2009 : படித்தவை, பார்த்தவை, கிழித்தவை…

திரும்பிப் பார்த்தல் ஒரு சுவையான அனுபவம். அதுவும் வருஷக் கடைசியில் உட்கார்ந்து என்னத்தை கிளிச்சோம் இந்த ஆண்டு என தலையைச் சொறிவது ரொம்பவே சுவாரஸ்யமானது.

இந்த வருடம் ஒரு வகையில் விஷுவல் வருஷமாகக் கழிந்திருக்கிறது. குறைந்த பட்சம் நூறு படங்கள் பார்த்திருப்பேன். பெரும்பாலும் ஆங்கிலப் ஹாலிவுட் படங்கள். மனதில் நின்ற படங்கள் ரொம்பக் குறைவு. சட்டென யோசித்தால் Breach ஞாபகத்துக்கு வருகிறது. தமிழில் ??? பொக்கிஷம் என்றால் பலர் கோபப்படலாம். பல குறும்படங்கள் பார்த்தேன். மனதில் நின்ற குறும்படம் என்றால் “அன்புடன் ஆசிரியருக்கு” எனும் குறும்படத்தைச் சொல்லலாம். நிராகரிக்கப்பட்ட நிலையில் இருக்கும் 79 வயதான ஒரு ஆசிரியைக்கு பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து உதவும் ஒரு நெகிழ்வான பதிவு அது. கண்கலங்காமல் படத்தைப் பார்த்து முடிப்பது சாத்தியமில்லை. இதைப் பற்றி தனியே ஒரு பதிவு எழுத நினைத்தேன். ம்… நினைப்பதையெல்லாம் எழுதிவிட முடிகிறதா என்ன ?

எப்பவுமே வாசிப்பில் கொஞ்சம் சோம்பேறி தான். இந்த ஆண்டும் ஒரு பத்தோ இருபதோ புத்தகங்கள் தான் வாசித்திருப்பேன். முதலாவது வாசித்த புத்தகம் எது என்பது ஞாபகத்தில் இல்லை. கடைசியாய் வாசித்தது தோழமை பதிப்பகம் வெளியிட்ட “மாவீரர்” நூல். பிரபாகரனின் பேட்டிகள், உரைகள் என அவருடைய கால் நூற்றாண்டு மனநிலையைப் பிரதிபலித்திருந்தது நூல். ஆங்கில நூல்களில் “Love can be spelled as T..I..M..E”. நேரமில்லை, நேரமில்லை எனும் ஓட்டத்தில் இழப்பது எது என்பதை மீண்டும் ஒருமுறை இந்த மரமண்டைக்குப் புரிய வைக்கிறது.

இந்த வருஷம் வெளியாவது ஒரே ஒரு புத்தகம். “அன்னை – வாழ்க்கை அழகானது” அருவி பதிப்பக வெளியீடு. அன்னை தெரசாவின் வாழ்க்கையை சில நுட்பமான காரண, காரிய, பின்புலங்களோடு சொல்லியிருப்பதில் வித்தியாசப்படுத்தியிருக்கிறேன். வாசிப்பவர்களை ஏமாற்றாது எனும் நம்பிக்கை எனக்குண்டு. (காக்கைக்கும் தன் குஞ்சு …)

பத்திரிகைகளில் எழுதியதைப் பொறுத்தவரையில் ரொம்பவே திருப்தியான வருடம் இது. ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், பசுமை விகடன், சக்தி விகடன் என விகடன் குழு பத்திரிகைகளில் மட்டுமே சின்னதும் பெரிதுமாக சுமார் நூறு படைப்புகள் எழுதியதில் பரம திருப்தி. சில கவர் ஸ்டோரிகளும் இதில் அடக்கம் என்பது ஸ்பெஷல் சந்தோசம். மற்றபடி வழக்கமாய் எழுதும் பெண்ணே நீ போன்ற பத்திரிகைகளில் பயணம் தொடர்கிறது.

பிளாக் வாழ்க்கையிலும் எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்திருக்கிறது. அலசல் வலைத்தளம் 5 இலட்சம் வருகைகள், கவிதைச் சாலை 3 இலட்சம் வருகைகள் என சில மைல் கல்களை எட்டிப் பிடித்தது இந்த வருடம் தான். நல்ல விஷயங்களைத் தொடர்ந்து எழுதினால் ஆரோக்கியமான நட்புகளும், வாசகர்களும் கிடைப்பார்கள் என மீண்டும் ஒரு முறை மனதுக்குள் எழுதிக் கொள்கிறேன். பதிவருக்கு காராசார மறுப்புக் கடிதம், ஆதிக்க சாதியின் அட்டகாசம், அவன் தானா நீ, அவருடைய லீலைகள், அவளுடே ராவுகள், ஹாட் கேலரி என்றெல்லாம் எழுதாமலேயே நிறைய நண்பர்கள், வாசகர்களைச் சம்பாதிக்கலாம் என்பதும் மீண்டும் ஒருமுறை தெளிவாகிறது. பின்னூட்டமிடும் நண்பர்களின் வலைத்தளங்களும் பெரும்பாலும் நல்ல தளங்களாகவே இருப்பதில் இரட்டைத் திருப்தி.

வருஷத்துக்கு இரண்டு பேரையாவது பிளாக் ஆரம்பிக்கை வைத்து ‘யான் பென்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்பது என் கெட்ட பழக்கங்களில் ஒன்று. அது இந்த ஆண்டும் ஜெக ஜோதியாகவே நடந்து முடிந்ததில் சந்தோசம். டுவிட்டரில் போய் மாட்டிக் கொள்ளாமல் ஒரு வருடம் ஓடவேண்டும் என நினைத்ததும் நிறைவேறியிருக்கிறது.

பழைய நண்பர்கள் இன்னும் அதிகம் நெருங்கியதும், புதிய சிலர் நண்பர்களாக சேர்ந்து கொண்டதும் இந்த ஆண்டின் ஆனந்த சங்கதிகள். வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு நல்ல நண்பனை இன்னும் ஆழமாய் நேசிக்க முடிந்தது வாழ்க்கையை அர்த்தப்படுத்தியிருக்கிறது. ஒரு வாழ்க்கை வரலாறு எழுதினால் (ஆசையைப் பாரு… ) அதில் கால்வாசிப் பக்கத்தை அவர் ஆக்கிரமிப்பார் என நினைக்கிறேன் !

நெருங்கிய தோழி ஒருத்தி தனது குழந்தையை எதிர்பாரா விபத்தில் பறிகொடுத்த வலி மட்டும் இந்த ஆண்டின் தீராத சோகம். அவருக்கு எதிர்காலம் பல மடங்கு வளங்களையும், மகிழ்வையும் கொடுக்கவேண்டும் எனும் பிரார்த்தனை, பிரார்த்தனைப் பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது.

ஒரு நல்ல பத்திரிகையில் ஒரு தொடராவது எழுதி விட வேண்டும், சில நல்ல நூல்களை எழுதவேண்டும், நண்பர்களுடைய நட்பைத் தொடரவேண்டும், யாரையும் காயப்படுத்தாமல் கடந்து போகவேண்டும், எனும் எதிர்பார்ப்புகளுடன் எட்டிப் பார்க்கிறேன் T10 ஐ.. அதாவது டுவெண்டி டென் ஐ !

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்ள்

0

சேவியர்

நகைக் காலம் vs குகைக் காலம்

“கம்ப்யூட்டர் காலத்தில் தான் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார்கள். முன்பெல்லாம் சமூகத்தில் நிலவியது முழுக்க முழுக்க ஆணாதிக்கமே” எனும் கொள்கை கொண்டவர்களா நீங்கள் ? அப்படியானால் அந்த நினைப்பைக் கொஞ்சம் மாற்றி வையுங்கள் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

கற்கால மனிதனின் குகை ஓவியங்களைப் பற்றி நமக்கெல்லாம் தெரியும். இந்த ஓவியங்கள் ஏன் வரையப்பட்டன என்பதில் இதுவரை ஆராய்ச்சியாளர்களிடையே ஒத்த கருத்து இல்லை. சிலர் இது பொழுது போக்குக்காக கற்கால மனிதன் கிறுக்கியவை என்கிறார்கள், சிலர் இல்லையில்லை இவை அக்கால மனிதனின் மத அடையாளங்கள் என்கின்றனர். வேறு சிலரோ இவையெல்லாம் எதிர்காலத்துக்காக கற்கால மனிதன் வரைந்து சொல்லும் குறியீட்டுச் செய்தி என்கின்றனர்.

இப்படி ஆளாளுக்கு குகை ஓவியங்கள் குறித்து வாதிட்டாலும் எல்லோரும் ஒன்றுபடும் விஷயம் ஒன்றுண்டு. இந்த ஓவியங்களை வரைந்தவர்கள் ஆண்கள் என்பது தான் அது. இப்போது அந்த நம்பிக்கைக்கும் எதிராக பளிச் தகவலுடன் களமிறங்கியிருக்கிறார் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டீன் ஸ்னோ.

வியக்க வைக்கும் இத்தகைய குகை ஓவியங்கள் எல்லாம் எல்லோரும் நினைப்பது போல ஆண்களின் கைவண்ணத்தில் வந்தவையல்ல, இவற்றை வரைந்ததில் பெண்களின் பங்கும் கணிசமானது. என்பது தான் இவரது சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவு

குகை ஓவியங்களைக் குறித்து ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகள், பல்வேறு நாடுகளில், பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டிருந்தாலும் இதுவரை யாரும் குகை ஓவியங்களை வரைவதில் பெண்ணுக்கும் பங்கு உண்டு என்று சொன்னதில்லை. சொன்னது என்ன இந்த ஓவியங்களை ஒரு பெண் வரைந்திருக்கலாமா என யாரும் நினைத்துப் பார்த்தது கூட இல்லை என்பது தான் ஆச்சரியமூட்டும் உண்மை.

இந்த ஆராய்ச்சியின் மூலம் உலகப் பெண்களின் பாராட்டுக்குச் சொந்தக்காரராகியிருக்கும் பேராசிரியர் டீன் ஸ்னோ பிரான்சிலுள்ள பீச் மார்லே மற்றும் கார்காஸ் குகைகளிலுள்ள ஓவியங்களை நுணுக்கமாய் ஆராய்ந்த போது தான் இந்த விஷயத்தைக் கண்டுபிடித்தாராம்.

முதலில் நம்பாமல் மீண்டும் மீண்டும் பல்வேறு விதமாக, பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தபோதுதான் அவருடைய சந்தேகம் வலுவடைந்து கடைசியில் இப்படி ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறார்.

இருபத்தையாயிரம் ஆண்டுகளாய் அமைதியாய் இருக்கும் இந்த குகை இது வரைக்கும் ஆண்களின் ஏகபோக கலை விளக்கமாய் மட்டுமே இருந்து வந்தது. முதன் முறையாக இப்போது தான் இது பெண்களின் கலை விளக்கமாகவும் பரிமளித்து புதிய முகம் காட்டுகிறது.

