பைபிள் மாந்தர்கள் 19 (தினத்தந்தி) : ஏகூத்

ehud

இஸ்ரயேல் மக்கள் பாவம் செய்வதும், கடவுள் அவர்களைத் தண்டிப்பதும், தண்டனை தாங்க முடியாமல் அவர்கள் கடவுளிடம் வேண்டுவதும், கடவுள் அவர்களை மீட்பதும், மீண்டும் இஸ்ரயேல் மக்கள் பாவம் செய்வதும்… என அவர்களுடைய வாழ்க்கை ஒரு வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டே இருந்த காலகட்டம்.

பாவம் செய்த மக்களை விட்டுக் கடவுள் சற்றே பின்வாங்கினார். அவ்வளவு தான், அதுவரை வெல்ல முடியாதவர்களாய் இருந்த இஸ்ரயேலர்கள் திடீரென பலமிழந்தார்கள். மோவாபிய மன்னன் எக்லோன் சட்டென வலிமையடைந்தான். அவன் தன்னுடன் அம்மோனியரையும், அமலேக்கியரையும் சேர்த்துக் கொண்டு இஸ்ரயேல் மக்களை போரில் வென்றான். இஸ்ரயேல் மக்கள் மோவாபிய மன்னனுக்கு அடிமையானார்கள்.

பதினெட்டு ஆண்டுகள் எக்லோனின் அடிமைத்தனத்தில் இஸ்ரயேலர்கள் கடும் துயர் அனுபவித்தார்கள். இப்போது அவர்களுக்கு மீண்டும் புத்தி வந்தது. ‘கடவுளே, தப்பு செய்து விட்டோம் எங்களைக் காப்பாற்றும்’ என கதறினார்கள். கடவுள் மனமிரங்கினார்.

இப்போது இஸ்ரயேல் மக்களை மீட்க கடவுள் தேர்ந்தெடுத்த நபர் ஏகூத் ! ஏகூத் இஸ்ரயேலர்களை  மீட்க வேண்டும் என தீர்மானித்தார்.. ஏகூத் இடதுகைப் பழக்கம் உடையவர். இஸ்ரயேல் மக்கள் மன்னன் எக்லோனுக்குக் கப்பம் கட்டி வந்தார்கள். அவர்கள் ஏகூத்திடம் கப்பம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். ஏகூத் ஒரு அடி நீளமுள்ள, இருபுறமும் கூர்மையான ஒரு வாளை எடுத்துக் கொண்டார். அதை வலது தொடையில் வைத்துக் கட்டிக் கொண்டு ஆடையால் மூடினார்.

மன்னன் கொழு கொழுவென இருந்தான். ஏகூத் கப்பத்தைக் கட்டி முடித்தபின் தன்னுடன் வந்தவர்களை வழியனுப்பி வைத்தார். பின் மன்னனிடம் திரும்பவும் சென்றார்.. “அரசே என்னிடம் ஒரு இரகசியச் செய்தி உள்ளது” ஏகூத் சொன்னார். உடனே மன்னர் “அமைதி” என்றார். சுற்றிலும் இருந்த பணியாளர்கள் எல்லோரும் அவரை விட்டுப் போனார்கள். அது குளிரூட்டப்பட்ட அறை.

மன்னன் ஆவலோடு எழுந்தான். ஏகூத் மின்னலென தனது இடது கையால் வலது தொடையிலிருந்த கத்தியை உருவினார். எக்லோனின் பருத்த தொந்தியில் சரக்கென குத்தினார். கத்தி மறு பக்கம் வெளியே வந்தது. கைப்பிடியும் வயிற்றுக்குள் சென்று விட்டது. அப்படிப்பட்ட ஒரு ஆக்ரோஷமான தாக்குதல்லை எதிர்பாராத மன்னன் நிலைகுலைந்து விழுந்தான்.

