ஜூ.வி : ஆயுள் நீட்டிக்கும் அதிசய மருந்து !

ஈஸ்டர் ஐலண்ட். தென் பசிபிக் கடலிலுள்ள ஒரு மர்மத் தீவு . சிலி நாட்டின் கடற்கரையிலிருந்து சுமார் 3200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இதன் மேற்குப் பக்கமாக சுமார் 1900 கிலோமீட்டர் பயணத்தில் வரும்  பிட்கெயின் தீவு தான் இதன் நெருங்கிய சொந்தக்காரன். மற்றபடி வெளி உலகோடு தொடர்புகள் ஏதுமற்ற ஓர் மௌனபூமி.

இந்தத் தீவில் சில வித்தியாசமான சிலைகள்  நிரம்பியிருக்கின்றன . இந்தச் சிலைகள் சுமார் 13 அடி உயரமும், 14 டன் எடையும் கொண்டவை. இவை கி.பி 1200க்கும் – 1500 க்கும் இடைப்பட்ட காலத்தில் பாலினேசியர்களால் உருவாக்கப்பட்டவை. 1860 ல் பெரு நாட்டிலிருந்து வந்தவர்களால் இங்கு வாழ்ந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். போரில் சாகாதவர்கள் பிற்காலங்களில் கொள்ளை நோய்களினால் மாண்டுபோனார்கள். பல இலட்சம் பேர் வாழ்ந்த இந்த தீவில் இப்போது இருப்பது சில ஆயிரம் பேர் மட்டுமே. இது தான்  இந்த தீவின்  நான்கு வரி வரலாறு.

ஆனால் இந்த தீவு மனித இனத்தின் எதிர்கால வரலாற்றையே மாற்றியமைக்க கூடிய மர்மசக்தியை அடக்கி வைத்திருக்கிறது. இந்தத் தீவிலுள்ள நுண்ணுயிரிக்கு மனிதனின் ஆயுளை நீட்டிக்கும் ஆற்றல் உண்டு என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உலகையே பரபரக்க வைத்திருக்கின்றனர்.

“ரபாமைசின்” என்பது அறுவை சிகிச்சைகளில் பயன்படும் ஒரு மருந்து. நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தால் இந்த மருந்தைக் கொடுப்பார்கள். இந்த மருந்து உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை வெகுவாகக் குறைக்கும். அப்போது தான் புதிய உறுப்பை உடல் ஏற்றுக் கொள்ளும். கான்சர் நோயாளிகளுக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து தான் இனிமேல் மனிதனுடைய ஆயுளை நீட்டிக்கும் சூப்பர் மருந்தாகவும் மாறப் போகிறது என்பது தான் ஹாட் நியூஸ். இந்த மருந்து கிடைப்பது ஈஸ்டர் தீவிலுள்ள நுண்ணியிரியில் இருந்துதான் !

இந்த நுண்ணுயிரி அந்த மர்மத் தீவிலிருந்து மருத்துவ அறைக்குள் வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. 1964ல் கனடாவிலிருந்து ஈஸ்டர் தீவுக்குச் சென்ற ஆராய்ச்சியாளர்கள் அங்குள்ள சிலைகளைப் பார்த்து வியந்து போனார்கள். வேடிக்கை பார்த்துவிட்டு திரும்பி வரும்போது எதற்கும் இருக்கட்டும் என கொஞ்சம் மண், மணல், கல், இலை தளை எல்லாம் பொறுக்கி வந்தார்கள். அப்படி எடுத்து வந்த சாம்பிள்களில் உலகையே புரட்டிப் போடும் ஒரு வியப்புப் புதையல் இருக்கும் என அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். அந்த சாம்பிள்களிலிருந்து 1970ல் கண்டறியப்பட்டது தான் இந்த ரபாமைசின்.

