நிஜம் நிழலாகிறது

 

 

Wrapper - Sigaram K Balachander

என்னது !!

நிஜமாவா ?

வாட்….!!!

ஓ..மை..காட்….

2014 டிசம்பர் இருபத்து மூன்றாம் தியதி உலகெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களின் உதடுகள் அதிர்ச்சியின் உச்சத்தில் அசைந்த‌ன‌. அவ‌ர்க‌ளால் ந‌ம்ப‌ முடிய‌வில்லை. கிள்ளிப் பார்த்துக் கொண்டார்க‌ள். நிஜ‌ம் தான். இனிமேல் அவ‌ர் ந‌ம்முட‌ன் இல்லை. அவ‌ர்க‌ளுக்கு நிஜ‌த்தை ஏற்றுக்கொள்ள‌வே நிறைய‌ நேர‌ம் பிடித்த‌து.

இன்னும் இரண்டு தினங்களில் கிறிஸ்மஸ். கிறிஸ்து பிறப்பை வரவேற்க வீடுகளெங்கும் நட்சத்திரங்கள் தொங்கின. அந்த சூழலில் நட்சத்திரங்களோடு வாழ்ந்து நட்சத்திரமாய் ஜொலித்த ஒரு பளீர் நட்சத்திரம் உதிர்ந்து விட்டிருக்கிறது. இயேசு பிற‌ந்த‌போது வானில் வால் ந‌ட்ச‌த்திர‌ம் தோன்றிய‌து வ‌ர‌லாறு. இவ‌ருடைய‌ ப‌டைப்புக‌ள் தோன்றிய‌ போதெல்லாம் புதுப் புது திரை ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் தோன்றிய‌து விய‌ப்பின் குறியீடு.

அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ தொலைக்காட்சி ரிமோட்க‌ள் அழுத்த‌ப்ப‌ட்ட‌ன‌. மின் ப‌த்திரிகைக‌ள், இணைய‌ த‌ள‌ங்க‌ள் ப‌ர‌ப‌ர‌ப்பாயின‌, ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் இய‌க்குன‌ர் சிக‌ர‌ம் ப‌ல‌ருடைய‌ புர‌ஃபைல் பிக்ச‌ராக‌ மாறிப் போனார். இர‌ங்க‌ல் செய்திக‌ளால் இணைய‌மே அழுது புர‌ண்ட‌து.

ம‌ல‌ர்க‌ள் உதிர்வ‌து க‌வ‌லைய‌ளிக்கும் விஷ‌ய‌ம்

செடியே உதிர்வ‌து கலங்க வைக்கும்விஷ‌ய‌ம்.

தோட்ட‌மே வீழ்வ‌து க‌திக‌ல‌ங்க‌ வைக்கும் விஷ‌ய‌ம்

வாழ்க்கை எவ்வ‌ள‌வு நிஜ‌மோ அதை விட‌ அதிக‌ நிஜ‌த் த‌ன்மை வாய்ந்த‌து ம‌ர‌ண‌ம். ம‌ர‌ண‌த்தின் க‌த‌வுக‌ளைத் திற‌க்காம‌ல் யாருடைய‌ வாழ்க்கையும் முடிவ‌டைவ‌தில்லை. சில‌ ம‌ர‌ண‌ங்க‌ள் ச‌ல‌ச‌ல‌ப்புக‌ளை உருவாக்குகின்ற‌ன‌. சில‌ ம‌ர‌ண‌ங்க‌ள் அதிர்ச்சிப் பேர‌லைக‌ளை எழுப்புகின்ற‌ன‌. சில‌ ம‌ர‌ண‌ங்க‌ள் எந்த‌ வித‌மான‌ ச‌ல‌ன‌ங்க‌ளையும் ஏற்ப‌டுத்தாம‌ல் க‌ட‌ந்து போகின்ற‌ன‌.

பால‌ச‌ந்த‌ர் ஒரு தோட்ட‌மாய் வாழ்ந்தார். அந்த‌த் தோட்ட‌த்தில் தான் எத்த‌னை வித‌மான‌ ம‌ல‌ர்க‌ள் உருவாகின‌ ! பால‌ச‌ந்த‌ர் ஒரு வான‌மாக‌ இருந்தார் அதில் தான் எத்த‌னை எத்த‌னை ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் மின்னின‌!

ஒட்டுமொத்த‌ திரையுல‌க‌மே ப‌த‌றித் த‌வித்த‌து. புக‌ழின் உச்சியில் இருக்கும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளெல்லாம் த‌ங்க‌ளுடைய‌ இமேஜை ம‌ற‌ந்து க‌ண்ணீர் விட்டுக் க‌த‌றினார்க‌ள். மைலாப்பூரில் இருந்த‌ அவ‌ருடைய‌ வீட்டை நோக்கி ர‌சிக‌ர்க‌ளும், திரையுல‌க‌ பிர‌முக‌ர்க‌ளும் விழுந்த‌டித்துக் கொண்டு ஓடினார்க‌ள்.

திரையுல‌க‌ம் ஸ்த‌ம்பித்த‌து. ப‌ட‌ப்பிடிப்புக‌ளெல்லாம் அப்ப‌டியே நிறுத்த‌ப்ப‌ட்ட‌ன‌. கிளிச‌ரின் தேவைப்ப‌டாம‌லேயே க‌ண்க‌ளெல்லாம் த‌ண்ணீரில் மித‌ந்த‌ன‌.

“திரையுலகம் உள்ளவரை இவருடைய‌ புகழ் மேலும், மேலும் வளரும். புதிய திருப்பங்கள் பலவற்றை கலைத்துறையில் ஏற்படுத்தியவர் இவ‌ர்” என‌ தி.மு.க‌ த‌லைவ‌ர் டாக்ட‌ர்.க‌லைஞ‌ர் க‌ருணாநிதி க‌சிந்துருகினார்.

“அன்பும், அடக்கமும் கொண்ட எளிய மனிதர் இவர். கலை உலக வாழ்கையை திண்ணை நாடகங்கள் மூலம் துவக்கியவர். எண்ணற்ற தேசிய, மாநில விருதுகளை பெற்றவர். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்துள்ள பங்கு ஈடு செய்ய முடியாது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் விட்டுச் சென்றுள்ள இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என‌ துய‌ர‌த்தை வெளிப்ப‌டுத்தினார் அதிமுக‌ பொதுச்செய‌லாள‌ர் செல்வி.ஜெய‌ல‌லிதா.

“இவர் இயக்கிய மரோ சரித்ரா தெலுங்கின் சிறந்த படங்களில் ஒன்று. எங்கள் விசாகபட்டினம் அவருக்கு பிடித்த நகரம். அவரது கனவு நகரம். அந்த நகரம் புதுப்பொலிவு பெறுவதை பார்க்காமலேயே அவர் சென்று விட்டாரே” என கண்ணீர் விட்டார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

“இவர் கலையுலகிற்கு உணர்வோடு ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூறத்தக்கது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என‌ க‌ல‌ங்கினார் தேமுதிக‌ த‌லைவ‌ர் விஜ‌ய‌காந்த்.

“இவருடைய‌ புகழ் தமிழ் சினிமாவில் நேற்று, இன்று, நாளை வரலாறாக நிற்கும். எளிமைக்கும், பண்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். எங்கள் குடும்பத்தோடு 40 ஆண்டுகள் நெருக்கமாக இருந்தவர்” என‌ நெகிழ்ந்தார் த‌மாகா த‌லைவ‌ர் வாச‌ன்.

“இவருடைய‌ மறைவு திரைதுறைக்கு பேரழிப்பு. திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் இவர். கருணாநிதி மீது அளவுகடந்த பற்றும் பாசமும் கொண்டவர். திரைதுறை மட்டுமின்றி சமூக பணியிலும் அதிக அக்கறை கொண்டவர். நான் மேயராக இருந்த போது அதிகளவில் ஊக்கமளித்தவர் அவர்” என‌ நினைவுக‌ளில் க‌ல‌ங்கினார் ஸ்டாலின்.

”தமிழக கலை உலகத்தின் ஈடற்ற படைப்பாளி மறைந்தார்! என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், அளவற்ற துக்கமும் அடைந்தேன். அவரது புதல்வர் மறைந்த துக்கம் கேட்க அவரது இல்லம் சென்றபோது, அவருடன் மூன்று மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நாடகத்துறையில் அவர் படைத்த நாடகங்களும், வெள்ளித்திரையில் அவர் உருவாக்கிய அமரகாவியங்களும் என் மனதை முழுமையாக ஈர்த்ததைப்பற்றி சொன்னேன்.

