தொங்கலில் தெங்குமரஹாடா

 

சத்தியமங்கலம் என்றாலே வீரப்பன் நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அதைத் தாண்டிய சுவாரஸ்யங்கள் கோடிக்கணக்கில் அதைச் சுற்றிய மலைப்பகுதிகளில் கொட்டிக் கிடக்கின்றன என்பதை நேரில் கண்டால் தான் புரியும்

சரி, போய் தான் பார்ப்போமே என்று நண்பர்களாகக் கிளம்பினோம். பவானிசாகர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு மணி நேரக் காட்டுப் பயண தூரத்தில் இருந்த “தெங்குமரஹாடா” எனும் இடம் தான் எங்கள் இலக்கு.

கற்காலம் தொட்டே பார்த்துப் பழகிய அதே அரசுப் பேருந்து ! தினமும் மாலை 6 மணிக்கு காட்டுக்குள் பயணிக்கும். அப்புறம் காலை ஆறு மணிக்கு காட்டிலிருந்து நாட்டுக்கு திரும்ப வரும்.  அந்த ஊர் மக்களுக்கு அரசு செய்த அதிக பட்ச போக்குவரத்து வசதி அது தான்.  

காட்டுக்குள் பேருந்து போகும் போதே சுவாரஸ்யமும் வியப்பும் சாரைப் பாம்பாய்ச் சுற்றிக் கொள்கிறது. காட்டுப் பாதை எங்கே இருக்கிறது என்பது பழகிய டிரைவருக்கே அடிக்கடி குழப்பமாகிப் போய்விடுகிறது. சாலையின் இருபக்கமும் மான்கள் கூட்டம் கூட்டமாய் ஓடித் திரிகின்றன.

“அங்கே பாருங்க சாமி…” என்று கோயம்புத்தூர் பாஷையில் ஒரு தலைப்பாக்கட்டு கை காட்டிய இடத்தில் ஆஜானுபாகுவாய் ஒரு யானை.

“முந்தா நேத்து என்னை விரட்டிப் போட்டுதுங்க.. நான் இல்லீங்களா.. கைல இருந்த பையை அது தலையில போட்டுப் போட்டு வந்துட்டேனுங்க” என அவர் ஏதோ ஓணானை விரட்டியது போல சொல்ல நமக்குள் லேசாக உதறல்.

“அப்டீங்களாக்கும்..” என கோயமுத்தூர் பாஷையில் திருப்பிக் கேட்க அது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது பார்வையிலேயே தெரிந்தது. யானையை விரட்டியவருக்கு இந்தப் பூனையை விரட்ட எவ்ளோ நேரமாகும் எனும் புது டென்ஷன் உள்ளுக்குள் உருவாக அவஸ்தையாய் ஒரு சிரி சிரித்து வைத்தேன்.

யானை, காட்டு மாடுகள், மான்கள், முயல்கள், பறவைகள், மயில்கள் என எல்லாம் சர்வ சாதாரணமாக ரோட்டைக் கடந்தும், பக்கத்தில் நடந்தும் போய்க்கொண்டிருந்தன. வேடிக்கை பார்த்துக் கொண்டே போய் ஒரு வழியாக கடைசி பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தோம்.

அதற்குள் கும்மிருட்டு வந்து எங்களைப் போர்த்தியது. உஷாராக டார்ச் லைட் நாலு கையிலேயே வைத்திருந்தோம். ஊர் எந்தப் பக்கம் என்றே தெரியவில்லை. “வாங்க இப்படித்தானுங்க போணும்” என்று டிரைவர் காட்டிய திசையில் ஆறு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

நமது குழப்பத்தை வாசித்தவர் சொன்னார், “பரிசல் வருமுங்க”.

அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். பரிசல் வந்தது. கும்மிருட்டில், நிலாவின் எதிரொளி நதியில் அசைய, இரைச்சலே இல்லாத ஒரு அசையும் பரிசலில், ரம்மியமாய்ப்  பயணிப்பது அற்புதமான அனுபவம். ஏதோ ஒரு சொர்ணமுத்துவையும் வைரமுத்துவாக உருமாற்றும் எல்லா சாத்தியங்களும் அந்த சூழலுக்கு உண்டு.

ஆற்றின் மறு கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து ஊரை சென்றடைந்தோம். ஊர் ரொம்ப சின்ன ஊர். அன்று இரவு அங்கே ஒரு வீட்டில் தங்கினோம். விடிவதற்கு இன்னும் நேரம் நிறைய இருந்தபோதே விழித்துக் கொண்டோம்.

இரவு கொஞ்சம் கொஞ்சமாய் விலக விலக, கண்ணுக்குள் விரிந்த அந்த குறிஞ்சியும், முல்லையும் கலந்த இலக்கிய நிலம் வியப்புக் குறிகளை விழிகளுக்குள் எழுதியது. அது ஒரு சின்ன மலைக்கிராமம். அருகில் இருந்த பொட்டிக் கடையில் மலைக்குளிரை மறக்கடிக்கும் ஒரு டீ குடித்து விட்டு நடந்தோம்.

ஊர் முழுக்க பூக்களின் ராஜ்ஜியம். எங்கும் செவ்வந்திப் பூ. தோட்டம் தோட்டமாக, ஏக்கர் கணக்கில் பூக்கள் பூத்துக் குலுங்கின. ஷங்கருக்கு ஒரு பாடல்காட்சி எடுக்கத் தேவையான அத்தனை இலட்சணங்களோடும் இருந்தது அந்த பூக்களின்.

“இவ்ளோ பூக்களையும் எப்படி விப்பீங்க?” பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் கேட்டோம்.

“இந்த பூவெல்லாம் எடைக்கு விப்போமுங்க. கிலோ ஆறுரூபா அம்பது பைசாங்க. இதை எடுத்துட்டு டவுணுக்கு போயிடுவாங்கங்க.. இத அரச்சுப் போட்டு வாசனைத் திரவியம் செய்வாங்கங்க..” என்றார் அவர்.

ஒரு சாகுபடிக்கு மூன்று மாதகாலங்கள். ஒரு ஆளுக்கு ஒரு நாள் கூலி 300 ரூபாய். ஒரு ஏக்கர் பயிரிட, பாதுகாக்க, பறிக்க என 20 பேராவது வேலை செய்யணும். கிலோவுக்கு விலை வெறும் 6.50 தான் ! வருமானம் ரொம்ப ரொம்பக் கம்மி என்பது தான் யதார்த்தம்.

“ஆமாங்க.. ரொம்ப எல்லாம் கெடைக்காதுங்க. வெள்ளாம நல்லா இருந்தா பரவாயில்லீங்க. போச்சுன்னா பொழப்பு போயிடுமுங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அவர்.

பூக்களைத் தவிர அங்கே விளையும் இரண்டு முக்கியமான விஷயங்கள் மஞ்சள் மற்றும் மிளகாய். இரண்டும் நல்ல விளைச்சல் இருந்தால் நல்ல லாபமான தொழில். ஆளாளுக்கு கொஞ்சம் கொஞ்சம் மஞ்சள், மிளகாய் எல்லாம் வாங்கினோம். புதுசாய்க் கிடைப்பதில் எப்போதுமே ஒரு சுகம் உண்டு இல்லையா ?

அப்படியே நடந்து போனபோது ஆறு பாயும் ஓசை கேட்டது. மலையருகே ஆற்றின் கன்னித்தன்மை கெடாத புனித ஓட்டத்தில் குளிப்பது ஒரு சுகம் இல்லையா ? கிடைத்த இடங்களிலெல்லாம், தாவி, குதித்து ஒரு இடத்தில் குளிக்க இறங்கினோம். அப்படியே சொக்கிப் போகும் சுகம்.

அந்த ஆற்றுக்கு மாயாறு என்றொரு பெயர் உண்டு. எப்போது காட்டு வெள்ளம் ஓடிவரும் என்பதைக் கணிக்க முடியாது. திடீரென பத்தடி உயரத்துக்கு அது பாய்ந்து வந்து அப்படியே அள்ளிக் கொண்டு போய்விடும்.ஆற்றின் கரைகளில் சந்தன மரங்களும் எங்களைப் பார்த்துக் கையசைத்தன.

நேரம் போவதே அறியாமல் இரண்டு மணி நேரமாய் குளித்துக் கொண்டிருந்தோம். ஒருவர் ஓடி வந்தார். அவர் பெயர் ரமேஷ்.

“ஏனுங்க… கரையேறிப்புடுங்க… சீக்கிரமுங்க…”

“ஏங்க ? காட்டாறு வருதா ? “ பரபரப்பாய் நாங்கள் கரையேறினோம்.

“இல்லீங்க.. இந்த பக்கம் குளிக்கறது டேஞ்சருங்க. முதலை இருக்குல்லா” என்றார் அவர்.

“என்னது மு…மு…முதலையா ?” என நாங்கள் நடுங்கத் துவங்கியபோது அவரே சொன்னார். அந்த இடத்திலிருந்து கொஞ்சம் மேலே முதலைகள் உண்டு. அவை எப்போது எங்கே வரும் என்று சொல்ல முடியாது !

ஆளை விட்டது ஆண்டவன் கருணை என்று நாங்கள் நடையைக் கட்டினோம். “நல்ல மீன் குழம்பு வைத்துத் தாருங்கள்.” எனும் எங்கள் விண்ணப்பத்துக்கு ஏகமாய் தயங்கினார் அவர்.

“இங்க மீன் பிடிக்க தடை பண்ணியிருக்காங்க. மீனு புடிச்சா முதலைக்கு சாப்பாடு கம்மியாயிடுமுங்க. அப்புறம் அதுக ஊருக்குள்ள வர ஆரம்பிச்சுடுமுங்க. அதனால இங்க மீன் பிடிக்க முடியாதுங்க. ஆனா இன்னொரு இடமிருக்குங்க. அங்க போய் மீனு வாங்கிட்டு வரேனுங்க” என எங்கள் காதிலும், நாவிலும் இன்பத் தேன் பாய்ச்சியவர் விடைபெற்றார்.

