பெற்றோரின் கவனத்துக்கு…

வாகனங்கள் ஓடும் சாலைகளின் அருகே வசிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை, ஆஸ்த்மா மற்றும் அது தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என ஜெர்மன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலக அளவில் வாகனங்களின் பயன்பாடும், எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது சுற்றுப் புறச் சூழலை பெருமளவில் மாசுபடுத்தியிருக்கிறது. பிரிட்டனின் முப்பத்து ஐந்து விழுக்காடு மக்கள் ஆஸ்த்மா தொடர்பான ஏதோ ஒரு நோயின் பாதிப்பில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்கள் அதிகரித்திருப்பதும், அதன் நச்சுப் புகையும், அதனால் உருவாகும் புழுதி மண்டலமும் குழந்தைகளின் உடல்நலத்தை பெருமளவில் பாதிக்கிறது என்பது புதிய தளமாகும்.

இதற்கு முன் புழுதிகளோடு விளையாடாமல் வீடுகளில் அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகள் சரியான நோய் எதிர்ப்புச் சக்தி இன்றி அல்லலுறும் என ஆய்வுகள் சேதி தெரிவித்திருந்தன. இப்போது வாகனப் புழுதியில் விளையாடுவது ஆபத்தானது எனும் அச்சமூட்டும் ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.

பல்வேறு வயது வரம்புகளில் சுமார் ஆறாயிரம் பேரை பல ஆண்டுகளாக ஆய்வு செய்ததில் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

வாழும் இடம், சூழல், வாழ்க்கைத் தரம், பெற்றோரின் உடல்நலம், மருத்துவ வசதிகள், காலநிலை என பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு நிகழ்த்தப்பட்ட விரிவான ஆய்வு இது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆய்வில் பணிபுரிந்த “மருத்துவர் ஹெயின்ரிச்” குறிப்பிடுகையில், சாலைகளின் அருகே வசிக்கும் குடும்பங்களுக்கு மாசு மட்டுமன்றி வாகனப் புகையில் உள்ள விஷத் தன்மை கூட மிகவும் ஊறு விளைவிக்கக் கூடியது என தெரிவித்தார்.

ஆனால் புழுதி, விலங்குகள், தூசு என குழந்தைகள் கலந்து பழகும் போது தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றும், அப்படி வளராமல் மிகவும் தூய்மையிலேயே வளரும் குழந்தைகளுக்கு “ஹைஜின் ஹைப்பாத்திசிஸ்”  எனும் அலர்ஜி நோய்கள் உருவாகும் எனவும், மேலை நாடுகளில் இது மிகவும் அதிகம் எனவும் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விரிந்து பரந்த வயல்வெளிகள், குளங்கள், ஆறுகள், அடர்ந்த மரங்கள் என உன்னதமான வாழ்க்கைச் சூழல் நகரவாசிகளுக்கு வாய்ப்பதில்லை. அத்தகைய சூழலில் குறைந்த பட்சம் வாகன மாசு தாக்காதபடி குழந்தைகளைக் காத்துக் கொள்தல் அவசியம் என்பதே இந்த ஆய்வின் மையமாகும்

எனது நூல் : கிறிஸ்தவம் – ஒரு முழுமையான வரலாறு

கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு.

வரலாறுகள் சிலிர்ப்பூட்டுபவை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நமக்கு முன்னால் அலட்சியமாய் விரிக்கப்பட்டிருக்கும் காலத்தின் அகோரமான சுவடுகளையும், வலிகளையும் நம் முன்னால் விவரிப்பவையும் கூட.

மதமும் அதன் கோட்பாடுகளும் வலுவாக ஊன்றப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் முளைத்தெழும் எந்த ஒரு புதிய மதமும் நெருஞ்சிகளுக்கிடையே நெருக்கப்படும் கீரைச் செடிபோல கிழிபட்டே ஆகவேண்டும். நிராகரிப்புகளும், அவமானங்களும், துரத்தல்களும், நசுக்கல்களும் மட்டுமே பந்தி விரிக்கப்பட்டிருக்கும் ஒரு பாசறை அது.