இன்றைய சமூகத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் காலத்தைக் கடந்து வாழும். அவரை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.” என புலம்பினார் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ

இப்ப‌டி எதிர் எதிர் துருவ‌ங்க‌ளாக‌ இருக்கும் அத்த‌னை த‌லைவ‌ர்க‌ள் அந்த‌ ம‌ர‌ண‌த்தினால் க‌திக‌ல‌ங்கிப் போனார்க‌ள். கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் எல்லோருக்கும் அவ‌ரிட‌ம் இருந்த‌ ம‌ரியாதை. எந்த‌ வித‌மான‌ அர‌சிய‌ல் சிக்க‌ல்க‌ளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாம‌ல் இருந்த‌ அவ‌ருடைய‌ தூய்மையான‌ க‌லைப்ப‌ய‌ண‌ம்.

இய‌க்குன‌ர் சிக‌ர‌ம் என்று சொன்னால் போதும் த‌மிழ‌க‌ம் ந‌ன்க‌றியும். அவ‌ருடைய‌ பெய‌ரைச் சொல்ல‌ வேண்டிய‌ அவ‌சிய‌மே இல்லை. அந்த‌ அள‌வுக்கு த‌ன‌து ப‌டைப்புக‌ளைப் பேச‌ வைத்து அமைதி காத்த‌வ‌ர் பால‌ச‌ந்த‌ர்.

பாலசந்தரின் மகன் பால கைலாசம் 54வது வயதில் நிமோனியா காய்ச்சலில் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். சின்னத்திரை தயாரிப்புகளில் பலரை அறிமுகம் செய்தும், பல வெற்றிகளைக் கொடுத்தும் பிரபலமாக இருந்தவர் பால கைலாசம். அவருடைய மறைவு பாலசந்தரை வெகுவாகப் பாதித்தது. மகன் இறந்த அதே ஆண்டு, சில மாதங்களிலேயே அவரும் பிரிந்து சென்றது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரட்டைத் துயரமாய் மாறிப் போனது..

“இயக்குனரின் மறைவு திரையுலகிற்கு பெரிய இழப்பு, அவர் எனக்கு குரு மட்டுமல்ல அப்பா மாதிரி. அப்படித்தான் என்னை கடைசிவரை பார்த்தார். ஒரு நடிகனாக எப்போதும் என்னை பார்த்ததில்லை. என் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்தார். அவரை இழந்தது என்னை நானே இழந்த மாதிரி உணர்கிறேன். இன்னொரு கே.பி.சாரை திரையுலகில் பார்க்கவே முடியாது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என‌ சூப்ப‌ர் ஸ்டார் க‌ண்ணீர் விட்டுப் பேசிய‌தில் துளிய‌ள‌வும் க‌ல‌ப்ப‌ட‌ம் இல்லை. கேபி எனும் பெய‌ரைக் கேட்டாலே கையைக் க‌ட்டிக்கொண்டு எழும்பி நிற்கும் ப‌ணிவு சூப்ப‌ர் ஸ்டார் ர‌ஜினிகாந்திட‌ம் எப்போதும் இருந்த‌து.

“ஐயா.. ந‌ன்றி. நீங்க‌ள் கொடை வ‌ள்ள‌ல் ஐயா. உங்க‌ளுக்கு ந‌ன்றி சொல்லி தீருமா ?” என‌ அழுதார் உல‌க‌நாய‌க‌ன் க‌ம‌ல‌ஹாச‌ன். உல‌க‌மே கொண்டாடும் ந‌டிக‌னாக‌ இருந்தாலும் பால‌ச‌ந்த‌ரின் முன்னால் ஒரு குழ‌ந்தையாய் க‌ல‌ந்தும், கரைந்தும் விடும் த‌ன்மை க‌ம‌லிட‌ம் இருந்த‌து.

இப்ப‌டி ஒட்டு மொத்த‌ திரையுல‌கையும் க‌ல‌ங்க‌டித்த‌ கே.பால‌ச‌ந்த‌ர் க‌ட‌ந்து வ‌ந்த‌ பாதை எப்ப‌டி இருந்த‌து ?

(தோழமை வெளியீடு )

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன ?

kvr5

ஒரு சாது தனது சீடர்களுடன் நதிக்கரைக்கு வந்தார். அப்போது ஒரு தம்பதியர் கடும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள். சாது நின்றார். தனது சீடர்களிடம் கேட்டார்.

“ஏன் அவர்கள் கத்துகிறார்கள் தெரியுமா ?”

” அவர்கள் நிதானம் இழந்து விட்டார்கள். அதனால் கத்துகிறார்கள்” சீடர்கள் சொன்னார்கள்.

“ஆனால் அவர்கள் அருகருகே தானே நிற்கிறார்கள் !! ஏன் கத்த வேண்டும் ? மெதுவாய் சொல்லலாமே ” குரு கேட்டார்.

சீடர்கள் ஏதேதோ பதில்களைச் சொன்னார்கள். ஆனால் எதுவுமே சாதுவுக்கு திருப்திகரமாக இருக்கவில்லை. கடைசியில் அவரே அதற்கான பதிலைச் சொன்னார்.

” இருவர் கோபம் கொள்ளும் போது அவர்களுடைய இதயம் தூரமாய்ச் சென்று விடுகிறது. தூரத்தில் இருப்பவர்களுடன் கத்தி தானே பேசவேண்டும், அதனால் தான் கத்துகிறார்கள்.  அதே போல இரண்டு பேர் நேசத்தில் இருக்கும் போது ரொம்பவே நெருங்கி வருகிறார்கள். எனவே அவர்கள் மென்மையாய்ப் பேசினால் போதுமென்றாகி விடுகிறது. இன்னும் நெருங்கி உறவில் இறுக்கமாய் இருக்கும் போது இடைவெளியே இல்லாமல் போய் விடுகிறது. அவர்கள் பேசவே தேவையில்லை. மௌனமே பாஷையாகி அவர்களுக்குள் உலவும்”  குரு சொல்லச் சொல்ல சீடர்கள் மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

குரு கடைசியாகச் சொன்னார்,

“எனவே… விவாதிக்கும் போதோ, சண்டையிடும் போதோ உங்கள் இதயம் தூரமாய்ப் போய்விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.இதயங்களைத் தூரமாய் அனுப்பி வைக்கும் வார்த்தைகளைப் பேசாதீர்கள். இல்லாவிட்டால் இந்த தூரம் மிக அதிகமாகி திரும்பி இணையும் பாதையையே மறந்து விடும்”

குரு தன் சீடர்களிடம் சொன்னதை சண்டையிட்ட தம்பதியர் கேட்டனர். அவர்களுடைய மனதுக்குள் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. அமைதியானார்கள்.

குரு அவர்களை நெருங்கிச் சொன்னார். ‘நெருப்பு நல்லது தான். நீங்கள் பற்ற வைப்பதை, நீங்களே அணைக்க முடிந்தால் நெருப்பு நல்லது தான். அணைக்க முடியாதபடி எரிய விட்டாலோ அது பேரழிவைத் தராமல் அழியாது”.

தம்பதியர் தங்கள் தவறை உணர்ந்து மனம் திருந்தினர், இணைந்து நடந்தனர்.

அன்பின்றி அமையாது உலகு. அன்பின்றி அமையாது குடும்பம். ஒரு க‌ண‌வ‌னின் க‌ன‌வு அன்பு என்ப‌தைத் த‌விர‌ வேறு என்ன‌வாக‌ இருக்க‌ முடியும் ? வீட்டுக்கு வெளியே வெறுப்புக‌ளைக் கூட‌ அவ‌ன் விருப்போடு பெற்றுக் கொள்வான், வீட்டில் அன்பு க‌ரை புர‌ண்டு ஓடினால் போதும்.

பறவைகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிகின்றன. கிளைகளை விட்டுக் கிளைகளுக்குத் தாவுகின்றன. மரங்களை விட்டு மரங்களுக்குத் தாவுகின்றன. கானகத்தை விட்டுக் கானகத்துக்குத் தாவுகின்றன. மாலையில் அவை தனது கூடுகளில் குஞ்சுகளோடு அமர்ந்து நிம்மதி நித்திரையை அடைகின்றன.

விழிப்போம் எனும் நம்பிக்கை நம்மை நிம்மதியாய் உறங்க வைக்கிறது. கூடடைவோம் எனும் நம்பிக்கை சிறகுகளை நில்லாமல் பறக்க வைக்கிறது. குடும்பமும் அப்படியே. வீடடைதல் என்பது மீட்படைதல் போல. அத்தகைய நிம்மதியே கணவன் காணும் முதல் கனவு. தனது சோர்வுகளை, கவலைகளை, இயலாமைகளை, நிராகரிப்புகளை மறந்து நிம்மதியாய் இருக்க நினைக்கும் இடம் வீடு. அத்தகைய நிம்மதியான குடும்பம் அமையும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஆணின் கனவுகள் தனது குழந்தைகளின் எதிர்காலத்தையே கண்களில் வைத்திருக்கும். அங்கே மனைவி ஒதுக்கப்படுவதாய் பெண்கள் மனம் வெதும்புவதுண்டு. உண்மையில், திருமணம் என்பது ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்குகிறது. ஆணும் பெண்ணும் இரு உடல் ஓரு உயிராய் இணைந்து செயலாற்ற வேண்டும். அப்படி கணவனின் கனவுகளுக்கு தோள் கொடுக்கும் ம‌னைவி வேண்டும் என்ப‌து ஆண்க‌ளின் க‌ன‌வுக‌ளில் முக்கிய‌மான‌து.