நாங்கள் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தோம். சென்னையின் புழுதிக் காற்றுக்கும், மலைக்கிராமத்தின் புழுதியற்ற காட்டுக்கும் இடையேயான வாழ்க்கை வேறுபாடுகள் மனதை பிசைந்தன. ‘இழந்து கொண்டிருக்கும் விஷயங்கள் குறித்த பிரக்ஞையற்று கணினிக்கு முன்னால் கட்டுண்டு கிடக்கும்’ எங்கள் நிலையை நொந்து கொண்டே நடந்தோம்.

திடீரென யானையின் பிளிறல் !

திகிலுடன் விரைவாய் ஓடி மீண்டும் ஊரை அடைந்தபோது எதிர்பட்டவர் சொன்னார்.

“இந்த பக்கமா போகப்படாதுங்க. யானை பாத்துச்சுன்னா கொன்னு போட்டுடுங்க. ஏன்னா அது ரொம்ப சமதளமுங்க. நாம தப்பவே முடியாதுங்க”

ரெண்டாவது முறையாக உயிர் தப்பிய உணர்வு எங்களுக்கு ! திகில் நிமிடங்களோடு அன்றைய பொழுது கடக்க, இரவு வந்தது !

மணக்க மணக்க மீன்குழம்பு பரிமாறிக் கொண்டே பேச ஆரம்பித்தார் ரமேஷ், கூடவே சண்முகம்.

“1995ல ஊருக்குள்ள புலி வந்து வரிசையா 14 பேரை கொன்னு போட்டுச்சுங்க. நம்ம சனங்களுக்கு பயமெல்லாம் காட்டு மிருகங்க தாங்க. ஆனாலும் பழகிப் போச்சு. அடிக்கடி யானை விரட்டும். அப்பப்போ மாடு விரட்டும். ஊரு மனுஷங்க ரொம்ப நல்லவங்க. ஒரே குடும்பமா இருக்கமுங்க”

அவர் பேசப் பேச, கிராமத்தின் இயல்புகளும் அவர்களுடைய மகிழ்வும், சோகமும், ஏக்கமும் பேச்சில் மிதந்தது.

960 ரேஷன் கார்ட்கள். 2600 ஓட்டுகள். 3400 மக்கள் என்பது தான் அவர் சொன்ன கிராமத்துப் புள்ளி விவரக் கணக்கு. கிராமத்திலேயே ஒரு சின்ன பள்ளிக்கூடம், அரசு அலுவலகம், தபால் நிலையம், பொட்டிக் கடை என எல்லாம் இருக்கிறது.

“ஒரு காலத்தில் இந்த ஏரியா காட்டில ஓரிரு புலிகளே உலவிக் கொண்டிருந்தன. இப்போதைய கணக்குப் படி 8 புலிகள் இருக்கின்றன” என்றார் அங்கே தங்கியிருக்கும் வனத்துறை அதிகாரி ஒருவர்..

“இந்த மலைப்பகுதியை அப்படியே புலிகள் சரணாலயமாய் மாற்றும் திட்டம் அரசுக்கு இருக்கிறது. 14 கிராமங்களைக் காலி செய்ய வேண்டும் என்பது திட்டம். ஆனால் தெங்குமரஹாடா மக்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இந்த மலையை விட்டுச் செல்ல மனம் இல்லை” மேலும் சொன்னார் வனத்துறை அதிகாரி. 

“கவர்மென்ட் ஒரு ரேசன் கார்டுக்கு அஞ்சு லெட்சம் தரலாம்ன்னு சொல்லுதுங்க. நாங்க அதை வெச்சு என்ன பண்ண முடியுமுங்க ? இதே மாதிரி ஒரு கிராமம் உருவாக்கி தரட்டுமுங்க. இல்லேன்னா கார்டுக்கு பத்து இலட்சமும், ரெண்டு ஏக்கர் நிலமும் தரட்டுமுங்க. நாங்க பொளச்சுக்குறோமுங்க” என்றார் நம்முடன் மீன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சண்முகம் .

அங்கிருந்து கோயமுத்தூருக்கு கல்லூரிப் படிப்புக்காகச் சென்று கொண்டிருந்த லாவண்யா எனும் இளம் பெண்ணிடம் பேசினோம். ஊரின் மீதும், ஊர் மக்கள் மீதும் அலாதியான பிரியம் வைத்திருந்தவர் சொன்னார்,

“ஊருக்கு வந்துட்டு போறது தான் பிரச்சினையே. ஊர் பக்கம் வந்தாலே மனசு ரொம்பவே சந்தோசமாயிடுது. இந்த காட்டுக்குள்ள இருந்து கூட எங்க மக்கள் கல்லூரிக்குப் போறாங்கங்கறதே ஒரு சாதனை தானே ? இல்லையா ?” என்ற அவருடைய வெகுளித்தனமான கேள்விக்கு, “நிச்சயமா ! “ என்பது மட்டுமே நாங்கள் சொன்ன பதில் !

வனமா ? மக்களின் மனமா ? எனும் இரண்டு கேள்விகளுக்கு இடையே அரசின் முடிவு இன்னும் முற்றுப் புள்ளி வைக்க முடியாமல் இருக்கிறது. நூறு ஆண்டுகளாக மலையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு அங்கிருந்து விரட்டப்படுவது உயிரை உலுக்கும் நிகழ்ச்சி. அரசுக்கோ அது வனத்துக்குச் செய்யும் மரியாதை !

வனங்கள் அழிக்கப்பட்டால் காட்டு விலங்குகள் மக்களைத் தாக்கும் எனும் வாதம் அரசிடம் இருக்கிறது. மக்களை விரட்டிவிட்டு விலங்குகளை வாழவைக்கப் போகிறீர்களா எனும் வாதம் மக்களிடம் இருக்கிறது. கள்ளம் கபடமில்லாத இந்த மக்களின் மனம் காயமடையக் கூடாதே எனும் பதட்டம் நம்மிடமும் !

 

சேவியர்

நன்றி : தேவதை

 

புத்தகங்கள் அழியுமா ?

ஒவ்வொரு புதிய தொழில் நுட்பம் வரும்போதும் பழைய தொழில் நுட்பத்துக்கு அச்சுறுத்தல் எழும் என்பதை மறுக்க முடியாது. “ஊருக்கு போனதும் மறக்காம கடுதாசி போடுப்பா” என்று இப்போது யாராவது சொல்கிறார்களா ? அவர்களுக்கு செல்போனும், எஸ்.எம்.எஸ் ம் பக்க துணையாய் இருக்கின்றன.

பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என வரிசையாய் வரும் பண்டிகைகளுக்காக கடைகளில் போய் வாழ்த்து அட்டைகள் வாங்குவது பழைய பல்லவி. இப்போது எல்லாம் மின்மயம். ஏதோ ஒரு இணையப் பக்கத்தில் போய் ஒரு வாழ்த்தை கிளிக் பண்ணி மெயில் பண்ணிவிட்டால் விஷயம் முடிந்தது !

தந்தி, தந்தி என்றொரு சமாச்சாரம் இருந்தது ஞாபகம் இருக்கிறதா ? அதை இனிமேல் அரசியல் தலைவர்களின் பேட்டிகளில் தான் கேட்க முடியும். எந்த பிரச்சினையானாலும் “பிரதமருக்கு தந்தி கொடுப்பது” அவர்கள் மட்டும் தான். மற்ற எல்லோருமே மின்னஞ்சல், போன், எஸ்.எம்.எஸ், 3ஜி என எங்கேயே போய்விட்டார்கள்.

இப்படியே வழக்கொழிந்து போன விஷயங்கள், அல்லது புதுமையான வகையில் உருமாறிய விஷயங்கள் நிறையவே உண்டு. இப்போது அந்தப் பட்டியலில் நமது புத்தகங்களும் இணைந்து விடுமோ எனும் நிலை உருவாகி வருகிறது.

மென்புத்தகங்களின் வருகையும், அதை வாசிக்க வசதியாக வந்திருக்கின்ற ரீடர்கள், டேப்லெட்கள் போன்றவையும் அச்சுப் புத்தகங்களின் வளர்ச்சியை அசைக்கத் துவங்கியிருக்கின்றன. உலக அளவில் அச்சுப் புத்தகங்களின் விலை பெருமளவு குறைக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

ஒரு புத்தகத்தைச் சுமக்கும் எடையில் ஒரு புக் ரீடரை நீங்கள் தூக்கிச் சுமக்கலாம். சொல்லப் போனால் ஒரு நாவல் சுமார் 300 கிராம் எடை உண்டு. ஆனால் பொதுவான ரீடர்கள் 200 கிராம் எடையை விடக் குறைவு தான். அதில் சுமார் 1400 நாவல்களைச் சேமிக்கலாம். இப்படி மிக எளிமையான வாய்ப்பு வந்திருப்பதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்களை விட்டு விட்டு மென் பக்கமாய் தலை சாய்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.

பயணத்தின் போதெல்லாம் ரீடர்கள் ரொம்பவே உதவியாக இருக்கும் என்பதைச் சொல்லவும் தேவையில்லை. இந்த ஆண்டைய முதல் காலாண்டு புள்ளி விவரம் என்ன சொல்கிறது தெரியுமா ? சுமார் 25% அச்சுப் புத்தகங்கள் விற்பனைச் சரிவு ஏற்பட்டிருக்கிறதாம். நீல்சனின் அறிக்கைபடி கடந்த ஆண்டில் சுமார் 11% அச்சுப் புத்தக விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது !

“அச்சுப் புத்தகங்களின் வீழ்ச்சி கண்கூடு. 2020ல் அச்சுப் புத்தகங்கள் ரொம்பக் கொஞ்சமே இருக்கும். மென்புத்தகங்களே ஆட்சி புரியும்”  என்கிறார் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ஜி.பி.டெய்லர்.