ஆழமான வேர்களைக் கொண்டிராத கொள்கைகளும் கோட்பாடுகளும் வலுவிழந்து எதிர்ப்புச் சக்கரங்களில் எழமுடியாதபடி நறுக்கப்படுவதன் காரணமும் இது தான். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு கோட்பாடோ, மதமோ, இயக்கமோ பல நூற்றாண்டுகள் போராட வேண்டியிருக்கும் என்பதன் சாட்சியாய் நிற்கிறது கிறிஸ்தவ வரலாறு.

எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்கும் உரித்தான பரபரப்பும், வியப்பும், வலியும், பிரமிப்பும் கிறிஸ்தவ வரலாற்றுக்கும் உண்டு. கிறிஸ்தவம் கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்க்கையில் எழும் உணர்வுகளுக்கு என்ன பெயடுவதென்று தெரியவில்லை.

கிறிஸ்தவம் எல்லா மதங்களுக்கும் உள்ள பலத்தோடும், பலவீனத்தோடும் தான் பரவி வந்திருக்கிறது என்பதை கிறிஸ்தவ வரலாற்றின் குருதிக் கறை படிந்த பக்கங்கள் விளக்குகின்றன. பிறரால் தாக்கப்பட்ட கிறிஸ்தவம் வெளித் தாக்குதல் நின்றபின் உள்ளுக்குள் போர்களைத் தீவிரப்படுத்திய நிகழ்வுகள் ஏராளம்.

யார் பெரியவன், எது சரியானது எனும் போராட்டங்களின் பிள்ளைகளாக இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கும் கிறிஸ்தவக் குழுக்களில் எது சரியானது ? எல்லாம் சரியானதெனில் ஏன் இத்தனை பிரிவுகள் ? கிறிஸ்தவம் புனிதமா ? அவமானமா ? என வரலாறு சொல்லும் விஷயங்களின் சுவாரஸ்யம் நீள்கிறது.

கிறிஸ்தவ வரலாற்று நூல்களை சிறு வயது முதலே படித்து வந்த அனுபவம் இந்த நூலை சரியான கோணத்தில் எழுத எனக்கு துணை செய்திருக்கிறது. எந்தப் பிரிவு கிறிஸ்தவத்தையும் சாராமல் உண்மை நிலையை அதன் புனிதக் கூறுகளோடும், புழுதிக் கூறுகளோடும் , அமைதி வாசனையோடும், போரின் நெடியோடும் உண்மையை உள்ளபடி சொன்ன திருப்தி இருக்கிறது.

கிறிஸ்தவ வரலாற்றை முழுமையாய் சொல்லவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களேனும் எழுதவேண்டும். குறைந்த பட்சம் ஐநூறு பக்கங்களேனும் தேவைப்படும். ஆனால் அந்த வரலாற்றை அதன் முக்கியத்துவம் சிதையாமல், புள்ளி விவரங்களால் போரடிக்காமல், வெறும் 210 பக்கங்களுக்குள் அடக்கி விட முடிந்ததையே முதல் வெற்றி என நினைத்துக் கொள்கிறேன்.

நண்பர்கள் பென் கிருபா, சுதாகர் மற்றும் சில இறையியல் வல்லுனர்களின் உதவி இல்லாவிட்டால் இந்த நூல் முழுமையடைந்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்த நூலினை வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகம் இந்த நூலுக்காக நிறைய உழைத்திருக்கிறது. இதிலுள்ள வரலாற்றுத் தகவல்களை சரிபார்த்ததுடன் இந்த நூலிலுள்ள விவிலியப் பெயர்களை வெகுஜன வாசிப்புக்குத் தக்க வகையில் ஆங்கிலப் படுத்தி பெருமை கிழக்குப் பதிப்பகத்துக்கே சாரும். நூலை வெளியிட்டமைக்காகவும், நூலை சிறப்புற வடிவமைத்தமைக்காகவும் கிழக்குப் பதிப்பகத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ 100

உலகக் கட்டிட வரலாற்றில் முதன் முறையாக….