இந்த குகை ஓவியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது புள்ளிக் குதிரைகள் ஓவியம். இந்த புள்ளிக் குதிரைகளை வரைந்ததில் பெரும் பங்கு பெண்களுடையதே என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை. குகைகளில் உள்ள “கை” பதிவுகளிலும் பெண்களின் கைகள் நிச்சயம் இருக்கின்றன, வண்ணங்களைத் தீட்டியதிலும் பெண்களுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கிறது என அடித்துச் சொல்கிறார் அவர்.

கைகளின் தன்மை, அளவு , நளினம் , பெண்மை உட்பட பல்வேறு விதங்களில் இந்த ஆராய்ச்சியை அவர் நடத்தியிருக்கிறார். போதாக்குறைக்கு கற்கால மனிதனின் கை ஓவியங்களுடன், தற்கால பெண்களின் கைகளை ஒப்பிட்டும் ஆராய்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.

குகைக்காலப் பெண்களின் கைகளுக்கும், நமது நகைக்காலப் பெண்களுடைய கைகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பது அவர் தரும் கொசுறுச் செய்தி.

இந்த ஆராய்ச்சியின் சிறப்பு வெறுமனே குகை ஓவியங்களில் பெண்களின் பங்களிப்பைச் சொல்வதல்ல, மாறாக பல ஆயிரம் ஆண்டுகளாக சமூகம் நினைத்திருந்த, அல்லது உறுதியாய் நம்பிக்கொண்டிருந்த பெண்கள் குறித்த சிந்தனைகள் தவறு என்பதைச் சொல்வதே என்பது கவனிக்கத் தக்கது.

பிரான்ஸ் நாட்டுக் குகைகளுடன் டீன் ஸ்னோ தனது வேலையை முடித்துக் கொள்ளவில்லை. அங்கிருந்து ஸ்பெயின் நாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற எல்காஸ்டிலோவுக்குப் பயணமானார். அங்குள்ள குகை ஓவியங்களிலும் பெண்களின் பங்களிப்பு குறித்த ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

உலகெங்கும் உள்ள பழைய குகை ஓவியங்களை ஆராய்ந்து ஒட்டு மொத்தமாய் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தில் வாழ்ந்த பெண்களின் சமூகப் பங்களிப்பைக் குறித்து கண்டுபிடிப்பதே அவருடைய ஆவல், எண்ணம், இலட்சியம் எல்லாம்.

பாலியோலிதிக் காலம் என அழைக்கப்படும் சுமார் 20,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முந்திய காலகட்டத்தில் பெண்களின் ஆதிக்கம் நாம் நினைப்பதை விட பல மடங்கு ஆரோக்கியமாக இருந்திருக்கிறது என்பதையே இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது என்கிறார் அவர்.

இது வரை ஆண்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட பழைய ஆய்வுகளைத் தூசு தட்டி, புதிய கோணத்தில் மீண்டும் ஒரு முறை ஆய்வுக்கு உட்படுத்தினால் வியக்க வைக்கும் மேலும் பல புதிய உண்மைகள் வெளிவரக் கூடும்.

நன்றி : பெண்ணே நீ.

பெண்கள் ஸ்பெஷல் : குடும்பம், குழந்தை, வேலை…

தனது கைக்குழந்தையைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள் தாய். குழந்தை எப்படியோ குப்புறப் படுத்துக் கொண்டது. தலையை நிமிர்த்த வலுவற்ற பச்சைக் குழந்தை அது. மூக்கு கட்டிலோடு ஒட்டிக் கொள்ள மூச்சுத் திணறி தவித்து, கடைசியில் தாய் வரும் முன் இறந்தே போனது அந்தக் குழந்தை. இது குவைத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.

தனியே குழந்தையுடன் வாழும் தாயின் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பு எனலாம். எப்போதும் குழந்தையின் மீது ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும். வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் தனியே செய்ய வேண்டும். சம்பாதிக்க வேண்டும். இப்படி நாலா பக்கமும் ஓடும் தாய்மார்களின் கஷ்டம் சொல்லி மாளாது.

வீட்டில் இருந்து குழந்தையைக் கவனிப்பதென்றால் பரவாயில்லை. எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் வாழ்க்கையை ஓட்ட பணத்துக்கு எங்கே போவது ? “ஒருத்தர் மட்டும் வேலைக்கு போனா வாழ்க்கையை ஓட்ட முடியாது. ரெண்டு பேருமே வேலைக்கு போனா தான் சமாளிக்க முடியும்”. என மக்கள் குடும்பம் குடும்பமாக ஓடும் காலமல்லவா இது.

இத்தகைய அன்னையரின் முதல் சவால் இரண்டு குதிரைகளில் பயணிப்பது. இரண்டு வேறு திசைகளில் பயணிக்கும் குதிரைகளென்றால் என்ன செய்வது ? வாழ்க்கையை ஓட்ட வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம். குழந்தையை நல்ல முறையில் கவனிக்க வேண்டும் எனும் கவலை மறு புறம்.

குழந்தையை வீட்டில் விட்டு விட்டு வேலைக்குப் போவதே அன்னைக்கு மிகவும் கடினம். வீட்டிலும் விட முடியாதபடி சிறிய குழந்தையெனில் சொல்லவே வேண்டாம். ஒரு நல்ல “டே கேர்” செண்டரைக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அப்படியே கண்டுபிடித்தாலும் அவர்கள் கேட்கும் மாதக் கட்டணம் இப்போதெல்லாம் இதயத்தை இரண்டு வினாடி நிறுத்திவிட்டுத் தான் துடிக்க வைக்கிறது. டே கேர் செண்டர்களின் கவனிப்புக்கும், அன்னையின் கவனிப்புக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பது வேறு விஷயம்.

பாட்டி, தாத்தா, அப்பா என சந்தோசமான சூழலில் வளர வேண்டிய குழந்தை “காப்பகங்களில்” தனியே இருக்கும் போது ரொம்பவே சோர்ந்து விடுகிறது. இந்த மன மாற்றம் குழந்தையாய் இருக்கும் போது அதிகம் தெரிய வராது. வளர வளர குழந்தையின் குணாதிசயங்களில் வித்தியாசம் பளிச் என புலப்படும்.

அன்னையின் நிலமை சொல்லவே வேண்டாம். “மழலையின் விரல் விலக்கி அலுவலகம் விரையும் பொழுதுகள்” ரொம்பவே வருத்தமானது. அது வேலைக்குப் போகும் அம்மாக்களுக்கு மட்டுமே புரிந்த சங்கதி. பெண்களின் மன அழுத்தத்துக்கு முக்கியமான காரணமே இது தான்.

அத்துடன் சிக்கல் முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. டேகேர் செண்டர்களும் இத்தனை மணி முதல், இத்தனை மணி வரை என இயங்குகின்றன. அதனால் அந்த இடைப்பட்ட நேரத்தில் செய்யக்கூடிய வேலையைத் தான் தேட வேண்டும் எனும் கட்டாயம் பெண்ணுக்கு ! பெரும்பாலும் குறைந்த சம்பளத்தில், அருகிலேயே உள்ள ஏதோ ஒரு அலுவலகத்தில் ஒட்டிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதே வழக்கமாகி விடும்.

பாலூட்டும் அன்னையருக்கு பிரச்சினை இன்னும் அதிகம். குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே அலுவலகம் செல்லவேண்டுமென பெரும்பாலான நிறுவனங்கள் நிபந்தனை விதிக்கும். சிறிய குழந்தையை சரியாகப் பராமரிக்க அன்னையையோ, பாட்டியையோ தவிர யாரால் முடியும் ? ஆனால் என்ன செய்வது ? பராமரிப்பு நிலையங்களைத் தான் நாடவேண்டும். பாலூட்டாமல் அன்னையும், குடிக்காமல் குழந்தையும் உடல், மன நலம் பாதிக்கப்படுகின்றனர்.

நிறுவனங்களும் உஷாராக நிலமையைக் கவனிக்கும். இந்த வேலை உங்களுக்கு மிக முக்கியம், “வேலையை விட்டு நீங்கள் நிற்கப் போவதில்லை” என தெரிந்தால் அவ்வளவு தான். ஒரு அடிமை போல நடத்த ஆரம்பித்துவிடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாவற்றையும் மறந்து விட வேண்டியது தான். கிடைக்கும் சம்பளமாவது கிடைக்கட்டும் எனும் மன நிலைக்குப் பெண்களைத் தள்ளி விட்டு நிறுவனங்கள் அமைதியாய் இருந்து விடும்.

இத்தனை சவால்களுக்கு மத்தியில் வாழும் பெண்களை சீண்டிப் பார்ப்பதற்கென்றே பிறப்பெடுத்தது போல் பலர் உண்டு. பெரும்பாலும் அலுவலக சக ஊழியர்களோ, தெரிந்தவர்களோ நண்பர்கள் எனும் போர்வையில் நெருங்குவார்கள். பாச பேச்சுகளோ, ஜெண்டில் மேன் தோரணையோ இவர்கள் உரையாடல்களில் தெறிக்கும். கடைசியில் எல்லாம் பாலியல் தேடல்களாய் முடிந்து விடும்.

வெளியூர் பயணங்கள் போன்றவையெல்லாம் தனியே குழந்தையைக் கவனிக்கும் பெண்களால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. இதனால் மற்றவர்களை விட அதிக திறமை இருந்தாலும் கூட வேலையில் பிரகாசிக்க முடியாமல் போய்விடுகிறது. பெரும்பான்மையான இலட்சியங்களும், கனவுகளும் முடங்கி விடுகின்றன. இதனால் வேலையில் திருப்தியின்மையே பெரும்பாலும் இத்தகைய அன்னையரை ஆட்டிப் படைக்கிறது.

கூட்டுக் குடும்பமாக இல்லாமல் தன்னந்தனியாய் தாயிடம் குழந்தை வளரும் போது வேறு பல சிக்கல்களும் வந்து சேர்கின்றன. மன அழுத்தமும், தன்னம்பிக்கைக் குறைபாடும் குழந்தைகளிடம் வர இது காரணமாகிவிடுகிறது. இத்தகைய குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதோ, தோல்விகளை அதிகமாய் சந்திப்பதோ சகஜம் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. வீட்டு வேலை, அலுவலக வேலை, கூடுதல் பொறுப்புணர்வு, ஆதரவு இன்மை இவையெல்லாம் அன்னையரை பிடிக்கும் சிக்கல்களில் சில என்கிறது அந்த ஆய்வு.

இங்கிலாந்தின் சில்ட்ரன்ஸ் சொசைடி வெளியிட்டுள்ள அறிக்கையையும் இதையே பிரதிபலிக்கிறது. தனியே வாழ்பவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் தேர்வுகளில் தோல்வி, மன அழுத்தம், நல்ல பழக்கமின்மை என தடுமாறுகிறார்களாம்.