ஆணும் பெண்ணும் இர‌ண்டு சிற‌குக‌ளாக‌ மாறி குடும்ப‌ம் உட‌லைச் சும‌ந்து செல்ல‌ வேண்டும். ஆணும் பெண்ணும் இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ளாக‌ மாறி நாண‌ய‌த்துக்கு ம‌திப்பு கூட்ட‌ வேண்டும். ப‌க‌லின் வெப்ப‌மாய் ஆண் மாறும் போது, இர‌வின் த‌ண்மையாய் பெண் மாற‌ வேண்டும். வெப்ப‌மாய் பெண் மாறினால் நில‌வாய் ஆண் மாற‌ வேண்டும். இப்ப‌டி இணைந்து ப‌ய‌ணிக்கும் த‌ண்ட‌வாள‌ங்க‌ள் போல‌ இணைந்தே திரியும் ஒரு அற்புத‌ வாழ்க்கை க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் சிற‌ப்பிட‌ம் பிடிக்கும்.

பெரும்பாலான ஆண்களின் கனவுகளில் ஒரு பத்து கனவைப் பொறுக்கி எடுத்தால் இவை இடம் பெறலாம்.

1

நேர‌டியாக‌ எதையும் பேசுவ‌து ஆண்க‌ளின் இய‌ல்பு. பாத்திர‌த்தின் ச‌த்த‌த்திலோ, க‌த‌வை சாத்தும் வேக‌த்திலோ, பிள்ளைக‌ளைத் திட்டும் வார்த்தைக‌ளிலோ கோப‌த்தைக் காட்டுவ‌து பெண்க‌ளின் இய‌ல்பு. எதையும் நேர‌டியாக‌ப் பேசும் நிலைக்கு த‌ன‌து ம‌னைவி வ‌ர‌வேண்டும். அதுவும் க‌ண்க‌ளில் அன‌லோடு வ‌ராம‌ல் நிழலோடு வ‌ர‌வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் நிச்ச‌ய‌ம் உண்டு.

2

ப‌க்க‌த்து வீட்டுக் க‌தைக‌ளிலிருந்தோ, சீரிய‌லில் வ‌ரும் குடும்ப‌ங்க‌ளிலிருந்தோ, தூர‌த்துச் சொந்த‌க்கார‌னின் ப‌ஜ்ஜி உரையாட‌ல்க‌ளிலிருந்தோ, அம்மாக்க‌ளின் உர‌ச‌ல்க‌ளில் இருந்தோ அடுத்த‌ ச‌ண்டைக்கான‌ நெருப்பை ம‌னைவி பெற்று விட‌க் கூடாது எனும் எதிர்பார்ப்பு இல்லாத‌ ம‌னித‌ன் இருக்க‌ முடியுமா ?

3

” ப‌திலை ந‌ம்ப‌ப் போவ‌தில்லை” எனும் முடிவுட‌ன், “ஏங்க‌ லேட்டு…” என‌க் கேட்கும் ம‌னைவிக்குப் ப‌தில் சொல்லும் உல‌க‌ ம‌கா ச‌ங்க‌ட‌த்திலிருந்து த‌ப்பிக்க‌ வேண்டும் எனும் க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் இருக்க‌ முடியுமா ?

4

ந‌ம‌க்கு ம‌ட்டும் ஏன் ம‌ற‌தியை ஆண்ட‌வ‌ன் கொடுத்தான். பெண்க‌ளுக்கு ம‌ட்டும் ஏன் ஞாப‌க‌ ச‌க்தியை அள‌வுக்கு அதிக‌மாக‌ கொடுத்தார். “கெட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளை உட‌னே ம‌ற‌ந்து ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் ம‌ன‌சுல‌ வெச்சுக்க‌ மாட்டாளா” என் ம‌னைவி ? எனும் க‌ன‌வில்லாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

5

வீட்டுக்காக‌, ம‌னைவிக்காக‌ என்ன‌ செய்தாலும் ஒரு சின்ன‌ பாராட்டு கூட‌ கிடைக்க‌ மாட்டேங்குது. ஆனா ஒரு சின்ன‌ த‌ப்பு ப‌ண்ணினா கூட‌ போஸ்ட‌ர் அடிச்சு ஒட்டாத‌ குறையா ச‌ண்டை ந‌ட‌க்குது. எப்போ ந‌ம்ம‌ ம‌னைவி நாம‌ ப‌ண்ற‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளைப் பாராட்ட‌ப் போறாங்க‌ ? எனும் க‌ன‌வு வ‌ராம‌ல் போகுமா என்ன ?

6

பிள்ளைங்க‌ள‌ பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா அம்மாவைப் பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா தோழிக‌ளைப் பாக்க‌ வேண்டிய‌து. ஒண்ணும் இல்லேன்னா சீரிய‌லைப் பாக்க‌ வேண்டிய‌து. எப்போ தான் ந‌ம்ம‌ ம‌னைவி ந‌ம்மைப் பார்ப்பாங்க‌ எனும் எதிர்பார்ப்பு க‌ல‌ந்த‌ க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் யார் ?7

தாம்ப‌த்ய‌ம் என்ப‌து ஆன‌ந்த‌த்தின் ப‌கிர்த‌ல். அது வ‌லுக்க‌ட்டாய‌மாய் எழுதி வாங்கும் உயில்ப்ப‌த்திர‌ம் அல்ல‌. அதில் உட‌ல்க‌ளை விட‌ அதிக‌ம் உண‌ர்வுக‌ள் பேச‌ வேண்டும். அதை ஒரு ஆயுத‌மாக‌வோ, ப‌ழி வாங்கும் யுத்தியாக‌வோ ம‌னைவி ப‌ய‌ன்ப‌டுத்த‌க் கூடாது எனும் க‌ன‌வு க‌ண‌வ‌னுக்கு இல்லாமல் போகுமா.

8

என்னை புரிஞ்சுக்க‌வே மாட்டீங்க‌” என‌ ம‌னைவியின் குர‌ல் ஒலிக்காத‌ வீடுக‌ள் இருக்க‌ முடியாது. புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ள‌வில்லை என்றே ம‌னைவிக‌ள் சொல்வார்க‌ள். புரிந்து கொள்வ‌து என்ப‌து அவ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை, சொல்வ‌த‌ற்கெல்லாம் ஆமாம் போடுவ‌து. இந்த‌ நிலை மாற‌ வேண்டுமென‌ ப‌க‌ல் க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டோ ?

9

ந‌ன்றி என்ப‌து ரொம்ப‌ காஸ்ட்லி விஷ‌ய‌மா என்ன‌ ? ஒரு சின்ன‌ ந‌ன்றி கூட‌ சொல்ல‌ மாட்டாங்க‌ளா ந‌ம்ம‌ மனைவி என‌ புல‌ம்பாத( ம‌ன‌துக்குள் தான் ) க‌ண‌வ‌ன் யார் ? ம‌னைவி ந‌ம் செய‌லுக்கு ந‌ன்றி சொல்ல‌ வேண்டுமென‌ க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

10

நாம் எடுக்கின்ற‌ முய‌ற்சிக‌ளுக்கு ஊக்க‌மும், ஆத‌ர‌வும் கிடைக்க‌ வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌ன்க‌ளின் க‌ன‌வுக‌ளில் ஒன்று. அப்ப‌டி முழு ஆத‌ர‌வு கிடைக்காவிட்டால் கூட‌ குத‌ர்க்க‌மாய்ப் பேசி எரிச்ச‌ல‌டைய‌ச் செய்யாம‌ல் இருக்க‌ வேண்டும் என்ப‌து ச‌ர்வ‌ நிச்ச‌ய‌க் க‌ன‌வு தானே !

இப்படி எல்லா க‌ண்க‌ளிலும் க‌ன‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌, அந்த‌க் க‌ன‌வுக‌ள் ப‌லிப்ப‌தும் ப‌லிக்காத‌தும் ம‌னைவிய‌ரின் க‌டிவாள‌த்தில் அட‌ங்கியிருக்கின்ற‌ன. கணவனே கண் கண்ட தெய்வம் என்பதை விட கணவனே கனவு கண்ட தெய்வம் என்பது தானே பொருத்தம் ?

ச‌ரி, ம‌னைவிய‌ரின் க‌ன‌வுக‌ள் என்ன‌வாய் இருக்கும் ? அதெல்லாம் நான் சொல்லாம‌லேயே உங்க‌ளுக்குத் தெரியும். அப்புற‌மென்ன‌ ? க‌ன‌வுக‌ள் தொட‌ர‌ வாழ்த்துக‌ள்.

