தமிழனின் மதம் சினிமா.

எனக்கு அஜித் மாதிரி ஒரு மாப்பிள்ளை தான் வேணும்” என்பது இளம் பெண்களின் தேசிய கீதம். “பட்டுன்னு பாத்தா பாவனா மாதிரி இருப்பாடா” என்பது இளைஞர்களின் சிலிர்ப்பு விவாதம். தமிழர்களுக்கு சினிமா வெறும் பொழுதுபோக்காக என்றைக்குமே இருந்ததில்லை. சினிமா தான் அவர்களுக்கு எல்லாமே ! எதையும் ஒப்பிட்டுப் பார்க்க அவர்களிடம் இருக்கும் அளவுகோல் சினிமா மட்டுமே.

அவர்கள் வியந்ததும், வியப்பதுமெல்லாம் சினிமா நாயகர்களைப் பார்த்துத் தான். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் என்ன நினைவுக்கு வருகிறது ? உண்மையைச் சொன்னால் நடிகர் சிவாஜியின் முகத்தைத் தாண்டி யாருக்கும் எதுவும் நினைவில் வந்து விடாது. விட்டால் நாற்று நட்டாயா… என ஆரம்பித்து பத்து நிமிடம் பேசி சர்வதேசப் பட்டம் வாங்கியது போல கர்வப் படுவான் தமிழன்.

கலையோடும், வரலாற்றோரும் நின்று விடவில்லை சினிமா. அரசியலையும் அது தானே நிர்ணயித்தது. வாக்குச் சீட்டுகளெல்லாம் வசீகர பிம்பங்களுக்காய் விழுந்த சினிமா டிக்கெட்களாகி விட்டன. “தலைவர் ஒரு வார்த்தை சொல்லட்டும் யாருக்கு ஓட்டு போடணும்ன்னு” என ஒட்டுக்கு முந்தின நாள் வரை காத்திருக்கும் கூட்டத்தையும் நாம் பார்க்கிறோமே !

கண்ணாடியில் நின்று தலை சீவும் போது உள்ளுக்குள் தெரியும் பிம்பத்தில் கூட தனது நாயகனோ, நாயகியோ தான் தெரிகிறார்கள். அதிலும் இளம் வயதினருக்கு சினிமா பிடித்தமான பேய். யார் யாரைப் பிடித்திருப்பது என்பதே தெரியாத அளவுக்கு பின்னிப் பிணைந்திருப்பார்கள். நடை உடை பாவனை பேச்சு அனைத்திலும் சினிமாவின் ஜிகினா சிதறும். ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு கடந்து போகும் மன நிலையில் சினிமாவைப் பார்க்க முடிவதில்லை. சினிமா அவர்களுக்கு அன்னியோன்யமானது. பூஜையறை முதல் படுக்கையறை வரை அவசியமானது.

இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலானவர்களின் புலன்களில் ஒன்றாகவே ஆகிவிட்டது சினிமா. அதனால் தான் சினிமாவுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் தமிழனை நேரடியாகப் பாதிக்கின்றன. இது சினிமா, இது வாழ்க்கை என பிரித்துப் பார்க்க தமிழர்கள் விரும்புவதில்லை. அதனால் தான் சினிமாவைத் தாண்டிய நடிகர்களின் வாழ்க்கை நமது வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்கிறது. இங்கே தான் இருக்கிறது மிகப்பெரிய சிக்கல்.

“திருமணம் தோல்வியில் தான் முடிகிறது. எனவே திருமணமே தேவையில்லை” என ஒரு நடிகர் சொல்கிறார். வித்தியாசமாய் சொல்லிவிட்டோம் எனும் திருப்தி அவருக்கு. கேட்கும் கூட்டம் என்ன செய்கிறது ? “அட ஆமால்ல… நச்சுன்னு சொன்னாருய்யா” என வாய் பிளந்து தலையாட்டுகிறது. இந்த பேச்சு எத்தனை குடும்பங்களுடைய நிம்மதியின் இடையே வந்து நிற்கப் போகிறதோ.

சினிமா எனும் பிரமிப்பு பிம்பம் இந்த ஜென்மத்துக்குக் கலையப் போவதில்லை. சினிமா என்பது மக்களுக்கு ஒரு மேஜிக் மாயாஜால உலகம் தான். தனது பிரிய நடிகனைப் பார்த்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டது போல சமாதியாகவும் பலருக்குச் சம்மதமே. அதனால் தான் சினிமாவும், சினிமா சார்ந்தவைகளும் ஆக்கப் பூர்வமானவற்றைப் பரிமாற வேண்டியது அவசியமாகிறது.

