எதை எப்படிச் செய்ய வேண்டும் ?

mind.jpg

உடலிலுள்ள தசைகளெல்லாம் எப்படி செயல்படுகின்றன என்பதைக் கவனித்துக் கொண்டே உடற்பயிற்சி செய்தால் உடல் அதிக பலனை அடையும் என்னும் ஆராய்ச்சியை இலண்டன் ஹல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஏதேனும் ஒரு பணியைச் செய்யும் போது நம்முடைய கவனம் எதில் இருக்கிறது என்பதற்கேற்ப உடலில் மாற்றங்கள் நிகழ்கின்றன என்று மனம் குறித்த ஒரு ஆச்சரியத் தகவலை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதாவது பளுதூக்கும்போது ஒருவர் தன்னுடைய உடலின் மீதும், தசைகளின் மீதும் கவனம் வைத்துத் தூக்கினால் உடலில் அதிக வலு சேர்வதாகவும், தசைகள் மீது கவனம் செலுத்தாமல் பளுவைத் தூக்குவதாக மனதை ஒருமுகப்படுத்தி பளுவைத் தூக்கும் போது தசைகள் குறைந்த அளவே வலு பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்த சோதனையின் இன்னொரு பார்வை தான் சுவாரஸ்யமானது. அதாவது பளுதூக்குகையில் மனதை ஒருமுகப்படுத்தித் தூக்கும்போது உடல் உழைப்பு அதிகம் இல்லாமலேயே அந்த வேலை சாத்தியப்படுகிறது என்பது தான் அந்த உண்மை.

இதன்மூலம் அதிக பலம் இல்லாதவர்கள் கூட மன திடம் இருந்தால் பெரிய செயல்களை மனதின் மூலமே செய்ய முடியும் என்னும் கருத்து வலுவடைந்திருக்கிறது.

ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் இலக்கு கோட்டை மட்டுமே மனதில் நிறுத்தி அதை நோக்கி ஓடும்போது வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும், தங்கள் கால்களில் கவனம் செலுத்தி ஓடும்போது முந்தைய உடலுழைப்பும் முயற்சியும் இருந்தால் கூட தாமதமாய் சென்று சேர்வதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உடற்பயிற்சி செய்யும் போது உடலில் கவனத்தை வைக்கவேண்டும் என்றும், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடும்போது இலக்கை கவனத்தில் வைக்கவேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மனதை ஒருமுகப்படுத்தி செயல்களைச் செய்வது இந்திய இலக்கியங்கள் பலவற்றிலும் காணப்படுகின்றன என்றாலும் அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படிருப்பது புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என நம்பச் செய்கிறது. மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று சும்மாவா சொன்னார்கள் ?