சுழலும் கட்டிடம்

 

 

 

 

 

 

 

“அசையாம நல்ல ஸ்டாங்கா இருக்கணும்பா கட்டிடம் “ என்பது தான் இதுவரை நாம் கேட்ட வாசகம். இந்த வாசகத்தை அர்த்தமிழக்கச் செய்யப்போகிறது துபாயில் உருவாக இருக்கும் புதிய கட்டிடம் ஒன்று.

எண்பது மாடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தின் ஒவ்வோர் மாடியும் நிலையாக இல்லாமல் சுற்றக் கூடிய வகையில் அமையப் போகிறதாம்.

இந்த சிந்தனையின் பின்னால் இருக்கும் ரொட்டேட்டிங் டவர் டெக்னாலஜி கம்பெனியின் நிறுவனர் டேவிட் ஃபிஷர் , வாழ்க்கையே நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கிறது, கட்டிடம் மட்டும் நிலையாய் இருப்பது ஏன் என தத்துவக் கிச்சுக் கிச்சையும் மூட்டுகிறார்.

வலிமையான காங்கிரீட் மையத்திலிருந்து இந்த மாடிகள் சுழலுமாம். ஒரு மாடியை நீங்கள் வாங்கினால் அந்த மாடியை உங்கள் விருப்பம் போல அசைத்துக் கொள்ளலாமாம்.

வெயில் முகத்தில் அடிக்கிறது என்றால் மாடியை கொஞ்சம் அந்தப் பக்கமாகத் திருப்பிக் கொள்ளலாம். ஏதோ சத்தம் கேட்கிறதே என்று நாம் ஓடத் தேவையில்லை, வீட்டை கொஞ்சம் சுற்றவிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த கட்டிடத்துக்குத் தேவையான முழு மின் தேவையையும் அந்தக் கட்டிடமே சூரிய ஒளியிலிருந்து தயாரித்துக் கொள்ளும் வகையில் இந்த கட்டிடம் தயாராகப் போகிறது என்பது சுவாரஸ்யச் செய்தி.

நீச்சல் குளம், தோட்டம் என வசதிகள் இருப்பதுடன் காரையும் தங்கள் மாடிக்குப் பக்கத்திலேயே கொண்டு பார்க் செய்யவும் வசதி செய்யப்படுமாம்.

ஆனால், வீட்டுக்குத் தேவையான தண்ணீர் பைப் களை எப்படி மாட்டுவது என்பதில் தான் பெரிய சிக்கலே இருக்கிறதாம். ஆனாலும் அதற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன என்கிறார்கள்.

355 மில்லியன் பவுண்ட் செலவில் இந்தக் கட்டிடம் கட்டப்பட இருக்கிறதாம். அமெரிக்காவின் 9/11 புகழ் இரட்டைக் கோபுர தலைமைப் பொறியாளர் லெஸ்லி ராபட்சன் தான் இந்த திட்டத்தின் தொழில்நுட்ப வழிகாட்டியாம்.

கட்டிடம் எல்லா பெரிய கட்டிடங்களையும் போல பாதுகாப்பாய் இருக்கும் !  கவலையே வேண்டாம் என்கிறார் டேவிட் ஃபிஷர். வாங்க விருப்பமுடையோர் அணுகலாமாம். !

தலையணை விளையாட்டு !

ஒருபுறம் கணினி நிறுவனங்களின் கண்ணாடி மாளிகைகளும், கரன்சிகளும், இளைஞர்களின் வாழ்க்கை முறையும் துறை சாராத நபர்களிடையே ஒருவித வியப்பு கலந்த பொறாமையை விளைவித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் கணினி நிறுவன ஊழியர்கள், குறிப்பாக இளைஞர்கள் உண்மையான வாழ்வின் சுவாரஸ்யங்களை இழந்து கணினி அடிமைகளாக மாறி மன அழுத்தத்தில் உழல்கின்றனர்.

