சந்தோஷ் சுப்ரமணியம் – எனது பார்வையில்.

தாமதமாய்ப் பார்த்தாலும் திருப்தியைத் தந்த படம் என சொல்ல வைத்தது சந்தோஷ் சுப்பிரமணியன்.

கலகலப்பான நிகழ்வுகளோடு நம்மையும் இணைத்துக் கொள்ளும் கதை தான் படத்தின் மிகப்பெரிய பலம். ஆங்கிலத் திரைப்படங்களைப் போல இழையோடும் மெல்லிய நகைச்சுவையுடன் நகர்கிறது படம்.

தந்தையின் விருப்பத்தைத் தட்டாத மகனுக்கும், பிள்ளைகள் மற்றும் மனைவியின் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கவேண்டும் எனும் ஒரே எதிர்பார்ப்போடு வாழும் தந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பை ஒரு பக்கமும்,

மழலையா, லூசா, வெகுளியா என பிரித்தறிய முடியாத ஒரு கலவைக் காதலின் சுவாரஸ்யத்தை மறுபக்கமும் கொண்ட தண்டவாளமாய் நகர்கிறது கதை. ஒரு அடர் மலைப்பிரதேசத்தின் இயற்கை எழிலை கண்டு ரசித்துக் கொண்டே செல்லும் பயணிகளாக பார்வையாளர்கள்.

அதே ஆதிகால காதல், சிரிப்பு, நண்பர்கள், காதலியின் தந்தையிடம் கெட்ட பெயர், பாடல்,  இத்தியாதி இத்தியாதி என எங்கும் எதிலும் புதுமை இல்லை. ஆனாலும் சுவாரஸ்யமாய் இருக்கிறது படம். ஒரு மழலையின் விளையாட்டைப் போல.

குறிப்பாக ஏழு நாட்கள் நாயகன் வீட்டில் நாயகி தங்கியிருக்கும் போது நடக்கும் களேபரங்கள் கலகலப்பானவை.

ஏழு நாட்களுக்குப் பின் நாயகனைப் பிடிக்கவில்லை என நாயகி சொல்லிச் செல்லும் காட்சி ஓர் அழுத்தமான கண்ணீர் சிறுகதை.

சிறு சிறு காட்சிகளின் மூலமாக திரைப்படத்தை அழகுறக் கொண்டு சென்றிருக்கிறார் தம்பிக்கேற்ற அண்ணன். குறிப்பாக தன் மனைவி பாடும் போது “என் மனைவிக்குப் பாடத் தெரியுமா ? அதைக் கூட அறிந்து கொள்ளாமல் இருந்தேனா ?” என பார்வையாலேயே பேசும் பிரகாஷ் ராஜ் பிரமாதராஜ்!

கடைசிக் காட்சியில் தந்தை இத்தனை நாளும் தன்னை தன்னுடைய விருப்பத்துக்கு வாழவே விடவில்லை என கதாநாயகன் கூறுவது பஞ்ச் அல்ல நஞ்சு.

நீங்கள் விரும்பும் ஆடையை நான் அணிய வேண்டும், கேரம் போர்ட் விளையாடும் போது கூட எந்த காயினை எப்படி அடிக்க வெண்டுமென நீங்கள் சொல்வதையே நான் செய்ய வேண்டும், இப்படித்தானே வாழ்ந்தேன். என்னை நீங்கள் வாழவே விடவில்லையே, என் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தீர்கள் என கதாநாயகன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கும் போது ஒரு தந்தையின் மனம் படும் பாட்டை பிரகாஷ் ராஜ் வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.

எனினும், தன்னை கால் நூற்றாண்டு காலம் தன்னை வளர்த்த, குடும்பத்தை நேசித்த தந்தையின் நெஞ்சில் மகன் சொருகிய அந்த கத்தியை அதன் பின் அவன் சொல்லும் எந்த சமரச வார்த்தைகளும் சமன் செய்து விடவே முடியாது. தனது வாழ்நாள் பணிகள், கனவுகள், விருப்பங்கள், தியாகங்கள் எல்லாம் மறுதலிக்கப்பட்டு நிராயுதபாணியாய் விழிகள் நிறையும் ஓர் தந்தையின் சோகம் அளவிட முடியாதது.

எனவே தான், அதன் பின் படத்தோடு ஒட்ட முடியவில்லை.

எனினும் ஆபாசமோ, வன்முறையோ, வெறுப்படிக்கும் வசனங்களோ இல்லாமல் ஒரு அழகான கவிதையை வாசித்தது போன்ற நிறைவை நீண்ட நாட்களுக்குப் பிறகு தந்த படம் எனுமளவில் நெஞ்சில் நிற்கிறது ச.சு.