இந்த ரபாமைசின் பல ஆண்டுகளாக அறுவை சிகிச்சைக்குப் பயன்பட்டபோதிலும், அது ஆயுளை நீட்டிக்கவும் பயன்படலாம் என யாரும் நினைத்திருக்கவில்லை. டேவிட் ஹாரிசன், ராண்டி ஸ்ட்ராங், ரிச்சர்ட் மில்லர் உட்பட 13 அமெரிக்க விஞ்ஞானிகள் தான் அதைக் கண்டுபிடித்தனர்.

இவர்கள் எலிகளை வைத்து நடத்திய சோதனை படு சக்சஸ். அமெரிக்காவில் டெக்ஸாஸ், மிச்சிகன், மெய்ன் என மூன்று இடங்களில் வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட எலிகளின் வயது 20 மாதங்கள். மனிதனுடைய ஆயுளுடன் ஒப்பிட்டுப் பேசினால் 60 வயது ! இந்த மருந்து எலிகளின் ஆயுளை 10 சதவீதம் முதல் 38 சதவீதம் வரை நீட்டித்திருக்கிறது !

எனது வாழ்நாளில் இப்படி ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு நிகழும் என நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை என பிரமித்துப் போய் பேசுகிறார் டாக்டர் ஆர்லான் ரிச்சட்ஸன்.

“முப்பத்து ஐந்து ஆண்டுகளாக மனிதனுடைய ஆயுளை நீட்டிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த ஆராய்ச்சி தான் என் மாபெரும் வெற்றி. மருத்துவ மொழியில் சொன்னால், இந்த மருந்து TOR எனும் புரோட்டீனின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் மனிதனுடைய ஆயுளை நீட்டிக்கிறது. சாதாரணமாக நூறு வயது வாழக் கூடிய ஒருவனுக்கு மிக எளிதாக இன்னும் ஒரு பத்து இருபது ஆண்டுகளைப் பரிசாய்க் கொடுக்கக் கூடிய மாஜிக் தான் இது” என்கிறார் அவர்.

இந்த மருந்தை அப்படியே சாப்பிட முடியாது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து போய் விடும். அதனால் இப்போதைக்கு இங்கே இரண்டு வேலைகள் பாக்கி. ஒன்று ஆபத்தில்லாத மாத்திரை வடிவில் இதை தயார் செய்வது. இன்னொன்று ஆயுளை நீடிக்கும்போது ஆரோக்கியமும் கூடவே அதிகரிக்குமாறு பார்த்துக் கொள்வது. அதெல்லாம் ஜுஜூபி மேட்டர், இன்னும் கொஞ்ச நாட்களில் ஆயுள் நீட்டிக்கும் மாத்திரையைத் தயார் செய்து காட்டுவோம் பாருங்கள் என சிரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்தக் கண்டுபிடிப்பு உலகெங்கும் மாபெரும் சிலிர்ப்பை உண்டாக்கியிருக்கிறது.  “மாத்திரையின் மூலம் ஆயுளை அதிகரிக்கலாம் என நிரூபிக்கப்பட்ட முதல் நம்பத்தகுந்த சோதனை முடிவு தான். அதிலும் வயதானவர்களுக்குக் கூட இந்த மருந்தைக் கொடுக்கலாம் என்பது ரொம்பவே ஸ்பெஷல்”  என்கிறார் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ராண்டி ஸ்டிராங்.

“இந்த ஆராய்ச்சி உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. ஆயுளுடன் கூடவே மனிதனுடைய ஆரோக்கியத்தையும் நீட்டித்தால் சூப்பர் தான்” என்கிறார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர். லின் கோக்ஸ். இந்த ஆராய்ச்சி வெகு அற்புதம். இன்னும் தெளிவாக, விரிவாக இது ஆராயப்படவேண்டும் என்கிறார், சியாட்டலிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக துணை பேராசிரியர் காபெர்லைன்.

விஞ்ஞானம் போகும் வேகத்தைப் பார்த்தால் “இதோ இந்த மாத்திரையைச் சாப்பிடுங்கள் உங்கள் ஆயுள் இன்னும் பத்து ஆண்டுகள் அதிகரிக்கும்” என விஞ்ஞானம் சொல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

நன்றி : ஜூனியர் விகடன்