வாழ்வின் மீதான பிடிப்பு தளர்தலும், சட்டென உணர்ச்சி வசப்பட்டு வாழ்வின் மீது வெறுப்பு கொள்வதும், சமூகப் பிணைப்பு குடும்ப உறவு பிணைப்பு இல்லாமலும் பல தரப்பிலான இளைஞர்களின் கூடாரமாகி விட்டது கணினி துறை.

பெங்களூரில் மட்டும் தினமும் 6 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்கிறது அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரம் ஒன்று. இவற்றில் பெரும்பாலானோர் 23 வயதுமுதல் 35 வயதுக்கு உட்பட்டோராம்!

கணினி நிறுவனங்கள் இத்தகைய மன அழுத்தங்களைத் தவிர்க்க (மென்பொறியாளரை மிரட்டும் மன அழுத்தம்), பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக குழுவாக வெளியே செல்தல், நிகழ்ச்சிகள் நடத்துதல், சுற்றுலா செல்தல், நகைச்சுவை மேடைகள் அமைத்தல், போட்டிகள் நடத்துதல் இன்ன பிற என இந்த பட்டியல் நீள்கிறது.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு மேலை நாடுகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று தலையணை விளையாடு. இந்த விளையாட்டில் தலையணைகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும், விரட்டுவதும் என மக்கள் சட்டென உற்சாகமாகி விடுகின்றனராம்.

அப்படி ஒரு இடத்தில் நடந்த மன அழுத்தம் விலக்குதல் நிகழ்வின் படங்கள் தான் இவை…

 

ஒரு நாள் உறவு : ஆண்கள் / பெண்கள் பார்வையில்.

“ஒரு நாள்” மட்டும் கொஞ்சிக் குலாவி உடலுறவு கொள்ளும் குறுகிய கால உறவுகளைக் குறித்து ஆண்களும் பெண்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த ஆராய்ச்சியில் இறங்கியது டர்காம் பல்கலைக்கழகம்.

இந்த அனுபவத்தைப் பெற்ற பெண்கள் பெரும்பாலும் குற்ற உணர்வில் உழல்வதாகவு

ம், இனிமேல் இத்தகைய உறவுகள் வேண்டாம் என மறு நாள் காலையில் (தான்) அவர்கள் நினைப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஆண்களில் 23 விழுக்காட்டினரும் பெண்களில் 58 விழுக்காட்டினரும் இந்த அனுபவத்தை (எல்லாம் முடிந்தபின்) சீச்..சீ என்றிருக்கின்றனர்.

1743 பேரைக் கொண்டு விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பெண்களின் மன நிலையையும், ஆண்களின் மனநிலையையும் பட்டியலிட்டிருக்கிறது.

அதாவது பெண்கள் நீண்டகால உறவுப் பிணைப்பையும், கரிசனை, அன்பு, கவனிப்பு கலந்த துணையையும் விரும்புவதாகவும், ஆண்கள் “அழகான” பெண்ணை விரும்புவதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ( இதுக்கு ஆராய்ச்சி வேற தேவையா என முணுமுணுப்பவர்கள் இதன் வழிகாட்டி ஆனி கேம்பெல்லை தொடர்பு கொள்ளவும்)

தாங்கள் பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும், நினைத்ததை விட மோசமானதாகவே இந்த அனுபவம் இருப்பதாகவும் பல பெண்கள் வருத்தம் தெரிவித்திருக்கையில், தனக்குக் கிடைத்த துணை அழகாய் இல்லை என்றே பல ஆண்கள் வருத்தம் தெரிவித்தார்களாம்.

தேவையற்ற ஆராய்ச்சிகளுக்காக பணத்தை விரயமாக்குவது மேலைநாட்டினருக்கு ஒரு பொழுதுபோக்காகவே ஆகிவிட்டது. இந்த ஆராய்ச்சிக்குச் செலவான பணத்தை ஹெய்திக்கு அனுப்பி அங்குள்ள ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஒரு நேர உணவை கொடுத்திருக்கலாம். புண்ணியமாவது கிடைத்திருக்கும்.