இசை உலகை எடுத்துக் கொண்டால் இன்றைக்கு சிடிக்களின் விற்பனை ரொம்பக் கம்மி. அதுவும் ஆப்பிள் தயாரிப்புகளான ஐபாட் போன்றவை அறிமுகமானபின் வெளிநாடுகளில் சகட்டு மேனிக்கு சரிவு ஏற்பட்டது. காரணம் மக்கள் பெரும்பாலும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வதை விரும்பியது தான்! ஐ-டியூன் போன்ற பணம் கொடுத்து இறக்குமதியாகும் தளங்களில் விற்பனை ஜோராக நடக்கிறது. இதே நிலை இனிமேல் புத்தகங்களுக்கும் வரும்.

எப்போது வேண்டுமானாலும் பிடித்தமான நூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம் எனும் நிலை வரும். இதனால் நூலுக்காக கடை கடையாய் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்டர் கொடுத்து விட்டு வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

புத்தம் புதிய நாவல்களும் மென்வடிவமாகவே தயாரானால் “ஹாரி பாட்டர்” கணக்கான ரசிகர்கள் கொட்டும் பனியில் புத்தகத்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சுற்றுப்புறச் சூழலுக்கும் இது ரொம்ப நல்லது. மரங்கள் பிழைக்கும். பெரிய பெரிய அச்சு நிறுவனங்களெல்லாம் ஓய்வெடுக்கும் !

ஹாரிபாட்டர் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் ஹாரிபாட்டர் நாவல்கள் மென் வடிவம் பெற்றன. சில நாட்களிலேயே சுமார் 8 கோடி ரூபாய்களுக்கான நூல்கள் விற்றுத் தீர்ந்தன ! ஒவ்வொரு நிமிடமும் சுமார் 20,000 ரூபாய்க்கான விற்பனை ஹாரிபாட்டர் மூலம் நடந்து கொண்டிருக்கிறதாம் !

மென்புத்தகங்களின் விலை மிகவும் குறைவாக இருப்பதால் அதன் விற்பனை எண்ணிக்கையும் மிக அதிக அளவில் இருக்கிறது. புத்தக வாசனை வேண்டும், சேமிக்க வேண்டும் எனும் எண்ணம் உடையவர்கள் இன்னும் அச்சுப் புத்தகங்களையே நாடி வருகின்றனர்.

மென்புத்தகங்களின் வளர்ச்சி வரவேற்கப்பட வேண்டியதே ! படிக்கும் பழக்கம் அதன் மூலம் அதிகரித்தால் இரட்டை மகிழ்ச்சி !

 

நன்றி : மவுஸ் பையன், தினத் தந்தி.

காரோட்டினால் நீ கன்னியல்ல ! : நாடுகளின் ஆணாதிக்க முகம்.

 “பெண்கள் காரோட்டினால் அவர்களுடைய கன்னித் தன்மை அத்தோடு முடிந்து போய்விடும். அவர்கள் விபச்சாரிகளாக மாறுவார்கள். ஆபாசத் தொழிலுக்குள் விழுந்து விடுவார்கள். லெஸ்பியன்களாவார்கள். விவாகரத்து செய்து கொள்வார்கள்” இப்படி யாராவது சொன்னால் என்ன நினைப்பீர்கள் ? அதிர்ச்சியடைவீர்கள். அல்லது சொன்னவனுக்கு மனநிலை சரியில்லை போல என நினைத்துக் கொள்வீர்கள். அப்படித்தானே ? காரணம் நாம் இந்தியாவில் இருக்கிறோம் !

மேலே குறிப்பிட்ட வாசகங்கள் அச்சு அசலாக ஒரு நாட்டின் சட்டசபை போன்ற அதிகார மையத்தில்,, உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தவை ! நடந்தது சவுதி அரேபியா ! சொன்னவர் கமால் சுபி எனும் உறுப்பினர் ! அந்த “கன்சல்டேட்டிவ் அசம்ப்ளி ஆஃப் சவுதி அரேபியாவில்” உள்ள மொத்த உறுப்பினர்கள் 150 !

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது சவுதியில் சட்டப்படி குற்றம் ! அப்படியானால் பெண்கள் எங்கேயாவது போகவேண்டுமென்றால் என்ன செய்வது ? யாராவது ஒரு ஆணை சார்ந்தே இருக்க வேண்டும். பெரும்பாலும் கணவன், மகன், அப்பா அல்லது பாதுகாவலன் ! 

ஒருத்தர் சாகக் கிடக்கிறார் என்றால் கூட அவசரத்துக்குக் கார் எடுத்துக் கொண்டு ஒரு பெண் ஆஸ்பிட்டலுக்குப் போக முடியாது ! ஒருவேளை ஏதேனும் ஒரு பெண் அத்தி பூத்தார் போல எதையேனும் மீறினால் முதல் அவமானப் பேச்சு அந்த வீட்டு ஆணுக்குத் தான் ! “ஆண்மையில்லாதவன். ஒரு பெண்ணை ஒழுங்காக வைக்கத் தெரியாதவன்” என ஊர் ஏசும். மீறிய பெண்ணுக்கு சவுக்கடி போன்ற தண்டனைகளும் கிடைக்கும் ! 

“ஏன்பா பெண்கள் காரோட்டக் கூடாது ?”  என்று கேட்டால், பெண்கள் காரோட்டினால் அடிக்கடி வெளியே போவார்கள், பிற ஆண்களுடன் பழகுவார்கள், விருப்பம் போல நடப்பார்கள், சுதந்திரமாக இருப்பார்கள், வீட்டிலுள்ள ஆண்களுக்கு அடங்கி இருக்க மாட்டார்கள், என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள் ஆண்கள் !

சுமார் 2.7 கோடி பேர் வசிக்கும் சவுதியில் எப்படிப் பார்த்தாலும் சுமார் ஒன்றே கால் கோடிப் பெண்கள் உண்டு. இவர்களில் யாருக்கு எங்கே போக வேண்டுமானாலும் இன்னொரு ஆணின் டைம் படி தான் போக முடியும். சுமார் 4 இலட்சம் பெண்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ! இவர்களெல்லாம் ஸ்கூல், காலேஜ் போவதே ஓரு மிகப்பெரிய சவால் !

வாகனம் ஓட்டுவது ஒரு பெண்ணோட அடிப்படை உரிமை. இறைவாக்கினர் வாழ்ந்த காலத்துல கூட பெண்கள் ஒட்டகங்கள் ஓட்டினார்கள். அப்போதைய வாகனம் ஒட்டகம். இப்போதைய வாகனம் கார். ஒட்டகம் ஓட்டுவது முகமது காலத்துல கூட சரியாய் இருந்தது. அப்படின்னா இன்னிக்கு கார் ஓட்டுவது கூட சரியானது தானே ! எனும் கோஷத்தோடு பெண்கள் மெதுவாகப் போராட்டக் களத்தில் நுழைந்தார்கள்.

1990ம் ஆண்டு எதிர்ப்பின் முதல் திரி எரிந்தது. தலைநகரான ரியாத்தில் பன்னிரண்டு பெண்கள் கார் ஓட்டினார்கள். நினைத்தது போலவே அவர்கள் கைது செய்யப் பட்டார்கள் ! பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் அவமானங்களுக்கும் பயந்து பெண்கள் அமைதியானார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அந்தக் கனல் எரிந்து கொண்டே இருந்தது !

வஜேகா அல் குவைடர் (Wajeha al-Huwaider) எனும் பெண்மணி “எங்களுக்கும் காரோட்டும் உரிமை தாருங்கள்” எனும் விண்ணப்பத்தை ஆயிரத்து நூறு துணிச்சலான பெண்களின் கையொப்பத்துடன் சவுதி மன்னர் அப்துல்லாவிடம் அளித்தார். 2008ம் ஆண்டு உலகப் பெண்கள் தினத்தன்று அவர் காரை ஓட்டி தனது நிலையைப் பதிவும் செய்தார் !

இங்கே தான் அவருக்குத் தொழில் நுட்பம் கை கொடுத்தது. அவர் கார் ஓட்டிய வீடியோவை யூ-டியூபில் போட சரசரவென உலகம் முழுதும் அது கவனத்தை ஈர்த்தெடுத்தது. அவர் ஒரு எழுத்தாளர்.

“நான் கொஞ்ச நாள் அமெரிக்காவில் இருந்த போது தான் சுதந்திரம்னா என்ன என்பதை கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். சவுதிப் பெண்கள் வலிமையற்றவர்கள். அவர்களைக் காக்க எந்த சட்டமும் இல்லை. ஏதோ ஒரு ஆணிடம் அவர்கள் அடிமைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என ஆவேசக் குரல் கொடுக்கிறார் இந்தப் பெண்மணி !

1990ல் மாற்றத்துக்கான விதை ஊன்றப்பட்டபோது இணையம் பிரபலமாகவில்லை. 2011ல் இன்டர்நெட் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு “விமன்2டிரைவ்” – “பெண்களும் வாகனம் ஓட்டவேண்டும்” எனும் இயக்கம் ஃபேஸ்புக்கில் பதிவானது. மனல் அல் ஷரிப் (Manal al-Sharif) எனும் பெண்மணி முன்னணியில் நின்றார். இயக்கம் சட்டென ஆதரவுகளை அள்ளியது. கடந்த ஆண்டு ஜூன் 17ல் காரோட்டுவோம் என அறிவித்து சுமார் 50 பேர் காரை ஓட்டிக் கைதானார்கள் !

சவுதிப் பெண்கள் ஏதோ படிப்பறிவில்லாதவர்கள் என நினைத்து விடாதீர்கள். சுமார் 70 சதவீதம் பெண்கள் படித்தவர்கள். ஆனால் அலுவலகங்களில் பெண்கள் எத்தனை சதவீதம் தெரியுமா ? 5 சதவீதம் ! மிச்ச 95 சதவீதமும் ஆண்களே ! இந்த விஷயத்தில் உலகப் பட்டியலில் முதலிடம்.