அலுவலக நேரத்தில் வீட்டின் தேவைகள் நினைவில் புரள்வதும், வீட்டு நேரத்தில் அலுவலக பயம் வருவதும் என இந்த தனிமைப் பெண்களின் மன அழுத்தம் அளவிட முடியாதது. என்கிறது இன்னொரு ஆய்வு.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த சிக்கல் மிகவும் அதிகம். மண முறிவு, குடும்ப வாழ்வில் நம்பிக்கையின்மை இவையெல்லாம் பெண்களை தனியே வாழ வைத்து விடுகின்றன. சுமார் 27 விழுக்காடு குழந்தைகள் தாயிடம் வசிப்பவர்கள் தானாம். இந்த குடும்பங்களில் 40 சதவீதம் வறுமையில் வாடுவதாய் சொல்கிறது அந்த ஆய்வு.

பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் பெரும்பாலும் சிக்கல் எழுவதில்லை. வசதி படைத்த வீடுகளில் வளரும் பிள்ளைகள் நல்ல உயர் நிலையை அடைவார்கள் என்கிறார் இங்கிலாந்தின் மனநல பேராசிரியர் மைக்கேல் லேம்ப். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வு இதை நிரூபித்திருக்கிறது.

வசதி இல்லாதவர்களுக்குத் தான் அதிக சிக்கல். குறைந்த வாடகையில் வீடு, குறைந்த விலையில் பொருட்கள் என பணமே இவர்களுடைய வாழ்க்கையின் பயணத்தை முடிவு செய்கிறது. இந்த போராட்டங்களின் விளைவாக, சுமார் 76 விழுக்காடு தாய்மார்கள் தேவையான 8 மணி நேர தூக்கத்தைப் பெறுவதேயில்லை என்கிறது மருத்துவக் கல்லூரி ஆய்வு ஒன்று.

இப்படியெல்லாம் கஷ்டத்தில் அல்லாடும் பெண்களுக்கு சமூகம் கை கொடுக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கு மரியாதையும், பாதுகாப்பும், அங்கீகாரங்களும் மற்றவர்களை விட குறைவாகவே இருக்கிறது.

பெண்களால் குழந்தைகளைத் தனியே வளர்க்க முடியாது என்பதெல்லாம் சும்மா என்கிறது அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழக ஆய்வு. தனியே வாழ்க்கையை நடத்தும் பெண்கள் குழந்தைகளை வெற்றிகரமான வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்லமுடியும் என அடித்துச் சொல்கிறது இது. ஆனால் அதற்காக அவள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் தான் எத்தனை எத்தனை !

அலுவலக மன அழுத்தங்களைப் பகிர்ந்து கொள்ள வீட்டில் ஆள் இல்லாதது. அந்த அழுத்தங்களை குழந்தையிடம் காட்டாமல் இயல்பாய் இருப்பது. பொறுமையுடன் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது. நம்பிக்கையுடனும் எச்சரிக்கையுடனும் அனைத்தையும் எதிர்கொள்வது. என தனியே வாழும் அன்னையரின் ஒற்றை வாழ்க்கை ஓராயிரம் வித்தியாசமான பாத்திரங்களால் நிரம்பி வழிகிறது !

சேவியர்

நன்றி : பெண்ணே நீ

டாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்

 

கிடைக்கும் போனஸ் பணத்தில் ஏசி வாங்க வேண்டும், டி.வி வாங்க வேண்டும், பிரிட்ஜ் வாங்க வேண்டும் என திட்டமிடுவது சகஜம். அப்படி காத்திருந்து காத்திருந்து வாங்கும் பொருள் நமக்கு தலைவலியாய் மாறி விடக் கூடாது. அதற்கு கொஞ்சம் விஷயங்களை நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

1. எந்தப் பொருள் வாங்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்தப் பொருளைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளுங்கள். அதே பொருள் அதே வசதிகளுடன் வேறு பிராண்டில் என்ன விலை என்பதைப் பாருங்கள். எந்தக் கம்பெனி நம்பிக்கையானது, எது அதிக கேரண்டி தருகிறது என்பதையெல்லாம் அறிந்தபின் முடிவெடுங்கள்.

2. இந்த விலையில் தான் பொருள் என முதலிலேயே முடிவு செய்ய வேண்டியது முக்கியம். அப்போது தான் அந்த விலையில் கிடைக்கக் கூடிய நல்ல பொருள் எது என உங்கள் தேடுதல் கூர்மையாகும். தேவையில்லாமல் ஆசைப்பட்டு விழா நாளில் மனவருத்தம் கொள்ள வேண்டியிருக்காது.

3. பொருளை வாங்கும் முன் அந்த பொருள் குறித்த விமர்சனங்கள், அலசல்கள் போன்றவற்றை கவனமாய் படியுங்கள். விளம்பரங்களைப் பார்த்து உடனே வாங்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்காதீர்கள். இணையத்தில் துழாவினால் அக்கு வேறு ஆணி வேறாக தகவல்களை அள்ளித் தருவார்கள்.

4. வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, ஏசி போன்றவற்றை “பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறதே” என வாங்காதீர்கள். எப்படி அதைப் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை பேர் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை முறை பயன்படுத்தப் போகிறீர்கள். எந்த அறையில் அதை வைக்கப் போகிறீர்கள் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

5. “மின்சாரத்தைச் சேமிக்கும்” என நட்சத்திர அடையாளம் போட்டிருக்கும் பொருட்களை வாங்குவது நல்லது. அவை உங்களுடைய செலவையும் குறைக்கும். நாட்டுக்கும் நன்மை பயக்கும். ஒவ்வொரு யூனிட் மின்சாரத்தை நீங்கள் சேமிக்கும் போதும் நாட்டுக்காய் ஒரு யூனிட் மின்சாரத்தைத் தயாராக்குகிறீர்கள் என்பது தான் பொருள்.

6. பொருள் வாங்கும் போது கேரண்டி அட்டை, வாரண்டி அட்டை, மேனுவல், ரசீதுகள் போன்ற அனைத்தையும் கவனமாய் கேட்டு வாங்குங்கள்.

7. பில்லைச் சரிபார்ப்பதும், கேரண்டி அட்டையில் சீல், கையொப்பம் எல்லாம் இடப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பதும் அவசியம். வாங்கும் போது கடைக்காரர்கள் உங்களிடம் அன்பாய் சிரித்துப் பேசுவார்கள். பழுது என்று போனால் வேறு விதமாக உங்களிடம் நடந்து கொள்வார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

8. பொருளை வாங்கி வீட்டிக் கொண்டு வைத்து விட்டு எப்படி இயக்குவது என கற்றுக் கொள்ள வேண்டாம். கடையிலேயே இயக்குவது குறித்த அனைத்து தகவல்களையும் ஒன்று விடாமல் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக ரிமோட் சமாச்சாரங்களை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

9. வாங்கும் போது மேனுவலைப் பார்த்து பொருளுடன் எல்லா இணை பொருட்களும் தரப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சில நிறுவனங்கள் எக்ஸ்டா இணைப்புகளை இலவசமாகக் கொடுப்பார்கள். மேனுவலைப் பார்த்தால் தான் அது தெரியும்.

10. சர்வீஸ் செண்டர் எங்கே இருக்கிறது ? ஒரு வருடத்துக்கான சர்வீஸ் ஒப்பந்தம் இட்டால் எவ்வளவு பணம் ஆகும் ? இந்த நிறுவனத்தின் சர்வீஸ் தரம் எப்படி இருக்கிறது ? சர்வீஸ் விலை எப்படி ? என்பதை முழுமையாய் அறிந்து கொள்ளுங்கள். பொருள் வாங்கியபின் நமக்குத் தேவை தரமான சர்வீஸ் தான். “சர்வீஸ் நல்லாயில்லை” என்றால் பொருளை வாங்காமல் இருப்பது விவேகம்.

பெண்கள் “வாயாடி”களாவது நல்லது !

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.

ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. “நலமா ?” என ஆரம்பிக்கும் உரையாடல் “நல்லா இருக்கேன்” என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.

அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ “ இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்” என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி மனம் விட்டு உரையாடுவதும், நண்பர்களுடன் பேசி மகிழ்வதும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனும் புதிய ஆராய்ச்சி ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டு கதை பேசும் பெண்களின் மனதில் இன்னும் கொஞ்சம் இன்பத்துப் பால் வார்த்திருக்கிறார்கள்.

மனித உடலிலுள்ள புரோகெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் மன அழுத்தத்தையும், கவலை, பதட்டம் போன்றவற்றையும் குறைக்கக்கூடிய தன்மை உடையது. மனம் விட்டுப் பேசி சிரித்து உரையாடும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகவும், இதுவே பெண்களின் மன மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர்கள் மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

இத்தகைய உரையாடல்கள் வெறுமனே பொழுது போக்காக மட்டும் அமைந்து விடாமல் பெண்களுடைய நட்பு இறுக்கத்துக்கும், உதவும் மனப்பான்மைக்கும் கூட துணை செய்கிறதாம்.

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்களில் மாலை நேரம் முழுவதும் செலவிடும் பெண்களுக்கு உரையாடலுக்காய் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது கண் கூடு. அத்தகைய சற்றும் பயன் தராத தொலைக்காட்சித் தொடர்களை விலக்கி விட்டு ஆரோக்கியமான உரையாடலுக்குப் பெண்கள் திரும்ப இந்த ஆராய்ச்சி அழைப்பு விடுக்கிறது.

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்கலாமே ..

தமிழனின் மதம் சினிமா.

எனக்கு அஜித் மாதிரி ஒரு மாப்பிள்ளை தான் வேணும்” என்பது இளம் பெண்களின் தேசிய கீதம். “பட்டுன்னு பாத்தா பாவனா மாதிரி இருப்பாடா” என்பது இளைஞர்களின் சிலிர்ப்பு விவாதம். தமிழர்களுக்கு சினிமா வெறும் பொழுதுபோக்காக என்றைக்குமே இருந்ததில்லை. சினிமா தான் அவர்களுக்கு எல்லாமே ! எதையும் ஒப்பிட்டுப் பார்க்க அவர்களிடம் இருக்கும் அளவுகோல் சினிமா மட்டுமே.

அவர்கள் வியந்ததும், வியப்பதுமெல்லாம் சினிமா நாயகர்களைப் பார்த்துத் தான். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் என்ன நினைவுக்கு வருகிறது ? உண்மையைச் சொன்னால் நடிகர் சிவாஜியின் முகத்தைத் தாண்டி யாருக்கும் எதுவும் நினைவில் வந்து விடாது. விட்டால் நாற்று நட்டாயா… என ஆரம்பித்து பத்து நிமிடம் பேசி சர்வதேசப் பட்டம் வாங்கியது போல கர்வப் படுவான் தமிழன்.

கலையோடும், வரலாற்றோரும் நின்று விடவில்லை சினிமா. அரசியலையும் அது தானே நிர்ணயித்தது. வாக்குச் சீட்டுகளெல்லாம் வசீகர பிம்பங்களுக்காய் விழுந்த சினிமா டிக்கெட்களாகி விட்டன. “தலைவர் ஒரு வார்த்தை சொல்லட்டும் யாருக்கு ஓட்டு போடணும்ன்னு” என ஒட்டுக்கு முந்தின நாள் வரை காத்திருக்கும் கூட்டத்தையும் நாம் பார்க்கிறோமே !

