குசேலன் : பாடல் வரிகளும், விமர்சனமும்

பாடல் : சினிமா சினிமா சினிமா …

எம்ஜியாரு, சிவாஜிகாரு, என்.டி.யாரு ராஜ் குமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இதுபோல் வருமா வருமா

கடவுள்  யாருன்னு யார் பார்த்தா
அதைக் கண்ணில் காட்டுதிந்த சினிமா தான்
கர்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அதைக் கண்ணில் காட்டுதிந்த சினிமா தான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்
என்று எடுத்துக் காட்டுவது சினிமா தான்
அதுக்கு யாரிங்கு சாட்சின்னா
அட வேறு யாரு நம்ம தலைவர் தான்.

மொத்த பூமியையும்
பத்து ரூபா தந்தா
சுத்திக் காட்டுதிந்த சினிமா தான்.

பாரு பாரு பட ஷூட்டிங் பாரு
பலர் வேர்வை சிந்தினாங்க
நூறு கைகள் ஒண்ணு சேரவேணும் ஒரு
சினிமா உருவாக

காபி டீயும் தரும் புரடக்ஷன் பாயும் இங்கே ரொம்ப முக்கியம் தான்
டிராலி தள்ள பவர் லைட்டும் போட வேண்டும் உழைக்கும் வர்க்கம் தான்

மேலும் கீழும் என பேதம் பார்க்க
இங்கு ஏற்றத் தாழ்வு இல்லை
கோடம்பாக்கங்களை கோயிலாக்கும் இந்த சினிமா தொழில் தானே
ஏ குரூப் டான்ஸ் கோரஸ் பாட்டு என குடும்பம் வாழுதப்பா
வந்த பேரை இங்கு வாழ வைக்கும் இந்த சினிமா சினிமா தான்

சூப்பர் ஸ்டார் அதோ பார்
ராஜ யோகமடா சூப்பர் ஸ்டார் நம்ம ஊருக்குள் வந்தாரு
சிங்கம் நான் சிங்கம் தான்
மூக்கு மேல விரல் வைக்கும் வண்ணம் பல வேஷம் போட்டாரு
அவர் உருவம் பாரு எளிமை
அந்த எளிமை தானே அவருக்கு வலிமை
தலை கனத்திடாத தலைவன்
எங்கள் அண்ணன் மட்டும் தான்

ஜப்பானில் பார் சூப்பர் ஸ்டாரு
ஜெர்மனி போனா சூப்பர் ஸ்டாரு
அமெரிக்காவில் சூப்பர் ஸ்டாரு
ஆப்பிரிக்காவில் சூப்பர் ஸ்டாரு

பாட்டாளிகளின் பனியனை கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையிலே கவனி
காய்கறி விற்கும் தாய்குலம் தூக்கும்
கூடையில் கூட சூப்பர் சூப்பர் ஸ்டார்.

கடவுள்  யாருன்னு யார் பார்த்தா
அதைக் கண்ணில் காட்டுதிந்த சினிமா தான்

சூப்பர் ஸ்டார் பேரைத்தான்
திரைமீது மக்கள் பார்க்கும் போது விசில் வானைப் பிளக்காதோ
ரசிகர்கள் கூட்டம் தான்
பாலை தேனை கூட்டி
பேனர் மீது கொட்டி வாழ்த்துப் பாடாதோ

அந்தப் படையப்பாவின் படை தான்
இந்த பூமியெங்கும் அணி வகுத்திருக்க
என்றும் மக்கள் மனதை ஆளும்
எங்கள் ஒரே மன்னன் தான்

 
எனக்குத் தோன்றியது :

ரொம்பவே சிலாகித்துப் பேசப்பட்ட இந்த சினிமா சினிமா பாடல் ஏதோ ரஜினியின் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு லோக்கல் ரசிகன் எழுதி ஒட்டிய போஸ்டர் போல இருக்கிறது.
( ரசிகர் மன்ற போஸ்டர் பல வேளைகள் இதைவிட நல்ல கவித்துவமாய் மிளிரும் என்பது வேறு விஷயம். உதா : எவரஸ்ட் யாருக்கு தெரியும் எவர் பெஸ்ட் பாருக்கே தெரியும் )
பல இடங்களில் பாடல் உரையாடல் போல ஊர்கிறது.

எனக்குப் பிடித்த வரி :

பாட்டாளிகளின் பனியனை கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையிலே கவனி
இந்தப் பாடலை வாலி எழுதியிருக்கிறார் என நம்ப முடியவில்லை. சுமாரான டியூன், ஒரு தடவைக்கு மேல் கேட்கத் தூண்டவில்லை என்பதே நிஜம்.

 

பெட்ரோல் தட்டுப்பாடு + அரசின் நிலைப்பாடு = மக்கள் படும்பாடு

 

அரைமணி அல்லது முக்கால் மணி நேரத்தில் வந்துவிடக் கூடிய தூரம் தான் வேளச்சேரியிலிருந்து தாம்பரம். நேற்று காலை இரண்டரை மணிநேரமாகி விட்டது. ஏதோ அன்னதான மேடைக்கு சரியான நேரத்தில் வந்தது போல எல்லோரும் மதிய உணவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது தான் அலுவலகத்தில் நுழையவே முடிந்தது.

