐடியா கொடேன்” ரம்யா கேட்க மாலதி ஆரம்பித்தாள்.

முதல்ல வீட்ல இருக்கிற எல்லா எலக்ட்ரிக் சமாச்சாரத்தோட கனக்ஷனையும் உருவி விட்டுடு. சார்ஜர், டிவி, கம்ப்யூட்டர் எதுவுமே பிளக் பாயிண்ட்ல மாட்டியிருக்காம பாத்துக்கோ. எலக்ட்ரிக் தீ விபத்துல இருந்து தப்பிக்க இது ரொம்ப முக்கியம். சட்டு புட்டுன்னு காலநிலை மாறி மின்னல் ஏதாச்சும் வந்தா கூட எல்லா பொருளும் பாதுகாப்பா இருக்கும்.

அதேமாதிரி கேஸ் நல்லா மூடியிருக்கட்டும். பாதுகாப்பான இடத்துல கேஸ் சிலிண்டரை வைக்கிறது உத்தமம்.

எல்லா சன்னல்களையும், கதவுகளையும் பூட்டு வாங்கி இழுத்துப் பூட்டு. வீட்டை இலட்சக்கணக்கில செலவு பண்ணி கட்டிட்டு பூட்டு வாங்க கஞ்சத் தனம் பாக்கக் கூடாது. நல்ல பூட்டா பாத்து வாங்கணும். சிரமம் பார்க்காம எல்லா கொக்கி, தாழ்ப்பாளையும் போட்டு வை.

இப்பல்லாம் அலாரம் அடிக்கிற பூட்டு கூட இருக்கு. தப்பான சாவி போட்டா சத்தம் போடும். வேணும்ன்னா அதைக் கூட வாங்கி மாட்டலாம். முக்கியமான சமாச்சாரம், வீட்டுக் கீயை வீட்டுக்கு வெளியே ஒளிச்சு வைக்கிற சமாச்சாரமெல்லாம் வேண்டாம். உன்னை விட புத்திசாலிங்க தான் திருடங்க.

ரொம்ப பக்கத்துல இருக்கிற வீட்டுக்காரங்க கிட்டே மட்டும் நீ வெளியூர் போற விஷயத்தைச் சொல்லிடு. அப்படியே உன்னோட செல்போன் நம்பர்ஸ் எல்லாம் கொடு. அப்பப்போ வீட்டு மேல ஒரு கண் வெச்சுக்கச் சொல்லு.

அதுக்காக ஊர் முழுக்க நீ வெளியூர் போற விஷயத்தை டமாரம் அடிக்காதே. அது வம்பை விலை கொடுத்து வாங்கற மாதிரி. கொஞ்சம் உஷாரா தான் பேசணும். குறிப்பா கேண்டீன்ல, ஜிம்ல, கடைவீதில எல்லாம் இதுபத்தி பேசாதே.

ரொம்ப நம்பிக்கையான  நபர் ஒருத்தர் கிட்டே உன்னோட வீட்டுச் சாவி ஒண்ணைக் குடுத்து வை. ஏதாச்சும் அவசரமா வீட்டைத் திறக்க வேண்டியிருந்தா பயன்படும். முடிஞ்சா அப்பப்போ வீட்டை வந்து திறந்து பாத்துட்டுப் போகச் சொல்லு.

பேப்பர் காரப் பையன் கிட்டே மாசம் ஒண்ணாம் தியதில இருந்து பேப்பர் வேண்டாம்ன்னு சொல்லு. ஒரு வாரம், இரண்டு வாரத்துக்குப் பேப்பர் நிறுத்தினா நீ ஊர்ல இல்லேங்கற விஷயம் பேப்பர் காரப் பையனுக்கு தெரிஞ்சு போயிடும்.   அதே போல காலைல பால்க்காரர் கிட்டேயும் “கொஞ்ச நாளைக்குப் பால் வேண்டாப்பா..” ன்னு சொல்லி நிப்பாட்டி வை.

போஸ்ட் ஆபீஸ்ல போய் உன்னோட லெட்டர்ஸை எல்லாம் இரண்டு வாரம் கழிச்சு வந்து கலெக்ட் பண்ணிக்கறேன்னு சொல்லு. பெரும்பாலான போஸ்ட் ஆபீஸ்ல அந்த வசதி இருக்கு.

வீட்ல இருக்கிற போனோட வால்யூமை ரொம்ப கம்மியா வை. ரொம்ப நேரம் சும்மா அடிச்சிட்டே இருக்கிற மாதிரி வெளியாட்களுக்குத் தெரியக் கூடாது. அதே மாதிரி உன்னோட ஆன்சரிங் மெஷின்ல நீ வெளியூர் போற சமாச்சாரத்தை எல்லாம் போட்டு வைக்காதே.