கண்ணாடியில் நின்று தலை சீவும் போது உள்ளுக்குள் தெரியும் பிம்பத்தில் கூட தனது நாயகனோ, நாயகியோ தான் தெரிகிறார்கள். அதிலும் இளம் வயதினருக்கு சினிமா பிடித்தமான பேய். யார் யாரைப் பிடித்திருப்பது என்பதே தெரியாத அளவுக்கு பின்னிப் பிணைந்திருப்பார்கள். நடை உடை பாவனை பேச்சு அனைத்திலும் சினிமாவின் ஜிகினா சிதறும். ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு கடந்து போகும் மன நிலையில் சினிமாவைப் பார்க்க முடிவதில்லை. சினிமா அவர்களுக்கு அன்னியோன்யமானது. பூஜையறை முதல் படுக்கையறை வரை அவசியமானது.

இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலானவர்களின் புலன்களில் ஒன்றாகவே ஆகிவிட்டது சினிமா. அதனால் தான் சினிமாவுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் தமிழனை நேரடியாகப் பாதிக்கின்றன. இது சினிமா, இது வாழ்க்கை என பிரித்துப் பார்க்க தமிழர்கள் விரும்புவதில்லை. அதனால் தான் சினிமாவைத் தாண்டிய நடிகர்களின் வாழ்க்கை நமது வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்கிறது. இங்கே தான் இருக்கிறது மிகப்பெரிய சிக்கல்.

“திருமணம் தோல்வியில் தான் முடிகிறது. எனவே திருமணமே தேவையில்லை” என ஒரு நடிகர் சொல்கிறார். வித்தியாசமாய் சொல்லிவிட்டோம் எனும் திருப்தி அவருக்கு. கேட்கும் கூட்டம் என்ன செய்கிறது ? “அட ஆமால்ல… நச்சுன்னு சொன்னாருய்யா” என வாய் பிளந்து தலையாட்டுகிறது. இந்த பேச்சு எத்தனை குடும்பங்களுடைய நிம்மதியின் இடையே வந்து நிற்கப் போகிறதோ.

சினிமா எனும் பிரமிப்பு பிம்பம் இந்த ஜென்மத்துக்குக் கலையப் போவதில்லை. சினிமா என்பது மக்களுக்கு ஒரு மேஜிக் மாயாஜால உலகம் தான். தனது பிரிய நடிகனைப் பார்த்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டது போல சமாதியாகவும் பலருக்குச் சம்மதமே. அதனால் தான் சினிமாவும், சினிமா சார்ந்தவைகளும் ஆக்கப் பூர்வமானவற்றைப் பரிமாற வேண்டியது அவசியமாகிறது.

நான் இரத்த தானம் செய்கிறேன். ரசிகர்களும் இரத்ததானம் செய்யுங்கள் என்றால், உடனே இரத்ததானம் செய்ய ரசிகர்கள் ரெடி. நான் கண்தானம் செய்கிறேன், நீங்களும் செய்யுங்கள் என நடிகை சொன்னபோது கண்தானம் செய்தவர்கள் எக்கச் சக்கம். நற்பணிகள் செய்வோம் என அழைப்பு விடுக்கும் போது விழுந்தடித்துக் கொண்டு வருகிறார்கள் ரசிகர்கள். ரசிகர்களை தனது விருப்பத்துக்கு ஏற்ப வளைக்க நடிகனுக்கு மந்திரக் கோல் தேவையில்லை வெறும் நாக்கு போதும்!

இன்றைய சினிமா சூழல் எப்படி இருக்கிறது. நடிக்க வரும் பெண்களுக்கு கனவுகள் பல்லக்கு செய்கின்றன. சினிமா உலகில் நுழைந்த பின் பல்லக்குகள் பல்லிளிக்கின்றன. தங்களைச் சுற்றித் திரிபவர்கள் மனதோடு பேச விரும்பாதவர்கள் என்பது அவர்களுக்கு விரைவிலேயே புரிந்து விடுகிறது. அதற்குள் பாம்புகளின் விஷம் அவர்களை வீழ்த்திவிடுகிறது. “முழுக்க நனைந்தாகிவிட்டது இனிமேல் என்ன முக்காடு” என்றாகிப் போகிறது அவர்களுடைய மிச்சம் மீதி வாழ்க்கை !

ஷோபா, ஜெயலக்ஷ்மி, சில்க் ஸ்மிதா, திவ்ய பாரதி, மோனல், பிரதியுக்ஷா, சில்க் ஸ்மிதா என பட்டியலிட்டால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இவர்களெல்லாம் திரையுலகின் கனவுக் கன்னிகள். நிஜத்தின் வெப்பம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்கள். நிம்மதியான குடும்ப உறவு. நிஜமான நட்புகள். ஆரோக்கியமான வாழ்க்கை. நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சுதந்திரம். இவை எதுவுமே இல்லாமல் ஏக்கத்தின் முடிவில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் தான் இவர்கள். திரை நட்சத்திரங்கள் மட்டுமல்ல ஷாலினி, வைஷ்ணவி, ஷர்தா என சின்னத் திரை நடிகைகளும் இதில் அடக்கம்.

“ஆஹா இவர்களல்லவோ சூப்பர் தம்பதியர்” என தமிழன் வியந்து பார்க்கும் தம்பதியரின் வாழ்க்கை என்னவாகிறது ? பார்த்திபன்-சீதா, ஊர்வசி மனோஜ் கே ஜெயன், சரிதா – முகேஷ், செல்வராகவன் – சோனியா அகர்வால் இதெல்லாம் சில உதாரணங்கள். திருமணம் முடிந்த கையோடு கவிதை எழுதிக் குவித்தவர்கள் தான் இவர்கள். அப்புறமென்ன காமத்தின் கலம் காலியானபின் துணைகள் சுமைகளாகி விட்டார்கள்.

அப்பாவித் தமிழனுக்கோ இவையெல்லாம் பாடங்களாகிவிடுகின்றன. “புடிக்கலையா… டைவர்ஸ் பண்ணிக்கோப்பா…” என்பது சகஜ அறிவுரையாகி விடுகிறது. முன்பெல்லாம் டைவர்ஸாஆ என நீளமாய் அலறியவர்கள், இப்போதெல்லாம் அப்படியா என சின்னக் கொட்டாவியுடன் கேட்கின்றனர். கருத்து வேற்றுமை வந்தாலே “கட் பண்றது பெட்டர்” எனும் ஹை டெக் மனநிலை இன்று பரவி விட்டது. பொறுமையும் சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுத்தலும் ஆழமான குடும்ப வாழ்வின் அடிப்படைத் தேவைகள் என்பதெல்லாம் மலையேறிப் போச்சு.

டைவர்ஸ்களின் பெரும்பாலான காரணம் இன்னொரு தகாத உறவு எனும் போது இன்னோர் சிக்கலின் கதவு அங்கே திறக்கிறது. “உனக்கும் கல்யாணமாச்சு, எனக்கும் கல்யாணமாச்சு.. அதுக்கென்ன ஜாலியா இருக்கலாம்… “ என்பது லேட்டஸ்ட் மனநிலை. எப்போதுமே யாராவது உதாரணமாய் இருக்கிறார்கள், இப்போதைக்கு நயன் தாரா, பிரபுதேவா !. பிறர் மனை நோக்குதல் பாவம் என்றால் “லைஃபை என் ஜாய் பண்ணுப்பா” என்கிறார்கள். நமது வாழ்க்கை முறை கற்றுக் கொடுத்த குடும்ப மதிப்பீடுகள் எல்லாம் புதைகுழியில்.

முதலில் “திருமணமான நபரைக் காதலிப்பது தப்பில்லை” ! என்பார்கள். பின்னர் “ஊர் உலகத்துல இல்லாததையா நான் பண்ணிட்டேன்” என அது சகஜமாகிப் போகும். பின்னர் பின்னல் உறவுகள் பேஷனாகவே ஆகிப் போகும். கடைசியில் ஆயிரங்காலத்துப் பயிர் அத்தத்தை இழந்து இன்ஸ்டண்ட் காஃபி மாதிரி ஆகிப் போகிறது.

நகரங்களில் என்றில்லை. கிராமங்களில் கூட இந்த காற்று தான். இருக்கவே இருக்கின்றன 24 மணி நேர டி வி சீரியல்கள். தகாத உறவு இல்லாத சீரியல் ஏதேனும் இருக்கிறதா நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்களேன். ம்ஹூம், யாரோ யாரையோ ஏமாற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

நிஜமான நேசத்தை பாலியல் வந்து பண்டமாற்று முறையில் கவர்ந்து சென்று விட்டது. நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கைகளில் தமிழன் காட்டும் அதீத ஈடுபாடு கூட அவனுடைய குடும்ப வாழ்க்கையின் தோல்வியையே காட்டுகிறது. புவனேஷ்வரி எனும் நடிகை விபச்சாரம் செய்தார் என்றால் எல்லா செய்திகளையும் பின்னுக்குத் தள்ளி அது பேசு பொருளாகிறது. “எல்லாரும் இப்படித் தான்பா” என அவர்களுடைய உரையாடல்கள் விகாரத்தின் வடிகால்களாகின்றன.

விபச்சாரம் என்பது ஒரு பேன்ஸி தொழிலாகவே மனதுக்குள் விரிகிறது. “இதெல்லாம் தப்பில்லை போல” எனும் சிந்தனை உள்ளுக்குள் வந்தமர்கிறது. நடிகையைப் போல குட்டைப் பாவாடை அணியும் டீன் ஏஜ் பெண்ணுக்கு நடிகையைப் போல டேட்டிங் போவது பேஷனாகிறது ! கடைசியில் கல்லூரிப் பெண்ணின் ஜீன்ஸ் பேண்ட் போல கலாச்சாரமும் அங்காங்கே கிழிந்து தொங்குகிறது.

சினிமா எனும் ஊடகம் உருவாக்கியிருக்க வேண்டிய தாக்கங்களே வேறு. அவை சமூகத்தின் கட்டமைப்பில் நல்ல மாற்றங்களை உருவாக்கலாம். குடும்ப உறவுகளில் ஆழத்தை உருவாக்கலாம். நல்ல ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை சொல்லலாம். ஆனால் சினிமா இன்றைக்கு நாடியிருப்பது எதை? மலிவான விற்பனை உத்தியை. மக்களை மயக்கத்துக்கும், மோகத்துக்கும், கிறக்கத்துக்கும் தள்ளும் மூன்றாம் தர வேலையை. “இதெல்லாம் வேண்டாம்பா” என அக்கறையுடன் சொல்பவர்களும் கோமாளிகளாகிறார்கள். இந்த சூறாவளியில் வரும் சில பொக்கிஷங்கள் வந்த வேகத்தில் காணாமலேயே போய்விடுகின்றன.

