ITயில் வேலை வேண்டுமா : எனது புதிய நூல்.

 

நூலில் எனது முன்னுரை

சினிமாவில் வருவது போல நடுவில் ஒரு புள்ளி அதிலிருந்து தோன்றும் வட்டங்கள் என ஒரு பிளாஷ்பேக்கை நினைத்துப் பார்க்கிறேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கிராமத்திலிருந்து சென்னை நோக்கி ஆரம்பமாகிறது என்னுடைய பயணம். படித்தது கணினி பயன்பாட்டு அறிவியலில் முதுகலைப் பட்டம். ஆனால் வெளி உலகைப் பற்றி எதுவுமே தெரியாது. “இண்டர்நெட் கால்கிலோ என்ன விலை?”  எனுமளவுக்கு தான் என்னுடைய பொது அறிவு இருந்தது.

எந்த நிறுவனத்தில் போய் எப்படி வேலை கேட்பது ? யாரை அணுகுவது ? ஊஹூம். ஒன்றும் தெரியவில்லை. சென்னையில் வேலையைத் தேடோ தேடென்று தேடி அலைந்தும் ஒன்றும் தேறவில்லை. பதினைந்து பைசா போஸ்ட் கார்டில் “வேலை இருக்கிறது வாருங்கள்..” என்று கூப்பிட்டு பணம் பறிக்க முயன்ற சம்பவங்கள் நிறைய நடந்தன. கிராமத்திலிருந்து சென்னை வந்து மிரள மிரள விழித்தவனுக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தது அக்கா வீடு. அக்காவின் கணவர் தன்னுடைய சைக்கிளின் பின்னால் என்னை அமர வைத்து சென்னை முழுவதும் சுற்றி வருவார். “இவனுக்கு எப்படா வேலை கிடைக்கும், நான் எப்போ சைக்கிள் மிதிப்பதை நிறுத்துவேன்” என்று நினைத்திருக்கலாம். ஆனால் சொன்னதில்லை !

“பெங்களூர் போனா உடனே வேலை” ஏதோ பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு நண்பர்கள் உசுப்பேற்ற பெங்களூருக்குப் போனேன். அங்கே அவர்களுடைய பாஷை புரியாமல், இந்தி தெரியாமல் முழி பிதுங்கிய போது தான் ஒரு விஷயம் எனக்கு தெளிவாய்ப் புரிந்தது. “எனக்கு இங்கிலீஷ் கூட தெரியாது” !. அப்புறமென்ன ? அக்கா வீட்டில் சாப்பாடாவது சாப்பிடுவோம் என சென்னைக்கே திரும்பினேன்.

என்னிடம் ஒரு இ-மெயில் ஐடி கூட கிடையாதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எந்த பேப்பரிலெல்லாம் “ஆள் தேவை” என வருகிறதோ  எல்லாவற்றுக்கும் விண்ணப்பிப்பேன். ஒரு பயனும் இல்லை. விண்ணப்பித்தும் ஒரு வழியும் இல்லை. தேர்வில் வெற்றி பெற்றால் குரூப் டிஷ்கஷனில் அவுட். இல்லையேல் இண்டர்வியூவில் அவுட். ஒன்றும் இல்லையேல் ஹைச்.ஆர் இண்டர்வியூவிலாவது வெளியேற்றி விடுவார்கள் என்பது தான் எனது நிலமை. ஒரு கட்டத்தில் “பேசாமல் ஊருக்குப் போய் அப்பா அம்மாவைப் போல ஸ்கூலில் ஆசிரியராகலாம்” என நினைத்ததுண்டு.

என்னால் மாணவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்பட வேண்டாம் என கடவுள் நினைத்தாரோ என்னவோ, ஏதோ ஒரு சுக்ர திசையில் ஒரு வேலை கிடைத்தது. ஐ.டி என்றால் என்ன என்னும் அகரமே அப்போது தான் தெரிய ஆரம்பித்தது. நீண்ட நெடிய இந்த பதினைந்து ஆண்டு காலங்கள் ஐ.டி நிறுவனம் குறித்தான முழுமையான புரிதலைத் தந்து விட்டது. ஐந்தாறு ஆண்டுகாலம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என வேலை பார்த்ததில் உலக அளவிலான ஐ.டி பார்வைகளும், கலாச்சாரங்களும் புரிந்து விட்டன.

இந்தக் கால இடைவெளியில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை நேர்முகத் தேர்வு மூலமாகவும், கேம்பஸ் இண்டர்வியூ மூலமாகவும் நிறுவனத்துக்கு எடுத்த அனுபவமும் உண்டு. இப்போதும் கூட கிராமத்து மஞ்சள் பையுடனும், மானின் மிரட்சியுடனும் என் முன் வரும் மாணவர்களிடம் என்னுடைய பழைய முகத்தையும், பதட்டத்தையும், அறியாமையையும் தெளிவாய்ப் பார்க்கிறேன்.

கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தும் போது “இன்னும் அவர்கள் ஐ.டி துறை குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் தான் இருக்கிறார்கள்” என்பதையும் புரிந்து கொள்கிறேன். ஐடியில் வேலை வாங்க வேண்டும் எனும் ஆர்வமும் உத்வேகமும் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் வழிகாட்ட சரியான ஆள் இல்லை.

“ஐடியில் வேலை வாங்குவது எப்படி?” என்பது குறித்து ஒரு நூல் எழுதுங்களேன் என பிளாக் ஹோல் மீடியா இயக்குனர் யாணன் அவர்கள் என்னிடம் சொன்னபோது மறுக்கவில்லை. “இவ்ளோ நாள் இது எனக்குத் தோணாம போயிடுச்சே” என்று தான் நினைத்தேன். ஐ.டி வேலையைக் குறி வைக்கும் மாணவர்களுக்கான மிகச் சிறந்த வழிகாட்டியாய் இந்த நூலை எழுத வேண்டுமென முடிவெடுத்தேன். இந்த தலைப்புக்காகவும், வாய்ப்புக்காகவும் இயக்குனர் யாணன் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

மனோஜ் குமார், பென் கிருபா, சாய்ரமணன் எனும் மூன்று கணினி மென்பொருள் மேலாளர்கள் உதவ முன் வந்தார்கள். அவர்கள் கணினி துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக “பழம் தின்று கொட்டை போட்டவர்கள்”. அவர்களுடனான உரையாடல் இந்த நூலுக்கான வடிவத்தைத் தந்தது. அவர்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரபல கணினி நிறுவனங்களின் கேள்வித் தாள் மாடல்களைக் கொண்டு அற்புதமான கேள்விகள் தயாரிக்க உதவிய மனோஜ் குமாருக்கும், மணிகண்டன் பால்பாண்டிக்கும் ஸ்பெஷல் நன்றி.

ஐ.டியில் நுழையத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டியாய் இருக்கும் எனும் நம்பிக்கை எனக்குண்டு. இந்த நூல் குறித்த கருத்துக்களைப் பகிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வெல்ல வேண்டும் என்பதே என் நோக்கம் !

வெல்வீர்கள் என்பது நிச்சயம்

வாழ்த்துக்களுடன்

சேவியர்

வெளியீடு : பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடட்.

செல் : 9600123146

admin@blackholemedia.in

www.blackholemedia.in

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்