உலகப் புகழ் நூலகம் மூடப்படுகிறது

vatican.jpg

வத்திக்கானில் ஆராய்ச்சியாளர்களின் பொக்கிஷமாக இருந்து வந்த அறுநூறு ஆண்டுகள் பழமையான நூலகம் ஒன்று மூன்று ஆண்டுகளுக்கு மூடப்படுகிறது. இந்தத் தகவல் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

புனித நிக்கோலஸ் என்பவரால் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த நூலகத்தில் ஒரு பத்து இலட்சத்திற்கும் அதிகமான அபூர்வமான நூல்கள் இருக்கின்றன. இந்த நூலகத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் இங்கே இருக்கின்ற எழுபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் எனலாம். இது ஆராய்ச்சியாளர்களின் பொக்கிஷமாக இருந்து வருகிறது.

குளிர்சாதன வசதி, தூசு தடுப்பு நடவடிக்கைகள், நல்ல காற்றோட்டம் என வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தான் இந்த மூடுதல் என்று நிர்வாகம் சொன்னாலும், அதை முன்கூட்டியே தெரிவிக்காததனால் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி ஆனி போலினுக்கு எழுதிய சரித்திரப் புகழ்வாய்ந்த காதல் கடிதங்களும் இந்த நூலகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது, இந்த திருமணத்தை போப் நிராகரித்ததும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் கிறிஸ்தவ வரலாற்றிலும், அரசியல் வரலாற்றிலும் நீங்கா இடம் பிடித்தவை என்பது தனிக்கதை !

எப்படிப் பாலூட்டவேண்டும் ? தாய்மை ஸ்பெஷல் !

child3.jpg

பத்து பேரில் ஒன்பது பேர் என்னும் விகிதத்தில் இன்று பாலூட்டும் தாய்மார்கள் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறார்கள். குழந்தை பால் குடிக்கவில்லை எனும் பிரச்சனை துவங்கி, பால் இல்லை எனும் பிரச்சனை வரை.

தாய்மார்களுக்கு இருக்கும் இத்தகைய பிரச்சனைகளுக்கு படுத்துக் கொண்டே பாலூட்டுதல் ஒரு தீர்வாக இருக்கும் என யூ.கே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பிரச்சனைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்கள் எந்த நிலையில் இருந்து பாலூட்டுகிறார்கள் என்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதாம். படுத்துக் கொண்டு குழந்தையை தன்னுடைய வயிற்றின் மீதோ, அல்லது அருகிலோ படுக்க வைத்து பாலூட்டினால் இந்த சிக்கல்கள் பல தீர்ந்து விடும் என்கிறார்கள் அவர்கள்.

இயற்கையிலேயே விலங்குகள் பெரும்பாலும் இப்படித் தான் பாலூட்டுவதாகவும், இது இயற்கை விதிகளோடு இயைந்த செயல் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

படுத்துக் கொண்டே பாலூட்டுவதால் வேறு எந்த சிக்கல்களும், தாய்க்கோ குழந்தைக்கோ வராது என்றும், எனவே தாய்மார்கள் இந்த முறையில் குழந்தைகளுக்குப் பாலூட்டுதல் நலம் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவு பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரு நற்செய்தி என்பதில் சந்தேகமில்லை.