மதுவும், மாதுவும், பிரச்சினைகளும்.

beer.jpg

வார இறுதிகளில் அதிகமாகக் குடித்துக் கும்மாளமிடும் வழக்கம் மேலை நாடுகளில் அதிகம். இப்படி அதிகமாக ஒரே நாளில் குடித்து உற்சாக வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உட்பட பல புற்று நோய்கள் வரும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

அதிகமாய்க் குடிக்கும் பழக்கம் இளம் வயதினரிடையே அதிகம் இருப்பதாகவும் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமும் மிகவும் குறைந்த அளவு குடிப்பவர்களை விட ஒரே நாளில் அதிகமாய் குடிப்பவர்களுக்கு, அது பீர் ஆனாலும், வைன் ஆனாலும், அதிலுள்ள ஆல்கஹால் அளவை வைத்து புற்று நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

அதுவும் வார இறுதியில் 22 கோப்பை பானத்தை உள்ளே தள்ளும் பெண்களுக்கு 130 விழுக்காடு புற்று நோய் வரும் வாய்ப்புகள் அதிகரிப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

இங்கிலாந்தில் கால்வாசி இளம் பெண்கள் வார இறுதிகளில் 21 கோப்பைக்கு அதிகமான பானத்தை அருந்துகிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மட்டும் இரண்டாயிரம் மார்பகப் புற்றுநோயாளிகள் ஆண்டுதோறும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அங்கே வாரம் 14 கோப்பை பானம் மட்டுமே அருந்துங்கள், அதுவும் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

மது அருந்துவது எந்தவிதத்திலும் உடலுக்கு நன்மை பயப்பதில்லை என்பதும், அதனால் விளையும் பின்விளைவுகள் நாள்தோறும் ஆய்வுகளில் பயமுறுத்தி வந்தாலும் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இந்தியாவில் சமீபத்திய கலாச்சார மாற்றங்களும், மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் தாக்கங்களும் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. மது அருந்துவோர் அதன் தீமைகளைக் கண்டு விலகி இருத்தலே நலம் பயக்கும்.

வழிபாடுகளில் யானை தேவையா ?

ele.jpg

சமீபகாலமாக நூற்றுக்கணக்கான செய்திகள் ‘மதம்’ பிடித்த யானையால் உயிரிழந்த மனிதர்கள் பற்றியும், சேதமடைந்த பொருட்களைப் பற்றியும் ( பெரும்பாலும் கேரளாவிலிருந்து) எனில் இந்த யானைகளை மத விழாக்களில் பயன்படுத்துவது தேவையா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

காட்டில் கம்பீரமாக உலவ வேண்டிய யானைகளைக் கொண்டு வந்து கோயில்களில் கட்டி வைப்பதால், சரியான உடற்பயிற்சி இல்லாமல் அவை அதிக எடை அடைந்து பல நோய்களுக்கு உள்ளாவதாக ஏற்கனவே மருத்துவக் குழுக்கள் எச்சரிக்கை விட்டிருக்கின்றன.

ஒரு அடிமை மனோ நிலையில் இருக்கின்ற இந்த வலிமையின் பிரம்மாண்டங்கள் ஏதேனும் ஒரு வாய்ப்பு வரும்போது எல்லாவற்றையும் துவம்சம் செய்து விடுகின்றன. கேரளாவில் யானைகளால் கொல்லப்பட்ட பாகன்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.

ஒவ்வோர் விலங்குக்கும் தனிப்பட்ட சில இயல்புகள் இருக்கின்றன. அவற்றை அவை இழப்பதில்லை. கோயில் வாசலில் காசு வாங்கும் யானைக்கும் ஒரு நாள் வெறி வரலாம், சும்மா படுத்துக் கிடக்கும் யானைக்கும் வெறி வரலாம். மரணத்தைக் கூடவே கூட்டிச் செல்லும் இந்த சமாச்சாரம் தேவையா என்பதை அறிவார்ந்தவர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தல் நலம்.

குருவாயூர் கோயிலில் யானையைக் கட்டித் தீனி போடவே சுமார் மூன்று கோடி ரூபாய் ஆண்டு தோறும் செலவிடுகிறார்களாம்.

காடுகளில் இருக்கும் யானைகள் கோயில்களில் இருப்பது மதம் சார்ந்த தேவையெனில் அவற்றை கோயில் வளாகங்களில் பாதுகாப்பாக கட்டி வைத்திருப்பது நல்லது. பொதுவிடங்களிலும், மக்கள் திரளும் விழாக்களிலும் அவை வரும்போது தான் தேவையற்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.