ஒரு காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால் அந்த சங்கிலி உடைக்கபட்டு இப்போது அவர்கள் கல்வி அறிவு பெறுகிறார்கள். அதே போல அவர்களுடைய சுதந்திரங்கள் ஒவ்வொன்றாய் மீண்டெடுக்கப்படும். ஆண்கள் பயப்படுகிறார்கள். அதனால் தான் பெண்களை அடக்கி ஆளப் பார்க்கிறார்கள் என்கிறார் சவுதியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பெரோனா.

“என்னோட வயசான அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும், அம்மாவை அலுவலகம் கூட்டிப் போக வேண்டும், தோழிகளுக்கு ஊர் சுற்றிக் காட்ட வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஏகபட்ட ஆசைகள். இவையெல்லாம் ஒரு நாள் நிறைவேறுமா? “ என ஏக்கத்துடன் விரிகிறது அவருடைய கனவு. ஆனால் அதற்கான உரையாடலை ஆரம்பித்தால், “இன்னிக்கு காரெடுத்துட்டு போற பொண்ணுங்க நாளைக்கு நைட் கிளப் போவாங்க” என முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றனர் என்கிறார் அவர்.

உலகிலேயே பெண்கள் காரோட்டக் கூடாது என முரண்டு பிடிக்கும் ஒரே நாடு சவுதி அரேபியா தான். கணக்கெடுக்கப்பட்ட 134 நாடுகளில் பாலியல் ரீதியாக வேறுபாடு காட்டும் நாடுகளில் 130வது இடம் சவுதி அரேபியாவுக்கு !

பெரும்பாலான வங்கிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள், உணவகங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தனியே வாசல்கள் உண்டு ! ஏன் பெரும்பாலான வீடுகளிலேயே தனித்தனி வாசல்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உண்டு ! ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பெண்கள் எட்டிக் கூட பார்க்க முடியாது ! 

கொஞ்சம் லெபனான் பக்கம் எட்டிப் பார்த்தால் அங்கே ஆண்கள் எளிதாக பெண்களை டைவர்ஸ் செய்துவிடலாம். ஆனால் பெண்கள் விவாகரத்து கேட்டால் குதிரைக் கொம்பு. அப்படியே “புருஷன் கொடுமைப்படுத்தறான் ஐயா..” என்று சொன்னால் கூட “பார்த்த சாட்சி எங்கே, சர்டிபிகேட் எங்கே, லொட்டு லொசுக்கு எங்கே…” என சட்டம் அவர்களுக்கு எதிராகவே நிற்கும் ! இஸ்ரேல் நாட்டுப் பெண்களுக்கு விவாகரத்து வேண்டுமென விண்ணப்பிக்கும் உரிமையே கிடையாது !

“என் மனைவி இந்த நாட்டை விட்டு வெளியே போறதை தடுக்கணும்” என ஒரு புகாரை கணவன் பதிவு செய்தால் அந்தப் பெண் நாட்டை விட்டு வெளியே போக முடியாது என்பது எகிப்து, பெஹ்ரைன் நாடுகளின் சட்டம் ! ஈராக், லிபியா, ஜோர்டன், மொராக்கோ, ஏமன், ஓமன் இங்கெல்லாம் பெண்கள் வெளிநாடு போக வேண்டுமெனில் கணவனின் அனுமதிக் கடிதம் வேண்டும் !

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் மிகக் கொடுமையானதாய் ஒரு விஷயம் உண்டு ! கேட்கவே பதறடிக்கும் விஷயம் அது !

“அம்மா என்னுடைய கண்களைக் கட்டினார்கள். எனக்குப் பயமாக இருந்தது. திடீரென எனது பிறப்பு உறுப்பிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உயிர் போகும் வலி. பின்னர் என் பிறப்பு உறுப்பு முழுவதும் எதேதோ கத்திகள் கிழிப்பது தெரிந்தது. என் உயிர் அந்த வினாடியிலேயே போய் விடாதா என கதறினேன்” என்கிறார் வேரிஸ் டிரீ எனும் பெண்மணி.

இவர் சொல்வது அந்தக் கொடுமையைத் தான். பெண்களின் பிறப்பு உறுப்பை வெட்டியும், தைத்தும் செய்யப்படும் கொடுமை. ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் இந்தக் கொடுமை நிகழ்கிறது ! எழுதுவதற்கே விரல்கள் நடுங்கும் இந்தக் கொடுமையை ஆங்கிலத்தில் ஃபீமெயில் ஜெனிடல் மியூட்டிலேஷன் என்கிறார்கள். சிறுமியாக இருக்கும் போதே பெண்களுடைய பிறப்பு உறுப்பின் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எடுப்பதும், பெண் குறியின் வாசலைத் தைத்து குறுகலாக்குவதும் என இந்த கொடூரமான நிகழ்வின் பாகங்கள் திகிலூட்டுகின்றன.

சுமார் 14 கோடி ஆப்பிரிக்கப் பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. முப்பது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்தச் சடங்குக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சியாய் இருக்கின்றன.

ஜீன்ஸ் – டிஷர்ட் போட்டதற்காக ஆபாசமாய் உடையணிந்தாள் எனும் கோஷத்தோடு ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்தனர் சூடான் நாட்டில். சமீபத்தில் அது சர்வதேச மனித உரிமைகள் கமிஷனின் கவனத்துக்கு வந்தது !

“குடும்பத்துக்கு கெட்ட பேரு உண்டாக்கிட்டா” எனும் குற்றச்சாட்டோடு கருணைக் கொலை எனும் பெயரில் பெண்கள் உயிரோடு புதைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் உலகின் பலபாகங்களிலும் இருப்பதாக யூனிசெஃப் அறிக்கை பதறடிக்கிறது.

அல்பேனியா, மால்டோவா, ரொமானியா, பல்கேரியா, ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளிலுள்ள பெண்களை அதிக அளவில் “செக்ஸ் அடிமைகளாக” வெளிநாடுகளுக்கு விற்கப்படும் அவலம் தொடர்கிறது ! பணக்கார மேற்கு ஐரோப்ப நாடுகளில் அவர்கள் எஜமானனின் சகல தேவைகளையும் நிறைவேற்றும் துயர நிலைக்குத் தள்ளபடுகிறார்கள் !

ஒரு பெண்ணைப் பிடிச்சுப் போச்சுன்னா அந்தப் பொண்ணைக் கடத்திக் கொண்டு போய் பையனின் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாய் சம்மதிக்க வைக்கும் வழக்கம் கசகஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற இடங்களில் பரவலாக உண்டு. எத்தியோப்பியா, ருவாண்டா பகுதிகளில் நிலமை இன்னும் மோசம். கடத்திக் கொண்டு போன கையோடு அந்தப் பெண்ணை பாலியல் வன்முறையும் செய்து விடுகிறார்கள். அப்புறமென்ன தமிழ் சினிமா போல, கெடுத்தவனோடு வாழ் எனும் கிளைமேக்ஸ் தான் !

மார்ச் 8, உலக பெண்கள் தினம். இந்த நாளில் நமக்குக் கிடைத்திருக்கும் விலை மதிப்பற்ற இந்த சுதந்திரம் மனதுக்கு நிறைவளிக்கலாம். அந்த நிறைவோடு நின்று விடாமல் உலக அளவிலான பெண்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்துக்காகவும் நம்மால் முடிந்த அளவு குரல்கொடுக்கும் முடிவையும் எடுப்போம் !

சகோதரியர் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்.

Thanks : தேவதை பெண்கள் இதழ் , பெண்கள் தின சிறப்புக் கட்டுரை.

சேவியர்

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

 அழகிப் போட்டி பார்த்திருக்கிறீர்களா ? பளீரென வெளிச்சம் வீசும் பாதையில் வசீகர அசைவுடன் பூனை நடை போட்டு வரும் அந்த அழகிகளின் செருப்புகளை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ? ஒரு வைன் கோப்பையைப் போல நெடு நெடுவென இருக்கும் அந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஏராளம் ஆபத்துகள் இருக்கின்றன.

திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும் ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.

“ஹை ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ் அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.  

சிலருக்கு பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.

அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக் காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.

“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ் சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ் செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும் பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை ஆரம்பித்திருக்கிறது !

பண்டைய ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ் அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.

கடையில போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6  சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் !  8.5 சென்டீ மீட்டர் வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ் என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !

“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச் சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது !  எனவே அவர் அப்படிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

ஆனால் சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா ? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா ?

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம். அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு எனர்ஜியைச் செலவிடுமாம்.

“நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார் டாக்டர் நெயில் ஜெ குரோலின்.

நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !

சுளுக்கோட போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால் முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.

ஆஸ்டியோஆர்த்ரடிஸ் (Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால் வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரெட்மான்ட். 

இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ் அணிவதால் ஆய பயன் ! 

நமது பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ் அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும் உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரொம்ப சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான். ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி விழுந்தா நல்லாவா இருக்கும் ?

மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது. பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான் ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச் செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.

தாய்மை நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !

மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.

ஹை டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !

சேவியர்

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

அழகிப் போட்டி பார்த்திருக்கிறீர்களா ? பளீரென வெளிச்சம் வீசும் பாதையில் வசீகர அசைவுடன் பூனை நடை போட்டு வரும் அந்த அழகிகளின் செருப்புகளை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ? ஒரு வைன் கோப்பையைப் போல நெடு நெடுவென இருக்கும் அந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஏராளம் ஆபத்துகள் இருக்கின்றன.

திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும் ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.

“ஹை ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ் அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.

சிலருக்கு பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.

அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக் காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.

“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ் சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ் செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும் பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை ஆரம்பித்திருக்கிறது !

பண்டைய ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ் அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.

கடையில போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6 சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் ! 8.5 சென்டீ மீட்டர் வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ் என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !

“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச் சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது ! எனவே அவர் அப்படிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

ஆனால் சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா ? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா ?

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம். அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு எனர்ஜியைச் செலவிடுமாம்.

“நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார் டாக்டர் நெயில் ஜெ குரோலின்.

நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !

சுளுக்கோட போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால் முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.

ஆஸ்டியோஆர்த்ரடிஸ் (Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால் வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரெட்மான்ட்.

இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ் அணிவதால் ஆய பயன் !

நமது பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ் அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும் உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரொம்ப சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான். ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி விழுந்தா நல்லாவா இருக்கும் ?

மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது. பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான் ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச் செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.

தாய்மை நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !

மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.

ஹை டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !

சேவியர்

தொழில் நுட்பத் திகில் !!

தொழில் நுட்பம் வளர வளர மக்களுடைய தனிமையும், நிம்மதியும் பறிபோய்விடும் என்பது உண்மையாகத் தான் இருக்கிறது. குறிப்பாக இன்டர்நெட் வந்தபிறகு “உளவு” வேலைகள் சகஜமாகிவிட்டன. கூகிள் மேப் போன்ற மென்பொருட்கள் வீதி, வீடு, மொட்டை மாடி, என எல்லா இடங்களிலும் ரகசியக் கண் வைத்து கவனிக்கின்றன. யார் எங்கே போகிறார் என்றெல்லாம் கூட அது கண்டுபிடித்து விடுகிறது ! 

அதே போல தான் செல்போன். கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும். ஒரு நபர் எங்கே இருக்கிறார். எப்போது அந்த இடத்துக்கு வந்தார். எங்கேயெல்லாம் போனார் என சர்வ சங்கதிகளையும் கண்டு பிடித்து விடலாம். காவல் துறையினருக்கு துப்புத் துலக்குவதில் இப்போதெல்லாம் அதிகம் பயன்படுவது செல் போன் தான் ! குற்றவாளிகளை வலை வைத்துப் பிடிக்க அது ரொம்ப வசதியாய் இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டியும் நாம் கவனிக்கப் படுவோம் ! தொழில் நுட்பம் நமது வீட்டின் அறைகளுக்குள் நுழைந்து நம்மைக் கண்காணிக்கும் என்கிறார் அமெரிக்காவிலுள்ள சி.ஐ.ஏ ( சென்ட்ரல் இன்டலிஜன்ட் ஏஜன்ஸி) இயக்குனர் டேவிட் பீட்ரஸ். குறிப்பாக தொலைக்காட்சி போன்றவையெல்லாம் இன்றைக்கு இணையத் தொடர்போடு தான் வருகின்றன.

இணையப் பக்கங்களில் நுழையலாம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற திரைப்பட பக்கங்களில் போய் படம் பார்க்கலாம் என்றெல்லாம் ஏகப்பட்ட வசதிகள். இதனால் எப்போதும் உலகோடு நமது வீடு இணைக்கப் பட்டு விடுகிறது.

இப்படி இணையத்தில் உலவும் போது நமது செயல்பாடுகளையெல்லாம் ரகசியமாய்க் கவனிக்க முடியும் என கூறி அவர் திடுக்கிட வைக்கிறார். நாம் எங்கே இருக்கிறோம். நமது விருப்பம் என்ன ? நமது செயல்பாடுகள் என்ன போன்ற அனைத்து விஷயங்களும் ரகசியமாய் உறிஞ்சப்படலாம் என்கிறார் அவர். இணையத்தின் மூலமாக மட்டுமல்லாமல், ரேடியோ ஒலி அலைகள் மூலமாகக் கூட நபர்களைக் கண்காணிக்க முடியுமாம். 

ஒரு வகையில் நமக்குத் தெரியாமலேயே நமது விருப்பங்கள், செயல்பாடுகள் என ஏகப்பட்ட விஷயங்களை நாம் யாரோ ஒருவருக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த சிந்தனையே ஒரு வகை அசௌகரியத்தைத் தருகிறது இல்லையா ? இப்போது எல்லா மொபைல்களும் வேறு இணையத்தோடே இணைந்திருப்பதால் இந்த “உளவு” பல மடங்கு உயரும் என்பது அவருடைய கருத்து !

தொலைக்காட்சி மட்டுமல்லாமல் ஃபிரிட்ஜ் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் வீட்டுப் பொருட்களில் கூட “கம்ப்யூட்டர் சிப்” இணைத்து கவனிக்கலாம் என்று அவர் தெரிவிக்கும் கருத்து இன்னும் அதிர வைக்கிறது !

தொழில் நுட்ப வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலை இது !

*

நன்றி : தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம், (மவுஸ் பையன்)

திரைப்படத்திலிருந்து காமிக்ஸ் !

காமிக்ஸ் புத்தகம் என்றாலே மலரும் நினைவுகள் உங்கள் மனதில் நிழலாடக் கூடும். ஜேம்ஸ்பாண்ட், இரும்புக்கை மாயாவி என்றெல்லாம் வசீகரித்த காமிக்ஸ் வரலாறு கொஞ்சம் தொய்ந்து போய் விட்டது. தொலைக்காட்சியின் தாக்கம் காமிக்ஸ் புத்தகங்களின் வீச்சைப் பாதித்து விட்டன என்பது பரவலான குற்றச் சாட்டு. ஆனாலும் “படக்கதைக்கு” ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

அத்தகைய ரசிகர்களை இந்தச் செய்தி குஷிப்படுத்தும் என நம்புகிறேன். சீனாவிலுள்ள ஹெஃபி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மென்ங் வேங் தங்கள் குழுவினரின் புது மென்பொருள் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இந்த மென்பொருள் ஒரு திரைப்படத்தைக் கொடுத்தால் அப்படியே அதன் காமிக்ஸ் வெர்ஷனைத் தந்து விடுமாம். சினிமாவில் கதாபாத்திரங்கள் பேசும் வார்த்தைகளை அப்படியே ஒரு சின்ன கட்டத்துக்குள் அடக்கி, அச்சு அசலான காமிக்ஸ் பக்கங்களை இது உருவாக்குகிறது.

இந்த மென்பொருள் குறித்த விரிவான செய்தியை ‘ஐ.இ.இ.இ டிரான்ஷாக்ஸன் ஆன் மல்டிமீடியா’ எனும் இதழில் அவர் எழுதியிருக்கிறார். மூவி2காமிக்ஸ் (Movie2Comics) என இந்த மென்பொருளுக்கு அவர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்பே பல மென்பொருட்கள் படங்களை காமிக்ஸ் வடிவமாக்கும் முயற்சியில் இறங்கி கொஞ்சம் கொஞ்சம் வெற்றியும் பெற்றன. ஆனால் முழுக்க முழுக்க தானியங்கி முறையில் ஒரு படத்தை காமிக்ஸ் ஆக மாற்றுவது இதுவே முதன் முறை! 85 சதவீதம் சரியாக இந்த மென்பொருள் காமிக்ஸைத் தருகிறது. கொஞ்சம் டயலாக் பெட்டியை அங்கே இங்கே இழுத்து வைக்கும் டச் அப் வேலைகளைச் செய்தால் காமிக்ஸ் புக் ரெடி.

காமிக்ஸ் தயாரிப்பவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம். எந்த ஒரு ஹிட் படத்தையும் சில நிமிடங்களிலேயே படக் கதையாக உருமாற்றி விடலாம்.

சாதாரண மக்களுக்கும் இது ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம் தான். தங்களுடைய கல்யாண வீடியோவையோ, சுற்றுலா வீடியோவையோ, அல்லது குழந்தைகளின் வீடியோக்களையோ காமிக்ஸ் புத்தகங்களாக மாற்றி வைத்துக் கொள்ளலாமே !.

சோதனை முயற்சியாக அவர்கள் செய்து காட்டிய டெமோவில் உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களான “டைட்டானிக்” ஷெர்லக் ஹோம்ஸ், மற்றும் த மெசேஜ் எனும் மூன்று படங்களிலுள்ள சில காட்சிகளை எடுத்திருந்தார்கள். 2 முதல் 7 நிமிடங்கள் வரையிலான இந்தக் காட்சிகளை ‘படக் கதையாக’ மாற்றிக் காட்டினார்கள் !

இந்த காமிக்ஸ் வடிவத்தை பார்த்தவர்களெல்லாம் வெகுவாகப் பாராட்டினார்களாம். நல்ல விஷயம் தான், நாமும் பாராட்டுவோம்.

*

 Thanks :  தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம் (மவுஸ் பையன்)

வின்டோஸ் 8, ஒரு பார்வை !

 கணினியுலக ஜாம்பவான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்களுடைய மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று வின்டோஸ் செயலி. அதன் ஒவ்வொரு வடிவம் வரும்போதும் பரபரப்பு பற்றிக் கொள்ளும். வின்டோஸ் 7 எனும் செயலி தான் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்ததாக வரப்போகும் செயலி வின்டோஸ் 8 ! இதுவரையிலான செயலிகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பதால் அதற்கான வரவேற்பு கணிசமாக எகிறியுள்ளது !

இதன் பீட்டா வெர்ஷனை ( சோதனை வடிவம்) பிப்ரவரி 29ம் தியதி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் களமிறக்கியது. இதை யார்வேண்டுமானாலும் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்பாட்டாளர்களின் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் பரிசீலித்து தேவையான மாற்றங்களைச் செய்து மெருகேற்றலாம் என்பது மைக்ரோசாஃப்டின் திட்டம். அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதை டவுன்லோட் செய்து ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டார்கள் !

வின்டோஸ் 8 ஐப் பொறுத்தவரை இது எல்லாவிதமான கம்ப்யூட்டர்களிலும் பொருந்தும் என்பது புதுமையான விஷயம். தொழில் நுட்ப அடிப்படையில் பேசும்போது வின்டோஸ் செயலிகள் எல்லாமே எக்ஸ்.86 எனும் பிராசசர்களுக்காகவே உருவாகும். அதனால் பிற இடங்களில் இதை நிறுவ முடியாத சூழல் இருந்தது. இந்த செயலி முதன் முறையாக அந்தக் கட்டுப்பாட்டை உடைத்து ஏ.ஆர்.எம் கட்டமைப்புக்கும் பொருத்தமானதாய் உருவாகியிருக்கிறது.