சினிமாவைச் சுவாசிக்கும் தமிழர்களுக்கு திரை நட்சத்திரங்கள் கற்றுக் கொடுப்பவை இவை தான். தற்கொலை, விவாக ரத்து, பிறர் மனை நோக்குதல், விபச்சாரம் ! சினிமாவைத் தாண்டியும் தன்னைத் தமிழன் நேசிக்கிறான் எனும் பொறுப்புணர்வு பெரும்பாலானவர்களிடம் இல்லை. கலாச்சாரங்களை மீறுவதே கலையின் உச்சம் என்பது சிலரின் கணக்கு. என் தொழில் சினிமா, அதன் பிறகு நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பது மற்றவர்களின் பொறுப்பின்மை.

“தான் என்ன செய்தாலும் அதன் தாக்கம் மக்களிடம் இருக்கும்” என்பது இவர்களுக்குத் தெரியாததல்ல. நேர்மையுடனும் தூய்மையுடனும் நடக்க வேண்டியது தனது கடமை என இவர்கள் நினைப்பது இல்லை. “மக்கள் எப்படிப் போனால் எனக்கென்ன, எனக்கு இலட்சங்கள் சொந்தம்” எனும் அலட்சிய சிந்தனை தான் இதன் காரணம்.

சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் நட்சத்திரங்களுக்கு சமூகத்தின் நலனுக்கானதைச் செய்யும் தார்மீகக் கடமை உண்டு. இதை அவர்கள் உணரும் போது தமிழ் சமூகமும் செழித்து வளரத் துவங்கும்.

நன்றி :பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க…

ஹாலிவுட் சினிமா : அவதார் !!!

 

அவதார் ! ஹாலிவுட் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களை தூக்கமிழக்கச் செய்கிறது இந்த மந்திர வார்த்தை. டிசம்பர் 18ம் தியதி வெளிவரப் போகும் இந்த 3D சயின்ஸ் பிக்ஷன் சினிமா தான் இப்போதைய ஹாட் டாக். உலகெங்கும் வெளியான  இந்தத் திரைப்படத்தின் டிரைலர்கள் இந்த எதிர்பார்ப்பை ஏகத்துக்குக் கிளறி விட்டிருக்கிறது. டிரைலர் வெளியான வெப்சைட்களெல்லாம் மில்லியன் கணக்கில் கிளிக் வாங்கி பரபரப்பூட்டுகின்றன. இந்தப் படத்தை இயக்குவது ஜேம்ஸ் கேமரூன் என்பது தான் இந்தப் பரபரப்புகளுக்கு முக்கியக் காரணம். இருக்காதா ? டைட்டானிக் திரைப்படத்தை உலகெங்கும் ஓடவிட்டவராச்சே. 

டெக்னாலஜியில் ஹாலிவுட்டையே இன்னொரு தளத்துக்கு இந்தப் படம் எடுத்துச் செல்லும் என்கிறார்கள். 20யத் சென்சுரி ஃபாக்ஸ் வெளியிடப் போகும் இந்தப் படத்தைத் தயாரித்திருப்பது லைட்ஸ் ஸ்ட்ரோம் எண்டர்டெயின்மெண்ட். செலவைப் பற்றிக் கவலைப்படாமல் சுமார் 300 மில்லியன் டாலர்களை இந்தப் படத்தில் வாரி இறைத்திருக்கிறார்கள். டைட்டானிக், ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2 போன்ற மிரட்டலான படங்களைத் தயாரித்ததும் இவர்கள் தான்.

திரை ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையும் ஈர்த்திருக்கும் இந்தப் படத்தின் கதை தான் என்ன ?

கதையின் நாயகன் ஜேக் ஒரு கடற்படை வீரர். போரில் காயமடைந்து இடுப்புக்குக் கீழே உடல் செயல் இழந்த நிலையில் இருக்கிறார். அவர் மீண்டும் எழும்பி நடந்து பண்டோராவுக்குப் போகும் வாய்ப்பு வருகிறது. பண்டோரா ஒரு தனி கிரகம். அசத்தலான அந்தக் கிரகத்தில் பிரமிப்பையும், பயத்தையும் ஊட்டும் பல விதமான ஜீவராசிகள் வாழ்கின்றன. அங்கே நவி எனும் மனிதர்களும் வசிக்கிறார்கள். 10 அடி  உயரம், நீளமான வால், நீல நிற தோல்,  பெரிய காது, சப்பை மூக்கு என வியக்க வைக்கும் உருவம் அவர்களுக்கு. இவர்கள் முழு வளர்ச்சியடையாதவர்கள் என மனிதர்கள் நினைக்கிறான். உண்மையில் நவிகள் மனிதர்களை விட அதி பயங்கர சக்திகளுடன் இருக்கிறார்கள்.

அந்த கிரகத்தில் உள்ள மாபெரும் சிக்கல், அங்கே மனிதனால் சுவாசிக்க முடியாது என்பது. அந்தக் கிரகத்துக்குப் போக வேண்டுமென்றால் நவிகளைப் போல ஆய்வுக் கூடத்தில் மனிதர்களை உருவாக்க வேண்டும். அப்படி மனிதர்களின் டி.என்.ஏயைக் கொண்டு உருவாக்கப்படும் நவி போன்ற நீல மனிதர்கள் தான் அவதார் என்பவர்கள். ஊனமுற்ற ஜேக் தனது அவதார் உருவத்தின் மூலமாக பண்டோராவுக்குள் நுழைகிறார். கிரகத்தின் அழகில் மெய் மறக்கிறார். கூடவே அங்குள்ள ஒரு நவி பெண்ணுடன் காதலிலும் சிக்கிக் கொள்கிறார். பண்டோராவில் மனிதர்களின் தலையிடலை நவிகள் விரும்பவில்லை. இப்போது ஜேக் தன் இனமான மனிதர்களுக்கும், தன் காதலியின் இனமான நவிகளுக்கும் இடையே சிக்கிக் கொள்கிறார். அவர் எந்தப் பக்கம் சாய்கிறார், அதன் விளைவுகள் என்னென்ன என்பதை வெள்ளித் திரை சொல்லுமாம்.

சின்ன வயதிலிருந்தே நான் படிக்கும் எல்லா அறிவியல் புனைக் கதைகளும் என்னை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும். அப்படிப் படித்த எல்லா கதைகளையும் கலந்து கட்டி நான் உருவாக்கிய ஸ்பெஷல் கதை தான் அவதார், என்கிறார் ஜேம்ஸ் கேமரூன். இந்தக் கதையை அவர் எழுதியது 1994ல். டைட்டானிக்கை சுடச் சுடக் கவிழ்த்த கையோடு 1997லேயே அவதாரை கையில் எடுத்தார். 100 மில்லியன் பட்ஜெட்டில் படத்தைத் தயாராக்க வேண்டும் என்பது அவருடைய திட்டம். முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில் நடிகர்களை வடிவமைத்து சினிமா எடுக்க வேண்டும், டெக்னாலஜியைக் கொண்டு மிரட்ட வேண்டும் என பல திட்டங்கள் வைத்திருந்தார்.  ஆனால் என்ன அவர் நினைப்பதைச் செய்ய அப்போது டெக்னாலஜி ஒத்துழைக்கவில்லையாம். 

அவதார் என்னுடைய கனவுப் படம் என்கிறார் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் 55 வயதான  ஜேம்ஸ் கேமரூன். இந்தப் படம் ஹிட்டானால் நிச்சயம் இதன் இதன் இரண்டாம் மூன்றாம் பாகங்களை எடுப்பேன் என புன்னகைக்கிறார். ஏற்கனவே டெர்மினேட்டர் படத்தை எடுத்து அதை ஹிட்டாக்கி, இரண்டாம் பாகம் எடுத்து சூப்பர் ஹிட்டாக்கிய அனுபவம் அவருக்கு உண்டு. அவர் இயக்காத டெரிமினேட்டரின் மூன்றாம் நான்காம் பாகங்கள் ஊத்திக் கொண்டதும் உலகறிந்த உண்மையே.

இவருடைய புதிய டெக்னாலஜியைப் பற்றிக் கேள்விப்பட்டு வியந்து, நேரில் போய் அசந்த இயக்குனர்களின் பட்டியலில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கும் ஒருவர். ஜூராசிக் பார்க்கில் டைனோசர்களை அலற விட்டவரையே அலற வைத்து விட்டதாம் ஜேம்ஸின் டெக்னிக்ஸ். மற்ற படங்களில் உள்ளது போல தனியே நடிகர்களை நடிக்க வைத்து பின்னர் கிராபிக்ஸ் காட்சியில் இணைக்காமல், கிராபிக்ஸ் காட்சியை கம்ப்யூட்டரில் இணையாக ஓடவிட்டு அதற்குத் தக்கபடி நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார். இந்த விர்ச்சுவல் கேமரா டெக்னிக் ஒரு முப்பரிமாண மாய உலகை கன கட்சிதமாய் படம் பிடித்திருக்கிறதாம். 

நடிகர்களின் முக அசைவுகளை “த வால்யம்” எனும் கருவி மூலம் துல்லியமாகப் படம் பிடித்து, அதை கம்யூட்டர் இமேஜ்களுக்கு இறக்குமதி செய்திருக்கிறார். இதன் மூலம் டிஜிடல் உருவங்கள் அச்சு அசலாக மனித அசைவுகளைப் பிரதிபலிக்கும் ! அப்படி எடுக்கப்பட்ட அவதார் படத்தில் எது நிஜம் எது கிராபிக்ஸ் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பப் போவது சர்வ நிச்சயம். உண்மையில் வெறும் 40 சதவீதம் காட்சிகள் தான் இதில் உண்மையானவை. மிச்சம் 60 சதவீதமும் கம்ப்யூட்டர் காட்டும் மாயாஜாலம் தான் என்கிறார் ஜேம்ஸ்.

சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதிலேயே இந்தப் படம் புரட்சி செய்யும். வீட்டில் இருப்பவர்களை 3D தியேட்டர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் இழுத்து வரும். இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் ஒரு புதிய உலகத்துக்குள் போகாமல் வெளியே வந்த அனுபவம் இருக்கவே இருக்காது என அடித்துச் சொல்கிறார் ஜேம்ஸ். அவதார் படத்தைப் பார்த்த வெகு சிலரும் இன்னும் வியப்பிலிருந்து வெளியே வரவில்லையாம்.

டைட்டானிக் படத்துக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னரையே செண்டிமெண்டாக இந்தப் படத்துக்கும் இசையமைக்க வைத்திருக்கிறார். ஒரு புதிய உலகம். ஒரு புதிய இசை. மிக மிகப் புதுமையாக வந்திருக்கிறது என பூரிக்கிறது யூனிட். பிரமிப்பூட்டும் ஒரு கிராபிக்ஸ் கலக்கலில் இதமான காதல் இழையோடினால் அது நிச்சயம் வெற்றி பெறும். அந்த பார்முலா தான் டைட்டானிக்கிற்கு மிரட்டல் வெற்றியைக் கொடுத்தது. அதே பார்முலா தான் அவதாரையும் சூப்பர் டுப்பர் ஹிட்டாக்கும் என்கிறார் ஜேம்ஸ் ஹார்னர்.

