77
இறைவாக்கினர் மலாக்கி கிமு 430களில் இறைவாக்கு உரைத்தவர். மலாக்கி என்றால் “எனது தூதர்” என்பது பொருள். எருசலேம் தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டு இப்போது ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆலயம் கட்டும்போது இருந்த பற்று மக்களிடையே இப்போது இல்லை.குருக்களும், மக்களும் தீமை செய்பவர்களாக மாற்றிவிட்டனர். அந்தக் காலகட்டத்தில் மலாக்கி இறைவாக்குரைத்தார்.
“மகன் தன் தந்தைக்கு மதிப்புத் தருவான். பணியாளன் தன் தலைவனுக்கு மரியாதை செலுத்துவான். நான் தந்தையானால் எனக்குரிய மதிப்பு எங்கே? நான் தலைவனானால் எனக்கு நீங்கள் அஞ்சாதது ஏன்?” என்று கடவுள் குருக்களைப் பார்த்துக் கேட்டார்.
ஆலயத்தின் மீதிருந்த அச்சமும், பக்தியும், பற்றும் விலகியதால் கோயிலில் குருடானவைகளைப் படைப்பதும், நொண்டியானதையும், தீட்டானவைகளைப் படைப்பதும் சகஜமாகி இருந்தது.
உங்களுடைய மாநிலத்தின் தலைவர் வந்தால் அவருக்கு பரிசளிக்கும் போது இப்படி கூனும், நொண்டியும், குருடுமானவற்றைக் கொடுப்பீர்களா ?
இப்படிப்பட்ட பலிகளை நீங்கள் இடுவதை விட ஆலயத்தின் கதவை இழுத்து மூடுங்கள். உங்கள் காணிக்கைகள் எதுவும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். என்ற கடவுளின் கோபத்தை மலாக்கி குருக்களிடம் எடுத்துரைத்தார்.
குருக்கள் தங்களுடைய பணிகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அவர்கள் ஓரவஞ்சனையற்ற போதனையை மக்களுக்கு உரைக்க வேண்டும். தீமையற்ற மனமும், நேர்மையும் அவர்களிடம் இருக்க வேண்டும். நெறிகேட்டில் இருக்கும் மனிதர்களை நல்வழிப்படுத்தும் சிந்தனை அவர்களுக்கு இருக்க வேண்டும். என குருக்களின் குணாதிசயங்களைக் கடவுள் நினைவூட்டுகிறார்.
“மக்களே, நாம் எல்லோரும் ஒரே கடவுளின் பிள்ளைகள். நம் அனைவருக்கும் தந்தை இறைவன். அப்படியிருக்கையில் ஏன் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கிறோம் ?” என மக்களைப் பார்த்து கேட்டார் மலாக்கி.
குடும்ப வாழ்க்கையின் மகத்துவத்தையும், குடும்பங்கள் இணைந்தே வாழவேண்டியவை எனும் இறைவனின் அடிப்படை திட்டத்தையும் மலாக்கி தெளிவாக எடுத்துரைத்தார்.
“மணமுறிவை நான் வெறுக்கிறேன். இளமையில் நீ செய்த திருமணத்துக்கு நான் சாட்சியாய் இருந்தேன். அப்படியிருக்க உன் துணைவிக்கு ஏன் நம்பிக்கைத் துரோகம் செய்கிறாய் ? உங்களை ஒன்றாக இணைத்த எனது திட்டத்தை விட்டு ஏன் விலகுகிறீர்கள் ? மணமுறிவு செய்கிறவன் எவனும் வன்முறையை மேலாடை கொண்டு மறைக்கிறான். எச்சரிக்கையாய் இருங்கள். மண முறிவு செய்யாதீர்கள்” என்று கடவுள் மலாக்கி மூலம் பேசினார்.
இறைமகன் இயேசுவைக் குறித்தும், அவருக்கான ஆயத்தத்தைக் குறித்தும் கூட இவர் இறைவாக்கு உரைத்தார்.
“இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்” என்று திருமுழுக்கு யோவானைக் குறித்து பேசியது மலாக்கி இறைவாக்கினர் தான்.
கடவுளின் வருகை நெருங்கி வருகிறது என்பது இவருடைய இறைவாக்கின் இன்னொரு அம்சமாக இருந்தது.
“இதோ கடவுளின் நாள் வருகிறது. அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார் ? புடமிடுபவரின் நெருப்பென அவர் இருப்பார். சூனியக்காரர், விபச்சாரர், பொய்யர், தொழிலாளர்களை வஞ்சிப்போர், கைம்பெண் அனாதை போன்றோரை கொடுமைப்படுத்துவோர், கடவுளுக்கு அஞ்சாதோர், ஆகிய அனைவர் மேலும் இதோ தண்டனைத் தீர்ப்பு வருகிறது”.
“சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர். வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது. முற்றிலும் சுட்டெரித்து விடும்”
“என்னிடம் திரும்பி வாருங்கள். நான் உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னோடு இருந்தீர்கள். இப்போது விலகி விட்டீர்கள். மீண்டும் என்னிடம் வாருங்கள். உங்களை மட்டுமல்ல, உங்கள் நிலங்களை, விளைச்சலை எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பேன். எனக்கு அஞ்சி நடப்போரின் பெயர் வாழ்வின் நூலில் இருக்கும். ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவதுபோல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன் ” என கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்தார் மலாக்கி.
மலாக்கி நூல் மூன்று முக்கிய பாடங்களை நமக்கு கற்றுத் தருகிறது.
- புதிய ஏற்பாட்டின் காலத்தில் கடவுளின் ஆலயம் என்பது நமது உடலும், கிறிஸ்துவைத் தலையாகக் கொண்ட இறைமக்களின் கூட்டமும் தான். இயேசு எனும் திராட்சைக் கொடியில் நாம் இணைந்தே இருப்பதும், அவரில் கனிகொடுப்பதும் இன்றைய வாழ்வின் தேவைகள்.
- கடவுள் .. கணவன்…மனைவி எனும் மூன்று புள்ளிகளால் உருவான ஆன்மீக ஆலயங்களாக குடும்பங்களும் அமையவேண்டும். அதில் பிரிவுகள் எழாமல் குடும்பத்தைக் கட்டியெழுப்பவேண்டும்.
- கடவுளை விட்டு பாவம் நம்மை விலக்கி வைத்தாலும், அதிலேயே மூழ்கி விடாமல் இறைவன் மீது கொள்ளும் அன்பினாலும், அவரது வருகையின் மீது கொண்ட நம்பிக்கையினால் நாம் மீண்டெழுந்து அவரிடம் செல்ல வேண்டும்.
இந்த பாடங்களை இறைவாக்கினர் மலாக்கியிடமிருந்து கற்றுக் கொள்வோம்.