வின்டோஸ் செயலிகளில் இருக்கும் பலவீனங்களில் ஒன்று அதன் “ரீஸ்டார்ட்” நேரம். சில வேளைகளில் கணினியை இயக்கிவிட்டு ஒரு காபி குடித்து விட்டு வந்தால் தான் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகி இருக்கும். இது ஒரு பரவலான குறையாகவே இருந்து வருகிறது. வின்டோஸ் 8 அந்த சிக்கலையும் புதுமையான முறையில் சரி செய்யும் என்கிறார்கள். ரிஃப்ரஷ், ரீசெட் எனும் இரண்டு புது கான்சப்ட் மூலமாக இந்த சிக்கலைச் சரிசெய்திருக்கிறோம் என்கின்றனர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தினர்.

இன்றைய நவீன உலகில் எல்லாமே தொடு திரை தானே. குறிப்பாக மொபைல் புரட்சி வந்தபின் மக்களெல்லாம் போனில் தொட்டுத் தொட்டு விஷயங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். கணினியைப் பொறுத்தவரை இன்னும் கீ-போர்ட் முக்கியமான அம்சமாகவே இருக்கிறது. திரையில் தொட்டால் செயல்படுவது போல செயலிகள் இல்லை. அந்தக் குறையை வின்டோஸ் 8 போக்கும் ! இது தொடு திரை வசதியுடைய டேப்லெட்களுக்கும் பொருத்தமானதாய் உருவாகியிருக்கிறது.

இன்றைய ஹாட் டெக்னாலஜிகளில் ஒன்று கிளவுட் சிஸ்டம். இப்போதே எல்லா நிறுவனங்களும் கிளவுடை நோக்கி தங்கள் திட்டங்களை வரையறுத்து விட்டன.  எதிர்காலத்தில் முழுமையாய் இது தான் கணினித் துறையை ஆக்கிரமிக்கும் என நம்பப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐடியூன் வசதியையும் கிளவுட் மயமாக்கியிருக்கிறது.

ஆப்பிளின் ஐடியூன் பயனராக உங்கள் கணினியில் இருந்து மட்டுமே இயங்க முடியும் எனும் குறை இருந்தது. கிளவுட் முறை எந்தக் கணினியில், அல்லது மொபைலில் இருந்தும் உங்கள் பயனர் கணக்கை இயக்கும் வசதியைத் தந்திருக்கிறது. வின்டோஸ் 8 செயலி முதன் முறையாக அத்தகைய ஒரு வசதியை அறிமுகம் செய்கிறது ! இதுவரை எந்த கணினிச் செயலிகளிலும் இல்லாத வசதி இது !

இதன் மூலம், உங்களுடைய கணினி ஐடியை வைத்து எந்தக் கம்ப்யூட்டரில் இருந்து வேண்டுமானாலும் உள் நுழையலாம். உங்களுடைய “செட்டிங்” அப்படியே இருக்கும். உங்களுடைய டெஸ்க்டாப்பில் எதையேனும் சேமித்து வைத்திருந்தால் அதை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இது இன்னொரு வசீகரிக்கும் அம்சம் !

பாதுகாப்பு விஷயங்களைப் பலப்படுத்தவும், எளிமையாக கணினியில் உள் நுழையவும் படம் சார்ந்த பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது வின்டோஸ் 9. இதில் பயனர் நீளமான ஒரு கடவுச் சொல்லை நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை. அடிக்கடி அதை மாற்றி, என்னத்த மாற்றினோம் எனவும் குழம்பவும் தேவையில்லை. படத்தைக் காட்டி உள் நுழையலாம் ! இரண்டாம் கட்ட பாதுகாப்பாக வார்த்தைகளைக் கொண்டும் பாஸ்வேர்ட் அமைக்கலாம்.

இன்னொரு அட்டகாசமான விஷயம், “வின்டோஸ் டு கோ” என்பது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு “டாஸ்” செயலி இருந்த காலத்தில் ஃப்ளாப்பி டிஸ்க்கில் தான் அந்த செயலிக்கான கோப்புகள் இருக்கும். அதைப் போட்டுதான் கணினியை இயக்க முடியும்.

அதன் பின் பிளாப்பிகளெல்லாம் அருங்காட்சியகத்துக்குச் சென்று விட்டன. இந்த வின்டோஸ் டு கோ ஒரு புதுமையான மறுபிறவி எனலாம். அதாவது, வின்டோஸ் 8 செயலி முழுவதும் ஒரு 32 ஜிபி அளவுள்ள பென்டிரைவில் இருக்கும். அதை கணினியில் சொருகிவிட்டால் போதும். அங்கிருந்தே செயலி செயல்படத் துவங்கும். உங்கள் கம்ப்யூட்டலில் “இன்ஸ்டால்” செய்யத் தேவையில்லை ! புதுமையாய் இருக்கிறது இல்லையா ?

வின்டோஸ் செயலி பொதுவாகவே வின்டோஸ் எக்ஸ்ப்ளோரர் எனும் பிரவுசரைத் தான் முன்மொழியும். காரணம், அதுவும் மைக்ரோசாஃப் தயாரிப்பு என்பது தான். ஆனால் பயனர்களுடைய விருப்பம் மாறுபடும். சிலர் மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசரை விரும்புவார்கள். வேறு சிலருக்கு கூளிள் குரோம் வசதியாக இருக்கும். அதைக் கருத்தில் கொண்டு வேறு பிரவுசர்களை எந்த சிக்கலுமில்லாமல் நிறுவிக் கொள்ளவும் வின்டோஸ் 8  அனுமதிக்கிறது !

ஆனாலும் வின்டோஸ் 8க்காகவே மைக்ரோசாஃப்ட் களமிறக்கும் பிரவுசர் வின்டோஸ் எக்ஸ்ப்ளோரர் “மெட்ரோ” 10 ! தொடு திரை வசதியுடன் கூடிய முதல் பிரவுசர் இது தான். இது வின்டோஸ் 8ல் மிகவும் அற்புதமாகச் செயல்படுவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வின்டோஸ் செயலி என்றதும் “ஸ்டார்ட் பட்டன்” உங்களுக்கு மனதில் நிழலாடும் ! ஸ்டார்ட் பட்டன் இல்லாவிட்டால் கொஞ்சம் தடுமாறிப் போவோம் இல்லையா ? இந்த வின்டோஸ் 8ல் ஸ்டார்ட் பட்டனே கிடையாது. இது திரையில் ஆப்ளிகேஷன்களை வரிசைப்படுத்தி வைக்கும். அங்கிருந்து தேவையானவற்றை இயக்கவோ, முடிக்கவோ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். புதுமையான மாற்றம் என்பதால் காலம் காலமாக ஸ்டார்ட் பட்டன் கிளிக்கிப் பழகிய கைகளுக்கு கொஞ்சம் தடுமாற்றம் நேரிடலாம்.!

தொடுதிரை வசதி மெட்ரோ யூஐ வசதியின் மூலம் சாத்தியமாகி இருப்பதால், மவுஸ் பயன்பாடும் கீ போர்ட் பயன்பாடும் வெகுவாகக் குறையும். ஆனாலும் அது முழுமையாக நீக்கபடவில்லை. மவுஸ் தான் வேண்டும் என முரண்டு பிடிக்கும் கைகளுக்கு மவுஸ் பயன்படுத்திக் கொள்ளலாம் !

இப்போது பயன்பாட்டில் உள்ள யூ.எஸ்.பி 2 வின் அட்வான்ஸ் வெர்ஷனும் வருகிறது என்பது புதுமை. இந்த செயலியுடன் யூ.எஸ்.பி 3 வருகிறது. இதன் செயல்பாட்டுத் திறன் அதிகமாக இருக்கும்.

கொஞ்ச நாள் தொடர்ந்து வின்டோஸ் செயலியைப் பயன்படுத்தினால் அது ரொம்பவே ஸ்லோ ஆகி இம்சைப்படுத்தும் என்பது சர்வதேசக் குற்றச்சாட்டு. அதற்குக் காரணம் தேவையில்லாமல் சேரும் தற்காலிகக் கோப்புகள், நினைவிடக் கோளாறுகள் போன்றவை தான். அதை நிவர்த்தி செய்ய “புஷ் பட்டன் ரீசெட் ஆப்ஷன்” இருக்கிறது.

ஒரு பட்டனை அமுக்கினால் உங்கள் கணினியிலுள்ள வேண்டாத விஷயங்களையெல்லாம் அது அழித்து உங்கள் கணினியை சுறுசுறுப்பாக்கிவிடும். கணினியையே புத்தம் புதிது போல ஆக்க வேண்டுமெனில் அதற்கும் ஒரு தனி ஆப்ஷன் இருக்கிறது. அதை அமுக்கினால், கணினியின் அனைத்து கோப்புகளும் அழிந்து, புதிதாக வின்டோஸ் செயலில் நிறுவப்பட்டு விடும் !

இப்படி பல்வேறு விதங்களில் வசீகரிக்கும் வின்டோஸ் 8ன் முழுமையான வடிவம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரக் கூடும் என்கின்றனர். எனினும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர் இன்னும் எந்த தேதியையும் குறிப்பிடவில்லை !

வரட்டும் ! காத்திருப்போம் !

Please Click, if you Like….

நன்றி : தினத்தந்தி (மவுஸ் பையன்)

தேர்வு எழுதப் போறீங்களா ? : கொஞ்சம் டிப்ஸ் இதோ !