டைட்டானிக் திரைப்படம் உலகெங்கும் சுமார் 1.7 பில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்தது. இந்தப் படம் அதை விட அதிக அளவில் சம்பாதிக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள். காரணம் இந்தப் படத்தின் 3D டெக்னாலஜி ரசிகர்களைத் தியேட்டருக்கு கட்டாயப்படுத்தி வரவைக்குமாம். இந்தப் படத்தில் ஹீரோவானதன் மூலம் ஜென்ம சாபல்யமே பெற்றுவிட்டது போல் புல்லரிக்கிறார் 33 வயதான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சேம் வொர்த்திங்டன்.

அவதார் திரைப்படத்தின் பெயரிலும் அவதாரின் நீல நிறத்திலும் இந்தியப் பாதிப்பு தெளிவாகவே தெரிகிறது. அவதாரின் வர்ணம் சிவபெருமானின் நீல நிறத்திலிருந்து ஜேம்ஸ் எடுத்துக் கொண்டது என்கின்றனர் விமர்சகர்கள். இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான இடங்களில் அவதார் டிசம்பர் பதினெட்டாம் தியதி வெளியாகிறது. இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லை எனும் ஏகப்பட்ட பில்டப்களுக்கான பதில் அப்போது தெரிந்துவிடும்.

சேவியர்

தமிழிஷில் வாக்களிக்க…

இன்றைய நூதன மோசடிகள்…

எப்படிக் கவிழ்க்கலாம் என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தேடுபவர்களுக்குப் பஞ்சமேயில்லை. அதே அளவுக்கு, எப்படா வாய்ப்புக் கிடைக்கும் ஏமாறலாம் என அப்பாவியாய் இருப்பவர்களுக்கும் பஞ்சமில்லை. கொஞ்சம் உஷாராய் இருந்தால் எந்த பெரிய ஏமாற்றையும் எளிதில் கண்டு கொண்டு தப்பி விடலாம்.

பெரும்பாலான மக்களை அன்றும் இன்றும் வாட்டிக் கொண்டிருப்பது பைனான்ஸ் சமாச்சாரங்கள் தான். இதில் பல முகங்கள் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாய் பணம் கட்டுங்கள், ஆறு வருஷம் கழிச்சு யானை வரும் என்பது ஒரு வகை. உங்கள் பணத்துக்கு வட்டி நாப்பது சதவீதம் என சிலிர்ப்பூட்டுவது இன்னொரு வகை. கட்டுங்கள் உங்களுக்கு ஆஸ்திரேலியாவில் தேக்குத் தோட்டம் கிடைக்கும் என்பது சர்வதேச வகை. அப்பாடா, இப்போதான் சரியா ஒரு சேமிப்பு ஐடியா வந்திருக்கு என நீங்கள் நினைத்தால் சேமித்ததெல்லாம் போச்சு !

பைனான்ஸ் விஷயங்களைத் தாண்டி விஸ்வரூபமெடுத்து மிரட்டுவது ரியல் எஸ்டேட் பிரச்சினைகள். அதுவும் சென்னை போன்ற நகரங்களில் கேட்கவே வேண்டாம். எப்படி ஏமாற்றுவது என்பதை ரூம் போட்டு யோசிப்பார்களோ என கேட்கத் தோன்றும். சேல் டீட் இருக்கிறது, பட்டா இருக்கிறது, அப்ரூவ்ட் லேண்ட் பழத்தில் ஊசி ஏற்றுவார்கள். கடைசியில் பார்த்தால் ஒரு இடத்தை நான்கு பேருக்கு விற்றிருப்பார்கள். அல்லது எல்லாமே போலியாய் தயாரித்த பத்திரமாய் இருக்கும்.

வழக்கமா இங்கே நாப்பது இலட்சம் போகும். ஒரு இடம் இருக்கு. இருபதுக்கு முடிச்சு தரேன். யார்கிட்டேயும் சொல்லாதீங்க. அப்புறம் போட்டிக்கு வந்துடுவாங்க என்றெல்லாம் ஒருவர் இழுக்கிறார் என்றாலே விவகாரம் தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இதை விட நல்ல இடம், இதை விட நல்ல விலைக்குக் கிடைக்காது என்று உங்களை நம்ப வைப்பதில் தான் இந்த புரோக்கர்களின் புத்திசாலித்தனமே இருக்கிறது. அவர்களுடைய வலையில் விழுந்து விட்டால், சிலந்தி வலையில் விழுந்த ஈயாகி விடுவீர்கள்.

திடீரென ஒருவர் தனியே அழைத்துப் போய் காது கடிப்பார். சுகம் அப்பார்ட்மெண்ட்ஸ்ல ஒரு வீடு இருக்கு. வீட்டோட நம்பர் 8. உங்களைப் பார்த்தா நம்பர்ல நம்பிக்கை இல்லாதவர் போல தெரியுது அதான் சொன்னேன். நியூமராலஜி பிராப்ளம் இருக்கிறதனால ரேட் படியமாட்டேங்குது. ஒரு நாலஞ்சு இலட்சம் கம்மியாவே முடிச்சிடலாம் என்பார். அட, செம லாபமாச்சே என அட்வான்ஸ் கிட்வான்ஸ் கொடுத்து விடாதீர்கள். வியக்கும் வாய்க்கு அல்வா தான் மிஞ்சும்.

நகர்ப்புறங்களில் திடீர் திடீரென முளைக்கும் சிட்டி கட்டி தங்கம் வாங்குவது, பாத்திரம் வாங்குவது, பட்டுப்புடவை வாங்குவது என பலவும் மோசடிகள் தான். ஒன்றுகில் உங்கள் பணத்தை அபேஸ் செய்வார்கள். அல்லது உதவாக்கரை பொருளை உங்கள் தலையில் கட்டி வைத்து விட்டு கம்பி நீட்டி விடுவார்கள்.

இந்த சாதாரண ஏமாற்றுகளுக்கு அடுத்தபடியாக வந்திருப்பது ஹைடெக் மோசடிகள். இந்த ஹைடெக் மோசடிகளின் கதைகளைக் கேட்டால் புல்லரிக்கும். இப்படியெல்லாம் கூட ஏமாற்ற முடியுமா என நீங்கள் வியந்து போகும் படி இருக்கும் பல ஏமாற்று வித்தைகள்.

திடீரென உங்கள் மின்னஞ்சல் கதவை ஒரு மெயில் தட்டும். வாவ்.. நீங்கள் அதிர்ஷ்ட சாலிதான். உங்களுக்கு ஐந்து இலட்சம் டாலர் பணம் கிடைத்திருக்கிறது. அதை அனுப்ப ஜஸ்ட் ஐம்பதாயிரம் ரூபாய் நீங்கள் அனுப்பவேண்டும். உங்கள் வங்கி எண், விலாசம் எல்லாம் குடுங்கள். என குஷிப்படுத்தும். “ஆஹா, வந்தாள் மஹாலட்சுமி ..” என குதித்தால் நீங்கள் அம்பேல். சைலண்டாக அந்த மின்னஞ்சலை டெலீட் செய்தால் நீங்கள் அறிவாளி.

கண்காட்சி, பொருட்காட்சி எங்கேயாவது போவீர்கள். தினசரி குலுக்கலில் எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு உங்கள் அட்ரஸ் எழுதிப் போடுவீர்கள். பார்த்தால் மறு நாள் மாலையிலேயே போன் வரும். எடுத்தால் மறு முனை பாராட்டும். “வாழ்த்துக்கள்… நீங்க எங்க குலுக்கலிலே பரிசு வாங்கியிருக்கீங்க. அதிர்ஷ்டசாலிதான். உங்களுக்கு எங்கயோ மச்சம் இருக்கு. சரி சரி, ஒரு நாலாயிரத்து ஐநூறு ரூபா டிடி எடுத்து இந்த அட்ரஸுக்கு அனுப்புங்க. உங்களுக்கு பரிசும், சிங்கப்பூர் போக நாலு டிக்கெட்டும் கிடைக்கும்..” என சரமாரி கதை வரும். தெய்வத்துக்கு நாலு தோப்புக் கரணம் போட்டு விட்டு பணத்தோடு டிடி எடுக்க பேங்கிற்கு ஓடினால் நீங்கள் காலி ! கட்பண்ணிக் கடாசி விட்டு வேலையைப் பார்த்தீர்களென்றால் அறிவாளி.

திடீரென உங்களுக்கு ஒரு மெயில் வரும். அதில் ஒரு லிங்க். லிங்கைக் கிளிக் செய்தால் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பக்கம் வரும். உங்கள் விலாசம், தொலைபேசி எண், இத்யாதி எல்லாவற்றையும் எழுதுங்கள். இது எங்கள் வருடாந்திர ஆடிட். என மெசேஜ் இருக்கும். உண்மையில் அது போலி சைட். மெயில் அட்ரசில் சில எக்ஸ்டா எழுத்துக்களுடன் உல்டா பண்ணியிருப்பார்கள். நீங்கள் அவசரப்பட்டு உடனே பாஸ்புக், கிரெடிட் கார்ட், பின் நம்பர் என சர்வத்தையும் எண்டர் பண்ணினால் கிளீன் போல்ட். வங்கிக்குப் போன் செய்து விஷயத்தை உறுதிப்படுத்தினால் நீங்கள் சமர்த்து.

வீட்டிலிருந்தபடியே மாதம் ஐம்பதாயிரம் சம்பளம். நீங்கள் வீட்டிலிருந்தபடியே தயாரிக்க வேண்டியது இந்தப் பொருள் தான். தயாரிக்கும் பொருளை நாங்களே மாதா மாதம் வந்து வாங்கி கொள்வோம். பேனாவை எப்படிச் செய்வது என்பதை அறிய சிடி, புத்தகம், எல்லாம் அனுப்புவோம். தேவைப்படுவோருக்கு வீட்டில் வந்தே செய்முறை விளக்கமும் சொல்லித் தருவோம். முப்பதாம் தியதிக்குள் ரிஜிஸ்டர் செய்யுங்கள். பத்தாயிரம் ரூபாய் பணம் அனுப்புங்கள். என கடிதம் வரும். அப்பாடா நமக்கொரு விடிவு காலம் என நினைத்தால் அது முடிவு காலமாகிவிடும். கொஞ்சம் யோசித்தால் கண்டத்திலிருந்து தப்பிக்கலாம்.

உங்கள் முகவெட்டு நன்றாக இருக்கிறதா ? உங்களுடைய புகைப்படங்களை அனுப்புங்கள். போட்டோ டெஸ்டில் பாஸாகி விட்டால் புதிதாக எடுக்கப்போகிற படத்தில் நீங்கள் தான் ஹீரோ/ஹீரோயின். புகைப்படங்களையும், எண்ட்ரீ பீஸாக வெறும் ஐநூறையும் அனுப்புங்கள். முகவரி இது தான் என ஒரு கோடம்பாக்கம் சந்து வந்து நிற்கும். அனுப்பினால் அவ்ளோ தான். எப்படியெல்லாமோ உங்கள் வாழ்க்கை திசைமாறி சீரழிய வாய்ப்பு உண்டு.