ஏகூத் ஏதும் நடவாதது போல வெளியே வந்தார். கதவை பூட்டினார். பின் குதிரையில் ஏறி விரைந்தார். எக்லோனின் வீரர்கள் மன்னனைக் காணாமல் அவருடைய அறைக்குச் சென்றார்கள். கதவு பூட்டியிருந்தது. சரி கழிவறைக்குப் போயிருப்பார் என அமைதி காத்தார்கள். வெகு நேரம் ஆளைக் காணாததால் மன்னனின் அறையைத் திறந்தார்கள். அங்கே மன்னன் உயிரிழந்த நிலையில் தரையில் அலங்கோலமாய்க் கிடந்தான்.

மன்னனைக் கொன்ற ஏகூத் இஸ்ரயேல் மக்களிடம் விரைந்து சென்றார். நடந்ததைக்கூறினார். ‘இதோ கடவுள் மோவாபியரான எதிரிகளை நமது கைகளில் ஒப்படைத்திருக்கிறார்” என அழைத்தார். மக்கள் அனைவரும் உற்சாகமடைந்தார்கள். மோவாபிய மன்னனின் ஆட்சி இஸ்ரயேலர்களால் முடித்து வைக்கப்பட்டது !

மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தார்கள். நீண்ட நெடிய எண்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவியது.

தமது வழிகளை விட்டு விலகிச் செல்லும் மக்களைக் கடவுள் கோபத்துடன் நிராகரிப்பதாக பழைய ஏற்பாட்டு நிகழ்வுகள் தொடர்ந்து சொல்கின்றன. மீண்டும் மக்கள் மனம் திரும்பி கடவுளிடம் வரும் போது அவர்களை மீட்க கடவுள்  ஒரு விடுதலையாளரை ஏற்படுத்துகிறார்.

மோவாபிய மன்னனிடம் அடிமையாய் இருந்த மக்கள் கடவுளை நோக்கிக் குரல் எழுப்ப 18 ஆண்டுகள் காத்திருந்தார்கள். அதன் பிறகு அபயக் குரல் எழுப்புகிறார்கள். 18 ஆண்டுகள் தங்களுடைய திறமைகளின் மேல் அவர்கள் நம்பிக்கை வைத்து முயற்சிகள் செய்து பார்த்திருக்கலாம். எல்லாவற்றிலும் தோல்வியே மிஞ்ச இனிமேல் நமக்கு கடவுள் மட்டுமே துணை என அவரிடம் வந்திருக்கலாம்.

“பாவம் செய்பவன் எல்லோரும் பாவத்துக்கு அடிமை” என்கிறார் இயேசு. இன்றும் பாவத்தில் விழுகின்ற மனிதன் உடனடியாக கடவுளை நோக்கி வேண்டுவதில்லை. “யாரும் செய்யாததா ? இது சின்ன பலவீனம் தான் பாவமில்லை, மனுஷ வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்” என ஏதோ ஒரு சாக்குப் போக்கின் பின்னால் அவன் இளைப்பாறுகிறான். எல்லாம் கை மீறி, மீட்பும் கைநழுவும் சூழல் உருவாகும் போது அவன் அபயக் குரல் எழுப்புகிறான். கடவுள் அதுவரை பொறுமையாய்க் காத்திருக்கிறார் !

பாவம் எனும் பள்ளத்தில் விழுபவர்களில் சிலர் அங்கேயே குடியிருக்கிறார்கள். சிலர் சில காலம் தங்கியிருக்கிறார்கள். சிலர் கரையேறிக் கரையேறி மீண்டும் குதிக்கிறார்கள். சிலர் மட்டுமே பதறிப் போய் கரையேறி சட்டென குளித்து தூய்மையாகிறார்கள். தூய்மை வாழ்வைத் தேடும் அத்தகைய பதட்டமே ஆன்மீகத்தின் ஆழங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

தவறாத மனிதன் இல்லை. தவறிவிட்டோம் என்பதை உணராதவன் மனிதனே இல்லை !

Leave a comment