என்னதான் இருந்தாலும்…

poor.jpg

இன்று காலையில் சென்னையின் நகரும் முதுகெலும்பான மின் ரயிலில் ஏறி அலுவலகம் வந்து கொண்டிருந்தேன். ரயிலை விட்டிறங்கி கிராசிங் அருகே வந்தபோது கண்ட காட்சி சற்று வித்தியாசமானது.

குடிபோதையில் தள்ளாடித் தள்ளாடி கையில் ஏதோ பொட்டலத்துடன் ஆடிக் கொண்டிருந்த ஒருவருக்கு அவருடைய அன்பான மனைவி பளார் பளார் என்று கன்னத்தில் அறை விட்டுக் கொண்டிருந்தார்.

ஆஹா… முறத்தால் புலியை விரட்டிய பெண்களின் கதையை அடுப்படியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாட்டிகளின் காலம் மாறிவிட்டதே என சற்று மகிழ்ச்சியாக இருந்தது.

அப்போது, எனக்கு அருகே வந்து கொண்டிருந்த ஒருவர் சத்தமாகவே பேசிக்கொண்டு போனார் “என்னதான் இருந்தாலும் பொது இடத்துல இப்படியா… ?’ (புருஷன் என்பவன் பொது இடமா?)

“என்னதான் இருந்தாலும்…” என்னும் வார்த்தையில் இருக்கும் விஷமம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆணாதிக்கத்தின் மிச்சமாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் வாக்கியம் தான் இந்த என்னதான் இருந்தாலும்.

“என்னதான் இருந்தாலும் ஆம்பள…” என்பது தான் அந்த வாக்கியத்தின் ஆழ் அர்த்தம். பொது இடம் என்றில்லாமல் வீட்டில் வைத்து சாத்தியிருந்தாலும் இந்த “என்ன தான் இருந்தாலும்..” வந்திருக்கும்.

என்ன தான் இருந்தாலும்…, கல்லானாலும்… என்றெல்லாம் காலம் காலமாய் நீண்ட வாக்கியங்கள் இந்த கணினி யுகத்திலும் முழுமையாக மாறவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டியது.

என் வீட்டில் உதவிக்கு வரும் சமையல்கார அம்மா தன்னுடைய புருஷனின் கதையை சோகத்தை வெளிக்காட்டாமல் அவ்வப்போது சொல்வார். தினமும் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் கணவனின் பொறுப்புணர்ச்சியைப் பற்றியும். பத்துப் பாத்திரம் தேய்த்து கணவனின் சாராய தேவைக்கு அர்ப்பணிக்கும் அவளுடைய இயலாமையைப் பற்றியும்.

வருஷம் முழுக்க விரதம் இருக்கிற மாதிரி ஏதாச்சும் சபரிமலை இருந்தா நல்லா இருக்கும் என்று அவர் சொல்லும்போது பனிக்கும் கண்களுக்குள்ளே புதைந்து கிடக்கிறது வாழ வேண்டும் எனும் அவளுடைய நியாயமான ஆசை.

புத்தாண்டு இவர்களுக்கும் சேர்ந்தே விடியட்டும்.

.

4 comments on “என்னதான் இருந்தாலும்…

  1. “என்ன இருந்தாலும் ” – இவ்வார்த்தைகள் நம்மால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வார்த்திகள் தான். மாறத்தான் வேண்டும். என்ன செய்வது – இடு இன்னும் சற்று அதிகக் காலம் பிடிக்கும். வீட்டு வேலை செய்யும் பெண்கள் – எனக்குத் தெரிந்த வரை இப்படித்தான் புலம்புகிறார்கள்.

    //வருஷம் முழுக்க விரதம் இருக்கிற மாதிரி ஏதாச்சும் சபரிமலை இருந்தா நல்லா இருக்கும் என்று அவர் சொல்லும்போது பனிக்கும் கண்களுக்குள்ளே புதைந்து கிடக்கிறது வாழ வேண்டும் எனும் அவளுடைய நியாயமான ஆசை.//

    உண்மையிலேயே இவ்வரிகள் அவரது அடிமனதில் இருந்து ஆழ்ந்த வருத்தத்துடன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்த சொற்கள்.

    Like

Leave a comment