வரும் வழியில் ….

( முன் குறிப்பு : படத்துக்கும் சொல்லப் போகும் சமாச்சாரத்துக்கும் சம்பந்தம் இல்லை )

ஒன்று

காலையில் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தேன். வேளச்சேரி மெயின் ரோட்டில் நுழைந்த மூடிய காருக்குள் சட்டென நுழைந்தது துர்நாற்றம். பார்த்தால் எனக்கு முன்னால் கேரள யானை போல பின் பாகத்தை பெருமளவுக்கு ஆட்டியபடி சென்று கொண்டிருந்தது ஒரு கார்ப்பரேஷன் லாரி.

சாலையின் பல்லாங்குழிகளில் குதித்துக் குதித்துச் சென்ற லாரியிலின் பின்னாலிருந்தும், இரண்டு பக்கங்களிலிருந்தும் சாலைக்கு அஞ்சலி செலுத்துவது போல சொரிந்து கொண்டிருந்தன குப்பைகள். இருசக்கர வாகன ஓட்டிகள் ரேசில் செல்வது போல செல்லவேண்டியிருந்தது குப்பைகள் தலையில் விழாமல் பாதுகாத்துக் கொள்ள.

அதெல்லாம் சரி,

ரோட்டில் குப்பை கொட்டினால் அபராதம் என்கிறார்கள்
குப்பை வண்டியே குப்பை கொட்டினால் ?

இரண்டு

கத்திப்பாரா பாலத்துக்குக் கீழே வைகோவைப் பார்த்தேன். போஸ்டரில் தான். பழைய போஸ்டர். கண்களில் கருப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டிருந்தார். ஒருவேளை போட்டோ எடுத்தபோது “மெட்ராஸ் ஐ” இருந்திருக்கலாம் என்றேன் அருகில் இருந்த நண்பரிடம்.

கண்ணாடி போட்டால் தன்னை மக்கள் “அடுத்த கலைஞர்” என ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறார் போலிருக்கிறது என்றார்.

மெதுவா சொல்லுங்க அம்மா காதில் விழுந்து விடப் போகிறது என்றேன்.

முறைத்துப் பார்த்த நண்பர், பல போஸ்டர்களில் அரசியல் தலைவர்கள் செல்போனும் கையுமாக இருக்கிறார்களே ? ஏன் ? என்று என்னிடம் எசகு பிசகான கேள்வியைக் கேட்டார்.

“அட… அப்படியா ? நான் கவனிக்கவே இல்லையே” என்றேன். நக்கலாகச் சிரித்தார். இது கூடக் கவனிக்காம நீ என்னத்த பாத்துக் கிழிச்சுட்டே என்பது போல் இருந்தது அவருடைய பார்வை.

மூன்று

திரிசூலம் தாண்டியதும் சாலையின் இரண்டு பக்கமும் போஸ்டர்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தன.

அபாய அரக்கர்கள், அசுரர்கள், பயங்கரங்கள், அதிரடி வீரர்கள் – என்று பல போஸ்டர்கள். நீளமான நகங்களும், கோரமான முகங்களும் போஸ்டர்களில் சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தன.

நினைத்துப் பார்த்தேன், இன்னும் இப்படிப்பட்ட மிரட்டும் தலைப்பைப் பார்த்து படத்துக்குப் போகும் மக்கள் இருக்கிறார்களா என்ன ?

யோசித்துக் கொண்டே திரும்பிய இடத்தில் “இது சிட்டுக் குருவியல்ல ஹிட்டுக் குருவி” என சிறகில்லாத குருவிக்கு கிரீடம் சூட்டியிருந்தார்கள் ரசிகர்கள்.

