பைபிள் மாந்தர்கள் 11 (தினத்தந்தி) : பன்னிரண்டு சகோதரர்கள்

Joseph

யாக்கோபுக்கு  பன்னிரண்டு ஆண் பிள்ளைகள்.  அவர்களில் கடைக்குட்டிக்கு முந்தைய பையன் யோசேப்பு. அப்பாவுக்கு செல்லப் பிள்ளை. அதனால், யோசேப்பின் சகோதர்களெல்லாம் அவரிடம் கொஞ்சம் பொறாமை கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் யோசேப்புக்கு அவன் தந்தை ஒரு அழகிய வேலைப்பாடுள்ள ஒரு அங்கியைப் பரிசளித்தார். சகோதரர்களின் கோபம் இன்னும் அதிகமானது. யோசேப்புக்கு கனவுகளின் பயன்களைச் சொல்லும் திறமை வாய்த்திருந்தது. ஒரு நாள் அவன் தான் கண்ட கனவைப் பற்றி சகோதரர்களிடம் சொன்னார்.

“நாம எல்லாரும் வயலில் அறுத்த அரிகளைக் கட்டுகளாகக் கட்டிக் கொண்டிருந்தோம். அப்போது எனது அரிக்கட்டு எழும்பி நிற்க, உங்களுடைய அரிக்கட்டுகளெல்லாம் எனது அரிக்கட்டை விழுந்து தொழுதன”, என்றார். சகோதரர்களுடைய கோபம் பல மடங்கானது. “ஓ… நீ எங்களையெல்லாம் ஆட்சி செய்யலாம் என நினைக்கிறாயோ” என கர்ஜித்தனர்.

கொஞ்ச நாட்கள் கழிந்து யோசேப்பு வேறொரு கனவைக் கண்டான். அதையும் சகோதரர்களிடம் சொன்னான். “சூரியனும், நிலவும், பதினோரு நட்சத்திரங்களும் என்னை வணங்கக் கண்டேன்” என்றான். இப்போது தந்தை யாக்கோபுக்கே குழப்பம். “நானும், உன் அம்மாவும், எல்லா சகோதரர்களும் உன்னை வணங்க வேண்டுமோ ?” என கேட்டார்.

நாட்கள் நகர்ந்தன. யாக்கோபின் சகோதரர்களெல்லாம் வெகு தூரத்தில் ஆடு மேய்க்கச் சென்றிருந்தார்கள். தந்தை யோசேப்பை அழைத்தார்.  “உன் சகோதரர்களைப் போய் பார்த்து வா” என்றார். அவரும் போனார். அவர் வருவதை தூரத்திலிருந்து  கண்ட சகோதர்கள் எரிச்சலடைந்தார்கள். “இதோ வராண்டா கனவு மன்னன். இவனைக் கொன்று குழியில போடுவோம். அப்பா கிட்டே போய், ஏதோ காட்டு விலங்கு அடிச்சு கொன்னுடுச்சு என சொல்லுவோம்” என சதித் திட்டம் தீட்டினார்கள். சகோதரர்களில் மூத்தவனான ரூபன் மட்டும், “வேண்டாம், இவனை கொல்ல வேண்டாம். பாலை வனத்தில இருக்கும் ஆழ்குழியில போட்டுவிடுவோம்” என்று சொன்னார். எப்படியாச்சும் யோசேப்பைக் காப்பாற்ற வேண்டும் என்பது ரூபனின் நோக்கம்.

கொஞ்ச நேரத்தில் அந்த வழியாக ஒரு வணிகர் கூட்டம் வந்தது. சகோதரர்களில் ஒருவரான யூதா, “இவனை குழியில் தள்ளுவதை விட விற்று விடுவோம்” என சொல்லி 20 வெள்ளிக்காசுக்கு அவனை விற்றான். யோசேப்புக்கு அப்போது ஏறக்குறைய பதினேழு வயது. அப்போது ரூபன் அங்கே இல்லை. அவன் வந்தபோது யோசேப்பைக் காணோமே என அழுதான்.

எல்லோரும் வீடு திரும்பினர். சகோதரர்கள் யோசேப்பின் அங்கியில் ஒரு வெள்ளாட்டுக் கிடாயின் ரத்தத்தை தோய்த்து, “அப்பா,, இது யோசேப்போட அங்கியா பாருங்க, வழியில கிடந்துது” என்று சொல்லிக் கொடுத்தார்கள். தந்தை அதிர்ந்தார். தனது செல்ல மகன் இறந்து விட்டானே என கதறிப் புலம்பி துக்கம் அனுசரித்தார்.

யோசேப்பைக் கொண்டு போன வணிகர்களோ, அவனை எகிப்து நாட்டு பார்வோன் மன்னனின் மெய்க்காப்பாளனான போர்திபாவிடம் யோசேப்பை விற்றனர்..

யோசேப்பின் வாழ்க்கை இறைவனின் திட்டத்தை மிக அழகாகப் பிரதிபலிக்கிறது. இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கையை வகுத்திருக்கிறார். அதன் படி அவர்களை நடத்துகிறார். அதை நம்பி இறைவனில் நிலைத்திருப்பதே நமது அழைப்பு.

நமது பலவீனங்களில் பலத்தைப் புகுத்துவது இறைவனின் மகத்துவமான செயல் என்கிறது பைபிள். உடைபடாத முட்டை குஞ்சுக்கு சவப்பெட்டி ஆகிவிடும். உடையாத விதை மண்ணுக்குள் வீணாகும். உடையாத மனிதனும் அப்படியே. இறைவன் உடைபட்ட மனிதர்களையே தேடுகிறார். உடைபடுதல் என்பது உடல் பலவீனம் அல்ல. ‘என்னால் எதுவும் செய்ய முடியாது, இறைவனே என்னை வழிநடத்தட்டும்’ என இறைக்கு முன் அடிமையாவது.

யோசேப்பு தலைவனாக வேண்டும் என்பது கடவுளின் திட்டம். யோசேப்புக்கு வருகின்ற எல்லா கெட்ட விஷயங்களையும் நன்மையாக மாற்றுகிறார். அவரைக் கொல்ல நினைக்கையில், வியாபாரிகளை அனுப்புகிறார் ! வியாபாரிகளும் அவரை வாங்குகிறார்கள். வியாபாரிகள் அவரை எகிப்திற்குக் கொண்டு போகிறார்கள். அதுவும் நேரே அரண்மனையில் மெய்க்காப்பாளனிடம் விற்கின்றனர். அது தான் இறைவன் அவரைக் கொண்டு சேர்க்க விரும்பிய இடம்.

“”கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் – உரோமையர் 8 : 28″ என்கிறது பைபிள்.

மனித பார்வையில் நல்லவை நடந்திருந்தால் ஒருவேளை இறை சித்தம் நிறைவேறியிருக்காது. சகோதரர்கள் யோசேப்பு மீது கோபம் கொள்ளாமல் இருந்திருந்தால், விற்காமல் இருந்திருந்தால் யோசேப்பு ஒரு மேய்ப்பனாக வாழ்க்கையை முடித்திருக்கக் கூடும்.

சோதனைகள் நமக்கு வரும்போது, இது இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுவதன் பாகம் என உறுதியாய் நம்பி அவருடைய அன்பில் நிலைத்திருந்தால் எல்லாமே நன்மையாய் முடியும் என்பதேக் கதை நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s