கொதிக்கும் தார்ச்சாலைகளிலும், வெடிச் சத்தங்களின் இடையேயும், கலர் கலரான உடைகளிடையேயும், இரைச்சலிடையேயும் யானைகள் எப்போதும் குழந்தைகளைப் போல பாகனின் கையைப் பிடித்துக் கொண்டே செல்லவேண்டும் என யாரும் எதிர்பார்க்கவும் முடியாது.

யானகள் பாவம் சேட்டா… அதின விட்டேய்க்கு…

பருவம் அடைதலும், பருமன் அடைதலும் !

fat.jpg

பெண்கள் வயதுக்கு வரும் பருவமும் அவர்களுக்குப் பிறக்கபோகும் குழந்தையின் எடைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஆராய்ச்சியில் தற்போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பதினோரு வயதுக்கு முன்பே பருவம் அடைந்துவிடும் பெண்களின் குழந்தைகள் வேகமான வளர்ச்சியும், மிக அதிகமான உடல் பருமனும் அடைந்து விடுவதாக தெரிய வந்துள்ளது. பதினைந்து வயதிற்குப் பிறகு பருவத்துக்கு வரும் பெண்களின் குழந்தைகள் சாதாரண வளர்ச்சியைக் கொண்டிருப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முதல் இரண்டு வருடங்கள் குழந்தைகள் எத்தகைய வளர்ச்சியுடன் இருப்பார்கள் என்பதை முழுமையாக இதுவே நிர்ணயிக்கிறது என்பது அவர்களின் தீர்க்கமான முடிவு. இத்தகைய குழந்தைகளும் விரைவிலேயே பருவம் அடைந்து விடுவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி எந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து ஆரோக்கிய உணவு குறித்து கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இத்தகைய எடைஅதிகரிப்பைத் தவிர்க்க தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை கண்டிப்பாகப் பின்பற்றவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

திருமணமான ஆண் திருமணமாகாத இன்னொரு பெண்ணிடம் …

uganda.jpg

திருமணமான ஆண் திருமணமாகாத இன்னொரு பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொள்ளலாம், ஆனால் திருமணமான பெண் வேறு எந்த ஆண்களுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. இப்படி ஒரு சட்டம் அமலில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா ? நம்பித்தான் ஆகவேண்டும். ஆனால் இந்தச் சட்டம் இந்தியாவில் அல்ல, உகாண்டாவில். ஆனால் இப்படி சமத்துவமற்ற முறையில் அமலில் இருந்த ஆண்களுக்கும், பெண்களுக்குமான சில சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

குழந்தையின் தந்தை இறக்கும் போது இன்னொருவரை தன் குழந்தையின் பாதுகாவலராக நியமித்தால் அந்தக் குழந்தையின் மீதான உரிமையை தாய் இழக்கிறாள்.

மனைவி இறந்தால் அவளுடைய சொத்து முழுதும் கணவனைச் சேர்கிறது. கணவன் இறந்தால் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு சொத்து மட்டுமே மனைவியைச் சேர்கிறது.

இவையெல்லாம் உகாண்டாவில் அமலில் இருக்கும் சட்டங்கள் என்பது சற்று வியப்புக்குரியவையே. மிகப்பெரிய போராட்டத்திற்கும், விவாதத்திற்கும் பிறகு தற்போது இந்த சட்டங்கள் எல்லாம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

குடும்ப வாழ்க்கையின் உன்னதம் புரிதலிலும் சமத்துவ உணர்விலும், ஆத்மார்த்த அன்பிலும் தான் அடங்கியிருக்கிறது. சமத்துவ சமுதாய சிந்தனையுடன் செயல்படும் அனைவருக்கும் இந்த தீர்ப்பு திருப்தியளித்திருக்கிறது.

The Obelisk – அதிசய இருக்கை ! படங்கள்

இடப்பற்றாக்குறையைச் சமாளிக்கும் பொருட்களுக்கே இப்போது மவுசு அதிகம். இந்த இருக்கையைப் பாருங்க. ஆஹா !! விலை ?? மூணு இலட்சமாம் !!!!!!!!!!! ஷ்ஷ்ஷ்…

chair1.jpg

chair2.jpg

chair3.jpg

chair4.jpg

chair5.jpg

chair6.jpg

chair7.jpg

IT கம்பெனிகளின் திரை மறைவு வேலைகள்

it.jpg

ஐடி துறையில் இருப்பவர்களில் பலருக்கே தெரிந்திருக்க நியாயமில்லை ஐடி கம்பெனிகளில் நடக்கும் திரைமறைவு வேலைகளில் பல.