நான்கு

பல்லாவரம் சந்திப்பில் வழக்கத்துக்கு மாறாக இரண்டு டிராபிக் கான்ஸ்டபிள்கள் உரத்த குரலில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

பொதுவா இவங்களுக்கு வாய் நீளாதே ? கை தானே நீளும் ? பாகப் பிரிவினையில் பிரச்சனை ஏதாவது இருக்குமோ ? என யோசித்துக் கொண்டே வந்தேன். உள்மனது குத்தியது.. ஏண்டா.. கொஞ்சம் நல்லதா யோசிக்கவே மாட்டியா ?

ஐந்து

காரில் செல்லும் போது செல்போனில் பேசுவதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறேன். அப்படி என்னதான் அவசரமான அழைப்பாக இருந்தாலும் பத்து நிமிடத்துக்குப் பின் பேசிவிடலாம் என்னும் எண்ணம் தான் காரணம்.

சமீபத்தில் ரசித்த ஒரு டிராபிக் வாசகம்

“காரோட்டும் போது போனை எடுக்காதீர்கள், அழைப்பது எமனாகவும் இருக்கலாம்”

ஆப்பிள் பெண்ணும், ஆரஞ்சுப் பையனும்

அவ ஆப்பிள் மாதிரிடா என்று காதலிக்கும்போது கவிதை எழுதித் திரியும் ஆண்களும், அவன் ஆரஞ்ச் மாதிரிடி சாஃப்டான ஆளு என தோழியருடன் சிணுங்கித் திரியும் பெண்களும் திருமணத்தில் இணைந்தால் இப்படித் தான் இருக்கும் !!

இதைத் தான் திருமணத்துக்குப் “பின்” என்கிறார்களோ !!!

காபி குடிங்க.. ஆனா அதுக்கு முன்னாடி….

 

காலையிலே ஒரு கப் காஃபி குடிக்கலேன்னா என்னால வேலை எதுவுமே செய்ய முடியாது என்று சொல்லும் ஆசாமியா நீங்கள், உங்களுக்காகவே வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

 

அதாவது நீங்கள் குடிக்கும் காஃபியை விட அந்த காப்பியின் மணத்தில் தான் உங்கள் சோர்வை அகற்றும் வித்தையே இருக்கிறதாம்.

 

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் காஃபியைக் குறித்து நிகழ்த்திய ஆராய்சியில் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. எலிகளை வைத்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட இந்த ஆய்வு காப்பியின் மணம் எலிகளின் மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பதிவு செய்திருக்கிறது.

 

இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை வகித்த “யோஸினாரி மாசே  இந்த ஆராய்ச்சி குறித்து குறிப்பிடுகையில் இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் மாபெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றார்.

 

அதாவது காப்பியில் இருக்கும் காஃபைன் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது, ஆனால் காஃபியின் மணம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு குறைவு. எனவே எதிர்காலத்தில் மக்கள் காப்பிக்குப் பதிலாக காலையில் காஃபியின் மணத்தை மட்டுமே நுகர்ந்து உற்சாகமடையலாம்.

 

அலுவலகங்களில் சோர்வை அகற்ற காஃபி குடிப்பதற்குப் பதிலாய் அவ்வப்போது காஃபியின் மணத்தை அலுவலகத்தில் மிதக்க விடலாம் என்றெல்லாம் தனது கற்பனைச் சிறகை விரித்தார்.

 

இனிமேல் காஃபி குடிக்கும் முன் சற்று நேரம் அதன் மணத்தை நிதானமாய் நுகர்ந்து விட்டு குடியுங்கள். ஏனெனில் எதிர்காலத்தில் காப்பியை நுகரவும் காசு வசூலிக்கப்படலாம் !

வியப்பூட்டிய விளம்பரங்கள்

விளம்பரங்கள் வசீகரமானவை. அழகான விளம்பரங்கள் ஒரு குறும்படம் போல என்று சொல்லலாம். அது சொல்லும் செய்திகள் வீரியமானவை.

இந்த மூன்று விளம்பரங்களையும் பாருங்களேன்.