என் சென்னை வாழ்க்கையில் சந்தித்திராத பெட்ரோல் தட்டுப்பாடு. ஒவ்வோர் பெட்ரோல் பங்க் வாசலிலும் உள்ள வாகனங்கள் அனுமர் வால் போல நீண்டு கொண்டே இருக்க சாலைகள் முழுவதும் டிராபிக் ஜாம். அவசர கதியில் இருந்த எத்தனைபேருக்கு அவஸ்தைகள் நேர்ந்ததோ தெரியாது.

சில நாட்களுக்கு முன்பே எல்லா பெட்ரோல் பங்க் களிலும் சாதாரண பெட்ரோல் இல்லை உயர்தர பெட்ரோல் மட்டுமே இருக்கிறது என்று சொல்லி சாதாரண பெட்ரோலை உயர் தரப் பெட்ரோல் என்று சொல்லி அதிக விற்றுக் கொண்டிருப்பதாக சென்னை முழுவதும் முணுமுணுப்பு நிலவியது.

பெட்ரோல் என்ன தோசை மாதிரியா இருக்கிறது சாதாவா, ஸ்பெஷலா என பார்த்தா கண்டு பிடிக்க முடியும் ? அல்லது காபி டீ மாதிரி குடித்தா பார்க்க முடியும்.

“பசி வந்தால் பத்தும் பறந்து போயிடும்” ங்கற மாதிரி, ஏதோ ஒரு பெட்ரோல் ஏதோ ஒரு விலைக்குக் குடு என்பது போலத் தான் இருந்தது காத்திருந்த அப்பாவி ஜனங்களின் வேதனை. அதை பயன்படுத்திக் கொண்டு பெட்ரோலையே ரஜினி பட டிக்கெட் மாதிரி விற்ற நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

எண்ணை நிறுவனங்களின் நஷ்டத்தில் ஓடுவதால் சப்ளையை மட்டுப்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர் முழுவதும் ஸ்தம்பித்திருக்கக் கூடிய நிலைக்கு காரணமான பெட்ரோல் நிறுவனங்கள் மீது அரசின் சட்டம் நீண்டால் மட்டுமே அரசுக்கு முதுகெலும்பு இருக்கிறது என்பதற்கான உத்தரவாதம் கிடைக்கும்.

நேற்று நள்ளிரவு தாண்டியும், இன்று அதிகாலை 6 மணிக்கும் பங்க்களில் பெரிய வரிசையைப் பார்க்க நேரிட்டது. நீண்ட வரிசையில் காத்திருப்பதன் அவஸ்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே இந்த தட்டுப்பாட்டின் வீரியம் உறைக்கும்.

பாதி பங்க் களை மூடியும், மீதி பங்க் களை போலீசாரின் கண்காணிப்போடும் நிறுவனங்கள் இயக்கிக் கொண்டிருக்கின்றன. பெட்ரோல் வாங்க வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஏதோ தியேட்டரில் டிக்கெட் வாங்க வருபவர்கள் போல அடி, ஏச்சு, முறைத்தலுக்கு ஆளாகியிருப்பது இன்னும் பரிதாபம்.

காஞ்சிபுரத்தில் இன்னும் ஒரு படி மேலே போய், காஞ்சிபுரம் ரெஜிஸ்ட்ரேஷன் வண்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் போட்டார்களாம்.

சில இடங்களில் அம்மன் கோயில் கூழ் போல, 150 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோலாம்.

“கப்பல் வருது” என்று புலி வருது கணக்காக படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.

அடிக்கிற இடத்தில அடிச்சா வலிக்கிற மாதிரி வலிக்கும் என்பதையே இந்த சுயநலம் பிடித்த எண்ணை நிறுவனங்கள் கையாள்கின்றன. எண்ணை விலையை இன்னும் ஒரு இருபது ரூபாய் ஏற்றினால் அவர்களுடைய வருவாயில் பல ஆயிரம் கோடிகள் அதிகமாகும். அப்போது இந்த அவஸ்தைகள் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படும்.

அரசு ஒன்றும் தெரியாத பாப்பா போல பெருவிரலை வாயில் வைத்து கடித்துக் கொண்டிருக்கிறது. தனியார் மயம், தனியார் மயம் என்றால் என்ன என்பதை கடை கோடி மனிதனுக்கு இதைவிட தெளிவாகப் புரிய வைக்க முடியாது.

இன்னும் இந்த தட்டுப்பாடு சில நாட்கள் நீடிக்கும் என்கிறார்கள். அலுவலகங்கள் இனிமேல் ஆளுக்கொரு பெட்ரோல் பங்க் அலுவலக வளாகத்திலேயே வைத்து ஊழியர்களுக்கு பெட்ரோல் வழங்கினால் தான் அலுவலகம் இயங்கும் போல.

எதிர்கட்சிகளுக்கு இது ஒரு அவல் கூடை. ஆளாளுக்கு மெல்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாள் இதே நிலமை நீடிக்கட்டும் கொஞ்சம் அதிகமாய் மெல்லலாம் என்பது அவர்கள் கணிப்பு.

நம்ம சீட் பத்திரமா இருக்கணும், அதுக்கு பங்கம் விளைவிக்காம பங்க் மேட்டரை முடிங்க என்பது ஆளுங்கட்சியினரின் கோட்பாடு.

இடையே நசுங்கி பிழிபடும் நம்மைப்பற்றி…. ??

அடப்போப்பா…. எலக்ஷனுக்கு இன்னும் நாள் இருக்கு