நான் இரத்த தானம் செய்கிறேன். ரசிகர்களும் இரத்ததானம் செய்யுங்கள் என்றால், உடனே இரத்ததானம் செய்ய ரசிகர்கள் ரெடி. நான் கண்தானம் செய்கிறேன், நீங்களும் செய்யுங்கள் என நடிகை சொன்னபோது கண்தானம் செய்தவர்கள் எக்கச் சக்கம். நற்பணிகள் செய்வோம் என அழைப்பு விடுக்கும் போது விழுந்தடித்துக் கொண்டு வருகிறார்கள் ரசிகர்கள். ரசிகர்களை தனது விருப்பத்துக்கு ஏற்ப வளைக்க நடிகனுக்கு மந்திரக் கோல் தேவையில்லை வெறும் நாக்கு போதும்!

இன்றைய சினிமா சூழல் எப்படி இருக்கிறது. நடிக்க வரும் பெண்களுக்கு கனவுகள் பல்லக்கு செய்கின்றன. சினிமா உலகில் நுழைந்த பின் பல்லக்குகள் பல்லிளிக்கின்றன. தங்களைச் சுற்றித் திரிபவர்கள் மனதோடு பேச விரும்பாதவர்கள் என்பது அவர்களுக்கு விரைவிலேயே புரிந்து விடுகிறது. அதற்குள் பாம்புகளின் விஷம் அவர்களை வீழ்த்திவிடுகிறது. “முழுக்க நனைந்தாகிவிட்டது இனிமேல் என்ன முக்காடு” என்றாகிப் போகிறது அவர்களுடைய மிச்சம் மீதி வாழ்க்கை !

ஷோபா, ஜெயலக்ஷ்மி, சில்க் ஸ்மிதா, திவ்ய பாரதி, மோனல், பிரதியுக்ஷா, சில்க் ஸ்மிதா என பட்டியலிட்டால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இவர்களெல்லாம் திரையுலகின் கனவுக் கன்னிகள். நிஜத்தின் வெப்பம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்கள். நிம்மதியான குடும்ப உறவு. நிஜமான நட்புகள். ஆரோக்கியமான வாழ்க்கை. நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சுதந்திரம். இவை எதுவுமே இல்லாமல் ஏக்கத்தின் முடிவில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் தான் இவர்கள். திரை நட்சத்திரங்கள் மட்டுமல்ல ஷாலினி, வைஷ்ணவி, ஷர்தா என சின்னத் திரை நடிகைகளும் இதில் அடக்கம்.

“ஆஹா இவர்களல்லவோ சூப்பர் தம்பதியர்” என தமிழன் வியந்து பார்க்கும் தம்பதியரின் வாழ்க்கை என்னவாகிறது ? பார்த்திபன்-சீதா, ஊர்வசி மனோஜ் கே ஜெயன், சரிதா – முகேஷ், செல்வராகவன் – சோனியா அகர்வால் இதெல்லாம் சில உதாரணங்கள். திருமணம் முடிந்த கையோடு கவிதை எழுதிக் குவித்தவர்கள் தான் இவர்கள். அப்புறமென்ன காமத்தின் கலம் காலியானபின் துணைகள் சுமைகளாகி விட்டார்கள்.

அப்பாவித் தமிழனுக்கோ இவையெல்லாம் பாடங்களாகிவிடுகின்றன. “புடிக்கலையா… டைவர்ஸ் பண்ணிக்கோப்பா…” என்பது சகஜ அறிவுரையாகி விடுகிறது. முன்பெல்லாம் டைவர்ஸாஆ என நீளமாய் அலறியவர்கள், இப்போதெல்லாம் அப்படியா என சின்னக் கொட்டாவியுடன் கேட்கின்றனர். கருத்து வேற்றுமை வந்தாலே “கட் பண்றது பெட்டர்” எனும் ஹை டெக் மனநிலை இன்று பரவி விட்டது. பொறுமையும் சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுத்தலும் ஆழமான குடும்ப வாழ்வின் அடிப்படைத் தேவைகள் என்பதெல்லாம் மலையேறிப் போச்சு.

டைவர்ஸ்களின் பெரும்பாலான காரணம் இன்னொரு தகாத உறவு எனும் போது இன்னோர் சிக்கலின் கதவு அங்கே திறக்கிறது. “உனக்கும் கல்யாணமாச்சு, எனக்கும் கல்யாணமாச்சு.. அதுக்கென்ன ஜாலியா இருக்கலாம்… “ என்பது லேட்டஸ்ட் மனநிலை. எப்போதுமே யாராவது உதாரணமாய் இருக்கிறார்கள், இப்போதைக்கு நயன் தாரா, பிரபுதேவா !. பிறர் மனை நோக்குதல் பாவம் என்றால் “லைஃபை என் ஜாய் பண்ணுப்பா” என்கிறார்கள். நமது வாழ்க்கை முறை கற்றுக் கொடுத்த குடும்ப மதிப்பீடுகள் எல்லாம் புதைகுழியில்.