 

நிறபேதம் வேண்டாமே

ெண்குழந்தைகளைக் கொல்லாதீர்கள்

ுழந்தைகள் பெற்றோரிடமிருந்தே அனைத்தையும் கற்றுக் கொள்ளும்

தசாவதாரம் : பர்தாப் பெண்ணின் வெட்கம் !

உலக வரலாற்றில் பத்து வேடங்களில் முதன் முறையாக நமது கமலஹாசன் நடித்திருக்கும் தசாவதாரம் திரைப்படம் கமலின் கலை உழைப்புக்குக் கிடைத்திருக்கும் வரம் என்றே கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவமும், இஸ்லாமும் இந்தியாவுக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் நுழையாத பன்னிரண்டாம் நூற்றாண்டில் எனும் கணீர் குரலுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். எனினும், முதலாம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவம் புனித தோமையார் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தது என்பதே கிறிஸ்தவ வரலாறுகள் கூறும் உண்மை. எப்படியோ… அதற்கும் தசாவதாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

படம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களிலேயே கதாபாத்திரங்களைக் காட்டி சட்டென பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குள் தாவி, அங்கிருந்து அமெரிக்கா, தமிழகம் என கதை பயணிக்கும்  போது குழப்பாமல் சம்பவங்களின் அழுத்தம் கெடாமல், வீரியம் கெடாமல், தனது தியரிகளைக் கலைக்காமல், புதுப் புதுக் கதாபாத்திரங்களைக் கதையில் நுழைத்துக் கொண்டே வரும் கமலில் திரைக்கதை வியக்க வைக்கிறது.

தசாவதாரம் குறித்து எல்லோருமே எழுதி சலித்து விட்டாலும் என் பங்குக்கு நானும் என்னைக் கவர்ந்த அம்சங்களைச் சொல்லிவிடுகிறேன்.

முதலாவது, கமலின் சிரத்தை. எப்போதுமே தனது அசைவுகளின் மூலம் முக்கால் வாசி பேசிவிட்டு, வார்த்தைகளின் மூலம் கால்வாசி பேசுவதே கமலில் வழக்கம். அதையே இதிலும் செய்திருக்கிறார். குறிப்பாக அமெரிக்கக் கமலின் ஆங்கில உச்சரிப்பும், ஹாலிவுட் நடிகர்களின் அலட்சியப் பார்வையும், அவர்கள் பயன்படுத்தும் வாக்கியங்களும் ஒருபுறம் மிகுந்த கவனத்துடன் அடுக்கப்பட்டிருக்க,

இன்னொரு புறம் வின்செண்ட் பூவராகன் நடை, உடை, நிறம், உச்சரிப்பு என வியக்க வைக்கிறார். சற்றே மிகைப்படுத்தப்பட்ட “மக்களே” வசன உச்சரிப்பே அவருடையது எனினும் “தீட்டத்தில் நெழியும் புழுக்கள்” என்பன போன்ற வசனங்கள் பூவராகனின் உழைப்பில் தினமும் ஒலிக்கும் குரல். எந்தத் திரைப்படமும் பதிவு செய்யாத, செய்ய விரும்பாத வசனங்கள்.

அமெரிக்க ஜார்ஜ் புஷ் கதாபாத்திரத்தை அவருடைய குணாதிசயங்களோடே எடுத்திருப்பது நகைச்சுவையோடு சேர்ந்து கமலில் பார்வையை தெளிவாக்கியிருக்கிறது. குறிப்பாக மேடையில் நடக்கும் புஷ் ( சமீபத்தில் வீரர் ஒருவருடன் நெஞ்சோடு நெஞ்சு குதித்து மோதி வேடிக்கை காட்டிய நிகழ்ச்சியை நினைவூட்டுகிறார் ) , என்ன அது என்.ஏ.சி.எல், அது மேல அணுகுண்டு போடலாமா போன்ற நிகழ்ச்சிகள்.

பாட்டியின் கதாபாத்திரத்தில் மனநிலை பாதித்தும், பாதிக்காமலும் இருக்கும் கமலின் நடிப்பு அவருக்கு மட்டுமே உரித்தானது.

