சிரியா நாட்டின் படைத்தளபதி நாமான். வலிமை மிக்க வெற்றி வீரன். அரசர் அவரிடம் மிகவும் மரியாதை செலுத்தியிருந்தான். ஆனால் பாவம் ! அவன் ஒரு தொழுநோயாளி.
தொழுநோயாளிகள் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்த காலத்தில், அரசவையிலேயே நாமான் இருந்தான் என்றால் அவன் எந்த அளவுக்கு மன்னனின் மரியாதையைப் பெற்றிருந்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு முறை நாமான் இஸ்ரயேல் நாட்டில் தாக்குதல் நடத்தியபோது அங்கிருந்து ஒரு சிறுமியைக் கூட்டி வந்திருந்தார். அந்தச் சிறுமியைத் தனது மனைவிக்கு வேலைக்காரியாக்கி இருந்தார். ஒரு நாள் அந்தச் சிறுமி தலைவியிடம் சொன்னாள்.
“இஸ்ரயேல் நாட்டில் ஒரு இறைவாக்கினர் இருக்கிறார். அவரிடம் போனால் தலைவருக்கு சுகம் கிடைக்கும்”.
சிறுமியின் குரலில் இருந்த உறுதி தலைவிக்கு உற்சாகத்தைக் கொடுக்க, அவள் நாமானிடம் அதைச் சொன்னாள். நாமான் உடனே மன்னனிடம் சென்று விஷயத்தைச் சொன்னான். மன்னனும் மகிழ்ச்சியடைந்தான்.
“போயிட்டு வாங்க. நான் இஸ்ரயேல் மன்னனுக்கு மடல் தருகிறேன்” என்றான். கூடவே பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொன், வெள்ளி, பட்டாடைகள் போன்றவற்றையும், பணியாளர்களையும் கொடுத்து அனுப்பி வைத்தான்.
நாமான் இஸ்ரயேல் மன்னனிடம் சென்று மடலைக் கொடுத்தான். இஸ்ரயேல் மன்னன் மடலைப் பிரித்தான்.
“என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன், அவனுடைய தொழுநோயைச் சுகமாக்குங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. மன்னன் அதிர்ந்தான். தொழுநோயைக் குணப்படுத்துவதென்பது இயலாத காரியம் என்பது மன்னனுக்குத் தெரிந்தது. வேண்டுமென்றே சிரியா மன்னன் தன்னை வம்புக்கு இழுப்பதாய் நினைத்தான்.
தனது ஆடைகளைக் கிழித்தான்.
“நானென்ன கடவுளா ? உயிரைக் கொடுக்கவும், எடுக்கவும் என்னால முடியுமா ? சிரியா மன்னன் என்னோடு போரிட காரணம் தேடுகிறானா ?” என்று கோபத்தில் கத்தினான்.
இறைவாக்கினர் எலிசா இதைக் கேள்விப்பட்டார். மன்னனுக்கு ஆள் அனுப்பினார்.
“ஏன் ஆடைகளைக் கிழிக்கிறீர் ? அவனை என்னிடம் அனுப்புங்கள்” என்றார்.
மன்னன் நாமானை எலிசாவிடம் அனுப்பினார். குதிரைகள், தேர், செல்வங்கள் என சிரியாவின் படைத் தலைவர் கம்பீரமாக இறைவாக்கினர் எலிசாவின் வீட்டு வாசலின் முன்னால் நின்றார்.
எலிசா வெளியே வரவில்லை. அவரை வரவேற்கவில்லை. வாழ்த்து சொல்லவில்லை. உள்ளே இருந்துகொண்டு ஒரு ஆளை அனுப்பி
“நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால் உன் உடல் நலம் பெறும்” என்று சொல்லச் சொன்னார்.
நாமான் கடும் கோபமடைந்தார். “அவர் வெளியே வந்து, கடவுளைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்துக்கு மேலே கைகளை அசைத்து எனக்கு சுகம் கொடுப்பார் என நினைத்தேன். நான் சகதியாய்க் கிடக்கும் யோர்தானில் மூழ்க வேண்டுமாம். எங்க நாட்டில் ஓடும் அபானா, பர்பார் நதிகளெல்லாம் யோர்தானை விட ஆயிரம் மடங்கு நல்லது” என்று கோபத்துடன் கத்திவிட்டு திரும்பிச் செல்லத் தொடங்கினார்.
அப்போது அவருடைய வேலைக்காரர்கள் அவரிடம் சென்று “எம் தந்தையே” என பாசமாய் அழைத்துப் பேசினார்கள்.
“ஒருவேளை இறைவாக்கினர் கடுமையான ஒரு வேலையைச் செய்யச் சொல்லியிருந்தால் நீர் செய்திருப்பீர் அல்லவா. அதே போல இந்த எளிய செயலையும் செய்யுங்கள்” என்றார்கள்.
நாமான் அவர்கள் பேச்சுக்கு மரியாதை கொடுத்தான். யோர்தான் நதிக்குச் சென்றான். நதியில் மூழ்க ஆரம்பித்தான். ஒன்று..இரண்டு.. மூன்று….. ஏழாவது முறை மூழ்கி எழுந்தபோது அவன் கண்ணை அவனால் நம்பவே முடியவில்லை. அவனுடைய நோய் முழுமையாய் நீங்கி விட, சின்னப் பிள்ளையின் தோலைப் போல அவன் உடல் மாறியது.
உடனே எலிசாவிடம் ஓடி வந்தான். அவனுடைய கர்வம் எல்லாம் போயிருந்தது.
“இஸ்ரயேலைத் தவிர எங்கும் கடவுள் இல்லை என்பதை உறுதியாய் அறிந்து கொண்டேன். தயவு செய்து என் அன்பளிப்புகளை வாங்கிக் கொள்ளுங்கள்” என வேண்டிக் கொண்டான்.
எலிசாவோ எதையும் வாங்காமல் அவரை அனுப்பி வைத்தார். போகும் போது ,இஸ்ரேல் நாட்டின் மண்ணை அள்ளிக் கொண்டு போன நாமான் சொன்னார்,”இனிமேல் இஸ்ரயேலின் கடவுளே என் கடவுள். வேறு கடவுளை வழிபடமாட்டேன் !”
நாமானின் கதை சில படிப்பினைகளை நமக்குத் தருகிறது. எதிர்பார்ப்புகளின்றி அந்த அடிமைச் சிறுமியைப் போல பிறருக்கு உதவும் மனம் நமக்கு இருக்க வேண்டும்.
கர்வத்தைக் கழற்றி வைத்துவிட்டு ஆற்றில் இறங்கியபோது தான் நாமான் நலமடைந்தான். இறைவனின் அருளைப் பெற கர்வத்தைக் கழற்றுதல் அத்தியாவசியம்.
நலமடைந்தபின் நாமான் எந்தத் தயக்கமும் இன்றி கடவுளை மகிமைப்படுத்துகிறான். கடவுளின் பெயரை அறிக்கையிட தயங்காத மனநிலை வேண்டும்.
இந்த பாடங்களை நாமானின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்.
ஃ