இதயம் இல்லாமல் 16 நாட்கள் !

“உன் இதயம் எங்கே ?” என கேட்டிருந்தால் “கழற்றி வெச்சிருக்கேன்” என்று சொல்லியிருப்பார் தைவானைச் சேர்ந்த செ சி-சங்.

இதய நோயாளியான இவர் 16 நாட்கள் இதயம் இல்லாமல் உயிர்வாழ்ந்திருக்கிறார் எனவும், இது உலகிலேயே முதன் முறை என்றும் தைவான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தைவானிலிருந்து வெளிவரும் தய்பெய் டைம்ஸ் என்னும் இதழில் இந்த செய்தி அதிசயமாய் குறிப்பிடப்பட்டுள்ளது. அறுபது வயதான இவர் மருத்துவமனையில் இதயம் நோய் என வந்திருக்கிறார்.

அறுவை சிகிச்சையின் போது அவருடைய இதயம் முழுவதும் பாக்டீரியா தாக்குதலால் சிதைந்து போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவருடைய இதயம் முழுமையாக அகற்றப்பட்டது.

இயற்கை இதயமோ, செயற்கை இதயமோ இல்லாமல் extracorporeal membrane oxygenation எனும் இயந்திரத்தில் பதினாறு நாட்கள் உயிருடன் இருந்திருக்கிறார் அவர்.

அதன் பின் ஒரு இதயம் கிடைக்க, அதை தேசிய தைவான் பல்கலைக்கழக மருத்துவமனையில் வைத்து பொருத்தியிருக்கிறார்கள்.

பதினாறு நாட்கள் இதயமே இல்லாமல் வாழ்ந்த அவரை மருத்துவ உலகம் வியப்புடன் பார்க்கிறது.

என்னவளுக்கு இதயமே இல்லை என புலம்புபவர்கள் இதில் சேரமாட்டார்கள் என்பது பின் குறிப்பு.