அதிர்ச்சி : அதிகம் தண்ணீர் குடித்தால் மரணம் நேரும் !!!


 
  
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அது தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் கூட உண்மையாகியிருக்கிறது. அதிர்ச்சியை அள்ளித்தரும் இந்த உண்மைச் சம்பவம் யூ.கே யில் நடந்திருக்கிறது.
 
நல்ல ஆரோக்கியமான, திடகாத்திரமான, மருந்து மாத்திரைகளை நாடாத நாற்பத்து நான்கு வயதான ஆண்ட்ரூ தன்னுடைய ஈறுகளில் இருந்த வலியை மட்டுப்படுத்த குளிர்ந்த நீரை குடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
 
கொஞ்சம் கொஞ்சமாக எட்டு மணி நேரத்தில் அவர் குடித்த தண்ணீரின் அளவு சுமார் பத்து லிட்டர். தொடர்ந்து மூன்றாவது நாளாக எட்டு மணி நேரத்திற்கு சுமார் பத்து லிட்டர் எனுமளவில் தண்ணீர் குடித்ததால் அவருடைய உடலிலிருந்த உப்புச் சத்துக்கள் கரைந்து, அடர்த்தியிழந்து மரணமடைந்திருக்கிறார்.
 
அதிகப்படியான தண்ணீர் உடலின் அனைத்து செல்களையும், உறுப்புகளையும் வீக்கமடையச் செய்திருக்கின்றன. அது மூளைக்கு அதிகப்படியான அழுத்தத்தையும், வீக்கத்தையும் கொடுத்திருக்கிறது. அதுவே அவரது உயிரையும் பறித்திருக்கிறது.
 
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது உடல் வலுவிழந்து அதிக போதையில் இருந்தவரைப் போல தள்ளாடியிருக்கிறார். முதலில் போதையில் இருக்கிறார் என மருத்துவர்கள் நினைத்திருக்கின்றனர், பின்னர் உண்மை உணர்ந்து சிகிச்சை அளிக்கத் துவங்கியிருக்கின்றனர். ஆனால் கூடவே மாரடைப்பும் வந்து அவரை மரணத்துக்குள் அமிழ்த்தியிருக்கிறது.
 
மனித உடலில் ஐம்பத்து ஐந்து முதல் எண்பது விழுக்காடு தண்ணீரால் ஆனது. மூளையின் எண்பத்து ஐந்து விழுக்காடும், குருதியின் எண்பது விழுக்காடும், தசைகளின் எழுபது விழுக்காடும் தண்ணீரால் ஆனதே. நாம் உண்ணும் உணவிலிருந்து உடல் சுமார் இருபது விழுக்காடு தண்ணீரைப் பெற்றுக் கொள்கிறது.
 
உடலுக்கு எவ்வளவு தேவையோ அதைத் தவிர அதிகமாய் தண்ணீர் உட்கொண்டால் தண்ணீர் கூட உயிருக்கு உலை வைக்கும் எனும் தகவல் மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது,
 
சரி, எவ்வளவு தண்ணீர் குடிப்பது நல்லது ? எனும் கேள்விக்கு ஆரோக்கியமான மனிதன் ஒருநாள் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்.
 
அதிக வியர்வை சிந்தும் வேலை செய்பவர்கள் அதற்கேற்ப அதிக தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்பதும், விளையாட்டு வீரர்கள் வெறும் தண்ணீருக்குப் பதிலாக உப்பு, கார்போஹைட்ரேட் இவை கலந்த ஐசோடானிக் பானத்தை அருந்தலாம் என்பதும் மருத்துவர்களின் பரிந்துரையாகும்.

வரும் வழியில் – 2

காட்சி 1 :

வேளச்சேரி திரௌபதி அம்மன் கோயில் தெரு வழியாக காரை படகு போல ஆடி ஆடி ஓட்டிக்கொண்டு வரும்போதெல்லாம் காண முடியும் அரசு பள்ளி ஒன்றின் முன்னால் குவிந்து கிடக்கும் சீருடை மாணாக்கரை.

சாலையை முழுவதுமாக அடைத்துக் கொண்டும், முதுகில் மூட்டையைச் சுமந்து கொண்டும் நெடுநேரம் மாணாக்கர்கள் காத்திருந்தாலும் ஏதோ தியேட்டர் போல சரியா ஒன்பது மணி தாண்டிய பிறகு தான் கேட்டையே திறக்கிறார்கள்.