*

நன்றி : வெற்றிமணி, ஜெர்மனி & லண்டன்

உலகப் பொருளாதார வீழ்ச்சி : திவாலாகுமா இந்திய வங்கிகள்

Computer and Globe

ஆதியில் மனித இனம் தனித்தனிக் குழுக்களாக உலகின் பல்வேறு பாகங்களிலும் பிரிந்து கிடந்தது. எனவே ஒரு குழுவின் வளர்ச்சியோ தோல்வியோ இன்னொரு குழுவைப் பாதித்ததில்லை. இன்றைக்கு நிலமை அப்படியில்லை. உலகம் முழுவதும் ஒரு சிலந்தி வலை போன்ற அமைப்புக்குள் சிக்கியிருக்கிறது. ஒரு இழை அறுந்தாலும் மறு எல்லை வரை அதன் பாதிப்பு தெரிகிறது. எனவே பொருளாதார வீழ்ச்சி என்பது ஏதோ ஒரு நாட்டுக்குத் தானே என நாம் அலட்சியமாய் இருந்து விட முடியாது.

கிரீஸ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் அதிர்வுகள் ஐரோப்பிய நாடுகளிலும், உலக வர்த்தகத்திலும் உணரப்பட்டது. இப்போது சீனாவில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியானது உலகின் பல பாகங்களிலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. பொருளாதார இழப்பு பல இலட்சம் கோடிகள். இதனால் சீனாவின் சிறு வர்த்தகர்கள் கடுமையான சூழலுக்குள் தள்ளப்பட்டு விட்டனர். சீனாவின் பொருளாதாரச் சரிவு, ஆசிய சந்தையில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் கணிசமான அளவு சரிவை உண்டாக்கியது.

இந்தியாவைப் பொறுத்தவரை திடீரென ஏழு இலட்சம் கோடி வரை பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டு ஒரு அதிர்ச்சியை உருவாக்கியது. அமெரிக்காவின் நெருக்கடி காலத்தில் ஏற்பட்டதை விட அதிகமான‌ சரிவு இது. இந்திய ரூபாயின் மதிப்போ வரலாறு காணாத அளவுக்கு படு பாதாளத்தில் சரிந்து 67 ரூபாய்க்கு வெகு அருகில் நின்று மூச்சு வாங்குகிறது.

சீனா தனது நாணயமான யுவானின் மதிப்பை வேண்டுமென்றே குறைத்து ஏற்றுமதியை ஊக்குவிக்கப் பார்க்கிறது. ‘மேட் இன் சைனா’ வை உலகின் கடைசி மூலை வரைப் பரப்பியிருக்கும் சீனாவின் நாணய மதிப்பு மாற்றம் எல்லா இடங்களிலும் மாற்றத்தை உருவாக்கும் என்பது கண்கூடு. இந்த நாணய மதிப்பு குறைப்பு உலக வர்த்தகத்தைச் சீர்குலைக்கச் செய்யும் சீனாவின் யுத்தி என வர்ணிக்கும் வல்லுநர்களும் உண்டு.

ஏற்றுமதியை அதிக அளவில் செய்யும் சீனாவுக்கு இந்த நிலமை எனில், இறக்குமதியிலேயே இலட்சியத்தைக் கொண்டிருக்கும் இந்தியாவின் நிலமை இதை விடப் படு மோசமாகவே இருக்கும். இந்தியாவின் ரூபாய் ஐ.சி.யூ வில் இருக்கிறது என்று கிண்டலடித்தவர்கள் ஆட்சிக்கு வந்தபின் நிலமை அதை விட மோசமாகியிருப்பது துயரம்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணையின் மதிப்பு வீழ்ச்சியடைகையில் உலக பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் என்பது வரலாறு. இப்போது கச்சா எண்ணையின் மதிப்பு 40 டாலர் எனுமளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பது அத்தகைய ஒரு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. 2008க்குப் பின் இப்போது தான் கச்சா எண்ணை இந்த விலையை எட்டியிருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. அதே போல தங்கம் விலையில் ஏற்படும் வீழ்ச்சியும் தங்கத்தை நிகரப் பொருளாக வைத்திருக்கும் இந்தியாவின் கையிருப்பு மதிப்பைக் குறைக்கும்.

நாடு வ‌ள‌மாக‌வும், ந‌ல‌மாக‌வும் இருப்ப‌து போன்ற‌ மாய‌த்தோற்ற‌த்தை உருவாக்குவ‌த‌ன் மூல‌ம் நாட்டை வ‌லுப்ப‌டுத்த‌ முடியாது. இன்றைய உலக பொருளாதாரச்‌ சூழ‌லை ச‌ரியாக‌க் க‌ணித்து ரிச‌ர்வ் வ‌ங்கி இந்தியாவின் இர‌ண்டு வ‌ங்கிக‌ளுக்கு எச்ச‌ரிக்கை ம‌ணியை அடித்திருக்கிற‌து. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ம‌ற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ இந்த‌ இர‌ண்டுமே அந்த‌ வ‌ங்கிக‌ள்.

2008 ல் அமெரிக்க‌ வ‌ர்த்த‌க‌ம் மிக‌ப்பெரிய‌ ச‌ரிவைச் ச‌ந்தித்த‌த‌ன் விளைவாக‌ ரிச‌ர்வ் வ‌ங்கி டி எஸ்.ஐ.பி  Domestic Systemically Important Banks (D-SIBs) எனும் ஒரு திட்ட‌த்தைக் கொண்டு வ‌ந்தது. இத‌ன் கீழ் உள்நாட்டின் மிக‌ப்பெரிய‌ வ‌ங்கிகள் இணைக்கப்படும். வ‌ங்கிக‌ளின் அள‌வு, அத‌ன் ப‌ரிவ‌ர்த்த‌னைக‌ள், ச‌ர்வதேச‌ அள‌விலான‌ அத‌ன் தொட‌ர்புக‌ள் போன்ற‌ ப‌ல்வேறு கார‌ணிக‌ளின் அடிப்ப‌டையில் வங்கிகள் தேர்வு செய்ய‌ப்ப‌டும். இந்த‌ ப‌ட்டிய‌லில் வ‌ரும் மிக‌ முக்கிய‌மான‌ இர‌ண்டு வ‌ங்கிக‌ள் எஸ்.பி.ஐ ம‌ற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.

அர‌சு வ‌ங்கிக‌ளில் ஸ்டேட் பேங்க், த‌னியார் வ‌ங்கிக‌ளில் ஐ.சி.ஐ.சி.ஐ இர‌ண்டுமே கோலோச்சுகின்ற‌ன‌. இந்த‌ இர‌ண்டு வ‌ங்கிக‌ளும் ஒருவேளை திவாலாகும் சூழ‌ல் வ‌ருமானால், 2008ம் ஆண்டு அமெரிக்கா ச‌ந்தித்த‌து போன்ற‌ மிக‌க் க‌டுமையான‌ பொருளாதார‌ நெருக்க‌டிக்கு இந்தியா த‌ள்ள‌ப்ப‌ட்டு விடும். என‌வே தான் ரிச‌ர்வ் வ‌ங்கி இந்த‌ இர‌ண்டு வ‌ங்கிக‌ளும் த‌ங்க‌ள் இக்விடி ஃபண்ட், அதாவது பங்குச்சந்தையின் முதலீட்டை அதிக‌ரித்துக் கொள்ள‌ வேண்டும் என்றும், அது எந்த‌ அள‌வுக்கு இருக்க‌ வேண்டும் என்றும் அறிவித்திருக்கிற‌து. இந்த‌ இர‌ண்டு வ‌ங்கிக‌ளின் ப‌ங்குக‌ளும் வ‌லுவிழ‌ந்து வ‌ருவ‌தும் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌மாகும்.

பல ச‌ர்வ‌தேச வ‌ங்கிகளும் இந்தியாவிலும் அத‌ன் கிளைக‌ளை வைத்திருக்கின்ற‌ன‌. அவையும் மிக‌ப்பெரிய‌ அள‌விலான‌ ப‌ண‌ப் ப‌ரிமாற்ற‌ங்க‌ளை செய்கின்ற‌ன‌. அத்த‌கைய‌ வ‌ங்கிக‌ளில் முக்கிய‌மான‌வை ஜி எஸ்.ஐ.பி  Global Systemically Important Bank (G-SIB), எனும் வ‌கையில் வ‌ரும்.

வ‌ங்கிக‌ள் திவாலாவ‌து தேச‌த்தின் வ‌ள‌ர்ச்சியையும், ச‌ம‌நிலையையும் வெகுவாக‌ப் பாதிக்கும். திவாலாகும் வ‌ங்கிக‌ளை மீண்டும் இய‌க்க‌ வேண்டுமெனில், அமெரிக்கா செய்த‌து போல‌ பொதும‌க்க‌ளின் ப‌ணத்திலிருந்து ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ கோடிக‌ளை அத‌ற்காக‌ச் செல‌விட வேண்டி வ‌ரும்.