வீட்டு முற்றத்துல சைக்கிள், பாத்திரம், விளையாட்டு இப்படிப்பட்ட ஐட்டம்ஸ் எல்லாம் போட்டு வைக்காதே. அதையெல்லாம் வீட்டுக்குள்ளே பத்திரமா பூட்டி வெச்சுடு.  வீட்ல இருக்கிற பணம், நகை எல்லாத்தையும் மறக்காம பேங்க் லாக்கர்ல வெச்சுடு. வீட்ல அலமாராவில போட்டு பூட்டி வைக்கிற வேலையே வேண்டாம்.
காரை தெருவிலே நிப்பாட்டுவேன்னா, யாரையாவது வெச்சு காரை அப்பப்போ எடுத்து இடம் மாத்தி நிப்பாட்டச் சொல்லு. ஆள் இருக்கிற மாதிரி ஒரு தோற்றம் கிடைக்கும்.

வீடு ஆள் நடமாட்டம் இருக்கும்போ எப்படி இருக்குமோ அதே மாதிரி இருக்கற மாதிரி செட் பண்ணு. குறிப்பா டோர் கர்ட்டன், விண்டோ கர்ட்டனெல்லாம் முழுசா இழுத்து மூட வேண்டாம். நார்மலா இருக்கட்டும். சன்னல் பக்கத்துல அலமாரா, டீவி இப்படிப் பட்ட பொருள் இருந்தா கொஞ்சம் தள்ளி வைக்கப் பாரு.

முடிஞ்சா கிளம்பறதுக்கு முன்னாடி வீட்டை ஹேண்டி கேம்ல வீடியோ எடுத்து வை. திரும்பி வந்தப்புறம் எல்லாம் அதனதன் இடத்துல இருக்கான்னு செக் பண்ண வசதியா இருக்கும்.

கடைசியா ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். உன்னோட ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல போய் நீ வெளியூர் போற விஷயத்தைச் சொல்லு. போலீஸ் விடியற்காலை, ராத்திரின்னு அடிக்கடி அந்தப் பக்கமா விசிட் அடிக்கும்போ உங்க வீட்டுப் பக்கத்துல இறங்கி ஒரு பார்வை பாத்துட்டு போவாங்க ! இதுக்கு கட்டணம் ஏதும் கிடையாது ! ரொம்ப பேருக்கு இப்படி ஒரு போலீஸ் சர்வீஸ் இருக்கிறதே தெரியாது !

சொல்லி விட்டு நீளமாய் பெருமூச்சு விட்ட மாலதி கேட்டாள் “என்ன ? சத்தமே காணோம் ? நான் சொல்றதெல்லாம் நோட் பண்ணிட்டியா இல்லையா ?”  

“நோட் பண்ணல, ஆனா எல்லாத்தையும் மொபைல்லயே ரெக்கார்ட் பண்ணிட்டேன். இதுல இவ்ளோ விஷயம் இருக்கிறது எனக்குத் தெரியவே இல்லைடி. நான் வெளியூர் போறதுக்கு முன்னாடி உன்னை வீட்ல வந்து பாக்கறேன்” ரம்யா சிரித்தாள்.

“ஓ.. வீட்டுக்கு வரியா ?”

“ஆமா… என்னோட வீட்டுச் சாவி ஒண்ணை உன் கிட்டே தான் குடுத்துட்டுப் போகப் போறேன். அப்பப்போ வந்து வீட்டைப் பாத்துக்கோ”

“அடிப்பாவி… கடைசில ஐடியா குடுத்தவளை வாட்ச்மேன் ஆக்கிட்டியே” மாலதி நகைச்சுவையாய் சொல்ல ரம்யா சிரித்தாள். அந்த சிரிப்பில்  உற்சாகம் மின்னியது

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க

ஷாரூக்கான் – எனது புதிய நூல்

பதிப்பகத் துறையில் புதிதாய்க் காலடி எடுத்து வைத்திருக்கிறது “பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்” எனும் நிறுவனம். பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிட உத்தேசித்திருக்கும் அந்த நிறுவனத்துக்காக நான் எழுதியிருக்கும் நூல்களில் ஒன்று ஷாரூக்கான், மேன் ஆஃப் பாசிடிவ் எனர்ஜி.

ஒரு நடிகரைப் பற்றி நான் எழுதுகின்ற முதல் நூல் இது தான். வெறுமனே ஷாரூக்கானின் சினிமாக்களைக் குறித்து அலசாமல் அவருடைய பன்முக ஆளுமையைச் சொல்ல முயன்றிருக்கிறேன். நிழல் உலக தாதாக்கள், மிரட்டும் சிவ சேனா, ஐபிஎல், விளம்பர மோகம் என பல கிளைகளில் பயணிக்கிறது இந்த நூல்.

நூலின் அட்டையில் பதிப்பகத்தார் இப்படிச் சொல்கிறார்கள்.

“சினிமா வாசனையே இல்லாத பின்னணியிலிருந்து வந்து சினிமாவைப் பிரமிக்க வைத்தவர் ஷாரூக். நூறு திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற பரபரப்பான திருப்பங்கள் நிறைந்தது அவருடைய வாழ்க்கையும், காதலும். ஷாரூக்கின் வாழ்க்கை, சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கான நம்பிக்கை டானிக்”

வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

வாசித்தால் கருத்துச் சொல்லுங்கள்.

பக்கங்கள் : 160

விலை : 130 ரூபாய்கள்

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட்

எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு,

ஆலந்தூர் , சென்னை – 16

9600086474