பைபிள் மனிதர்கள் 36 (தினத்தந்தி) நாத்தான்

 

சர்வ வல்லமை பொருந்திய தாவீது மன்னனின் முன்னால் வந்து நின்று இறைவாக்கினர் நாத்தான் பேசினார்.

ஒரு நகரில் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். ஒருவன் செல்வன். இன்னொருவன் ஏழை. செல்வந்தனிடம் ஏராளமான ஆடு மாடுகள் இருந்தன. அந்த ஏழையிடம் இருந்ததோ ஒரே ஒரு ஆட்டுக்குட்டி. அது அவனோடும், அவனது குழந்தைகளோடும் விளையாடி ஆனந்தமாய் இருந்தது. அந்த ஏழை அதை விலைக்கு வாங்கியிருந்தான். அவனது மடியில் உறங்கி, அவனது பாத்திரத்தில் உண்டு, அது அவனது மகனைப் போலவே இருந்தது.

ஒருநாள் ஒரு வழிப்போக்கன் செல்வந்தனிடம் வந்தான். வழிப்போக்கனுக்கு உணவு தயாரிக்க செல்வந்தன் முடிவு செய்தான். அதற்காக தனது மந்தையிலிருந்து ஆட்டை எடுக்காமல், அந்த ஏழையின் ஒரே ஒரு ஆட்டைக் கொன்று உணவு தயாரித்தான்.

நாத்தான் சொல்லி முடித்ததும் தாவீது  மன்னன் கோபத்தில் எழுந்தான். யாரது ? அவன் சாகவேண்டும். இரக்கமின்றி செயல்பட்ட அவன் யார்  ? சொல்லுங்கள். தாவீது கர்ஜித்தான்.

அது நீ தான் !  நீயே அம் மனிதன். நாத்தான் மன்னனின் முன்னிலையில் நின்று அச்சமின்றி குரலுயர்த்தி, கைநீட்டி அதிகாரமாய்ப் பேச அதிர்ந்து போனான் தாவீது !

இறைவாக்கினர்களின் இயல்பே அது தான். அவர்கள் இறைவனின் வார்த்தைகளை பிறருக்கு எடுத்துரைக்கப் பிறந்தவர்கள். எந்த சபையிலும் நின்றும் உண்மையை உரக்கச் சொல்லத் தயங்குவதில்லை. எந்த மன்னனுக்கு எதிராகவும் குரலுயர்த்த அஞ்சுவதில்லை. கடவுளின் வார்த்தையை மேடைக்கு ஏற்றார்போல மாற்றிப் பேசுவதில்லை.

தாவீது அதிர்ந்து போய் நிற்க நாத்தான் தொடர்ந்தார். அவருடைய குரல் இறைவனின் குரலாய் எழுந்தது.

“இதோ கடவுள் சொல்கிறார். உன்னை இஸ்ரயேலரின் மன்னனாக்கினேன். ஏராளமான மனைவியர் தந்தேன். நீயோ இத்தியனான உரியாவைக் கொன்று அவனுடைய மனைவியை அபகரித்தாய். இனிமேல் உன் குடும்பத்திலிருந்து எனது கோபம் விலகாது.”

நாத்தானின் இறைவாக்கைக் கேட்ட தாவீது மனம் வருந்தினார். “ஐயோ கடவுளுக்கு எதிராய் பாவம் செய்து விட்டேனே” என புலம்பினார்.

நாத்தான் தாவீதைப் பார்த்தார். “நீ மனம் வருந்தியதால் கடவுள் உன்னை மன்னிக்கிறார். ஆனாலும் உனது மீறுதலுக்குத் தண்டனையாக உனக்குப் பிறக்கும் மகன் சாவான்” என்றார்.

தாவீதுக்கும், அவன் அபகரித்த மனைவியாகிய பத்சேபாவுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. நாத்தான் சொன்னது போலவே அந்தக் குழந்தை நோய்வாய்ப் பட்டு சாகக் கிடந்தது.

தாவீது அந்தக் குழந்தைக்காக சாப்பிடாமல் இருந்து இறைவனிடம் மன்றாடினார். ஏழாவது நாள் குழந்தை இறந்தது. அந்தச் செய்தியை மன்னனிடம் சொல்லவே பணியாளர்கள் அஞ்சினார்கள். ஆனால் செய்தியைக் கேள்விப்பட்ட தாவீது கலங்கவில்லை. எழும்பினார். கடவுளின் வார்த்தை நிறைவேறியதைப் புரிந்து கொண்டார். உணவு சாப்பிட்டார்.

“மன்னரே, குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தப்போ சாப்பிடாமல் அழுது புலம்பினீர்கள். குழந்தை இறந்தபின் துக்கம் கொண்டாடாமல் உணவு அருந்தி சகஜ நிலைக்கு வந்திருக்கிறீர்களே ?” என  அவர்கள் ஆச்சரியமாய்க் கேட்டார்கள்.

“குழந்தை இறக்கும் முன் கடவுள் ஒருவேளை மனமிரங்குவார் என உண்ணா நோன்பு இருந்து மன்றாடினேன். இப்போது குழந்தை இறந்து விட்டது, இனி அழுது புலம்பி என்ன ஆகப் போகிறது” என்றார் தாவீது.

தாவீதுக்கும் பத்சேபாவுக்கும் பின்னர் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் ஞானத்தினால் உலகை ஆண்ட சாலமோன் மன்னன். அப்போது நாத்தான் வந்து அவர்களை வாழ்த்தினார்.

எபிரேய மொழியில் நாத்தான் என்பதற்கு “கடவுள் கொடுத்தார்” என்று பொருள். தாவீது மன்னனிடம் கடைசி வரை இறைவனின் திட்டத்தைப் பகிர்ந்து கொள்பவராக நாத்தான் இருந்தார்.  அதனால் தனக்கும் பத்சேபாவுக்கும் பிறந்த ஒரு குழந்தைக்கு நாத்தான் எனும் பெயரை தாவீது வைத்தார்..

தாவீது மன்னன் கடவுளின் ஆலயத்தைக் கட்ட மாட்டார், சாலமோனே கட்டுவார் என்று இறைவாக்கு உரைத்தவர் நாத்தான் தான். அவரே தான் சாலமோன் மன்னன் அரியணை ஏறவும் முக்கிய காரணமாக இருந்தார்.

இறைவாக்கினர்கள் சில முக்கியமான குணாதிசயங்கள் கொண்டிருந்தார்கள்.

  1. இறைவனோடான நேரடி தொடர்பு அவர்களுக்கு இருந்தது. இறைவன் சொன்னதைச் சொன்னபடி பிறரிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
  2. இறைவனைத் தவிர எதற்கும் அவர்கள் அஞ்சவில்லை. இழப்புகள், வலிகள், தண்டனைகள் எதுவுமே அவர்களை திசை திருப்புவதில்லை.
  3. உலகம் சார்ந்த எந்த ஆசையையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களை எப்போதுமே அவர்கள் தாழ்த்தி இறைவனையே உயர்த்திப் பிடித்தார்கள்.
  4. தொலை தூரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை அவர்கள் இறைவன் அருளால் காணும் தன்மை பெற்றிருந்தார்கள்.
  5. முழு மனதோடு ஒரு விஷயத்தைச் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். இரக்கம், மனிதநேயம், பரிவு, இறை சமாதானம், பொறுமை போன்றவை அவர்களிடம் இருந்தது.

Leave a comment