இது தான்பா கொடுக்கிற தெய்வம் …

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் எனும் வார்த்தைக்கு இதுவரை பெரிய அளவிலான விளக்கம் கிடைக்கமால் இருந்தது.  இன்று தான் தெரிய வந்தது.

ஓரமாய் அமர்ந்து ஷூ துடைக்கும் ஒரு சிறுவன், ஐயா ஒரு பழைய சோடி ஷூ தருவீங்களா என பெர்மிங்காம் சாக்கர் வீரர் ஓலிவர் காப்பாவிடம் கேட்க, “சாரி.. அதெல்லாம் தர முடியாது. இந்த காரை எடுத்துக்கோ” என புத்தம் புதிய மெர்சிடீஸ் ஸ்போர்ட்ஸ் காரை இனாமாய் கொடுத்திருக்கிறார்.

சார் நல்லா ஜோக் அடிக்கிறாரு என நினைத்த சிறுவன், “ஷூவுக்கு லேஸ் கட்ட தான் என்னால முடியும், காருக்கெல்லாம் இன்சூரன்ஸ் கட்ட என்னால முடியாது சார் “. என பதிலுக்கு ஜோக் அடிக்க, ஒரு வருடத்திற்கான இன்ஷூரன்ஸையும் தானே கட்டி சிறுவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் அவர்.

இத்தனை விலையுயர்ந்த ஒரு காரை ஒரு ஏழை சிறுவனுக்கு இனாமாய் வழங்கிய அவருடைய விசால மனதை எண்ணி எண்ணி வியக்கின்றனர் விஷயம் கேள்விப்பட்டோர்.

கூரையைப் பிய்த்துக் கொடுப்பது பழைய கதை; காரையே பிடித்துக் கொடுப்பது தான் புதிய கதை

சே… நாம அவர் கிட்டே பழைய ஷூ கேட்காம போயிட்டோமே என வருத்தப்படுகின்றனர் அவருடைய ரசிகர்கள் 🙂

நடுங்க வைத்த நிமிடங்கள்.

ஆப்பிரிக்கன் சஃபாரி போயிட்டிருக்கீங்க, திடீர்ன்னு ஒரு பெரிய யானை உங்க காருக்கு முன்னாடி வந்து நின்னா எப்படி இருக்கும். அப்படியே அது ஜூராசிக் பார்க் டைனோசர் மாதிரி உத்துப் பாத்து உறுமினா ?

அப்படி ஒரு அனுபவத்தைச் சந்தித்த அண்ணன் தங்கை தான் இவங்க. ஸ்விஸ் பார்ட்டிங்க இந்த பெல்ட்ரேம் & ஆஞ்சலா. அவ்ளோ தான் இந்த ஓல்ஸ்வேகன் கார் அப்படியே அப்பளமாகப் போகுது, அந்த அப்பளத்துக்குள்ளே நாம இரண்டு பேருமே பர்கர் பன்னாகப் போகிறோம் என்று நடுங்கித் தான் போனார்கள்.

எஞ்சினை ஆஃப் செய்து விட்டு அமைதியாக மரணமா, இல்லை மறு ஜென்மமா என ஆறு நிமிடங்கள் திக் திக் என இருந்தவர்களை விட்டு விட்டு அமைதியாகச் சென்று விட்டதாம் அந்த ஆஜானுபாகுவான யானை. மெதுவாக ஒரு அழுத்து அழுத்தியதோடு சரி.

கேரள யானைங்க மட்டும் தான் போட்டுப் புரட்டிப் புரட்டி எடுக்குமோ ?