இந்த‌ச் சிக்க‌லைச் ச‌ரிசெய்ய‌ ஒரே வ‌ழி, வ‌ங்கிக‌ள் ஒரு குறிப்பிட்ட‌ அள‌வு அசையாச் சொத்து, ப‌ங்குகள், ஃபண்ட்கள் போன்ற‌வ‌ற்றை வைத்திருப்ப‌து தான். இது ஒரு ச‌ட்ட‌மாக‌ அடுத்த‌ ஆண்டுமுதல் வ‌ர‌விருக்கிற‌து.

க‌ட‌ந்த‌ உல‌க‌ பொருளாதார‌ச் சீர்குலைவிலிருந்து உல‌க‌ம் முழுமையாக‌ மீள‌வில்லை என்ப‌து தான் உண்மை. நிறுவ‌ன‌ங்க‌ளும், அத‌ன் முத‌லாளிக‌ளும் ச‌ரிவிலிருந்து மீண்டுவிட்டார்க‌ள். நேர‌டியாக‌வோ, ம‌றைமுக‌மாக‌வோ அர‌சுக‌ள் அதற்கு உதவின‌‌. ஆனால் உல‌க‌ அள‌வில் கீழ்த்த‌ட்டு ம‌க்க‌ளிடையே அந்த‌ பாதிப்பு இன்னும் வில‌க‌வில்லை. ஆண்டுக்கு 22 ஆயிர‌ம் குழ‌ந்தைக‌ள் வ‌றுமையினால் இற‌ந்து போகும் உல‌கில் தான் இன்னும் நாம் ப‌ய‌ணிக்கிறோம்.

அடுத்த‌ ஒரு மிக‌ப்பெரிய‌ உல‌க‌ பொருளாதார‌ச் சீர்குலைவை நோக்கி உல‌க‌ம் சென்று கொண்டிருப்ப‌தாக‌ ப‌ல்வேறு வ‌ல்லுந‌ர்க‌ள் க‌ணித்திருக்கிறார்க‌ள். அமெரிக்காவின் பிர‌ப‌ல‌ முத‌லீட்டு ஆலோச‌க‌ரும், கேஸி ஆய்வ‌க‌ நிறுவ‌ன‌ருமாக‌ “ட‌க் கேஸி”, க‌ட‌ந்த‌ பொருளாதார‌ சீர்குலைவை க‌ணித்துச் சொன்ன‌ “பில் ஃப்ளெக்ஸ்டைன்”, லேரி எட்ச‌ன் உட்ப‌ட‌ ப‌ல்வேறு நிபுண‌ர்கள் இதில் அடக்கம்.

இதை நிரூபிப்ப‌து போல கிரீஸ், சீனாவின் சீர்குலைவைத் தொட‌ர்ந்து க‌ன‌டாவும் ஒரு பொருளாதார‌ நெருக்க‌டிக்குள் நுழைந்திருக்கிற‌து. க‌ன‌டா ஒரு பொருளாதார‌ நெருக்க‌டிக்குள் விழுவ‌து எதிர்பாராத‌ நிக‌ழ்வாக‌வே பார்க்க‌ப்ப‌டுகிற‌து. அதே போல‌ பெரும்பாலான‌ தென் அமெரிக்க‌ நாடுக‌ளும் பொருளாதார‌ நெருக்க‌டியின் வாச‌லில் நிற்கின்ற‌ன‌. ப‌ங்குச்ச‌ந்தையில் ச‌ரிவைச் ச‌ந்திக்கும் நாடுக‌ளின் ப‌ட்டிய‌லில் ம‌லேஷியா, சிங்கப்பூர்,தாய்லாந்து, தென் கொரியா, எகிப்து, கென்யா உட்ப‌ட‌ இருப‌துக்கு மேற்ப‌ட்ட‌ நாடுக‌ள் இருக்கின்ற‌ன‌.

உல‌க‌ம் ஒரு பொருளாதார‌ நெருக்க‌டிக்குள் நுழைகிற‌து என்ப‌து ஒட்டு மொத்த‌ ம‌னுக்குல‌த்துக்கே க‌வ‌லைய‌ளிக்கும் விஷ‌ய‌மாகும். ஏற்றும‌தி, இற‌க்கும‌தி, ப‌ண‌ப் ப‌ரிமாற்ற‌ம், வ‌ங்கிக‌ள், ச‌ர்வ‌தேச‌த் தொட‌ர்புகள், தனியார் நிறுவனங்கள் என‌ ஒரு ஒட்டு மொத்த‌ அல‌ச‌ல் இந்த‌ நேர‌த்தில் வெகு அவ‌சிய‌ம். எச்ச‌ரிக்கையாய் இருக்கிற‌தா ந‌ம் தேச‌ம் ?

தோளில் கை போடலாமா ?

romantic-couple-2

ஆண்கள் பெண்களின் தோளில் கை போடுவது ஆணாதிக்கத்தின் அறிகுறி என பிரபல‌ நடிகை ஹெலன் மிரான் கொளுத்திப் போட்ட திரி ஆங்காங்கே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

மனித வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஆணாதிக்கத்தின் கூறுகள் எல்லா இடங்களிலும் பரவிக் கிடப்பதைப் பார்க்கலாம். சமூக அந்தஸ்து, கருத்து மரியாதை, பணியிட நிராகரிப்புகள், தலைமை மறுப்புகள், சமநிலையற்ற ஊதியம் என பெண்களுக்கு எதிரான நிலைப்பாடுகள் பல இடங்களில் இன்றும் தொடர்கின்றன.

பெண்களுக்கு சமூகத்தில் சமமான அந்தஸ்து வேண்டும் என்று கேட்பது கூட ஒருவகையில் ஆணாதிக்கம் தான். காரணம், பெண்கள் ஆண்களை விட அதிக அந்தஸ்து பெறுவதிலும் எந்தத் தவறும் இல்லையே ? ஏன் சமமான அந்தஸ்துடன் நின்று விட வேண்டும் ? தொடர்ந்து மேலே செல்லலாமே !

அதே நேரத்தில் அன்பின் வெளிப்பாடுகளாய் செய்கின்ற செயல்களைக் கூட ஆணாதிக்கம் எனும் கூட்டில் இட்டு அடைப்பது நேசத்துக்கு எதிராக எறியப்படும் ஆயுதம் என்றே நான் நினைக்கிறேன். பெண்களின் தோளில் கைபோட்டு நடக்கும் தம்பதியரில் நூற்றுக்கு 99 சதவீதம் பேர் இப்படி ஒரு கோணத்தின் யோசித்திருக்கவே மாட்டார்கள். இனிமேல் அத்தகைய அன்னியோன்யத் தம்பதியரின் மனதில் இப்படி ஒரு விஷ எண்ணம் முளைக்கும். ஒருவகையில் சமூக அன்னியோன்யத்தின் வேர்களில் ஒரு சந்தேகக் கோடரியை வைத்திருக்கிறார் ஹெலன்.

ஆண்கள் சாதாரணமாகவே சற்று உயரமானவர்கள், பெண்களின் தோளில் கை போடுவது அவர்களுக்கு இயல்பாகவே வருகிறது. பெண்கள் ஆண்களின் இடையில் கை போட்டு நடப்பதோ, கை கோர்த்து நடப்பதோ இயல்பாக வருகிறது. ‘இடையில் கை போடுவது, இடையிடையே சண்டை போடுவேன் என்பதன் அறிகுறி’ என யாரும் சொல்வார்களோ என்று பயமாக இருக்கிறது.

கணவன் மனைவி அன்பு, அல்லது ஆண் பெண் அன்பு என்பது சில வரையறைகளுக்குள் அடக்கி விட முடியாதது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். தனது காதலன் தோளில் கைபோட்டு நடக்க வேண்டும் என விரும்பும் பெண்கள் உண்டு. தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும் என விரும்பும் காதலர்கள் உண்டு. மனம் என்ன விரும்புகிறதோ, அதையே செயல்கள் செயல்படுத்துகின்றன.

ஹெலனுடைய ஆழ் மனதில் ஆணாதிக்கத்தின் ஏதோ ஒரு பாதிப்பு தன்னையறியாமல் உறைந்திருக்கலாம். அத்தகைய எண்ணங்கள் வலுவடைந்து இத்தகைய சிந்தனைகளாய் வெளிவரலாம். உளவியல் இதைத் தான் சொல்கிறது.

திருமண உறவு வலுவடைய தீண்டல் மிகவும் அவசியம். கைகோர்த்து நடப்பதோ, அரவணைத்துக் கொள்வதோ, தோளில் கைபோடுவதோ அத்தகைய அன்னியோன்யத்தை பாச நீர் ஊற்றி வளர்க்கின்றன. உரையாடல்கள் எனும் காற்றில் அவை பச்சையம் தயாரிக்கின்றன. புரிதல் எனும் பின்னணியில் அவை கனிகளை விளைவிக்கின்றன. பேசுதல், செவிமடுத்தல், தொடுதல், பகிர்தல், புரிதல் இவையெல்லாமே திருமண உறவை உறுதிப்படுத்தும் அன்பின் கிளைகளே.