முதலில் “திருமணமான நபரைக் காதலிப்பது தப்பில்லை” ! என்பார்கள். பின்னர் “ஊர் உலகத்துல இல்லாததையா நான் பண்ணிட்டேன்” என அது சகஜமாகிப் போகும். பின்னர் பின்னல் உறவுகள் பேஷனாகவே ஆகிப் போகும். கடைசியில் ஆயிரங்காலத்துப் பயிர் அத்தத்தை இழந்து இன்ஸ்டண்ட் காஃபி மாதிரி ஆகிப் போகிறது.

நகரங்களில் என்றில்லை. கிராமங்களில் கூட இந்த காற்று தான். இருக்கவே இருக்கின்றன 24 மணி நேர டி வி சீரியல்கள். தகாத உறவு இல்லாத சீரியல் ஏதேனும் இருக்கிறதா நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்களேன். ம்ஹூம், யாரோ யாரையோ ஏமாற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

நிஜமான நேசத்தை பாலியல் வந்து பண்டமாற்று முறையில் கவர்ந்து சென்று விட்டது. நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கைகளில் தமிழன் காட்டும் அதீத ஈடுபாடு கூட அவனுடைய குடும்ப வாழ்க்கையின் தோல்வியையே காட்டுகிறது. புவனேஷ்வரி எனும் நடிகை விபச்சாரம் செய்தார் என்றால் எல்லா செய்திகளையும் பின்னுக்குத் தள்ளி அது பேசு பொருளாகிறது. “எல்லாரும் இப்படித் தான்பா” என அவர்களுடைய உரையாடல்கள் விகாரத்தின் வடிகால்களாகின்றன.

விபச்சாரம் என்பது ஒரு பேன்ஸி தொழிலாகவே மனதுக்குள் விரிகிறது. “இதெல்லாம் தப்பில்லை போல” எனும் சிந்தனை உள்ளுக்குள் வந்தமர்கிறது. நடிகையைப் போல குட்டைப் பாவாடை அணியும் டீன் ஏஜ் பெண்ணுக்கு நடிகையைப் போல டேட்டிங் போவது பேஷனாகிறது ! கடைசியில் கல்லூரிப் பெண்ணின் ஜீன்ஸ் பேண்ட் போல கலாச்சாரமும் அங்காங்கே கிழிந்து தொங்குகிறது.

சினிமா எனும் ஊடகம் உருவாக்கியிருக்க வேண்டிய தாக்கங்களே வேறு. அவை சமூகத்தின் கட்டமைப்பில் நல்ல மாற்றங்களை உருவாக்கலாம். குடும்ப உறவுகளில் ஆழத்தை உருவாக்கலாம். நல்ல ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை சொல்லலாம். ஆனால் சினிமா இன்றைக்கு நாடியிருப்பது எதை? மலிவான விற்பனை உத்தியை. மக்களை மயக்கத்துக்கும், மோகத்துக்கும், கிறக்கத்துக்கும் தள்ளும் மூன்றாம் தர வேலையை. “இதெல்லாம் வேண்டாம்பா” என அக்கறையுடன் சொல்பவர்களும் கோமாளிகளாகிறார்கள். இந்த சூறாவளியில் வரும் சில பொக்கிஷங்கள் வந்த வேகத்தில் காணாமலேயே போய்விடுகின்றன.

சினிமாவைச் சுவாசிக்கும் தமிழர்களுக்கு திரை நட்சத்திரங்கள் கற்றுக் கொடுப்பவை இவை தான். தற்கொலை, விவாக ரத்து, பிறர் மனை நோக்குதல், விபச்சாரம் ! சினிமாவைத் தாண்டியும் தன்னைத் தமிழன் நேசிக்கிறான் எனும் பொறுப்புணர்வு பெரும்பாலானவர்களிடம் இல்லை. கலாச்சாரங்களை மீறுவதே கலையின் உச்சம் என்பது சிலரின் கணக்கு. என் தொழில் சினிமா, அதன் பிறகு நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பது மற்றவர்களின் பொறுப்பின்மை.

“தான் என்ன செய்தாலும் அதன் தாக்கம் மக்களிடம் இருக்கும்” என்பது இவர்களுக்குத் தெரியாததல்ல. நேர்மையுடனும் தூய்மையுடனும் நடக்க வேண்டியது தனது கடமை என இவர்கள் நினைப்பது இல்லை. “மக்கள் எப்படிப் போனால் எனக்கென்ன, எனக்கு இலட்சங்கள் சொந்தம்” எனும் அலட்சிய சிந்தனை தான் இதன் காரணம்.

சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் நட்சத்திரங்களுக்கு சமூகத்தின் நலனுக்கானதைச் செய்யும் தார்மீகக் கடமை உண்டு. இதை அவர்கள் உணரும் போது தமிழ் சமூகமும் செழித்து வளரத் துவங்கும்.

நன்றி :பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க…