சமீபத்தில் வேலை மாறுதல் விஷயமாக நண்பன் ஒருவன் வேறு கம்பெனிகளில் பணிபுரியும் நண்பர்கள் வாயிலாக புதிய வேலைக்கு முயன்றபோது தான் இந்த உண்மை தெரிய வந்தது.

அவன் நல்ல உயர்ந்த பதவியில் இருப்பவன், திறமையானவன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஐடி கம்பெனிகளின் HR பிரிவினர் கன்சல்டன்சிகளின் கைகோர்த்துக் கொண்டு பல கோடிகளைச் சுருட்டும் திட்டத்துடன் இருப்பதால் கன்சல்டன்சிகளின் வழியாக செல்லாவிட்டால் நேர்முகத் தேர்வுக்கே அழைக்கப்படுவதில்லை எனும் சூழல்.

பல அலுவலகங்களில் அவனுடைய அனுபவம், மற்றும் தொழில் நுட்பப் பிரிவில் இடம் காலி இல்லை என்றே திருப்பி அனுப்பப்பட்டான். பிறகு தான் தெரியவந்தது இந்த கன்சல்டன்சிகளின் கைங்கர்யமும், HR மக்களின் உள் நோக்கமும்.

அதன்பின் ஒரு வேலை வாங்கித் தரும் இணையதளத்தில் அவனுடைய ரெஸ்யூம் போட்டான். வந்து குவிந்தன அழைப்புகள். எங்கெல்லாம் வேலை இல்லை என்று சொன்னார்களோ அங்கெல்லாம் அவனுக்கு நேர்முகத் தேர்வுகள் நடந்தன. வேலையும் பல இடங்களில் அவனுக்குக் கிடைத்தது.

இது குறித்து ஒரு HR நண்பரிடம் பேசியபோது அவர் சொன்னாராம், கன்சல்டன்சிகளுக்கும் அவர்களுக்கும் இடையே நடக்கும் ரகசிய பேரங்களும், இதனால் புரளும் கோடிக்கணக்கான பணமும் !

கன்சல்டன்சிகள் தங்களிடம் இருக்கும் திறமையற்ற நபர்களைக் கூட போலியான அனுபவ சான்றிதழ்களுடன் அனுப்பி வேலை பெற்றுக் கொடுத்து, கம்பெனியிடமிருந்து கணிசமான தொகையைப் பெற்று அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை HR மக்களுக்கு கொடுத்து வருகின்றனராம்.

பின்புல விசாரிப்புகளில் கூட இத்தகைய மக்கள் மாட்டுவதில்லை. காரணம் கன்சல்டன்சிகள் அதற்கும் ஏற்பாடு செய்கின்றனவாம் !

நேரடியா ஆண்டவன் கிட்டே போனா அருள் கிடைக்காது, பூசாரி தட்டிலே பணத்தைப் போடு என்னும் கணக்காக வெளியே தெரியாமல் நடக்கும் இந்த திரைமறைவுச் சமாச்சாரங்களை நண்பன் புட்டுப் புட்டு வைத்தபோது அதிர்ச்சியும், ஆச்சரியமும், இயலாமையும் கலந்த மனநிலையில் கேட்டுக் கொண்டிருந்தேன் நான் !

முகேஷ் அம்பானியின் 400 கோடி மாளிகை !

india_mukesh-ambani-1.jpg

முகேஷ் அம்பானி ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். வீடு கட்ட ஆகும் செலவு அதிகமில்லை ஜெண்டில்மேன் நானூறு கோடி தான்.

நாற்பது மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் எல்லாம் முடிவுற்று 2008ம் ஆண்டு இறுதியில் வீட்டில் குடி போக முடிவெடுத்திருக்கிறாராம் அம்பானி.

ஒவ்வோர் மில்லி மீட்டரிலும் பணக்காரத் தனத்தின் உச்சம் மிளிரும் வண்ணம் இதை வடிவமைக்க அமெரிக்காவைச் சேர்ந்த பெர்கின்ஸ் மற்றும் வில்ஸ் இருவரும் வரைபடமிட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் இருக்கும் கட்டுமானப் பணி நிறுவனம் ஒன்று இந்த பணியை செய்து வருகிறது.

முதல் ஆறு மாடிகள் கார் பார்க்கிங் செய்வதற்காக மட்டும் தானாம். மேல் நான்கு மாடிகள் அம்பானி குடும்பத்தினர் தங்கவும், இடைப்பட்ட மாடிகள் எல்லாம் ஒவ்வொரு தேவைக்காக வடிவமைக்கப் பட்டுள்ளனவாம். அதாவது ஒரு மாடி சமையலறை, ஒரு மாடி லைபிரரி இப்படி…

மும்பையில் கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடம் இருக்கும் இடம் ஒரு சதுர அடி இருபதாயிரம் ரூபாயாம் !!!