நீங்கள் நன்றாக கவிதை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். திடீரென உங்களுக்கு ஒரு போன் வரும். நான் உங்கள் கவிதைகளைப் படித்து பிரமித்துவிட்டேன். நான் இயக்குனர் லொடுக்கு பாண்டி. நான் ஒரு புது படம் தயாரிக்கிறேன். படத்தின் பெயர் “நிலாவில் மழை”. ஒரு பாட்டு எழுத வேண்டியிருக்கு. சுஜாதாம்மா தான் பாடறாங்க. மேடைல பாடற மாதிரி கான்சப்ட் அது. தன்னம்பிக்கை ஊட்டும் பாட்டு. உங்களுக்கு சினிமா பாட்டு எழுத வருமா ? என தூண்டில் நீளும். ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுங்க, படம் வெளியானதும் பணத்தை நிச்சயம் தந்திடுவேன் என்பார்கள். ஆஹா.. உலகப் புகழ் என நினைத்தால் அம்பேல்.

திடீரென ஒரு மின்னஞ்சல் வரும். உங்கள் டேக்ஸ் ரீபண்ட் பணம் நாற்பத்திரண்டாயிரத்து எழுநூறு ரூபாய். நீங்க 2450 ரூபாய்க்கு டி.டி எடுத்து அனுப்புங்க. எந்த பெயருக்கு செக் அனுப்ப வேண்டும் என்பதை ஒரு முறை கன்பர்ம் செய்யுங்கள். என்றெல்லாம் கதை விடும். என்னடா இது கூப்பிட்டு கூப்பிட்டு கவர்மெண்ட் காசு குடுக்குது என நினைத்தால் நீங்கள் காலி.

வெளிநாட்டுல வேலை வேணுமா என கத்தரிக்காய் மாதிரி கூவிக் கூவி விற்கும் ரகம் ரொம்ப ஆபத்து. துபாய், பஹ்ரைன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களின் சமீப கால கூக்குரல் மலேஷியா. ஏதோ ஒரு பெரிய ஆயில் கம்பெனி பெயரில் இந்த வேலை ஏலம் நடக்கும். நீங்கள் பணத்தை ஆன்லைனில் அனுப்பிக் கொடுக்க வேண்டும். அப்பாடா, இப்போதான் தெய்வம் கண்ணைத் தொறந்திடுச்சு என மொத்தத்தையும் அடகு வெச்சு பணம் கட்டினீங்கன்னா அவ்ளோ தான். உஷாரா கவுன்சிலேட், கம்பெனி என எல்லா இடத்துலயும் தீர விசாரிச்சீங்கன்னா நீங்க சமத்து !

ஏமாற்று என்பது மூட்டைப் பூச்சி போல, ஒண்ணை நசுக்கினா எங்கிருந்தோ ஒன்பது வந்து சேரும். எனவே கவனமாய் இருக்க வேண்டியது நம்ம பொறுப்பு. இவற்றை நினைவில் கொள்ளுங்கள்.

1. திடீர் பணம், புகழ் போன்றவை வருகிறது எனும் திட்டங்கள், அழைப்புகள் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருங்கள். ஒரே நாளில் மன்னனாக ஆசைப்படும் போது அதிக கவனம் அவசியம்.

2. “உடனே” என உங்களை அவசரப்படுத்தும் எதையும் உதாசீனப் படுத்தத் தயங்க வேண்டாம்.

3. இணையத்தில் உங்கள் தகவல்கள் எதையும் கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் தளம் பாதுகாப்பானது எனும் சிம்பல் இருந்தால் மட்டுமே கொடுங்கள்.

4. “முன் பணம்” கொடுக்க வேண்டியவற்றை ரொம்பவே அலசி ஆராயுங்கள். பெரும்பாலும் கம்பி நீட்டி விடும் காரியமாகத் தான் இருக்கும்.

5. எந்த விஷயத்தையும் அனுபவப்பட்ட நபர்களிடம் விவாதிக்க தயங்காதீர்கள்.

6. இணையம் சார்ந்த சமாச்சாரங்களெனில் அந்த தளம் எங்கிருந்து இயங்குகிறது, கூகிள் தேடலில் அந்த தளம் லிஸ்ட் ஆகிறதா, என்பதையெல்லாம் கண்டறியுங்கள். பொதுவான மின்னஞ்சல்களான யாகூ, கூகிள், ஜிமெயில் போன்றவை அல்வா பார்ட்டிகள் பயன்படுத்துவது !

7. சஞ்சலம் தான் முதல் எதிரி. “ஒருவேளை உண்மையாய் இருந்தால் செம பணமாச்சே….” என ஒரு வினாடி சஞ்சலப்பட்டால் காரியம் கெட்டு விடும்.

8. உங்கள் கிரெடிட்கார்ட், வங்கி போன்றவற்றின் எண்களை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். கிரடிட் கார்ட் தொலைந்து போனால் உடனடியாக கஸ்டமர் சர்வீஸுக்குப் போன் செய்து கார்ட்டை பிளாக் செய்யலாம். அதை யாரும் பின்னர் பயன்படுத்த முடியாது.

9. ஒரு மின்னஞ்சல் கணக்கை தனியாக வைத்திருங்கள். அதை வைத்தே உங்கள் முக்கியமான தகவல் பரிமாற்றங்கள் செய்யுங்கள். ஆன்லைனில் ஏதாவது பத்திரிகை, குரூப், பிளாக் போன்றவற்றுக்கு வேறு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்.

10. ஆன்லைன் குலுக்கல்கள், போட்டிகள் போன்றவற்றிலெல்லாம் கலந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. உங்களை சிங்கப்பூருக்கு அனுப்புகிறேன் என ஆசைகாட்டுபவற்றை நிராகரியுங்கள்.

11. உங்கள் வங்கிக் கணக்கு எண், செக் புக், ஸ்டேட்மெண்ட், பணம் எடுத்த ரசீதுகள், கட்டிய ரசீதுகள், இது போன்ற அத்தனையும் ஒரு இடத்தில் பத்திரமாக வைத்திருங்கள். தேவை தீர்ந்ததும் கிழித்து விடுங்கள்.

12. ஏடிஎம் கார்டையும், பின் நம்பரையும் இரண்டு வேறு வேறு இடங்களில் சேமித்து வையுங்கள். பாஸ்வேர்ட்கள் எல்லாம் கடினமானதாக, யூகிக்க முடியாததாக, நீங்கள் மறக்காததாக இருக்க வேண்டும்.

13. பணம் கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கினால் தயங்காமல் நல்ல ஆண்டி வைரஸ் மென்பொருளையும் அதில் நிறுவுங்கள்.

14. ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்து ஆன்லைனிலேயே படித்து ஆன்லைனிலேயே சர்டிபிகேட் தரும் பல போலி பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. உஷார். பட்டம் வேண்டுமென்றால் நல்ல பல்கலைக்கழகளை நாடுங்கள். குறுக்கு வழிப் பட்டத்தினால் பணம் தான் வேஸ்ட்.

15. ரொம்ப இளகிய மனசுக்காரராய் இருந்தாலும் இணையத்தில் “உதவி” பணம் அனுப்பும் முன் யோசியுங்கள். உண்மையான நேர்மையான நிறுவனங்களுக்கே கொடுங்கள். நேரில் கொடுப்பதை விட சிறப்பானது வேறில்லை.

விரல் நுனியில் விரசம்…

ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு டீன் ஏஜ் பையன்களின் “ரகசியப்” பொழுது போக்கு என்னவாக இருக்கும் ? புத்தகங்களுக்கிடையே மஞ்சள் பத்திரிகை வைத்துப் படிப்பது, முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு காலைக்காட்சிக்குச் செல்வது இவ்வளவு தான் ! ஆனால் இன்றைய டீன் ஏஜ் நிலமை எப்படி இருக்கிறது ? விரல்களில் ஐ-போன், வீடுகளில் லேப்டாப். ஒரு சில வினாடிகள் போதும் பிடித்தமான பலான படத்தைப் பார்க்க !

இணைய வசதி உள்ள பதின் வயதுப் பருவத்தினர் சராசரியாக வாரத்துக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் “விவகார” படங்களைப் பார்க்கிறார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருஷத்துக்கு 87 மணி நேரம். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது யூகேவிலுள்ள சைபர் செண்டினல் அமைப்பு.

வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள். இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது டேட்டிங், தாய்மை, விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.

இன்றைய நவீனம் டீன் ஏஜினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. யாருக்கும் தெரியாமல் எதை வேண்டுமானாலும் அவர்கள் பார்க்கமுடியும் என்பது ஒரு பெற்றோருக்கான ஒரு எச்சரிக்கை மணி என்கிறார் சைபர் செண்டினல் அமைப்பின் இயக்குனர் எல்லி புடில்.

இண்டெர்நெட் எல்லோருக்கும் ஒரு நண்பனாகவே ஆகிவிட்டிருக்கிறது. பிசிராந்தையார் கால நட்பெல்லாம் இல்லை, பெரும்பாலும் கூடா நட்பு தான். ஏதேனும் ரகசிய சந்தேகங்களை அம்மாவிடமோ, தோழிகளிடமோ பெண்கள் கேட்டது பழைய காலம். இப்போ என்ன கேட்கவேண்டுமென்றாலும் “கூகிளிடம் கேட்கிறார்கள். அதுவும் சில வினாடிகளில் இணைய உலகைச் சுற்றி வந்து ஞானப்பழத்தைக் கையில் தந்து விட்டுப் போய்விடுகிறது. சிலர் ஞானப்பழத்தை விடுத்து ஏவாள் கடித்த ஏதேன் பழத்தைத் தேடுகிறார்கள் என்பது தான் இதில் சிக்கலே.

லேப்டாப், டெஸ்க் டாப் என்றால் கூட பரவாயில்லை. பெற்றோர் ஓரளவு கண்காணிக்க முடியும். மொபைலில் பாலியல் சமாச்சாரங்கள் பரிமாறப்பட்டால் எப்படி தடுப்பது. இருபத்து நான்கு மணி நேரமும் வைத்த கண் வாங்காமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதும் இயலாத காரியம். இதிலிருக்கும் சிக்கலைப் பெற்றோர் பிள்ளைகளிடம் சொல்லவும் வேண்டும். இது தான் இன்றைய பெற்றோரின் மிகப்பெரிய சவால்

சராசரியாக ஒரு டீன் ஏஜ் பையனோ பொண்ணோ வாரம் இரண்டரை மணி நேரங்கள் யூ டியூபில் படம் பார்க்கிறார்களாம் ! யூ-டியூப் இப்போது வருகின்ற எல்லா ஹைடெக் மொபைலிலும் ஒரு தொடுதலிலேயே இயக்கக் கூடிய வகையில் வந்து விடுகிறது.

அதிக நேரம் பாலியல் படங்களைப் பார்ப்பது பல்வேறு விபரீதங்களுக்குள் பதின் வயதினரைக் கொண்டு போய் விடும் என்பதற்கு நிறைய உதாரணங்களும் உண்டு. 2003ல் ஜப்பானில் 17 வயதான ஒரு பையன் 30 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டான். “பாலியல் வெப் சைட்களைப் பார்த்தா என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அதனால தான் இப்படி ஆயிடுச்சு” என்றான் அவன் !

