ஆகதன் : சத்தியராஜின் முதல் மலையாளப் படம் !

மலையாளக் கடலில் குதித்திருக்கிறார் சத்யராஜ். படத்தின் பெயர் ஆகதன். ஹீரோ திலீப். மலையாளத்தின் வசூல் ஹீரோவான திலீப்பிற்கு இந்த ஆண்டு வெளியாகப் போகும் முதல் படம் இது என்பதால் கேரளாவில் இந்த படத்துக்கு தனி அடையாளமே கிடைத்திருக்கிறது. சத்தியராஜுக்கு இதில் வெயிட்டான வேடமாம். ஹரேந்திர நாத வர்மா எனும் ரிட்டயர்ட் மிலிட்டரி ஆபீசர் அவர்.  சாப்ட்வேர் காரரான கவுதம் மேனன் (திலீப்) குடும்பம் தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்து விடுகிறது. அப்போது டியூட்டியில் இருந்தவர் நம்ம சத்யராஜ். அப்புறம் என்ன கதையை அப்படியே பில்டப் பண்ணிக்கோங்க. பிப்ரவரி முதல் வாரத்தில் வெளிவரப்போகும் இந்தப் படத்திற்குப் பின் சத்யராஜின் நக்கலை மலையாளத்திலும் அடிக்கடிக் கேட்கலாம் போலிருக்கிறது.

இந்தப் படத்தின் இன்னொரு ஸ்பெஷல், சார்மியின் மறு பிரவேசம். வினயனின் காட்டுசெம்பாக்கம் படத்தில் நடித்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் ( அதுதான் எப்பவுமே காணோமே ) என்று ஓடியவர் இப்போது மீண்டு(ம்) வந்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு மலையாள சேனலில் மலபார் போலீஸ் தமிழில் பேட்டிக் கொண்டிருந்தார் சத்தியராஜ். “ஏன் ரஜினி கூட சிவாஜி படத்தில் நடிக்கவில்லை” எனும் கேள்விக்கு (இன்னுமாடா இந்தக் கேள்வியை விடவில்லை  ? ), “அது என்ன வில்லன் ? ரொம்ப சாதாரண வில்லன். எனக்கு வெயிட் இல்லாத கேரக்டர் ஆனதால் தான் சிவாஜியில் நடிக்கவில்லை.” என்று மலையாளத்தில் சொல்வதாக நினைத்து தமிழில் பேசிக்கொண்டிருந்தார் ஐயா. ஏற்கனவே எக்கச் சக்க மலையாளப் படங்களை டப் செய்து வெற்றியும் தோல்வியும் கொடுத்தவர் தான் சத்தியராஜ். அதிலும் சித்ரம் படத்தை எங்கிருந்தோ வந்தான் என ந(க)டித்ததை சித்ரம் ரசிகர்கள் வாழ்நாளில் மற்ற்ற்ற்றக்கவே மாட்டார்கள்.

என்னுடைய நடிப்பின் அதிகபட்ச சாதனை பெரியார் வேடத்தில் நடித்தது தான் என்றவர், கூடவே, இலக்கணம் மாறாமல் திலீப் ஒரு சூப்பர் ஹீரோ. அவருடைய பேச்சுக்கும் செயலுக்கும் வேறுபாடு ஏதும் இருக்காது. அவரு சினிமாலே எப்படி நடிக்குதோ அப்படியே இருந்தாச்சி. ரொம்ப ஜாலியா இருந்தாச்சி. 25 வருஷம் பழகின பிரண்ட் மாதிரி பேசியாச்சி. என்றெல்லாம் ஆச்சிக் கொண்டிருந்தார்.

பொதுவாகவே மலையாளப் படம் என்றால் அதில் ஒரு தமிழன் கேரக்டர் வரும். ஹீரோவின் கையால் அடிபட்டு “பாண்டி” என அழைக்கப்பட்டு, “இது ஸ்தலம் வேறயா…’ என அவமானப்படுத்தப்பட்டு மல்லூக்களின் கரகோஷத்தைப் பெறும். இப்படியாவது தமிழனை அவமானப்படுத்தி விடுவோமே எனும் மலையாளியின் ஆழ்மன காழ்ப்புணர்ச்சி என அதை உளவியல் பூர்வமாகச் சொல்லலாம். அப்படி ஏதும் இந்தப் படத்தில் நிகழாது என சத்திய(ராஜ்)மாய் நம்புவோம் !

ஆகதம் படத்தின் கிளைமேக்ஸ் போல இதுவரை நான் ஒரு கிளைமேக்ஸைப் பார்த்ததே இல்லை என்று ஏகத்துக்கு பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சத்யராஜ். இந்தப் படத்தை இயக்குவது மலையாள இயக்குனர் கமல் என்பதால் சத்யராஜின் பேச்சை கொஞ்சமாச்சும் நம்பலாம் என நினைக்கிறேன். கமலைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா ? உள்ளடக்கம் போன்ற பல கலக்கல் படங்களைத் தந்தவர் தானே.

ஆகதன் வரட்டும், புரட்சித் தமிழன்,  “புரட்சி மலையாளி” ஆவாரா பாக்கலாம்.

வாக்களிக்கலாமே….