பாடம் நடத்திய பா.ம.க

smoke.jpg

புகைபிடிப்பதை திரைப்படங்களில் காட்டுவதால் சமூகத்தில் ஒரு எதிர்விளைவு ஏற்பட்டு இளைஞர்கள் தவறான பாதையில் செல்வார்கள் என்று தமிழ்நாட்டில் நடந்த கருத்துப் புரட்சி போல உலக அளவில் தற்போது விவாதங்கள் எழுகின்றன.

திரைப்படங்களில் புகை பிடிப்பதைக் காட்டுவது ஆபத்தானது என்றும் அதைப் பின்பற்றி பலர் தவறான வழிகளுக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும், தற்போது யூ.கேவில் இளைஞர்கள் மத்தியில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதற்கு திரைப்படங்களில் புகை பிடித்தலைக் காட்டுவது முக்கிய காரணம் என்றும் யூ.கே வின் நலவாழ்வு விழிப்புணர்வுக் குழு எச்சரித்துள்ளது.

பத்து முதல் பதினான்கு வரையுள்ள சிறு வயதினர் திரைப்படங்கள் வாயிலாக சுமார் பதினான்கு மில்லியன் புகை பிடிக்கும் காட்சிகளை பார்க்கிறார்கள் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.

புகை பிடிக்கும் காட்சிகளைப் பார்க்கும் சிறுவர்கள் புகை பிடிக்கும் வாய்ப்பு பாக்காத சிறுவர்களை விட இரண்டு மடங்கு என்கிறது ஜெர்மனியின் ஆராய்ச்சி ஒன்று.

மெக்சிகோவின் ஆராய்ச்சி ஒன்றும் புகை பிடித்தலைப் பார்க்கும் சிறுவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்துக்குத் தூண்டப்படுவதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிம் மேத்யூ மெயர் என்பவர் உலகளாவிலுள்ள திரைப்படங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை திரையில் காண்பித்து சமூக அக்கறையற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை நிறுத்தியிருக்கிறோம் எனுமளவில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம், தவறில்லை.

அம்மு – எதிர்ப்பினால் ஓடும் !

ammuvagiya-03a.jpg

கற்பு குறித்து காலம் காலமாகப் பேசப்பட்டு வரும் செய்திகளெல்லாம் தற்போது விதி மீறல்களால் மாறி வருகின்றன. மாற்றங்கள் எல்லாம் நல்லவை என்றோ , அல்லவை என்றோ அறுதியிட்டுக் கூற முடிவதில்லை. ஒவ்வோர் தரப்பிற்கும் அதனதன் சாதக பாதகங்கள் இருக்கத் தான் செய்கின்றன.

விபச்சாரத்தை வறுமையோடும், இயலாமையோடும் இணைந்தே இது வரை பேசியிருக்கின்றன திரைப்படங்கள். அதிலிருந்து மாறுபட்டு விபச்சாரத் தொழிலை விருப்பத்துடன் செய்யும் ஒரு பெண்ணின் வாழ்க்கை அம்முவாகிய நான் படத்தில் பதிவாகிறது என்பது வியப்பூட்டும் தகவல்.

கலாச்சாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் என நம்பப்படும் இந்தத் திரைப்படத்தை பார்த்தவர்கள் அதன் தொழில் நுட்பத்திலும், காட்சியமைப்பிலும் வியந்து போயிருக்கிறார்களாம்.

காமத்தை ஒரு கலையாகப் பார்க்கும் திரைப்படமாக இது இருக்கும். இந்தத் திரைப்படத்தில் காதலை காமத்தின் உச்சமாகக் காட்டி வித்தியாசப்படுத்தியிருக்கிறேன் என்றெல்லாம் இயக்குனர் பத்மா மகன் கூறியிருக்கிறார்.

இது குறித்து திரையுலக நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் இது போன்ற பரபரப்புகளை வேண்டுமென்றே அவிழ்த்து விடுவதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் ! ஓ.. அப்படியா ??

எதிர்ப்பினால் படங்களை ஓடவைக்க முடியும் என்பதை உயிர் திரைப்படத்திலேயே காட்டிட்டோம்ல.. என்று வேறு ஒரு குண்டை இலவச இணைப்பாகவும் போட்டார். ஓஹோ… அப்படியா ??

ஆனா படத்தோட ஸ்டில்சைப் பார்த்தா விவகாரமா தான் தெரியுது !.
பார்த்திபன்.. பார்த்து…