இண்டர்நெட் கஃபேக்களில் அமர்ந்து கொண்டு பெயரை ஸ்டைலிஷாக மாற்றிக் கொண்டு சேட்டிங் செய்வதே பழசாகிவிட்டது. எல்லாம் மொபைல் தான். அதிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மொபைல் ஆறாவது விரலாகவே ஆகிவிட்டது. ரயிலிலும், பஸ் ஸ்டாண்டிலும், நடக்கும் போதும் செல்போனைப் பார்த்துக் கொண்டே செல்லும் டீன் ஏஜ் தான் அதிகம்.

பள்ளி மாணவர்களிடையே செல்போனில் ஆபாச சமாச்சாரங்களை பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் வெகுவாக அதிகரித்திருக்கிறதாம். சுமார் 35 விழுக்காடு பேர் ஆபாச எஸ்.எம்.எஸ் கள், பாலியல் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை தினமும் பார்க்கிறார்கள், மற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. இங்கிலாந்திலுள்ள குழந்தைகள் நல அமைப்பு நடத்திய ஆராய்ச்சி சொல்கிறது.

இளம் கன்று பயமறியாது என்பது இவர்கள் விஷயத்தில் செம பொருத்தம். விளையப்போகும் விபரீதங்கள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் தங்களையோ நண்பர்களையோ ஆபாசமாய்ப் படமெடுத்து கேலியாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு முறை ஒருவருக்கு அனுப்பி விட்டால் அது எத்தனை இடங்களுக்குத் தாவும் என்பதைச் சொல்லவே முடியாது. எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய எம்மா ஜேன்.

இது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய தலைவலி. தவறுகளைத் திருத்தியாக வேண்டும், ஆனால் எப்படி என்பது தான் மிகப்பெரிய கேள்வி. கம்ப்யூட்டரை ஒளித்து வைத்தால் மொபைல் அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டுவிட்டது.

இதன் விளைவாக கர்ப்பமாகும் டீன் ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் படு வேகமாக அதிகரிக்கிறது. ஆண்டுக்கு அமெரிக்காவில் மட்டும் சுமார் ஏழரை இலட்சம் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாகிறார்கள் ! கடந்த பத்து ஆண்டுகளில் டீன் ஏஜினருக்கு எயிட்ஸ் நோய் வருவது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதுக்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் செக்ஸ் கல்வி சரியாக இல்லை, இந்த இண்டர்நெட், மொபைல் நெட் எல்லாம் கட்டுப்பாடாக இல்லை என கோஷங்கள் எழுகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து என்றில்லை. எல்லா நாடுகளிலும் இதே கதி தான். சீனாவில் ஆண்டு தோறும் நடக்கும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை 13 மில்லியன். அதிலும் 29 வயதுக்குக் குறைவான பெண்கள் 66 சதவீதம் !

பிரச்சினை இப்படி பூகாகரமாக எரிந்து கொண்டிருக்கையில் எரியும் தீயில் பீடி பற்றவைக்கிறது இங்கிலாந்து. செக்ஸ் பதின் வயதினருடைய உரிமை. அதை அவர்கள் கொண்டாடவேண்டும். தடுக்கக் கூடாது. என அங்கே ஒருசாரார் தீவிரமாக குஜால்ஸ் திட்டங்களுடன் களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் பிட் நோட்டீஸ் விட்டு டீன் ஏஜ் மக்களை செக்ஸ் வைத்துக் கொள்ள உற்சாகப் படுத்துகின்றனராம்.

“நெதர்லாந்தைப் பாருங்கள்” செக்ஸ் ரொம்பவே ஓப்பன். அதனால தான் அங்கே நோயும் இல்லை, எயிட்ஸும் இல்லை. மூடி மறைக்காதீங்க, அது தான் பிரச்சினையே. தினமும் “அது” நடந்தால் நோய் கூட வராது என சொல்லி நமது மிட் நைட் டிவி லேகிய வினியோகஸ்தர்களுக்கு கிலியையும் கொடுக்கின்றனர்.

ஏற்கனவே பிள்ளைகளைக் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இதுவும் நடந்துச்சுன்னா அவ்வளவு தான். “பெரியவங்களே சொல்லிட்டாங்க இது தேவையாம் வாங்கடான்னு” பசங்க கடமை நிறைவேற்றக் கிளம்பிடுவாங்க என பெற்றோர் கொந்தளித்துப் போய் இருக்கிறார்களாம். இருபத்து நாலு மணி நேரமும் குடிச்சுகிட்டே இருந்தா குடிக்கிறதை விட்டுடுவாங்கன்னு சொல்றமாதிரியில்லே இருக்கு இது அங்காய்க்கின்றனர் சிலர்.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடறமாதிரி இன்னொரு சமாச்சாரத்தையும் இங்கிலாந்து கொண்டு வந்திருக்கிறது. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் கேள்விப்பட்டிருப்பீங்க. சி-கார்ட் கேள்விப்பட்டிருக்கீங்களா ? சிம்பிளாகச் சொன்னால் சி-கார்ட் என்பது “காண்டம் கார்ட்” ன் சுருக்கம். இதைக் கொண்டு என்ன வாங்கலாம் என கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

டீன் ஏஜ் கர்ப்பத்தைப் பெருமளவு தடுக்க இது ஒரு பக்கா பிளான் என்கிறது அரசு. இந்த கார்டைக் கொண்டு கடை, தியேட்டர், ஆஸ்பிட்டல், ஹெல்த் செண்டர் என எங்கே போனாலும் தானியங்கி மெஷின்களில் காண்டம் எடுத்துக் கொள்ளலாம். அவசர உதவிக்கு சி-கார்ட் இருந்தா கர்ப்பம் எப்படிப்பா வரும் என்கிறது லாஜிக் படி.

சி-கார்ட் வேணும்ன்னா என்ன செய்ய வேண்டும் ? வெரி சிம்பிள். அரசு நடத்தும் செக்ஸ் கல்வி செமினார் ஒன்றில் கலந்து கொள்ளவேண்டும். அவ்வளவு தான். பன்னிரண்டு வயசான பையனாய் இருந்தாலும் பரவாயில்லை. அவனுக்கு ஒரு கார்ட் கிடைக்கும். அதில் அவனுடைய பெயரோ, தகவல்களோ எதுவும் அந்த கார்டில் இருக்காது !. இது டீன் ஏஜ் பிள்ளைகளைக் கெடுக்கும் செயல். அவர்களை செக்ஸில் ஈடுபட அரசே வழியனுப்பி வைக்கலாமா என்பது மத அமைப்புகள், மற்றும் பெற்றோரின் கவலை.

டீன் ஏஜ் சிக்கலைத் தடுக்க ஏன் அன்பைப் போதிக்க மாட்டேங்கறீங்க ? சி-கார்ட் தான் தேவையா ? ஆரோக்கியமான நட்பையோ, நேசத்தையோ போதித்து அதன் மூலம் டீன் ஏஜ் பசங்களை சரியான பாதையில் வழிநடத்த முடியாதா என்பது சட்டென நமது மனசில் ஓடும் கேள்வி. ஏனென்றால், என்னதான் சட்டம், ஒழுங்கு, திட்டம் எல்லாம் இருந்தாலும் மன மாற்றம் இல்லேன்னா என்ன பயன் ?

கடைசியாக ஒன்று !! டீன் ஏஜ் பருவத்தின் முதல் பாகத்திலேயே செக்ஸ் பழக்கம் ஆரம்பிப்பவர்கள் பிற்காலத்தில் நோய், மன அழுத்தல், போதைப் பழக்கம், ஆழமான குடும்ப உறவு இன்மை என பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள் என்கிறது அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக கட்டுரை ஒன்று.

மொபைலிலிருந்து செக்ஸ் சமாச்சாரங்களை அனுப்புவதை “செக்ஸ்டிங்” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது, சில்மிஷப் படங்கள் அனுப்புவது என சர்வமும் இதில் அடக்கம். அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கலாச்சாரம் படு வேகமாக வளர்கிறது. நிலமையை உணர்ந்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன மாநில அரசுகள். டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களில் கடந்த மாதம் முதல் செக்ஸ்டிங் தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் ஹூஸ்டனில் படிக்கிறார்கள்!

0

நியூசிலாந்திலும் இப்போது செக்ஸ்டிங் தான் பேச்சு. நாடு முழுவதும் இது பெரும் தலைவலியாய் உருவாகியிருக்கிறது என்கிறார் நியூசிலாந்தின் உள்துறை அமைச்சர் ஸ்டீவ் ஓ பிரையன். அரசு இதை சிம்பிளாக எடுத்துக் கொள்ளாது. செக்ஸ்டிங் குற்றம் செய்தால் ஜெயில் தான் என எச்சரிக்கிறார்.

o

அமெரிக்காவின் டாலாஸ் மாநிலத்திலுள்ள வாலாஸ் பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தான் 12 வயதான பொடியன். திடீரென அவனது செல்போன் வெட்கத்தில் சிணுங்கியது. ஆசிரியர் எதேர்ச்சையாய் எடுத்துப் பார்க்க வந்திருந்தது ஒரு சின்னப் பெண்ணின் நிர்வாணப் படம் !. அனுப்பியது அந்தப் பெண்ணே தான் ! திகைத்துப் போன ஆசிரியர், கையோடு பையனைக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்தார் ! சின்னப் பிள்ளைகளின் நிர்வாணப் படம் “சைல்ட் போர்னோகிராபி” குற்றத்தின் கீழ் வருகிறது !. விளையாட்டா நினைக்காதீங்க 10 வருஷம் உள்ளே இருக்க வேண்டி வரும் என எச்சரிக்கின்றனர் காவல் துறையினர்.

o

ஸ்காட்லாந்தில் செக்ஸ்டிங் வளர்ந்ததன் விளைவு, டீன் ஏஜ் கர்ப்பமும் அதிகரித்திருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த ஒரு எளிய வழி பள்ளிக்கூடங்களில் கருத்தடை மாத்திரைகள் வழங்குவது தான் என திருவாய் மொழிந்திருக்கிறது அரசு. இங்கிலாந்தின் பல பள்ளிக்கூடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாத்திரைகள் கிடைக்கின்றனவாம். அதைப் பின்பற்றி ஸ்காட்லாந்தும் இப்போது மாத்திரை வினியோகத்தில் இறங்கியிருக்கிறது. இலக்கியத்தில் மாத்திரைகள் படித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. !

o

சீனாவில் செக்ஸ்டிங் சிக்கல் மக்கள் தொகையைப் போலவே சட சடவென வளர்ந்து வருகிறதாம். மாணவர்களிடையே உள்ள இந்த பழக்கத்தை அழிக்க என்ன செய்யலாம் என கடுமையான யோசனைகளில் சீனா இறங்கியிருக்கிறது. செக்ஸ்டிங் குற்றத்துக்கு மாணவர்களுக்கு ஐந்து முதல் 10 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கவும் வழி செய்திருக்கிறது !

0

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க