பைபிள் மாந்தர்கள் 3 (தினத்தந்தி) : காயீன் – ஆபேல்

Italian Baroque Painting of the Killing of Abel and the Banishment of Cain --- Image by © Geoffrey Clements/CORBIS ORG XMIT: 12873731

(Italian Baroque Painting of the Killing of Abel and the Banishment of Cain — Image by © Geoffrey Clements)

காயீனும், ஆபேலும் கடவுளுக்குக் காணிக்கை செலுத்த வந்திருந்திருந்தார்கள். இவர்கள் இருவரும் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் பிறந்த பிள்ளைகள். காயீன் மூத்தவன். ஆபேல் இளையவன். பெற்றோருக்குப் பிறந்த முதல் மனிதன் காயீன் ! அவனுக்குத் தோட்டத்தில் பயிடும் வேலை ! உலகின் முதல் விவசாயி. ஆபேலுக்கோ ஆடுகளை மேய்க்கும் பணி.

காயீன் நிலத்தில் விளைந்தவற்றைக் கொண்டு வந்தான். ஆபேல் தனது மந்தையிலிருந்த கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். கடவுள் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக் கொண்டு, காயீனின் காணிக்கையைப் புறக்கணித்தார். காயீன் தனது சகோதரன் மீது கோபம் கொண்டான். மனிதனின் முதல் கோபம். கடவுள் அவனிடம் “ஏன் முக வாட்டமாய் இருக்கிறாய். நீ நல்லது செய்தாய் உயர்வடைவாய். பாவம் உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கியாளவேண்டும்” என்றார். இருந்தாலும்… காயீனின் சினம் குறையவில்லை.

“தம்பீ, வா.. வயல்வெளிக்குப் போகலாம்” காயீன் கூப்பிட்டான்.

அண்ணன் கூப்பிட்டதும் மறு பேச்சு பேசாமல் உற்சாகமாய் ஓடி வந்தான் தம்பி. வயல்வெளிக்குச் சென்றதும், தனது தம்பியின் மீது பாய்ந்து அவனைக் கொன்றான் காயீன். உலகின் முதல் கொலை ! கடவுள் காயீனை அழைத்து, “ஆபேல் எங்கே” எனக் கேட்டார். அவனோ “ எனக்குத் தெரியாது, நான் என்ன அவனுக்குக் காவலாளியா ?” என்று கேட்டான். கடவுளின் கோபம் அதிகரிக்க, அவனைச் சபித்து துரத்தி விட்டார்.

கடவுள் காணிக்கையின் அளவைப் பார்த்து காணிக்கையை அங்கீகரிப்பவரல்ல. அவர் மனதைப் பார்ப்பவர். “ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை” என்கிறது பைபிள். ஆபேலைக் கனிவுடன் கண்ணோக்குகிறார், அதனால் அவனுடைய காணிக்கைகளையும் ஏற்றுக் கொள்கிறார்.. காயீனை அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை, அதனால் தான் அவனுடைய காணிக்கைகளும் கண்ணோக்கப்படவில்லை !

நம்பிக்கையினால்தான் ஆபேல் காயினுடைய பலியைவிட மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார். அதனால் அவர் நேர்மையானவர் எனக் கடவுளிடமிருந்து நற்சான்று பெற்றார் – ( எபிரேயர் 7 : 4 ). என்கிறது பைபிள். ஆபேலுடைய பலிகள் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், நேர்மையாளனின் காணிக்கையாகவும் இருந்தன என்பதே இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடமாகும்.

“தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்  என்கிறார் இயேசு.

காயீன் ஆபேலின் வாழ்க்கை பல விஷயங்களை நமக்குக் கற்றுத் தருகிறது.

 1. இறைவனுக்கான காணிக்கைகளில் அளவு முக்கியமல்ல, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம். நாம் அங்கீகரிக்கப்படாவிட்டால், நமது காணிக்கை அங்கீகரிக்கப் படுவதில்லை. எனவே ஒரு நேர்மையான வாழ்க்கை வாழவேண்டியது அவசியம்.
 2. சகோதரன் மீது சினம் கொள்பவர்கள் மாபெரும் பாவத்தைச் செய்கிறார்கள். சகோதரனோடு பிணக்கு இருந்தால் அதை நாமாகவே முன் சென்று சரி செய்ய வேண்டும்.
 3. இறைவனின் கண்களை விட்டு நமது பாவத்தை மறைப்பது என்பது, தரைக்குள் தலையைப் புதைத்து வைத்து விட்டு தப்பித்து விட்டதாய் நினைக்கும் தீக்கோழியைப் போன்றது.
 4. முதன்மையானவற்றையே கடவுளுக்குப் படைக்க வேண்டும். ஆபேல் தனக்கு ரொம்பவும் பிடித்த உயர்வானவற்றைக் கடவுளுக்குக் கொடுத்தான். சிறந்தவற்றை ஆண்டவருக்கு விருப்பத்துடன் கொடுப்பது ஆன்மீகத்தின் அடையாளம்.
 5. காயீன் செலுத்திய பலிதலை சிறந்ததா என்பது குறிப்பிடப் படவில்லை. எனவே அவை முதல் தரமானதில்லை என்றும் கருதிக் கொள்ளலாம். வெறுமனே சடங்குக்காகக் காணிக்கை செலுத்துபவர்கள் மதவாதத்தின் அடையாளம்.
 6. பாவம் செய்யும் மனிதன் இறைவனில் ஆனந்தம் கொள்வதில்லை. காயீனின் முகம் வாடிப்போய் இருந்தது. பாவத்தை விலக்கும் போதே உண்மையான ஆனந்தம் வந்து சேரும்.
 7. அடுத்தவருடைய வெற்றியோ அங்கீகாரமோ நமக்கு எரிச்சலையும் கோபத்தையும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக நம்மை விட இளையவர்கள் சிறந்து விளங்கினால் பகையுணர்வு கொள்ளாமல் இருக்க வேண்டும்
 8. பாவம் என்பது நமது வாசலில் படுத்திருக்கும். அதை அடக்கியாளாவிட்டால் எந்த வேளையிலும் அது வீட்டுக்குள் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிடும்.
 9. ஆபேல் தனது சகோதரன் அழைத்தபோது எந்த சந்தேகமும் படாமல் அவனுடன் சென்றான். அத்தகைய தூய்மையான சந்தேகமற்ற மனதை இறைவன் விரும்புகிறார்.
 10. நேர்மையாளனுக்கு எதிராய் கையை உயர்த்துகையில், இறைவனின் சினம் நம் மீது திரும்புகிறது !

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s