எனது நூல் “அன்னை : வாழ்க்கை அழகானது”

அன்னை தெரசா பற்றிய எனது இரண்டாவது நூல் இது. முதல் நூல் சில ஆண்டுகளுக்கு முன் கவிதை நடையில் வெளிவந்தது. அந்த நூலிற்குக் கிடைத்த வரவேற்பில் மகிழ்ந்துபோன தோழமை பதிப்பாசிரியர் நண்பர் பூபதி அவர்கள், உரை நடை வடிவில் நூலை எழுதச் சொன்னார். அது தான் இப்போது வெளிவந்திருக்கிறது. இரண்டு முறை பார்த்தாலும் சலிக்காத நயாகரா நீர்வீழ்ச்சி போல, இரண்டு முறை எழுதும் போதும் சற்றும் சுவாரஸ்யம் குறையவில்லை அன்னையின் வாழ்க்கை. ஒவ்வோர் முறை நனையும் போதும் புதிதாய்த் தெரியும் மழையின் சாரலாய் மனதுக்குள் அன்னையின் மனித நேயம் குளிரடிக்கிறது.

எந்த ஒரு வரலாற்று மனிதரையும் அவர் சார்ந்த சமூக, அரசியல், மத பின்னணி இல்லாமல் முழுமையாய் அறிந்து விட முடியாது. அந்த வகையில் இந்த நூல் அன்னையின் பணிகளுக்கான காரணங்களையும் சேர்த்தே பதிவு செய்கிறது. உதாரணமாக, ஏன் கத்தோலிக்க மதம் அன்னையின் விண்ணப்பத்தை நிராகரித்தது எனும் கேள்விக்கு கத்தோலிக்க மதத்தின் மீதான பரிச்சயம் தேவையாகிறது. இந்த நூல் அத்தகைய நுட்பமான காரண காரியங்களைத் தவற விடாமல் பதிவு செய்திருக்கிறது என நம்புகிறேன்.

வாய்ப்பும், வசதியும் கிடைத்தால் படியுங்கள், படித்தால் உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

(படத்தை பெரிதாய்ப் பார்க்க படத்தின் மேல் கிளிக்கவும்… )

 சேவியர்

———–

பதிப்பகம் : தோழமை ( புத்தகக் கண்காட்சியில் # 432 )

        5டி, பொன்னம்பலம் சாலை, கே.கே நகர், சென்னை – 78

பக்கங்கள் 144

விலை : 70/-

பதிப்பாசிரியர் பூபதி : 9444302967

————————————————- 

சேவியரின் எழுத்து எல்லைகள் கடந்து விரிகிறது. இந்த மென்பொறியாளர் எழுதுவதற்கு ஆயிரம் இருக்கிறது. கிமு கதைகள் எழுதியவர், இயேசுவின் கதையைக் கவிதையாய்ச் சொன்னவர் இப்போது அன்னை தெரசா என்கிறார். ஆயிரம் உறவுகள் தாண்டி நாம் அன்னை மடியில் அடைக்கலம் தேடுகிறோம். மனிதம் புறக்கணித்த தொழுநோயாளர்களை, நிராகரிக்கப்பட்ட முதியோர்களை, குப்பைத் தொட்டியில் வீசப்பட்டக் குழந்தைகளை அன்பின் கரங்களில் அரவணைத்த்தது இந்த அன்னையின் மடி.

அன்னை தெரசா எனும் ஒற்றைச் சொல்லை மட்டுமே அறிந்த நமக்கு பேரன்பும் பெருமதிப்பும் கொண்ட அந்தப் பேருள்ளத்தின் வரலாற்றை அழகிய நடையில் சுவாசிக்கத் தந்திருக்கிறார் சேவியர். பாரத தேசம் தூக்கிப் போட்ட மனிதர்களை தூர தேசத்திலிருந்து வந்த ஒரு புண்ணியத் தாய் ஏந்திக் கொண்டார். கவித்துவமும் கவிதைத் தமிழும் கலந்த எழுத்து நடையை சேவியர் நடை என்றே சொல்லலாம். மனித நேயத்தின் பாதையில் மலர்களைத் தூவிய அன்னையின் பாதையில் கிடந்தவை முட்களே. இது அன்பின் வாழ்க்கை. கருணை கடந்து வந்த பாதை.

இந்த நூலில் கிடைக்கப் போவது வாசிப்பு அனுபவம் மட்டுமல்ல, ஓர் ஆத்ம தரிசனமும் கூட.

–     

பின் அட்டையில் – எழுத்தாளர், பத்திரிகையாளர் சுந்தரபுத்தன்