குறிப்பாக தொடுதல் என்பது உறவுகளில் மிக முக்கியமானது. அதனால் தான் எத்தனை தான் நெருக்கமாய் நினைத்துக் கொண்டாலும் டிஜிடல் உறவுகள் நிலைப்பதில்லை. அம்மாவின் வியர்வை விழுந்த இன்லன்ட் லெட்டரைப் போல எந்த மின்னஞ்சலும் நமது உயிரின் கதவைத் திறப்பதில்லை.

குழந்தை வளர்ப்பில் இந்த தொடுதலை மிகவும் முக்கியப்படுத்துகிறார்கள். கமலஹாசனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் சொன்ன‌ ‘கட்டிப்புடி வைத்தியம்’ அறிவியல் பூர்வமானது. ஒரு குழந்தையை பெற்றோர் பன்னிரண்டு முறை கட்டியணைப்பது அவர்களுடைய உடல், உளவியல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்கின்றன ஆய்வுகள்.

கணவனின் கைகள் தொடவே இல்லை என்று கவலைப்படும் பெண்கள் இருப்பார்களே தவிர, கணவன் தீண்டுகிறான் என பதறும் பெண்கள் இருக்க மாட்டார்கள். காரணம், தொடுதல் என்பது காதல் வாழ்க்கையில் மிக முக்கியமான அம்சம். தொடுதல் என்பது பிரியாத பிரியத்தின் வெளிப்பாடு. முதிர் தம்பதியர் பூங்காக்களில் கைகளைக் கோர்த்தபடி மணிக்கணக்கில் அமைதியாய் அமர்ந்திருப்பார்கள். அது அவர்களுடைய அதிகபட்ச அன்பின் பரிமாற்ற நிமிடங்கள் என்பதில் சந்தேகமில்லை.

அன்பு என்பது இதயத்தில் வேர்விட்டுக் கிளைவிடும் விஷயம். அருகருகே அமைதியாய் இருக்கும் தம்பதியர் இதயத்தால் ஆயிரம் மைல் தொலைவில் இருக்கலாம். அல்லது ஆயிரம் மைல் இடைவெளியில் இருக்கும் தம்பதியர் இதயத்தால் இணைந்தும் இருக்கலாம். இரண்டு இதயங்கள் ஒன்றாய் இருப்பதில் தான் காதல் வாழ்க்கை அர்த்தப்படுகிறது. எனவே இதயத்தால் ஒன்று படுங்கள் என்பதே முதலாவது தேவை.

“இவர் என் கணவன்”, “இவர் என் மனைவி” என்று சொல்வது ஒருவரை அடிமைப்படுத்தும் செயலல்ல. இவர் எனது ஆதிக்கத்தில் இருக்கிறார் என்பதன் அடையாளமுமல்ல. நாங்கள் இணைந்து பயணிப்பவர்கள். எங்களுக்கு இடையே இடையூறு விளைவிக்க யாரேனும் வந்தால் இணைந்தே சந்திப்போம் என சொல்லும் ஒரு உத்தரவாதம்.

ஆணும் பெண்ணும் சமமெனச் சொல்லவே ஆண்டவர் ஆணின் விலா எலும்பிலிருந்து பெண்ணைப் படைத்தார் என்கிறது கிறிஸ்தவம். சிவனில் பாதியை சக்திக்குக் கொடுத்து, இருவரும் ஒருவர் என விளக்குகிறது இந்துமதம். அதற்காக இருவரும் ஒரே வேலையைச் செய்ய வேண்டுமென்பதில்லை. மிருதங்கமும், புல்லாங்குழலும் ஒரே இசையைத் தருவதில்லை. தாழம்பூவும், தாமரைப் பூவும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதைப் புரிவதில் தான் இருக்கிறது வாழ்க்கையின் அழகும், அர்த்தமும்.

தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அந்தவகையில் ஹெலன் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.  ஹெலனின் சிந்தனையுள்ள சகோதரிகளுக்கு எனது வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். கணவனிடம் சற்றே குனிந்து நடக்கச் சொல்லுங்கள். அவர்கள் தோளில் கைபோட்டு நடங்கள். இது பெண்ணாதிக்கம் அல்ல, பாசத்தின் பகிர்ந்தல் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

*

நன்றி : வெற்றிமணி, ஜெர்மனி

தீவிரவாதத்துக்கு எதிராய் அணிதிரளும் இந்திய முஸ்லீம்கள்.

.

.

தத்தின் பெயரால் சர்வதேச சமூகம் சந்தித்ததைப் போன்ற இழப்புகளை வேறெந்த முறையிலும் மனித குலம் சந்திக்கவில்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒரு மதவாதி செய்யும் ஒரு செயலுக்கான எதிர்வினை மறு எல்லையில் ஏதோ ஒரு அப்பாவியின் தலையில் விழும் என்பது எழுதப்படாத விதி.

ஒரு நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் சமூகம் இன்னொரு நாட்டில் சிறுபான்மையாய் இருக்கிறது. ஒரு நாட்டில் சிறுபான்மையாய் இருக்கும் சமூகம் இன்னொரு நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கிறது. பெரும்பான்மையாய் இருக்கிறோம் எனும் மிதப்பில் மதவாதிகள் செய்கின்ற தவறுகள், அவர்கள் சிறுபான்மையாய் இருக்கும் நாடுகளில் எதிரொலிக்கின்றன. எனவே தான் மதம் சார்ந்த பிளவுகளும், வன்முறைகளும் எப்போதுமே திகிலைக் கிளப்புகின்றன.

இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராக பரவியிருக்கும் மனநிலைக்கு முக்கியமான காரணம் ஒரு சில தீவிரவாத இயக்கங்களே. அல்குவைதா இயக்கம் கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. இப்போது ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அன்ட் சிரியா ) இயக்கம் சர்வதேச அச்சுறுத்தல் இயக்கமாக மிரட்டுகிறது.

ஒரு மதத்தினருக்கு எதிராக இன்னொரு மதத்தினர் தடை விதிக்கும் போது அது தீவிரமான‌ மதச் சண்டையை உருவாக்கி விடுகிறது. மதங்களிடையே காழ்ப்புணர்ச்சியையும் வலுவாக்குகிறது. ஆனால் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் அதை எதிர்த்து நிற்கும் போது ஆக்கபூர்வமாய் மாறிவிடுகிறது. இப்போது ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து அத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இஸ்லாமியத் தலைவர்கள் ஒன்று கூடி ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராக பத்வா விதித்திருக்கிறார்கள். இந்தியாவில் 14.2 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். எண்ணிக்கையின் அடிப்படையில் 17.22 கோடி பேர் இஸ்லாமியர்கள். உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா தான். என‌வே தான் இந்திய‌ முஸ்லிம்க‌ள் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ப‌த்வா விதித்திருப்ப‌து உல‌க‌ நாடுக‌ளின் க‌வ‌ன‌த்தை ஈர்த்திருக்கிற‌து.

வ‌ன்முறை என்ப‌து இஸ்லாமின் வ‌ழிமுறைய‌ல்ல‌. இப்போது ஐ.எஸ் அமைப்பு செய்து கொண்டிருக்கும் செய‌ல்க‌ளெல்லாம் இஸ்லாமிய‌ ந‌ம்பிக்கைக்கு எதிரான‌வை.என‌வே அந்த‌ அமைப்புக்கு எதிராக‌ ப‌த்வா விதிக்கிறோம் என்று அந்த முடிவில் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ப‌த்வா என்ப‌து இஸ்லாமிய‌ மதத் தீர்ப்பு. இஸ்லாமிய‌ ம‌த‌த்துக்கோ, கோட்பாடுக‌ளுக்கோ, வாழ்க்கை முறைக்கோ எதிராக‌ச் செய‌ல்ப‌டும் இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு எதிராக‌ இந்த‌த் த‌டை விதிக்க‌ப்ப‌டுகிற‌து. ச‌ல்மான் ருஷ்டி முத‌ல் ஏ.ஆர் ர‌ஹ்மான் வ‌ரை ப‌லரையும் இந்த பத்வா பாதித்திருக்கிறது. இப்போது ஒரு மிக‌ப்பெரிய‌ தீவிர‌வாத‌ அமைப்புக்கு எதிராக‌ இந்த‌த் த‌டை வ‌லிமையாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ப‌த்வாவின் ந‌க‌ல்க‌ளை ஐ.நா ச‌பைத் த‌லைவ‌ர்க‌ளுக்கும், உலகின் 47 நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்த‌த் த‌டைக்கு அமெரிக்கா வ‌ர‌வேற்பு தெரிவித்துள்ள‌து. “ஐ.எஸ். இயக்கத்துக்கு தடை விதித்து இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர்களும், அறிஞர்களும் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை வரவேற்கிறோம். அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து அந்த இயக்கத்தில் சேர்ப்பதைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்” என்று அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர் ஹெலனா வயிட் தெரிவித்தார்.