அம்பானி திரைப்படம் பார்க்க உள்ளேயே தனியே தியேட்டரும், உள்ளேயே சில நீச்சல் குளங்களும், உடற்பயிற்சி நிலையங்களும் என இங்கே இல்லாத எதுவும் இல்லை எனுமளவுக்கு வசதிகளை கரன்சிகள் செய்து கொண்டிருக்கின்றன.

பச்சை நிறத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டிடம் இருக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

அமெரிக்க வரைபடத்துடன், சிங்கப்பூர் நிறுவனத்தால், இந்தியர்களின் பணத்தை வைத்து மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார் இந்தியத் தொழிலதிபர்.

ஐம்பது கோடி மக்கள் உணவுக்காக கையேந்தும் இந்தியாவில் இருந்து கொண்டு இதையெல்லாம் பார்த்து வேதனைப் படுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியாது என்னாலும், உங்களாலும் !

இன்று…

kid.jpg

( உலக புத்தக தினத்தை ஒட்டி தமிழ் ஓசை நாளிதழில் வெளியான எனது ஒரு குறுந் தகவல் )

உலக புத்தக தினம் ஏப்பிரல் மாதம் இருபத்து மூன்றாம் தியதி உலகின் பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1995ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோவின் பொதுக்குழுவில் இந்த நாளை உலக புத்தக தினமாகக் கொண்டாடத் தீர்மானம் எடுக்கப்பட்டது. எழுத்தாளர்களையும், புத்தகங்களையும், பதிப்பாளர்களையும் கவுரவிக்கும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள மிக்குவேல் டி ஸெர்வெண்டஸ் என்னும் எழுத்தாளரைக் கவுரவிக்கும் விதமாக கேட்டலோனியா விலுள்ள புத்தக விற்பனையாளர்கள் அனைவரும் சேர்ந்து அவருடைய மறைவு தினமான ஏப்பிரல் இருபத்து மூன்றாம் நாள் விழா ஒன்றைக் கொண்டாடியதே இந்த புத்தகதினத்தின் பூர்வீகம் எனக் கொள்ளலாம்.

இந்த நாளுக்குரிய இன்னொரு சிறப்பம்சம் வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும் ஏப்பிரல் இருபத்து மூன்று என்பதாகும்.

ஏப்பிரல் இருபத்து மூன்றாம் நாள் தூய ஜார்ஜ் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் மக்கள் தங்கள் நண்பர்களுக்கு பரிசுகள் அளிப்பது வழக்கம் அந்த நாளை புத்தக தினமாகவும் கொண்டாடியதால் பலர் புத்தகங்களைப் பரிசளிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்கள்.

கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிகழும் இந்த விழா நாளினால் கேட்டலோனியாவின் ஆண்டு புத்தக விற்பனையின் பாதி அந்த நாளில் மட்டுமே விற்பனையாகிறதாம்.

யூகே, அயர்லாந்து போன்ற நாடுகளில் இந்த நாளில் மாணவர்களுக்கு இலவச கூப்பன்கள் கொடுத்து புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கின்றனர். ஸ்பெயின் நாட்டில் மாணவர்களுக்கு அன்றைய தினம் இலவசமாய் புத்தகங்களை வழங்குகிறார்கள்.

புத்தகங்கள் தோழர்கள். மனதின் இறுக்கமான சூழலை இலகுவாக்கவோ, தகவல்களை தந்து செல்லவோ, மாலை நேர ஓய்வு நேரத்தை உயர்வாக்கவோ எதற்கும் உதவும் உற்ற நண்பனாக இருக்கும் புத்தகங்களுக்காக ஒரு தினம் இருப்பது ஆனந்தமானது.

புத்தகங்கள் படிக்கும்போது ஒரு உலகம் நமக்கு முன்னால் விரிகிறது. சரியான புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கும் போது ஒரு சரியான உலகத்தை நமக்கு முன்னால் விரிக்கிறோம். புத்தகங்கள் வழிகாட்டிகள். தொலைக்காட்சியில் தவம் கிடக்கும் தலைமுறையினரை இதுபோன்ற நாட்கள் புத்தகங்களின் பக்கம் திருப்பினால் அது ஒரு ஆரோக்கியமான மாறுதல் என்பதில் சந்தேகமில்லை.