நாயுடு அசத்துகிறார். நாயுடு மட்டும் இல்லையென்றால் சாமான்ய கமல் ரசிகர்களுக்கு விருந்து இல்லாமலேயே போயிருக்கக் கூடும். தெலுங்கனைக் கண்டுவிட்டால் பார்வையில் நுழைக்கும் பரிவும், “அப்பாராவா “ எனக் கேட்கும் போது ஒலிக்கும் தெலுங்கு தனமும், “மடத்திலே தப்பு நடக்காதா” எனக் கேட்கும்போது அவருடைய உடலசைவும் என வியக்க வைக்கிறார் நாயுடு.

கடவுளுக்காக உறவுகளை துச்சமென தூக்கி எறிந்து இறந்து போகும் கமல் சிலிர்ப்பூட்டுகையில், உறவுகளுக்காக தனக்குக் கடவுள் போல இருக்கும் இசையை தூக்கி எறிய முன்வரும் சர்தார் கமல் விழியோரங்களைத் துளிர்க்க வைக்கிறார்.

இந்தத் திரைக்கதையை இன்னும் சிக்கலாக கடைசிப் புள்ளியில் இணைவது போல ( அதாவது பாபேல் எனும் ஆங்கிலப்படம் போல ) உருவாக்கியிருக்க முடியும். எனினும் இந்த அளவுக்கு நேர்கோட்டில் அவர் திரைக்கதையை உருவாக்கியிருப்பதற்கு கே.எஸ்.ரவிகுமார் ஒரு காரணகர்த்தாவாக இருக்கக் கூடும் எனும் எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.

கமலுடன் இணைந்து வியக்க வைக்கும் நடிப்பு அசினுடையது. பிசின் போல சிலையுடனும், கமலுடனும் ஒட்டிக் கொண்டே இருக்கும் அசின் கமலுடன் இணைந்ததாலோ என்னவோ நடிப்பின் இன்னோர் அத்தியாயத்துக்குள் நுழைந்திருக்கிறார். இனிமேல் விஜயுடன் டூயட் பாடும்போது சற்றே உறுத்தக் கூடும் அவருக்கு, நடிக்காமல் காசு வாங்குகிறோமே என்று.

கடைசிக் காட்சிகளில் சுனாமி பீறிட்டெழும்போது கிராபிக்ஸும், இசையும், ஒளிப்பதிவும் போட்டி போட துயரங்களை மீண்டும் ஒருமுறை அள்ளிக்கொண்டு வந்து மனதுக்குள் கொட்டுகிறது திரைப்படம்.

தசாவதாரம் படத்தில் முதல் பத்து நிமிடங்கள் கமல் விரைவில் மருதநாயகம் எடுப்பார் எனும் நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. அப்போதேனும் அவர் நெப்போலியனை தமிழ் பேச அழைக்காதிருப்பாராக.

கமலுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. தன்னுடைய முகத்தின் ஒவ்வோர் அணுக்களையும் நடிக்க வைக்கும் திறமை அவருக்குக் கைவந்த கலை. ஆனால் இந்தத் திரைப்படத்தில் எல்லா கதாபாத்திரங்களுமே முகத்தில் முகமூடி போட்டுக் கொண்டு நடிப்பதால் முகத்தில் கண்கள் மட்டுமே நடிக்க முடியும் எனும் நிலை உருவாகியிருக்கிறது.

கண்களில் மட்டுமே மின்னி மறையும் பர்தாப் பெண்ணின் வெட்கம் போல, கமலில் நடிப்பையும் பல வேளைகளில் கண்களை மட்டுமே வைத்து கண்டு கொள்ள வேண்டியிருப்பதே குறையெனப் படுகிறது.

விறுவிறுப்பான படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இது ஒரு வேகமான திரைப்படம். அறிவு ஜீவி ரசிகர்களுக்கு கேயாஸ் தியரி மற்றும் பட்டர்ஃபிளை தியரி.