இப்படியும் ஒரு சாகசப் பிரியன்

சாகசப் பயணம் என்றால் தவிர்க்க முடியாத சம காலக் கில்லாடி பெனடிக்ட் ஆலன். எங்கே போறோமோ அந்த சூழலுக்குத் தன்னை முழுமையாய் அர்ப்பணிக்க வேண்டும் என்பது அவருடைய ஒருவரிக் கொள்கை. எவ்வளவு கஷ்டமான சூழலுக்குள்ளும் தன்னை நுழைத்துச் செல்வதில் அசகாய சூரன். காட்டுவாசிகள் வசிக்கும் இடங்களுக்குப் போவார். அவர்களுடன் தங்குவார். அவர்கள் அடித்தால் வாங்கிக் கொள்வார். அவர்கள் எதைக் கொடுக்கிறார்களோ அதைச் சாப்பிடுவார். ஓடிக் கொண்டிருக்கும் ஓணானைப் பிடித்து அவர்கள் தின்றால் அவரும் தின்பார். அவ்வளவு ஸ்ட்ராங் பார்ட்டி அவர்.

புரூனேயிலுள்ள அடர் காடு, அமேசான், பல நாட்டு மலைப்பகுதிகள் என இவரது பயணம் பரந்துபட்டது. சைபீரியா, மங்கோலியா, கோபி பாலை நிலங்கள் வழியாக 5 ½ மாதங்கள் தொடர்ந்து பயணம் செய்திருக்கிறார். பயணித்த தூரம் 4600 கிலோமீட்டர்கள்.  பிரிட்டனைச் சேர்ந்த இவர் தன்னுடைய திகில்ப் பயண அனுபவங்களை 9 நூல்களாக எழுதித் தள்ளியிருக்கிறார். 7 தொலைக்காட்சித் தொடர்களும் இவருடைய பயணத்தை அலசியிருக்கின்றன. எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் !

காட்டுக்குள்ளே எல்லாம் போயிருக்கேன் ஒரு மிருகம் கூட என்னைத் தொட்டதில்லை, இந்த மனுஷங்கதான் பின்னி எடுக்கிறாங்க என கவலைப்படுகிறார். இவருடைய முதல் பயணத்தில் அடர் காட்டில் ஒரு முரட்டுக் கும்பலிடம் மாட்டியிருக்கிறார். அவர்கள் இவர் மாபெரும் எதிரி என புரட்டி எடுத்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் அடைத்துப் போட்டு விட உணவு ஏதுமின்றி பசியில் சாகும் நிலைக்குப் போயிருக்கிறார்.  அப்புறம் வேறு வழியில்லாமல் தன்னுடைய நாயையே கடித்துத் தின்று உயிர் பிழைத்திருக்கிறார் மனுஷன்.

அமேசான் காட்டுப் பகுதியில் எட்டு மாதங்கள் தன்னந் தனியாக 5760 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்திருக்கிறார் ! இதில் ஹைலைட் என்னவென்றால், அதிக திரில்லை சுவைக்க வேண்டும் என்பதற்காகவே, மேப் காம்பஸ் என எதையும் கொண்டு செல்லவில்லையாம் ! ஆர்டிக் பகுதியில் போனபோது அவரை இழுத்துச் செல்ல வேண்டிய நாய்கள் திடீரென காணாமல் போய்விட்டன. ஒரே நாளில் கண்டுபிடிக்கவில்லையேல் குளிரில் விறைத்து சாக வேண்டியது தான். அந்த திகில் இரவை ஒரு பனிக் குகையில் சுருண்டு படுத்து அனுபவித்திருக்கிறார். நல்ல வேளை சமர்த்தாக மறு நாள் நாய்கள் வந்து சேர்ந்திருக்கின்றன.

இப்படி மரணத்தின் விளிம்பு வரை சென்று பெப்பே காட்டி திரும்பி வரும் இவர் இன்னும் ஓய்ந்த பாடில்லை. எங்கே கிடைக்கும் இதை விடப் பெரிய திகில் என அலைந்து கொண்டிருக்கிறார் இந்த நாற்பது வயது சாகசப் பிரியர்.

சென்னைல பைக் ஓட்ட சொல்லலாமா ?

Thanks : Ananda Vikatan