அமெரிக்கா : மனிதநேயம் ன்னா என்ன ?

 

அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள கிங்க்ஸ் கவுண்டி மருத்துவ மனையில் பணியாளர்களின் உதாசீனத்தால், மருத்துவமனை தரையிலேயே கிடந்து, உதவி கிடைக்காமல் இறந்து போயிருக்கிறார் நாற்பத்தொன்பது வயதான எஸ்மின் கிரீன்.

 

மனித நேயம் மிச்சமிருப்பதாய் கருதப்படும் மருத்துவமனைகளில் ஊழியர்களின் அலட்சியமும், பாராமுகமுமே மிச்சமிருப்பதாய் பறைசாற்றுகிறது இந்த நிகழ்வு.

 

முதலில் மூடி மறைக்கப்பட்டாலும், நவீனத்தின் பயனாக மருத்துவமனை காமராக்கள் எஸ்மின் கிரீன் சுமார் ஒரு மணி நேரம் தரையில் விழுந்து மரணத்தோடு போராடி, உதவிக் கரங்கள் ஏதும் இல்லாமல் கடைசியில் சாவின் கரங்களின் தன்னை ஒப்புவித்த நிகழ்வுகளை படமாகியிருக்கின்றன.

 

மருத்துவமனை காவலர், மற்றும் செவிலியர் தரையில் மரணத்தோடு மல்லிட்டுக் கொண்டிருந்த எஸ்மின் கிரீனை கண்டும் காணாமல் சென்றிருக்கின்றனர். இதன் உச்சமாக ஒரு செவிலி காலால் அந்த அம்மாவை உதைத்து தூங்கிக்கொண்டிருக்கிறாரா என சோதித்திருக்கிறார். சலனமே இல்லாமல் கிடந்த கிரீனை நிராகரித்து நகர்ந்திருக்கிறார்.

 

அந்த அறையில் காத்திருந்த மேலும் சிலர் கூட அவரை நிராகரித்து இருக்கைகளில் ஏதுவுமே நடவாதது போல அமர்ந்திருந்தது மனிதத்தின் மீது மிகப்பெரிய கேள்விக்குறியை நாட்டியிருக்கிறது.

 

முதலில் மருத்துவ அறிக்கை எஸ்மினை பணியாளர்கள் நன்றாகக் கவனித்துக் கொண்டதாகவும் அவர் நலமுடன் இருந்ததாகவும் தெரிவித்தது. தற்போது காமராக்கள் இதை வேறுவிதமாய் சொல்லவே, வேறு வழியில்லாமல் பணியாளர்கள் சிலரை பணி நீக்கம் செய்து நியாயத்தின் பக்கம் நிற்பதாகக் காட்டிக் கொண்டிருக்கிறது மருத்துவமனை.

 

எஸ்மின் கிரீன் சுமார் 24 மணி நேரம் அவசர சிகிச்சை காத்திருப்பு அறையிலேயே படுக்கை ஏதும் கிடைக்காமலும், உதவி கிடைக்காமலும் அமர்ந்திருந்தார் என்கிறது தகவல். அவர் கருப்பு இனத்தைச் சேர்ந்தவராக இருந்ததாலேயே நிராகரிப்புக்கு உள்ளானார் என குரல் கொடுக்கின்றனர் பலர்.  

உலகின் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, உலகுக்கெல்லாம் நீதி சொல்ல ஆயுதங்களோடு புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. வீட்டுக்குள்ளே நிற வெறியும், இனவெறியும் மரித்துப் போன மனிதாபிமானமுமாக வீ ச்சமடிக்கிறது