 

தேர்வுக் காலம் வந்தாலே இனம்புரியாத ஒரு பதட்டமும், பயமும் மாணவர்களுடைய மனதில் எழுந்து விடுகிறது. அந்தப் பதட்டம் தேவையில்லாதது. தேர்வு வாழ்வின் ஒரு பகுதிதான். அதுவே வாழ்க்கையல்ல. எனவே தேர்வு குறித்த பயத்தையும், மிரட்சியையும் முதலில் விரட்டுங்கள். கல்வியில் முழு கவனத்துடன் ஈடுபடுங்கள், அதே நேரத்தில் தோல்வியையும், வெற்றியையும் அமைதியான மனதுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் மனதில் கொள்ளுங்கள். !   

 

 1. தண்ணீர் குடியுங்கள் ! ஆச்சரியப்படாதீர்கள். தேர்வுக்கு முன் கொஞ்சம் தண்ணீர் குடிப்பதும், தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது அவ்வப்போது ஒவ்வொரு மிடறு தண்ணீர் குடிப்பதும் உங்கள் நினைவாற்றலையும், சிந்தனையையும் செவ்வனே வைத்திருக்கும் என்கின்றன ஆய்வுகள் ! அளவுடன் குடியுங்கள், இல்லையேல் பாத்ரூம் ஓட வேண்டிய அவஸ்தை வரலாம் ! படிக்கும் போதும் நிறைய தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் மூளையை அலர்ட் ஆக வைத்திருக்கும். 
 2. முறையான பயிற்சி இல்லையேல் தேர்வுகள் பயத்தையும் பதட்டத்தையும் தரும். எனவே தயாராய் இருங்கள். அமெரிக்க ஜனாதிபதி வின்ஸ்டன் சர்ச்சில் மேடைப்பேச்சில் கில்லாடி. அதன் ரகசியம் என்ன என அவருடைய மகனிடம் கேட்டபோது சொன்னார், “அரை மணி நேரப் பேச்சுக்கு அப்பா பல மணி நேரம் பயிற்சி எடுப்பார் ! “.
 3. குழந்தைகள் மனதில் பதட்டத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகளைப் படிக்க ஊக்குவிப்பது, அதற்கு உதவியாய் இருப்பது – இவற்றை மட்டுமே செய்யுங்கள். அவர்களை விரட்டி, பயமுறுத்தி, மிரட்டி தேர்வை ஒரு கொள்ளிவாய்ப் பிசாசு கணக்காக மிகைப்படுத்தாதீர்கள்.
 4. தேர்வுக்குத் தயாராகும் கடைசி வாரத்தில் புதிதாய் எதையும் படிக்காமல் இருப்பது நல்லது. அதற்கு துவக்கத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாய்ப் படித்து வரவேண்டும். கடைசி கட்டத்தில் புதிதாய்ப் படிக்கும் போது தெரியாத பாடங்கள் பூதாகரமாய் வந்து மிரட்டும். தினமும் வகுப்பறைக்குச் சென்று அன்றன்றைய பாடங்களை அன்றே படிப்பவர்களுக்கு இந்த சிக்கல் வராது ! கடைசி தயாரிப்பு நாட்கள் படித்தவற்றைப் புரட்டிப் பார்க்கும் விதமாய் அமைவதே சிறப்பானது !
 5. தேர்வு காலத்தில் அதிரடியான பழக்க வழக்க மாற்றங்களை உருவாக்காதீர்கள். இரவெல்லாம் கண்விழித்துப் படிப்பது. அல்லது வெகு சீக்கிரமே எழுந்து படிப்பது போன்றவற்றை புதிதாக முயலவேண்டாம். பழக்கமான கால அட்டவணையே சிறந்தது. கொஞ்சம் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் பெரிய அளவில் மாற்றம் இருந்தால் அது உடல்நலத்தைப் பாதிக்கும். நினைவாற்றலையும் மழுங்கடிக்கும் !
 6. சிலர் தேர்வுக் காலத்தில் அறையை ஜெயில் போலப் பாவித்து அடைபட்டுக் கிடந்து படிப்பார்கள். அது உங்கள் உடல்நலத்தைப் பாதிக்கும். நல்ல சத்தான உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, வெளியே போய் வருவது என சகலமும் இருக்கட்டும் ! இவைதான் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
 7. ஒரு தெளிவான அட்டவணை போட்டு அதன்படி படிப்பது உங்களுடைய படிப்பை நெறிப்படுத்தும். முக்கியமான விஷயங்களை படிக்காமல் தவறவிடும் சிக்கலையும் இது தவிர்க்கும்.
 8. ஒரு நல்ல அமைதியான இடத்தைப் படிப்பதற்காய் தேர்ந்தெடுங்கள். டிவி ஓடிக்கொண்டிருந்தாலோ, அல்லது ரொம்ப சத்தமான இடத்திலோ படிக்க முடியாது. நல்ல அமைதியான அறை அவசியம். உங்கள் கவனத்தைச் சிதைக்கும் கதை புத்தகங்கள், கண்ணாடி, செல்போன் இத்யாதிகளெல்லாம் அந்த அறையில் இல்லாமல் இருப்பது நல்லது !
 9. இணையம் ஒரு வரப்பிரசாதம். தேடித் தேடி எதையேனும் படிக்க வேண்டுமானாலும், சாம்பிள் கேள்வித்தாள்கள் வேண்டுமானாலும், விளக்கங்கள் தேவையென்றாலும் இணையம் கை கொடுக்கும். ஒரு வகையில் அது உங்களுக்கான லைப்ரரி. அதை சரியான விதத்தின் பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்.
 10. தேர்வுக் காலத்தில் உங்கள் சமூக வலைத்தள வேலைகளையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். ஃபேஸ்புக், ஆர்குட், மைஸ்பேஸ் போன்ற சமாச்சாரங்களெல்லாம் உங்களை அறியாமலேயே உங்கள் நேரத்தையெல்லாம் விழுங்கி ஏப்பம் விடும்.
 11. படுத்துக் கொண்டே படிப்பது, உருண்டு புரண்டு படிப்பதெல்லாம் படிப்பு வேகத்தைக் குறைக்கும். உங்களுக்கு தேவையற்ற சோர்வையும் கொண்டு வரும். நேராக அமர்ந்து படிப்பதே நல்லது. சோர்வாய் உணர்ந்தால் புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஒரு வாக்கிங் போய் வாருங்கள் !
 12. படிக்கும்போது குறிப்புகள் எடுத்துப் படிக்க வேண்டும் என்பது பொதுவாகவே எல்லோரும் சொல்லும் அறிவுரை. எழுதும் போது உங்கள் மனதில் அது நன்றாகப் பதியும். கடைசியாக ஒருமுறை ஒரு வேக வாசிப்புக்கும் அது உதவியாகவும் இருக்கும்.
 13. படிக்கும் போதே படிக்கும் பாடத்தில் எப்படிப்பட்ட  கேள்விகள் வரலாம் என மனதுக்குள் ஒரு சிந்தனையை உருட்டுவது பலன் தரும். சின்னச் சின்ன கேள்விகளை அவ்வப்போது எழுப்பி பதில் சொல்லிக் கொண்டே இருப்பது உங்கள் நினைவில் நிறைய விஷயங்கள் பதிய உதவும். 
 14. படிக்கும்போது வருடங்கள், இடங்கள், பெயர்கள் போன்றவற்றையெல்லாம் தனியே ஒரு இடத்தில் எழுதி வைத்து அடிக்கடி ரிவைஸ் செய்து கொள்வது பயனளிக்கும். நண்பர்களைச் சந்திக்கும் போதும் அவர்களிடமும் இதே கேள்விகளை அடிக்கடி கேளுங்கள். இருவர் மனதிலும் அவை பதிந்துவிடும்.
 15. சிலர் முக்கியமாக சூத்திரங்கள், பெயர்கள் வருடங்கள் போன்றவற்றை சின்னச் சின்னப் பேப்பர்களில் எழுதி சுவரில் ஒட்டி வைத்து போகும் போதும் வரும் போதும் படிப்பதுண்டு.
 16. ஆசிரியர்களை மதியுங்கள். அவர்களை அன்பு செய்யுங்கள். எந்தெந்த பாடங்களை முதலில் படிக்கலாம் ? எந்தெந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என கேளுங்கள். அவர்களுடைய வாழ்த்தும் வழிகாட்டலும் நிச்சயம் உங்களை வெற்றியாளராக்கும்.
 17. நண்பர்களோடு கலந்து படிப்பதும் நல்லதே. ஆனால் வெட்டிக் கதைகளும், அரட்டையுமாய் நேரம் வீணடிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் படித்தவற்றைப் பகிர்ந்து கொள்வதும், சந்தேகங்கள் தீர்த்துக் கொள்வதும் படிப்பை உற்சாகமாக்கும்.
 18. மாதிரித் தேர்வுகளை அவ்வப்போது நடத்திப் பார்ப்பது ரொம்ப முக்கியம். அது உங்களை தேர்வுக்கு வலிமையாகத் தயாராக்கும். ஒரு சில மாதிரித் தேர்வுத் தாள்களை வைத்து முயற்சி செய்யுங்கள். மாதிரி வினாத்தாள்களிலுள்ள விதிமுறைகளை மிக மிகக் கவனமாகப் படியுங்கள். இவற்றை முதலிலேயே வாசித்துப் புரிந்து கொள்வது தேர்வு அறையில் விரைவாய் வாசிக்க உதவும்.
 19. தேர்வு காலத்தில் பலரும் டீ, காபி போன்றவற்றை அதிகமாய்க் குடித்துத் தள்ளுவதுண்டு. அதைத் தவிர்த்து பழச்சாறு, பால் போன்றவற்றைக் குடிப்பது நல்ல பயன்தரும் என்கின்றனர் மருத்துவர்கள். உடலின் ஆரோக்கியம் படிப்புக்கும், தேர்வுக்கும் ரொம்ப அவசியம்.
 20. உங்கள் நினைவாற்றலை வளர்க்க இதோ ஓர் மேஜிக் மருந்து. இதோ ஓர் ஆயுர்வேதிக் தைலம், இதோ ஒரு மாந்திரீகத் தகடு என்றெல்லாம் கடை விரிக்கும் அதிசயப் பிறவிகளிடமிருந்து தப்பி ஓடிவிடுங்கள். உங்கள் காசும், நேரமும் வீணாகுமே தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை.
