கைபேசி: அதிரவைக்கும் இன்னோர் ஆராய்ச்சி !!!

கைப்பேசிகளைக் குறித்து நாள்தோறும் வரும் ஆராய்ச்சி முடிவுகள் எமனை எடுத்து இடுப்பில் சொருகி நடக்கிறோமோ எனும் பயத்தை தருவித்துக் கொண்டிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் கைப்பேசியை உபயோகிப்பது அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு உணர்வு, மனநிலை ரீதியான பல இன்னல்களை உருவாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 13,000 பெண்களை உட்படுத்தி நடத்தப்பட்ட இந்த சோதனை, கைப்பேசியை தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் உபயோகித்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்னடத்தை இல்லாமலும், மற்ற குழந்தைகளோடு உறவாடுவதிலும், நட்பு கொள்வதிலும், இணைந்து வாழ்வதிலும் பல உறவு மற்றும் உணர்வு வகையிலான சிக்கல்களுக்கு ஆளாகும் எனவும் அதிர்ச்சி முடிவுகளை அள்ளி வீசியிருக்கிறது.

தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அளவுக்கு அதிகமாக என்றல்ல அவ்வப்போது கைப்பேசியை உபயோகித்தாலே இத்தகைய இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறது இந்த ஆராய்ச்சி.

ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கைபேசிகளைத் தரவே கூடாது என அழுத்தம் திருத்தமாய் சொல்லி கைப்பேசிகள் குழந்தைகளிடம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரித்திருக்கிறது.

ரஷ்யாவின் கதிரியக்க ஆராய்ச்சிக் குழுவினரின் அறிக்கை ஒன்று, குழந்தைகள் கையில் கைப்பேசியைக் கொடுப்பதும் மது புட்டியோ, சிகரெட்டோ கொடுப்பதும் ஒன்றே என கூறி அலற வைக்கிறது.

யூ.கே நலவாழ்வு பாதுகாப்புக் குழு தாய்மார்களின் கைப்பேசி பயன்பாடு குறித்த ஆராய்ச்சி முடிவு பல எச்சரிக்கை மணிகளை அடித்திருப்பதாகவும், கைப்பேசிப் பயன்பாட்டை மறு ஆய்வு செய்வதற்குரிய ஆராய்ச்சியாக உருவெடுத்திருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.

குழந்தைகள் கைப்பேசி பயன்படுத்தாதிருப்பது மிகவும் நல்லது என்றும், கைப்பேசியை அதிகம் பயன்படுத்துவது ஆபத்தானது என்றும் பல ஆராய்ச்சிகள் தங்கள் முடிவுகளை ஏற்கனவே வெளியிட்டிருப்பதையும் அது சுட்டிக் காட்டுகிறது.

ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கைப்பேசி பயன்படுத்துவது அவர்களுடைய நடவடிக்கைகளில் பல்வேறு விரும்பத்தகாத மாற்றங்களைக் கொண்டு வரும் என்றும், அதற்குக் காரணம் கதிரியக்கமே என்றும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

கைப்பேசி உபயோகிப்பதனால் எந்த கெடுதலும் இல்லை என்று சொல்லி வந்த கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் லீகா தற்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு கைப்பேசிகளுக்கும், உணர்வு ரீதியிலான சிக்கல்களுக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என தெரிவிக்கிறார். அவரும் அவருடன் பணியாற்றிய இன்னும் மூன்று பேராசிரியர்களும் இந்த முடிவையே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

சில மருத்துவர்களும், உளவியலார்களும் இந்த ஆராய்ச்சி முடிவை வேறோர் கண்ணோட்டத்தில் அணுகுகின்றனர்.

அதாவது, தாயின் கவனத்தையும், கண்காணிப்பையும் கருவிலிருக்கும் குழந்தை எதிர்பார்க்கிறது. அந்த கவனிப்பை கைப்பேசியை அதிகம் பயன்படுத்தும் தாய்மாரால் தர முடிவதில்லை. எனவே அத்தகைய சூழலில் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்த பின் நன்னடத்தை இல்லாமல் இருக்கும் என்கின்றனர்.

கைப்பேசி என்றல்ல வேறெந்த ஒரு செயலினால் தாயின் கவனம் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கிடைக்காமல் போனாலும் விளைவு இதுவே என்பதும், இது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதும் அவர்களின் வாதம்.

விளக்கங்கள் பல்வேறு சொல்லப்பட்டாலும் கைப்பேசியை பயன்படுத்துவதனால் என்ன நேருமோ எனும் அச்சம் இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கைப்பேசி கதிர்கள் ஒரு சில செண்டீமீட்டர்கள் தூரம் மட்டுமே உடலில் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் எனும் சிந்தனை பொய்யாக்கப்பட்டு கருவிலிருக்கும் குழந்தை கூட இதனால் பாதிப்படையும் என்பது ஒட்டு மொத்த மனுக்குலத்துக்கே கவலையளிக்கும் செய்தியாகும்.

நவீனம் என கருதப்பட்டு இன்றைய இன்றியமையாய தேவையாகிப் போன கைப்பேசியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதே சாலச் சிறந்தது என்பதை இந்த ஆராய்ச்சியும் இன்னோர் முறை அழுத்தம் திருத்தமாய் சொல்லிச் சென்றிருக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s