ஐ.நா அமைப்பு ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் பேர‌ழிவை ஏற்ப‌டுத்தி வ‌ருகிற‌து. கூட‌வே ஆசியாவின் ப‌ல்வேறு பாக‌ங்க‌ளில் நுழைந்து அத‌ன் இருப்பைப் ப‌ல‌ப்ப‌டுத்த‌ முய‌ற்சித்து வ‌ருகிற‌து.இந்தியாவிலும் அத‌ன் கிளைக‌ள் ஆங்காங்கே இருப்ப‌தாக‌ செய்திக‌ள் வெளியாகி வ‌ருகின்ற‌ன‌.

இந்திய‌ அர‌சிய‌ல‌மைப்புச் ச‌ட்ட‌ங்க‌ள் ம‌த‌ச்சார்பின்மைக்கு துணை செய்தாலும் இந்தியாவில் சிறுபான்மையின‌ரின் வ‌ள‌ர்ச்சியும், அங்கீகார‌மும் ச‌க‌ஜ‌ நிலையில் இல்லை என்ப‌தே உண்மை. 14 ச‌த‌வீத‌ம் இஸ்லாமிய‌ர்க‌ள் வாழும் பூமியில் 2 ‍ 3 ச‌த‌வீத‌ம் இஸ்லாமியர்கள் ம‌ட்டுமே ந‌ல்ல‌ அர‌சுப் ப‌த‌விக‌ளில் இருக்கின்ற‌ன‌ர். வெறும் 1.2 ச‌த‌வீத‌ம் பேர் ம‌ட்டுமே ப‌ட்ட‌ மேற்ப‌டிப்பை முடிக்கிறார்க‌ள். வ‌றுமைக்கோட்டின் கீழ் வாழ்ப‌வ‌ர்க‌ளோ 94 ச‌த‌வீத‌த்திற்கும் மேல்.

இப்ப‌டி ச‌மூக‌த்தின் பொருளாதார‌, வாழ்க்கைச் சூழ‌லில் பின் த‌ங்கியிருக்கும் இஸ்லாமிய‌ர்க‌ள் மீது தீவிர‌வாதிக‌ள் எனும் ப‌ழியும் சேர்ந்து விடும் போது அவ‌ர்க‌ள் உள‌விய‌ல் ரீதியாக‌வும் பாதிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். ஆனாலும் ஒற்றுமையில் எப்போதும் முன்னில் நிற்கும் இஸ்லாமிய‌ர்க‌ள் இப்போது ஐ.எஸ் இய‌க்க‌த்துக்கு எதிராக‌வும் ஒன்றிணைந்திருப்ப‌து இந்தியாவில் மிக‌ப்பெரிய‌ தாக்க‌த்தை ஏற்படுத்தியிருக்கிறது. உல‌கின் பார்வையில் மிக‌ப்பெரிய‌ அங்கீகார‌த்தையும் இந்திய‌ இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கியிருக்கிற‌து.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ச‌மீப‌கால‌மாக தொட‌ர் வ‌ன்முறைக‌ளிலும், ம‌னித‌நேய‌ம‌ற்ற‌ செய‌ல்க‌ளிலும் செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து. த‌ன‌து அமைப்பின‌ரோடு பாலிய‌ல் உற‌வு வைத்துக் கொள்ள‌வில்லை என்றெல்லாம் கார‌ண‌ம் காட்டி பெண்க‌ளை ப‌டுகொலை செய்கிற‌து. பிணைக்கைதிக‌ளாக‌ ம‌க்க‌ளைப் பிடித்து ஈவு இர‌க்க‌மில்லாம‌ல் த‌லையைக் கொய்கிற‌து. சிறுவ‌ர்க‌ளுக்கும் வ‌ன்முறையைப் போதிக்கிற‌து. இவையெல்லாம் நிச்ச‌ய‌ம் இஸ்லாமிய‌க் கொள்கைக‌ள் அல்ல.

“அப்பாவிகளைக் கொல்வதை இஸ்லாம் எதிர்க்கிறது. பத்திரிகையாளர்கள், உதவியாளர்கள் போன்றவர்களைக் கொல்பவர்களை இஸ்லாம் எதிர்க்கிறது. ஜிகாத் என்பது தற்காப்புப் போர், சரியான காரண காரியமில்லாமல் அதை அமல்படுத்தக் கூடாது. கட்டாய மதமாற்றம் இஸ்லாமுக்கு எதிரானது. குழந்தைகளுக்கோ, பெண்களுக்கோ உரிமைகளை மறுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது, சித்திரவதை இஸ்லாமுக்கு எதிரானது, இப்படி ஏராளமான வரைமுறைகள் இஸ்லாமில் உண்டு. ஆனால் இவை அனைத்தையும் ஐ.எஸ்.ஐ.எஸ் செய்கிறது” என‌ ப‌ட்டிய‌லிடுகின்ற‌ன‌ர்  இஸ்லாமிய‌த் த‌லைவ‌ர்க‌ள்.‌

இஸ்லாமிய‌த்தின் பெய‌ரால் ந‌ட‌க்கும் தீவிர‌வாத‌ இய‌க்க‌த்துக்கு எதிராக‌ இஸ்லாமிய‌ர்க‌ளே எழுந்திருப்ப‌து ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து. இது மிகச் சரியான ஒரு நடைமுறை. உலகெங்கும் இருக்கும் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் எனும் மாயை உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது ஆரோக்கியமானது.

எந்த‌ இய‌க்க‌மும், எந்த‌ குழுவும், எந்த‌ ம‌த‌மும் த‌ங்க‌ளைத் தாங்க‌ளே சுத்த‌ம் செய்து கொள்வ‌தும், விம‌ர்சித்துக் கொள்வ‌தும், வ‌ழிக‌ளைச் செப்ப‌னிட்டுக் கொள்வதும் ஆரோக்கியமான‌து. இந்து சாமியார்க‌ளின் லீலைக‌ளுக்கு எதிராக‌ இந்துக்க‌ள் விம‌ர்சிக்கும் போக்கு உண்டு. போப் உட்பட, கிறிஸ்த‌வ‌த் த‌லைவ‌ர்க‌ளின் செய‌ல்பாடுக‌ளை க‌டுமையாய் விம‌ர்சிக்கும் போக்கு கிறிஸ்த‌வ‌த்திலும் உண்டு.

அத்த‌கைய‌ ஒரு நிலை ச‌ர்வ‌ம‌த‌ சூழ‌லுக்கு வெகு ஆரோக்கிய‌மான‌து. சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்திலும் இஸ்லாமிய இளைஞர்கள் ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைத் தீவிரமாகப் பதிவு செய்தது குறிப்பிடத் தக்கது.

எம்ம‌த‌மும் ச‌ம்ம‌த‌மே. அதே நேரத்தில் எந்த‌ ம‌த‌த்திலும் வ‌ன்முறை என்ப‌து எதிர்க்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌தே. சிறுபான்மையின‌ரைக் காக்கும் க‌ட‌மை பெரும்பான்மையின‌ருக்கு உண்டு. அத்த‌கைய‌ ப‌ர‌ஸ்ப‌ர‌ அன்பிலும், ந‌ம்பிக்கையிலும் தான் ச‌ர்வ‌தேச‌ ச‌மாதான‌ம் க‌ட்டியெழுப்ப‌ப்ப‌ட‌ முடியும்

நன்றி : நம்ம அடையாளம்

மர்மங்களின் நாயகன் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசையும் பிரித்துப் பார்க்க முடியாது. அஹிம்சையே வெல்லும் என ஒரு சாரார் முடிவெடுக்க வீரமே வெற்றி தரும் என இந்தியாவுக்கு வெளியே சென்று, இந்திய தேசிய ராணுவத்தை’ அமைத்து, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரை மிரள வைத்தவர் அவர். 1897ம் ஆண்டு சனவரி 23ம் நாள் பிறந்த சுபாஷ் சந்திரபோஸின் மரண நாள் என்ன என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தியதி தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் சிக்கி பலியானார் என்பது தான் அறிவிக்கப்பட்ட செய்தி. ஆனால் அப்படி ஒரு விமான விபத்து ஏற்படவே இல்லை என தைவான் அரசே சொல்லி விட்டது. இந்திய மக்கள் மட்டுமன்றி, உலக நாடுகள் பலவும் நேதாஜியின் இறப்பு குறிந்த தகவலை நம்பவில்லை. ஜப்பான் நாடு தான் நேதாஜி மறைந்துவிட்டார் என‌ வானொலியில் அறிவித்தது. உலக நாடுகளிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்காக நேதாஜிக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

1945ல் அவர் இறக்கவில்லை 1970ம் ஆண்டு தான் இறந்தார். அதுவும் ரஷ்யாவில் வைத்து இறந்தார் என்கிறது இன்னொரு செய்தி. “ரஷ்யாவின் உதவியை நாடுவதற்காக சீனாவின் மஞ்சூரியா பகுதிக்கு நேதாஜி சென்றார். ஆனால் அப்போது ரஷ்யாவை ஆண்டு வந்த ஸ்டாலின், நேதாஜியை சிறையில் தள்ளினார். சில ஆண்டுகளுக்குப் பின் அங்கேயே தூக்கிலிடப்பட்டார்” என்கிற‌து அந்த‌ச் செய்தி.