போக்குவரத்து சிக்கல் எழுகிறது, பிள்ளைகள் வெயிலில் நிற்கிறார்கள், முதுகில் காக்காய் தலை பனம்பழம் போல மூட்டை, கொஞ்சம் மனது வைத்து வெளியே காத்திருக்கும் பிள்ளைகளை உள்ளே அமரச் செய்யலாமே எனும் கேள்வி எப்போதும் என் மனதில் எழும்.

கேட் அருகே இரண்டு வாட்ச்மேன்களுடன், ஆயாக்கள் காத்திருக்க, அரைமணி நேரம் முன்னதாகச் சென்றால் கூட அழைத்துச் சென்று வகுப்பில் அமர வைக்கும் தனியார் பள்ளிகளுடன் அரசுப் பள்ளிகளையும் ஒப்பிடத் தோன்றுகிறது.

மேலை நாட்டைப் போல ஏன் அரசுப் பள்ளிகள் இங்கே முதன்மைப் பெறவில்லை என்பதற்கு இப்படிப் பட்ட சிறு சிறு அலட்சியங்களின் தொகுப்பே கூட காரணமாய் இருக்கலாம்.

காட்சி 2 :

கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் கவனித்தேன். முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோவில் எழுதியிருந்தார்கள் “பெண்ணின் திருமண வயது 21”.

அடப்பாவிகளா … இப்போதெல்லாம் பெண்கள் இருபத்து ஏழு தாண்டினா தானே கல்யாணப் பேச்சையே எடுக்கிறாங்க ? ஒருவேளை இது பெண்கள் ரொம்பத் தாமதமா கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு எச்சரிக்கிறதுக்காக வெச்சிருக்காங்களா தெரியலையே ?

இன்னும் செல்போன் சிக்னல் கிடைக்காத ஒதுக்குப் புறமான கிராமங்களில் ஒருவேளை பெண்கள் இருபத்து ஒன்றாவது வயதில் திருமணம் செய்யலாம். ஆனால் நகரப் பகுதிகளிலும், தலையில் டிஷ் சுமக்கும் நாகரீகக் கிராமங்களிலும் 21 வயது திருமணத்துக்குப் பக்குவம் வராத வயதாகவே கருதப்படுகிறது.

ஆட்டோக்கள் தங்கள் வாசகங்களை

முப்பது நெருங்கும் முன் மணம் முடிப்பீர் “ என மாற்றி எழுதுதல் நலம்

காட்சி 3 :

வரும் வழியில் பெட்ரோல் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. சிறிது நாட்களுக்கு முன் தொலைந்து போயிருந்த மரியாதையை பணியாளர்கள் மீண்டும் எடுத்து உடுத்தியிருந்தார்கள்.

கடந்த வாரம் தட்டுப்பாடு நிலவியபோது அட்டகாசம் காட்டியவர்களா இவர்கள் ? அட.. நம்பவே முடியலையே !

தடுப்பு வேலிகளும், கைகளில் கொம்பும், வாயில் வசவுமாக கொருக்குப் பேட்டை குமாரு போல இவர்களெல்லாம் சுற்றிக் கொண்டிருந்த பழைய நினைவுகள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தபோது கேட்டார்.

“ஸ்பீடா” சார் ?

“நான் ரொம்ப ஸ்பீடா ஓட்டறதில்லை… ரெகுலரே போடுங்க

காட்சி 4 

ஒரு சந்திப்பில் மனநிலை சரியில்லாத, உடல் நிலையும் சரியில்லாத ஒருவர் கை ஏந்தினார். பர்சைத் துழாவி காசை எடுப்பதற்குள் அவர் அந்தப் பக்கமாகச் சென்று விட்டார்.

கண்ணாடியைத் திறந்து அந்த மனிதரைக் கூப்பிட்டேன். அவர் திரும்பி வந்து கொண்டிருந்தபோது அருகில் நின்றிருந்த பைக் காரர், தனது ஹெல்மெட்டின் கண்ணாடியை மெனக்கெட்டு திறந்து சொன்னார்.

“இவன் எப்பவுமே இங்கே தான் சும்மா சுத்திகினு கிடப்பான்…சார்… ”

“ஓ.. அப்படியா ? எப்பவாச்சும் ஏதாச்சும் கொடுத்திருக்கீங்களா … “ என்றேன்.

இதுக்குப் போயி மெனக்கெட்டு ஹெல்மெட் டோரை ஒப்பன் பண்ணிட்டேனே. ரொம்ப நக்கல் பிடிச்சவன் போலிருக்கு என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே அவர் ஹெல்மெட்டின் கதவையும், காதின் சன்னலையும் சாத்திவிட்டு திரும்பிக் கொண்டார்.