 21. அதிக குளிரான பொருட்களை தேர்வு நேரத்தில் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத நேரத்தில் சட்டென உங்களுக்கு ஜலதோஷமோ, காய்ச்சலோ, பல்வலியோ ஏதோ ஒரு சிக்கல் வந்து உங்களை படுத்தி எடுக்கலாம். எனவே அத்தகைய விஷப் பரீட்சைகளையெல்லாம், பரீட்சை முடிந்தபின் வைத்துக் கொள்ளுங்கள்.
 22. பாசிடிவ் சிந்தனை மட்டுமே மனதில் இருக்கட்டும். தேர்வை நேர்மையாக அணுகுங்கள். எக்காரணம் கொண்டும் குறுக்கு வழியில் புகுந்து தேர்வை அணுக நினைக்காதீர்கள். நேர்மை தவறுபவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன் ?
 23. பன்னிரண்டாம் வகுப்பு போன்ற தேர்வில் காப்பி அடித்தால் அந்த மாணவனுக்கு தேர்வில் நிரந்தரத் தடை விதிக்க தேர்வாணையம் முடிவு செய்திருக்கிறது. காப்பி அடித்து வாழ்க்கையையும், உங்கள் பண்பையும் அழித்து விடாதீர்கள்.
 24. தன்னம்பிக்கை ரொம்ப அவசியம். தன்னம்பிக்கையோடு எதையும் அணுகுங்கள். அது நீங்கள் படிப்பவற்றை மனதில் நிறுத்தும். சிறப்பாகப் படிக்க உங்களைத் தூண்டும். தேவையற்ற டென்ஷனைத் துரத்தும் !
 25. தேர்வைக் கண்டு பயப்படுவது உங்களை பலவீனராக்கும். அதே போல சிலர் தேர்வை வெறுப்பார்கள். அதுவும் அவர்களுடைய ஆற்றலையெல்லாம் வீணடித்துவிடும். அச்சமும், வெறுப்பும் இல்லாமல் இயல்பாக தேர்வை அணுகுங்கள். அதுவே சரியான வழி.
 26. சிலர் படிக்காத பாடங்களைப் பற்றிய கவலையிலேயே நேரத்தை வீணடிப்பார்கள். அந்த நேரத்தைப் படித்த பாடங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கச் செலவிடுங்கள். படிக்காத பாடங்கள் குறித்த கவலை படித்த பாடங்களையும் மறக்கடிக்கும்.
 27. படிப்பதைப் புரிந்து படிக்க வேண்டியது அவசியம். தேர்வு என்பது மதிப்பெண்களுக்கானது மட்டுமல்ல. அறிவை வளர்த்தக் கூடியதுமாகும். எதைப் படிக்கிறோம் எனும் புரிதல் இல்லாமல் சும்மா மனப்பாடம் செய்வதில் பயனில்லை. அது விரைவில் மறந்தும் போகும் !
 28. தேர்வுக்கு முந்தைய நாள் சீக்கிரமே தூங்குங்கள். குறைந்தது ஆறுமணி நேர தூக்கம் அவசியம். காலையில் வழக்கமான நேரத்தில் எழும்புங்கள். உடல் உற்சாகமாய் இருக்க வேண்டியது தேர்வு காலத்தின் முக்கியத் தேவை.
 29. அரக்கப் பரக்க வியர்க்க விறுவிறுக்க தேர்வுக் கூடத்தை அடைந்தால் நீங்கள் படித்தவையும் மறந்து போகும். எனவே ஒரு அரைமணி நேரம் முன்னதாகவே தேர்வுக் கூடத்தை அடையும் படி திட்டமிடுங்கள். லேட்டாகக் கிளம்பி, ஆட்டோக்காரரைத் திட்டி, டிராபிக்கை சபித்து, டென்ஷனாகி படித்ததை கோட்டை விடாதீர்கள்.
 30. ரொம்ப அடிப்படையான விஷயம். இருந்தாலும் சொல்கிறேன். ஹால்டிக்கெட், சில பென்சில்கள், சில பென்கள், ரப்பர் போன்றவற்றைத் தனியே ஒரு பாக்ஸில் போட்டு வையுங்கள். அதை தேர்வுக்கு முந்திய நாளே தயாராய் வைத்திருங்கள். ! நீங்கள் வகுப்பறையில் பயன்படுத்தும் பேனாவையே பயன்படுத்துங்கள். புதுப் பேனாக்கள் சும்மா வைத்திருங்கள், தேவைப்பட்டால் பயன்படுத்த !
 31. தேர்வுத்தாளில் கேள்விகள் எந்தெந்த வகையில் வரும் என்பதைத் தெரிந்து வைத்திருங்கள். உதாரணமாக, ஒரு வரிக் கேள்விகள் எத்தனை, பெரிய கேள்விகள் எத்தனை என்பது போல. மாதிரி வினாத்தாள்கள் இந்த விஷயத்தில் உங்களுக்குப் பேருதவியாய் இருக்கும்.  எனவே அவற்றை ஒருமுறை புரட்டிப் பாருங்கள்.
 32. மொத்தம் எத்தனை கேள்விகள் இருக்கின்றன, ஒரு கேள்விக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும். எதை முதலில் செய்தால் அதிக மதிப்பெண் கிடைக்கும் போன்றவற்றை மாதிரி வினாத்தாள்களின் உதவியுடன் பலமுறை பயிற்சி செய்து பாருங்கள். அது நிச்சயம் கைகொடுக்கும்.
 33. தேர்வு அறைக்குள் நுழையும் போதும், அதற்கு முன்பும் மற்றவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், என்ன படித்துக் கொண்டிருக்கிறார்கள் என தகவல் சேகரிப்பது சிலருடைய வழக்கம். அது உங்களைக் குழப்பும். அடுத்தவர்கள் படித்ததும், படிக்காததும் உங்களுடைய தேர்வில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. அந்த சிந்தனையே இல்லாமல் நீங்கள் படித்ததை மட்டும் நினைவில் வைத்திருங்கள் !
 34. கேள்விகளை நன்றாக வாசிக்க வேண்டும் என்பது பாலபாடம். உங்களைக் குழப்பவேண்டுமென்றே கேள்விகளில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்திருக்க வாய்ப்பு நிறையவே உண்டு. எனவே கேள்விகளை ஒருமுறைக்கு இருமுறை வாசித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
 35. தேர்வு எழுதும்போது கூட உங்களுடைய கவனம் எல்லாம் உங்கள் கேள்வித் தாளிலும், விடைத்தாளிலும் மட்டுமே இருக்கட்டும். பக்கத்து இருக்கைக்காரன் இரண்டாவது பக்கம் எழுதிவிட்டானே, அடிஷனல் ஷீட் வாங்கி விட்டானே, ஏதோ படம் வரைகிறானே என பதட்டப் படாதீர்கள்.
 36. தேர்வுத் தாளைத் திருத்துபவரை ஒரு முறை மனதில் நிறுத்துங்கள். முதல் கோணல் முற்றும் கோணலாகலாம். எனவே நன்றாகத் தெரிந்த விடையை முதலில் எழுதுவது சிறப்பானது. தெளிவாய் வினா எண்களோடு விடைகளை எழுதுவது, முக்கியமான பாயின்ட்களைக் கோடிடுவது, தேவையான இடங்களில் படங்கள் போடுவது எனும் ஆசிரியரின் அறிவுரைகள் இங்கே நினைவில் இருக்கட்டும்.
 37. கணக்கு பாடம் எழுதும் போது எண்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு நாலும் ஏழும் ஒரே போல இருக்கும். சிலருக்கு ஏழும் ஒன்பதும் ஒரே மாதிரி போல இருக்கும். வேறு சிலருக்கு நாலும் ஒன்பதும் ஒரே மாதிரி இருக்கும். உடனே சரி செய்ய வேண்டிய சிக்கல் இது. இல்லையேல் நீங்கள் சரியாய் எழுதியிருந்தாலும் மார்க் கிடைக்காமல் போய்விடும்.
 38. ஒரு நேரத்தில் ஒரு தேர்வு ! ஒரு தேர்வுக்குத் தயாராகும் போதோ, தேர்வு எழுதும் போதோ, அடுத்த தேர்வைக் குறித்த சிந்தனையில் இறங்காதீர்கள். அடுத்த தேர்வு எவ்வளவு கடினமாய் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அந்த சிந்தனையில் மூழ்கி இந்த தேர்வையும் வீணடிக்க வேண்டாம்.
 39. தேர்வு நேரம் முடியும் வரை தேர்வு அறையை விட்டு வெளியே வராதீர்கள். எழுதி முடித்தபின் நேரம் கிடைத்தால் எழுதியதை மறுபடி ஒரு முறை வாசித்துப் பாருங்கள். உங்கள் விடைகளின் தரமும், மெருகும் கூடும் ! 
 40. தேர்வு முடிந்தபின் அந்த தேர்வைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். கேள்வித் தாள்களையும் புத்தகத்தையும் புரட்டிப் புரட்டி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். அது அடுத்த தேர்வுக்கான தயாரிப்புகளைத் தாமதப்படுத்தும். உங்களை அழுத்தத்திலும் தள்ளிவிடலாம். எல்லா தேர்வுகளும் முடிந்தபின் ஆர அமர உட்கார்ந்து கூட்டிக் கழித்துப் பாருங்கள். தப்பில்லை ! 

கடைசியாக ஒன்று ! ! தேர்வு என்பதை இயல்பாக அணுகுங்கள். தேர்வு நாள் இன்னொரு நாளே. தேர்வில் வெற்றியோ தோல்வியோ எதுவும் இயல்பானதே. தோல்வி என்பது தூரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வெற்றி. அவ்வளவு தான். எனவே ரிலாக்ஸா இருங்க, எல்லாம் நன்மைக்கே !

–     சேவியர்

பிடித்திருந்தால் கிளிக்கலாம்…

Thanks : தேவதை இதழ்