இல்லையில்லை, நேதாஜி கடைசி காலத்தில் இந்தியாவில் தான் இருந்தார். இந்தியாவிலேயே அவருக்கு எதிரிகள் உருவாகிவிட்டனர். எனவே அவர் வட இந்தியாவுக்குச் சென்று துறவியாய் மாறி தனது கடைசி காலத்தை அமைதியாய்ச் செலவிட்டார். 1985 களில் முதுமையடைந்து மரணமடைந்தார் என்கிறது இன்னொரு கதை.

அனுஜ் தர் எனும் எழுத்தாளர், நேதாஜியின் மறைவின் மர்மங்கள் குறித்து “Back from Dead”, “India’s biggest cover up” என இரண்டு நூல்கள் எழுதினார். நேதாஜியின் மரணம் சரிவர விசாரிக்கப்படவில்லை. அரசுகள் அதில் அக்கறை காட்டவில்லை. வெறுமனே கண்துடைப்புக்காகவே கமிஷன்கள் போடப்பட்டன என்கிறார் அவர்.

முந்தைய‌ அர‌சுக‌ள் எதுவுமே நேதாஜியின் ம‌ர்ம‌ம் குறித்த‌ முழுமையான‌ ஒரு ப‌திலை த‌ர‌வில்லை. எழுப‌து ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ இந்த‌க் கேள்வி இந்திய‌ர்க‌ளின் ம‌ன‌தில் ஓடிக்கொண்டே இருக்கிற‌து. அதை கால‌த்துக்கேற்றப‌டி அர‌சிய‌லாக்குவ‌தைத் த‌விர‌ வேறெதையும் யாரும் செய்ய‌வில்லை.

இத்த‌னை ஆண்டுக‌ள் ஆகிவிட்ட‌ன‌, இனிமேலாவ‌து நேதாஜி ம‌ர‌ண‌ம் குறித்த‌ முழுமையான‌ செய்தியை வெளியிடவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர். த‌மிழ‌க‌த் த‌லைவ‌ர்க‌ள் ப‌ல‌ரும் கூட‌ நேதாஜியின் ம‌ர்ம‌ம் குறித்த‌ த‌க‌வ‌ல்க‌ளை வெளியிட‌ வேண்டும் என‌ ம‌த்திய‌ அர‌சுக்கு நெருக்க‌டி கொடுத்த‌ன‌ர். மத்திய அரசுக்கு அது ஒரு பெரிய தர்மசங்கடமாய் மாறிப்போனது. நேருவின் அரசு, நேதாஜியின் குடும்பத்தை உளவு பார்த்தது என சொல்லப்படும் தகவல் தான் இந்தப் பிரச்சினை மீண்டும் முளை விடக் காரணம்.

நேதாஜி குறித்து மொத்தம் 130க்கும் மேற்பட்ட‌ ரகசிய ஆவணங்கள் அரசிடம் உள்ளன‌. அதில் சில ஆவணங்கள் மிகவும் ரகசியமானவை. அவை வெளியே வந்தால் வெளிநாடுகளுடனான உறவுகள் பாதிக்கப்படும் என தற்போதைய அரசு அதை வெளியிட மறுத்து வருகிறது.

இந்த சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நேதாஜி ப‌ற்றிய ஆவணங்களை வெளியிடுவேன்” என அறிவித்தார். மத்திய அரசு திடுக்கிட்டது. ஒரே அறிவிப்பின் மூலம் மம்தா பானர்ஜி இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்தார். சொன்னபடியே நேதாஜி குறித்த ஆவணங்களில் 64 ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கென வெளியிட்டார்.

இந்தச் செயல் ‘எழுபது ஆண்டுகாலம் யாரும் செய்யாத ஒரு செயலை செய்த தலைவர்’ எனும் மிகப்பெரிய இமேஜை மம்தாவுக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. டெல்லி முத‌ல்வ‌ர் கெஜ்ரிவாலும் உட‌ன‌டியாக‌ ஒரு பாராட்டு டுவிட்ட‌ரை அனுப்பி ம‌க்க‌ளின் ஆத‌ர‌வில் க‌ல‌ந்து கொண்டிருக்கிறார்

மேற்கு வ‌ங்க‌ ச‌ட்ட‌ச‌பைத் தேர்த‌ல் நெருங்கும் சூழ‌லில் ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ செய‌லின் மூல‌மாக‌ த‌ன்னை ஒரு ஆளுமையுடைய‌ த‌லைவ‌ராக‌க் காட்டிக்கொண்டிருக்கிறார் ம‌ம்தா. இத‌ன் மூல‌ம் நேதாஜி ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் ஆத‌ர‌வை ச‌ட்டென‌ ஈர்த்திருக்கிறார் என்று சொல்ல‌லாம். இத‌ன் ப‌தில‌டியாக‌ மிச்ச‌முள்ள‌ ஆவ‌ண‌ங்களில் சிலவற்றை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு வெளியிடலாம் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் 12,744 பக்கங்கள் கொண்டவை. 1937ம் ஆண்டு முதல் 1947ம் ஆண்டுவரையிலான தகவல்கள் அடங்கியிருக்கின்றன. நேதாஜி குறித்த பொதுவான தகவல்களுடன், 1941ம் ஆண்டுக்குப் பிறகு நேதாஜி குறித்து உளவாளிகள் சொன்ன ரகசியத் தகவல்கள் பலவும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த முதல்கட்டமாக வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களில் நேதாஜி குறித்து மேலும் ப‌ல தகவல்கள் கிடைத்திருக்கின்ற‌ன‌.

அதில் முக்கிய‌மான‌து, “நேதாஜி 1945ல் இற‌க்க‌வில்லை” எனும் த‌க‌வ‌ல். 1945க்குப் பிற‌கும் நேதாஜிக்கும், அவ‌ருடைய‌ குடும்ப‌த்தின‌ருக்கும், சில‌ உல‌க‌ நாடுக‌ளுக்கும் இடையே உள்ள‌ சில‌ த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ங்க‌ள் அதை ஊர்ஜித‌ப்ப‌டுத்துகின்ற‌ன‌. இன்னொன்று நேதாஜி தொட‌ர்ந்து க‌ண்காணிக்க‌ப்ப‌ட்டார் எனும் த‌க‌வ‌ல்.

இப்போது மத்திய அரசுக்கு அழுத்தம் இரண்டு மடங்காகியிருக்கிறது. மீதமுள்ள ஆவணங்களில் ஜப்பான், ஜெர்மனி, மலேஷியா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நேதாஜி கொண்டிருந்த தொடர்புகளும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அந்த நாடுகளுக்கு இருந்த ஈடுபாடும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது வெளியானால் நாடுகளுக்கிடையேயான நல்லுறவு பாதிக்கப்படும் அபாயம் உண்டு என்பதே மத்திய அரசு சொல்லும் காரணமாகும்.

ம‌ம்தா அர‌சு வெளியிட்ட‌ த‌க‌வ‌ல்க‌ள் இணைய‌த‌ள‌த்தில் ப‌திவேற்ற‌ப்ப‌ட‌ உள்ள‌ன‌. அத‌ன் பின் ஆவ‌ண‌ங்க‌ள் குறித்த‌ நுணுக்க‌மான‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியாகும். இப்போது வெளியிடப்ப‌ட்ட‌ த‌க‌வல்க‌ளுக்காக‌ நேதாஜியின் குடும்ப‌ம் அர‌சுக்கு ந‌ன்றி தெரிவித்திருக்கிற‌து.

ஒரு மாபெரும் தலைவரின் கடைசி காலம் குறித்த உண்மையை அறியும் உரிமை சுதந்திர நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அதுவும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தோடு தம்மைத் தொடர்பு படுத்திக் கொண்டுள்ள தமிழினத்துக்கு நிச்சயம் உண்டு.

அதே நேரத்தில், சர்வதேச உறவுகள் பாதிக்கப்படாமல், ஒரு உணர்வு நிலையிலான எழுச்சி நாட்டில் எழாமல் நிலமையைக் கையாளவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இரண்டையும் கருத்தில் கொண்டு இந்திய அரசு சரியான தகவல்களில், தேவையான தகவல்களை உடனே வெளியிடவேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி : நம்ம அடையாளம்