ஆப்பிளை விட நல்லது ஆப்பிள் ஜூஸ் !!!

apple.jpg

நிறைய ஆப்பிள் பழச்சாறு குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று யூ.கே வின் தேசிய இதய மற்றும் நுரையீரல் ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்திருக்கிறது.

ஆப்பிள் உடல் நலத்திற்குப் பலவகைகளிலும் பயன்படும் என்று ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் தெரிவித்திருக்கின்றன. ஆனால் ஆப்பிள் ஜூஸ் குறித்து ஆராய்ச்சிகள் அதிகம் வந்ததில்லை.

இப்போதைய இந்த ஆராய்ச்சி குழந்தைகளுக்கு வரும் இழுப்பு நோயை ஆப்பிளை விட ஆப்பிள் ஜூஸ் அதிக வீரியத்துடன் தடுப்பதாகக் கூறி வியக்க வைத்திருக்கிறது.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நிறைய ஆப்பிள் பழம் உட்கொண்டால் அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வரும் வாய்ப்பு இல்லையாம்.

ஆப்பிள் பழத்தை உட்கொள்ளும் முன் அதன் மேல் மெழுகு பூசப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிப்பது மிக மிக அவசியம். பெரும்பாலான ஆப்பிள்கள் பளபளப்பாக இருக்க மெழுகு பூசப்பட்டிருக்கும், அவை உடலுக்கு மிக மிக ஆபத்தானவை. மெழுகை முழுமையாய் அகற்றிய பின்பே உட்கொள்ள வேண்டும்.

அதுபோல ஆப்பிள் பழத்தை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும். வெட்டி விட்டு சிறிது நேரம் பொறுத்து சாப்பிட்டால் ஆப்பிள் ஆரோக்கியக் கேடு வருவிக்கும்

தமிழர்கள் கோழைகளா

ltte.jpg

அமைதிப் பேச்சை மீண்டும் துவங்க இந்தியா இலங்கையை வற்புறுத்த வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் இராணுவத் தாக்குதல்கள் ஆரம்பமானதற்குப் பின் எழுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து போயிருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஆனால் உண்மையில் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்பதும் அதில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களே என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையே.

இலங்கைப் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கி இந்தியா உதவாமல் போனால் இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகளை அணுகப்போவதாக இலங்கை அறிவித்திருப்பதில் உள்ள மிரட்டல் தொனியை இந்திய அரசு உணராமல் இருக்க வாய்ப்பு இல்லை.

எனினும் காலம் காலமாக தமிழர்கள் படும் அவஸ்தைக்கு இந்திய அரசு முயற்சி எடுக்காமல் இருப்பதைக் குறை சொல்வதை விட எந்த ஆளும் கட்சியும் அதற்கென முழு முயற்சி எடுக்காதது வருத்தத்துக்குரியது.

தண்ணீர் தரமாட்டேன் என்பதற்குக் கூட பக்கத்து மாநிலங்கள் கட்சி வேறுபாட்டை மறந்து கைகோர்க்கும் போது தன் இனமே ஒடுக்கப்பட்டிருப்பதைக் கண்டும் தமிழக அரசு வாளாவிருப்பது வேதனைக்குரியது.

ஒருவேளை இலங்கைத் தீவில் தமிழர்களுக்குப் பதிலாக கன்னடர்களோ, மலையாளிகளோ இருந்திருந்தால் இந்த பிரச்சனை ஒரு தேசியப் பிரச்சனையாகி இதற்குமுன் எப்போதோ கவனிக்கப்பட்டிருக்கும்.

தமிழகத்தில் இன்னும் ஏதோ மைனாரிட்டிக் குரல்களே எழுந்து கொண்டிருக்கின்றன என்பது கவலைக்குரிய செய்தியில்லையா ?

விரல் கொடுக்கத் தான் கைகள் இல்லை – நமக்கு
குரல் கொடுக்கக் கூடவா திராணி இல்லை ?